விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
விடியலுக்கு முந்தைய இருட்டு! தெலுங்கானா மண்ணெங்கும் கற்களும் குன்றுகளும் பாறைகளும் பயங்கரமான தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தன. ஒரு இடத்தில் பயத்தை எழுப்பும் தோற்றங்கள்... இன்னொரு இடத்தில் மனதை ஈர்க்கக்கூடிய வடிவங்கள்... மிகவும் அழகான கிராமம். தூக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் கிராமம் எப்போதுதான் அழகாக இல்லாமல் இருந்தது?
பொழுது விடிவதற்கு முந்தைய இருட்டுக்கு முன்னால் முழுமையான அமைதியும் மவுனமும் நிறைந்த கிராமம்! பகல் நேரத்தின் ஆரவாரங்கள் அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் கிராமத்தில் யாருமே கண் விழித்திருக்கவில்லை. கோழிகள் உறங்கிக் கொண்டிருந்தன. ஆடுகள் உறங்கிக் கொண்டிருந்தன. வெறுமனே குரைத்துக் கொண்டிருக்கும் நாய்கள்கூட உறங்கிக் கொண்டிருந்தன. அதேபோல கோவிலும்!
கோவில்! அதற்குள் கடவுளும் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த மிகவும் பழமையான கோவிலில் குடிகொண்டிருந்த கடவுளும் கிராமத்தைப்போலவே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். கடுமையான இருட்டில் நடக்கக்கூடிய சம்பவங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்கு கடவுள்கூட தயாராக இல்லாமலிருந்தார். கடவுளைப்போலவே கடவுளுக்கு சேவை செய்யக்கூடிய பூசாரியும்...
பொழுது புலர்வதற்கு இன்னும் நேரம் இருந்தது. எனினும், வழக்கமான செயல்களைச் செய்வதற்காக பூசாரி தயார் நிலையில் இருந்தார்.
தினமும் கடவுளை புலர்காலைப் பொழுதில் கண்விழிக்கச் செய்து கண்விழிக்கச் செய்து பூசாரியின் முதுகெலும்பே ஒடிந்து விட்டதைப் போல ஆகிவிட்டது. பூசாரியின் முகத்தில் இருந்த சுருக்கங்கள் தாடி உரோமங்களைக் கொண்டு மறைக்கப்பட்டிருந்தன. லாந்தர் விளக்கு வெளிச்சத்தின் உதவியுடன் அவர் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தபோது இரவு முடிவடைந்து கொண்டிருந்தது. எனினும், நல்ல இருட்டு. தனிமையை விரட்டி விடுவதற்காக அவர் காயத்ரி மந்திரத்தை உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்: ""ஓம் பூர்புவ... ஸ்வ தத் ஸவிதுர் வரேண்யம்... பர்கோ தேவஸ்ய தீமஹி... தியோ யோந... ப்ரசோதயாத்.''
பல வருடங்களாக நடந்து வரும் வழக்கமான சடங்குகளின் ஒரு பகுதியாக காயத்ரி மந்திரம் ஆகிவிட்டிருந்தது. லாந்தர் விளக்கின் வெளிச்சமும் காயத்ரி மந்திரமும்!
திடீரென்று பூசாரி மந்திரங்களைக் கூறிக்கொண்டிருந்தது நின்றது. அவரும் நின்றுவிட்டார். ஆனால், அப்படி எந்த நாளிலும் நின்றதில்லை. நடக்கக்கூடாத ஏதோ ஒன்று நடந்திருப்பதைக் கண்டு கொண்டதை வெளிப்படுத்தக் கூடிய வினோதமான ஒரு நிற்றல் அது. பூசாரியின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. நம்பிக்கையின்மை நிறைந்து நின்றிருந்த கண்கள்! துடித்துக் கொண்டிருந்த உதடுகள். அகலமாகத் திறந்திருந்த விழிகள். சபை மண்டபத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தையே அவர் கூர்ந்து பார்த்தார்.
ஆச்சரியத்தை சற்று கட்டுப்படுத்துவதற்காக பார்வையில் ஏதாவது கோளாறு உண்டாகியிருக்குமோ என்ற சந்தேகத்துடன் அவர் லாந்தர் விளக்கை மேலும் சற்று உயர்த்திப் பிடித்தார். இப்போது அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. பார்வைக் கோளாறு எதுவும் இல்லை.
சதுர வடிவத்தில் இருந்த கற்களால் அமைக்கப்பட்ட சபை மண்டபத்தின் தரையிலிருந்து ஒரு கல் அகற்றப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு அதை, அது இருந்த இடத்திலேயே வைப்பதற்கான வீண் முயற்சியும் நடந்திருக்கிறது. சபை மண்டபத்தின் மேற்கூரைப் பகுதியை தங்களுடைய இருப்பிடமாக ஆக்கிக்கொண்ட வவ்வால்கள் புலர்காலைப் பொழுதின் மெல்லிய வெளிச்சத்தைப் பார்த்து அச்சமுற்று சிறகுகளை அடிக்க ஆரம்பித்தன. சிறகுகள் அடிக்கப்பட்டதால் உண்டான சத்தம் திகைத்துப் போய் உறைந்து நின்றிருந்த பூசாரியின் சுய உணர்வைத் தட்டி எழுப்பியது.
அவர் நாலா பக்கங்களிலும் பார்த்தார். யாருமில்லை. எங்கே பார்த்தாலும் பலமானதும், அச்சத்தை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்த வவ்வால்களின் சிறகடிப்புகள் மட்டுமே கேட்டன. அந்த உண்மை என்னவோ அவருடைய மனதை மேலும் அதிகமாகக் கவலைப்படச் செய்தது. அந்த கவலையைச் சுமந்து கொண்டே ஒரு இயந்திரத்தைப்போல அவர் கல்லை நோக்கி நடந்தார். சதுர வடிவில் இருந்த கல்லுக்கு அருகில் தரையில் ஒன்றின்மீது இன்னொன்று என்பதைப்போல படிந்திருந்த காலடிச்சுவடுகள், நடந்திராத ஒன்று என்பதை நடந்ததுதான் என்று காட்டுவதற்கு போதுமாவையாக இருந்தன. தரையில் கிடந்த அணைந்துபோன பீடித் துண்டுகளும் யாரோ அங்கே வந்திருந்தார்கள் என்ற விஷயத்தை வெளிப்படையாகக் கூறிக்கொண்டிருந்தன. தரையில் கிடந்த தங்கத்தாலான டாலர், பூசாரியின் நம்பிக்கையை மேலும் பலமானதாக ஆக்கியது.
தன்னுடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்துவது என்பது பூசாரிக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. அந்த நிமிடமே அவர் கல்லை அகற்றி அதற்குக் கீழே இருந்த குழியைப் பார்த்தார். நடக்கக்கூடாத ஒரு விஷயம் நடந்து முடிந்துவிட்டிருந்தது. தூக்கத்தில் ஆழ்ந்திருந்த கடவுளுக்கு முன்னால் திருடர்கள் நகைகளுடன் தப்பி
ஓடிவிட்டிருக்கிறார்கள். கடவுளின் விலை மதிப்புள்ள நகைகள்! கடவுள்மீது திருடனுக்கு அச்சமில்லாமல் இருந்திருக்கிறது என்றாலும், பூசாரி மிகவும் பயந்த நிலையில் இருந்தார். அந்த அப்பாவி மனிதர் பயந்து நடுங்கினார். அவர் டாலரையே பார்த்தார். யாருடைய கழுத்தையோ அலங்கரித்துக் கொண்டிருந்த அந்த டாலர், நகைகள் அணிந்து காட்சியளிக்கும் கடவுளின் வடிவத்தை பூசாரியை நினைக்கச் செய்தது. அதே நேரத்தில் டாலரின் சொந்தக்காரரும் அவருடைய நினைவறையில் முகத்தைக் காட்டினார். நீண்ட ஒரு பெருமூச்சுடன் பூசாரி இருட்டையே பார்த்தார். பல வருடங்களுக்குப் பிறகு அன்றாடம் நடக்கக்கூடிய செயல்களில் திடீரென்று உண்டான இந்த மாற்றத்தை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கிழக்கு திசையில் வெளிச்சம் தெரிந்தது. எங்கோ இருந்து கோழி கூவியது. சிரமங்கள் நிறைந்த அன்றாடச் செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னால் கடவுளை தரிசிப்பதற்காக கிராமத்து மனிதர்கள் கோவிலை நோக்கி வர ஆரம்பித்தார்கள். தீபாராதனை நடக்கும் நேரத்தில் எப்போதும்போல பூசாரியின் உதடுகளில் இருந்து- "சாந்தாகாரம் புஜங்கசயனம் பத்மனாபம் ஸூரேசம்'' என்ற வார்த்தைகள் வெளிவரவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பக்தர்களிடம் தனிப்பட்ட ஆர்வம் எதுவும் காட்டிக் கொள்ளாமல் ஒரு கற்சிலையைப்போல பூசாரி தூண்மீது சாய்ந்துகொண்டு உட்கார்ந்தார். அங்கிருந்து சற்று பார்த்தால் போதும்- தரையைவிட்டு அகற்றப்பட்ட கல் தெரியும். பக்தர்களின் பார்வை சில நொடிகள் அகற்றப்பட்ட கல்மீது செல்லும். சில நொடிகள் பூசாரியை நோக்கிச் செல்லும். ஆனால், அவர்களுடைய கண்கள் நிரந்தரமாகப் பார்த்துக் கொண்டிருந்தது தங்க டாலரைத்தான்.
பக்தர்களின் முணுமுணுப்புகள் தாங்க முடியாத அளவிற்கு இருந்தன. தெலுங்கானாவில் இருக்கும் பக்தர்களான மக்களைப்
பொறுத்தவரையில், இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையே. ஆனால், எல்லா விஷயங்களையும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். பூசாரியைப்போல அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். அமைதியானவர்களாகவும் செயலற்றவர்களாகவும் இருந்தார்கள். எதையாவது மெதுவான குரலில் முணுமுணுக்கவோ முனகவோ மட்டும் செய்தார்கள். ஆழமான ஏதோ கவலை அவர்களுடைய மனதில் நிறைந்திருந்தது. பொழுது புலரப் புலர பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருந்தது.