விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
பெரிய கூட்டம்! எதுவுமே பேசாமல் அமைதியாக கோவிலுக்கு வெளியே கூடி நின்றிருந்தவர்களின் கவலை, சபை மண்டபத்திற்குள் இருந்தவர்களின் கவலையைவிட அதிகமானதாக இருந்தது. அவர்களுடைய உரையாடலை சரியாகக் கேட்க முடியவில்லை. எனினும், மெதுவான பேச்சுகளுக்கும் முணுமுணுப்புகளுக்கும் மத்தியில் சில வார்த்தைகள் தெளிவாகக் காதில் விழுந்தன.
கோவிலில் திருட்டு!பூசாரி யாரிடமும் எதுவும் வாய் திறக்கவில்லை!கடவுளின் நகைகள் திருடப்பட்டிருக்கின்றன.
இனி என்ன நடக்கும்?
முணுமுணுப்புகள், முனகல்கள் நிறைந்த இந்த வார்த்தைகள் கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீட்டையும் போய் அடைந்தன. காட்டாற்றைப்போல கிராமம் கோவிலை நோக்கி வர ஆரம்பித்தது. நடந்திருக்கக் கூடாத ஒரு சம்பவமாயிற்றே அது! இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றதாக இதற்கு முன்பு இருந்தவர்கள் கூறிக்கூட யாரும் கேள்விப்பட்டதில்லை.
கோவிலில் நடைபெற்ற திருட்டைப் பற்றிய தகவல் தெரிந்து ஒட்டு மொத்த கிராமமும் நடுங்கிக் கொண்டிருக்க, அந்த கிராமத்தில் இருந்த ஒரு மாளிகையில் இருந்த ஆட்கள் படுக்கையறையில் நிம்மதியாக
உறங்கிக் கொண்டிருந்தார்கள். கிராமத்து தலைவர்களின் மாளிகை! ஜமீன்தார்களின் ஆடம்பரமான மாளிகை!
நன்கு திறந்தால் யானைகூட உள்ளே செல்ல முடியும் என்னும் அளவிற்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய வாசல் கதவுகள்! பிரம்மாண்டமானதாகவும், ஒரு ஆளின் உயரத்திற்கு இருக்கக் கூடியதுமான வெளிச்சுவர் மாளிகையின் வாசல் பகுதியையும் திண்ணையையும் மறைத்து வைத்திருந்தது. ஒட்டு மொத்த கிராமத்தாலும், "எஜமானர்கள்" என்று அழைக்கப்படும் ஜமீன்தார் சகோதரர்கள்தான் சுகமான தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.
ஜமீன்தார் சகோதரர்கள் நான்கு பேர். மூத்தவரான அண்ணா, அஞ்சய்யா, பிரசாத் என்று தனக்கு அடுத்துள்ள இரண்டு சகோதரர்களுடன் ஒரு அறையில் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
ஒட்டு மொத்த கிராமத்திற்கும் உண்டானதைப்போல மாளிகைக்குள் இருந்த நிம்மதியான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க வகையில் தொல்லை உண்டானது. மாளிகையில் இருந்த நாய்கள் அங்கு வரக் கூடிய மனிதர்களைப் பார்த்து குரைத்தன. நாய்களின் குரைக்கும் சத்தமும், மிகவும் உயர்ந்த குரலில் ஒலித்த ஆட்களின் பேச்சும் சேர்ந்து தாங்க முடியாத ஆரவாரத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. எதுவுமே தெளிவாகக் கேட்கவில்லை. எனினும், அந்த ஆரவாரங்களின் காரணமாக உள்ளே இருந்தவர்களால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இடையில் அவ்வப்போது அவர்கள் திரும்பிக் கொண்டும் புரண்டு கொண்டும் இருந்தார்கள்.
ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் சபை மண்டபத்தை அடைந்தவுடன் வாய்விட்டுப் பேச முடியாத அளவிற்கு ஆனது. வழி முழுக்க ஆர்வத்துடன் இருந்த மக்கள் கூட்டம்
உண்மையைத் தெரிந்து கொண்டவுடன் திகைத்துப் போய் நின்றுவிட்டது. சபை மண்டபத்தின் திண்ணையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சதுரக் கல்லையே கிராமத்து மக்கள் எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. வழக்கமாக ஒரு இனம் புரியாத பயம் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் முகங்களில் ஆர்வத்தின் வெளிப்பாடு தெரிந்தது. உடனடியாக அது பயத்தின் வெளிப்பாடாக மாறி, மவுனத்தின் வடிவம் வந்து குடிகொள்ள ஆரம்பித்தது. மவுனம் அலையென ஓடியது. புதிதாக யாராவது வந்தால் அந்த அலையோட்டத்திற்கு தொல்லை உண்டாகும். ஆமாம்... ஒரு நிமிட நேரத்திற்கு மட்டும். சில நொடிகளுக்கு முழுமையான அமைதி நிலவும். பூசாரி ஏதாவது கூறுவார் என்ற எதிர்பார்ப்புடன் எல்லாரும் இருந்தார்கள்.
ஆனால், பூசாரிக்கு மக்கள் கூட்டத்தின்மீதும் அவர்களுடைய மவுனத்தின்மீதும் எந்தவொரு ஆர்வமும் இருக்கவில்லை. அவரும் தன்னுடைய பதைபதைப்பை திகைப்பில் மூழ்க வைத்துக்கொண்டு வயதான கண்களுடன் வெற்றிடத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். முற்றிலும் வெறுமையாகக் காட்சியளித்த முகம். தன்னுடைய கைகளால் வழக்கமாக கடவுளுக்கு நகைகளை அணிவிக்கக்கூடிய அந்த கடந்து சென்ற நாட்கள் பூசாரியின் நினைவில் தோன்றின. அதே கைகளால் சதுரக் கல்லை நீக்கி, நடந்திருக்கக் கூடாத உண்மையை அவர் கண்டார்.
2
உண்மையில் நடைபெற்றது என்ன என்ற விஷயத்தை மேலோட்டமாக வெளியே கூறியது தேவதாசிதான். தேவதாசி எந்தச் சமயத்திலும் கடவுளின் நகையை அணிந்ததில்லை. அவற்றைத் தொட மட்டுமே செய்திருக்கிறாள். கனமான மனதுடன் இருந்தாலும், உறுதியான கால் வைப்புகளுடன் அவள் பூசாரியின் அருகில் சென்றாள். கிழவரான பூசாரியை அவள் பார்த்தாள். தொடர்ந்து கூட்டமாக நின்றிருந்த
ஆட்களைப் பார்த்தாள். அதற்குப் பிறகு விக்கிரகத்தின்மீது கண்களைப் பதித்தாள். கடவுளுக்கு நகைகள் அணிவிக்கக் கூடிய கடந்து சென்ற நாட்களின் அந்த சுகமான அனுபவத்தைப் பற்றி திடீரென்று அவள் நினைக்க ஆரம்பித்தாள். பிரம்மாண்டமான திருவிழா சமயத்தில் கடவுள் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக தான் எந்த அளவிற்கு சிறப்பாக நடனமாடினோம் என்பதை நினைத்துப் பார்த்தாள்.
கோவிலில் தேவதாசிக்கென்றிருந்த ஒரே ஒரு வேலை அதுதான். ஆனால், இன்று தேவதாசிக்கு கடுமையான இன்னொரு வேலையையும் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கிறது. பூசாரியால் கூற முடியாமல் போயிருக்கும் விஷயத்தை அவள்தான் கூறவேண்டியதிருக்கிறது. அழுகையை அடக்க முயற்சித்துக் கொண்டே அவள் கூறினாள்: "நகை திருடப்பட்டு விட்டது. இதற்கு முன்பு இப்படியொரு விஷயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இந்த மாதிரியான ஒரு மோசமான செயல் நடைபெற்றதும் இல்லை. ஆனால், இந்த கிராமத்தில், இந்த கோவிலில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றுவிட்டது. நகையைத் திருடியது எப்படிப்பட்ட திருடனாக இருந்தாலும் சரி... அதற்கான விளைவை அவன் அனுபவித்தே தீருவான்.''
ஆவேசத்துடன் கூறினாலும் முடிந்தவரைக்கும் கட்டுப்பாட்டைக் காப்பாற்றியவாறு தேவதாசி இதுவரை பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், உண்மையைத் தெரிந்திருக்கக் கூடிய அவள் திடீரென்று கட்டுப்பாட்டின் எல்லையை மீறிக் கொண்டு உரத்த குரலில் கூறினாள்: "பாவி... அயோக்கியன்! கடவுள் அணிந்திருந்த நகையைத் திருடுவதற்குக் கூட பயப்படவில்லை!'' தன்னைத் தானே தேற்றிக் கொள்வதைப்போல, "ம்... கடவுளே திருடனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையைக் கொடுப்பார்'' என்று கூறிக்கொண்டே அவள் அந்த இடத்தில் உட்கார்ந்தாள்.
தேவதாசியின் இந்தப் பேச்சைக் கேட்டபிறகும் பூசாரி முன்பு இருந்த அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தார்- முழுமையான மவுனத்தைத் தொடர்ந்து கொண்டு- வாயையே திறக்காமல்- எந்தவொரு எதிர்வினையையும் வெளிப்படுத்தாமல். ஆனால், அந்த மவுனம் எவ்வளவோ செய்திகளைக் கூறிக்கொண்டுதான் இருந்தது.
தங்களுடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, கிராமத்து மனிதர்கள் எல்லாரும் கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் சபை மண்டபத்தைச் சுற்றிலும் இதற்குள் கூடி நின்றிருந்தார்கள். தேவதாசியின் பேச்சைக் கேட்டவுடன், உணர்ச்சி வசப்பட்டவர்களும் வெறி பிடித்தவர்களுமான கிராமத்து ஆட்களின் பேச்சு காற்றில் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்தது. காதைத் துளைக்கக் கூடிய சத்தம்! "குற்றவாளி தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். யாராக இருந்தாலும் சரி... அவனைக் கண்டுபிடித்தே ஆகணும்.'' எல்லாருடைய ஒரே ஆசை அதுவாகத்தான் இருந்தது.