விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
அதோடு சேர்ந்து பிரசாத்தும் சொன்னார்: "பிறகு என்ன? கொஞ்சமாவது சாமர்த்தியம் இருக்கணும்.''
வெட்கம், கூச்சம், குற்ற உணர்வு ஆகியவற்றால் விஸ்வத்தின் தலை அதுவாகவே தாழ்ந்தது. ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர் தேநீர் குடிக்க ஆரம்பித்தார். அவர்களுடைய உரையாடலை ருக்மிணி மிகவும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். டாலர் விவகாரம் அவளிடம் உண்டாக்கிய கவலை அவளை மேலும் வேதனை அடையும்படி செய்தது. "உண்மையாகவே ஏதோ இருக்கு...'' ருக்மிணியின் மனம் முணுமுணுத்தது.
அண்ணா தேநீர் குடித்து விட்டு எழ ஆரம்பிக்கும்போது, அஞ்சய்யா மெதுவான குரலில் கேட்டார்:
"அண்ணா, எங்கே போறீங்க?''
அண்ணா மேலும் சற்று மெதுவான குரலில் பதில் சொன்னார்:
"கோவிலில் திருடு நடந்துவிட்டது அல்லவா? நம்முடைய முன்னோர்கள் கோவிலைப் பத்திரமாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். காலம் காலமாக கோவில் சம்பந்தப்பட்ட காரியங்களை நாம்தானே கவனித்து நடத்திக் கொண்டிருக்கிறோம்? திருடு நடந்துவிட்டது என்னும்போது, உடனடியாக அங்கு போயே ஆக வேண்டும்.''
அவர் மேலும் சில விஷயங்களை நினைத்துப் பார்த்தார். அந்தச் சமயத்தில் பிரசாத் தன் சகோதரருடன் கோவிலுக்குப் போவதற்காகப் புறப்பட்டார். அண்ணா அஞ்சய்யாவிடம் ஒரு தனிப்பட்ட குரலில் சொன்னார்: "நீ நகரத்திற்குப் போக வேண்டாமா? நேரத்தை வீண் பண்ணாதே.''
அதைக் கூறிவிட்டு அவர் வெளியேறினார். பிரசாத்தும் அவருடன் இருந்தார். ருக்மிணி விஸ்வத்தின் அருகில் சென்று நின்றாள். அவர்கள் இருவரையும் சற்று பார்த்துவிட்டு, அஞ்சய்யா நகரத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளுடன் அறையை விட்டு வெளியே வந்தார்.
ருக்மிணி என்னவோ கூற வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், கூற முடியவில்லை. அவள் எதுவும் பேசாமல் விஸ்வத்தின் தோளில் கையை வைத்தாள். ஆனால் விஸ்வம் மவுனமாக இருந்தார். அவர் தனக்குள் முழுமையாக மூழ்கிவிட்டிருந்தார்.
கிராமம் முழுவதும் ஒரே ஒரு கேள்வி பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது: "யார் திருடனாக இருப்பான்? யார்? கடவுளின் நகையைத் திருடியவன் யாராக இருக்கும்?''
உண்மையிலேயே சொல்லப் போனால், இடையில் அவ்வப்போது கிராமத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. ஆனால், அந்த மாதிரியான நேரங்களில் திருடு நடைபெற்ற வீட்டின் தலைவனிடம் மேலும் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு, மக்கள் அவரவர்களுடைய வேலைகளில் மூழ்கி விடுவதுதான் வழக்கமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், கோவிலில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அவர்களை காரணமே இல்லாமல் கோபம் கொள்ளச் செய்தது.
"திருடன் யாராக இருக்கும்?'' இப்படிக் கேட்டவாறு ராமய்யா நாலா திசைகளிலும் நடந்து திரிந்து திருடன் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டான்.
திருடனைக் கண்டு பிடித்துவிட்டதைப்போல வேமண்ணா சொன்னான்: "கோவிலில் நகையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இடம் எங்கே இருக்கிறது என்பதை நன்கு தெரிந்திருக்கும் ஆள்தான் திருடனாக இருக்க வேண்டும்.''
"அந்த விஷயம் இரண்டு பேருக்குத்தானே தெரியும்? ஒருவர் பூசாரி. இன்னொரு ஆள் ஜமீன்தார்.'' நன்னய்யா வெளிவாசலுக்கு அருகில் நின்று கொண்டு சொன்னான். எந்த அளவிற்குத் தாழ்வான குரலில் அவன் "ஜமீன்தார்" என்ற வார்த்தையை உச்சரித்தான்! அவன் தன்னுடன் வந்து கொண்டிருந்த ஆட்களைக் கூர்ந்து பார்த்தான். எல்லோரும் முழுமையான அமைதியுடன் இருந்தார்கள். கோவிலும் வந்துவிட்டது. ஆனால், அனைவரின் மனங்களும் ஒரே மாதிரி சிந்தித்துக் கொண்டிருந்தன.
"பூசாரி திருடியிருக்க மாட்டார். அவர் எதற்காகத் திருடணும்? அந்த கிழவருக்கு இனிமேல் சொந்தமென்று சொல்லிக் கொள்வதற்கு என்ன வேணும்?''
"அப்படின்னா யாராக இருக்கும்?''
அந்தக் கேள்விக்கான பதில் அவர்களுக்கு கோவிலில் கிடைத்தது. பதில் கிடைத்த அடுத்த நொடியே அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும் செய்தார்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடே இல்லை. ஆனால், அந்த கருத்து அவர்கள் எல்லோரையும் அச்சமடையச் செய்யக் கூடியதாக இருந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் வெட்ட வெளியையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு ஆளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவன் முணுமுணுத்தான்:
"டாலர் யாருடையதோ, அவன்தான் திருடன். டாலர்...'' தொடர்ந்து அவனால் கூற முடியவில்லை. பெரிய ஜமீன்தார், பிரசாத்துடன் சேர்ந்து முன்னால் வந்து கொண்டிருந்தார். மக்கள் முழுமையான அமைதியுடன் இருந்தார்கள். அவர்களுடைய உரையாடல் பணிவு கொண்டதாக ஆனது. மரியாதையைத் தாண்டி அச்சம்தான் அந்த
பணிவுக்கு காரணமாக இருந்தது. வழியை ஒதுக்கிக் கொடுத்து, மக்கள் அவர்களை சூழ்ந்து நின்றிருந்தார்கள். சம்சுதீன் அவர்களை வரவேற்றார். அகற்றப்பட்ட சதுரக் கல்லை அடைவதற்கு முன்னாலேயே, தான் இதுவரை நடத்திய விசாரணை பற்றிய கதையை அவர் அவர்களிடம் கூறினார். திருடு நடைபெற்ற இடம் எது என்பதை பூசாரி கையால் சைகை செய்து பெரிய ஜமீன்தாரிடம் காட்டினார். சம்சுதீன் ரகசிய போலீஸிடம் இருக்கும் முக வெளிப்பாட்டுடன் சதுரக் கற்களைப் பார்க்க ஆரம்பித்தார். பெரிய ஜமீன்தார் அந்தப் பக்கமாகப் பார்க்கும்போது, அவருடைய மனம் கல்லைப்போல ஆனது. பிரசாத்தின் கண்களோ, தேவதாசி உடலின் சதைப் பகுதிகளையே மேய்ந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்து முடித்த பிறகு, பெரிய ஜமீந்தார் மக்களைப் பார்த்தவாறு சொன்னார்:
"இந்தக் கொடுமையான பாவச் செயலைச் செய்தது யாராக இருந்தாலும் சரி, தெய்வம் அவனுக்குத் தர வேண்டிய தண்டனையைக் கட்டாயம் தரும்.'' தொடர்ந்து ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் கேட்கிற வகையில் கட்டளையிட்டார். "போங்க... போயி மந்திரவாதியை அழைச்சிட்டு வாங்க. யார் குற்றவாளி என்று அவர் சொல்லட்டும். இது என்னுடைய ஸ்பெஷல் கட்டளை. உடனடியாக போய் மந்திரவாதியை அழைச்சிட்டு வாங்க.''
அந்த நிமிடமே மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வருவதற்காக இரண்டு மூன்று ஆட்கள் ஓடினார்கள். ஜமீன்தாரின் கட்டளைக்கு மரியாதை கொடுப்பதுடன், மந்திரவாதியின் தமாஷையும் பார்க்கலாமே என்ற சிந்தனையில் அவர்கள் இருந்தார்கள்.
முகத்தில் இருந்த கவலையை மறைத்து வைப்பது என்பது தன்னைப் பொறுத்த வரையில் சிரமமான விஷயம் என்பதைப்போல பூசாரி
ஜமீன்தாரையே சிறிது நேரம் பார்த்தார். தொடர்ந்து விக்கிரகத்தையே கண்களை இமைக்காமல் பார்க்க ஆரம்பித்தார்.
சம்சுதீன் அண்ணாவிடம் சொன்னார்: "பெரிய எஜமான், உங்களுடைய முதல் மரியாதையை நான் மிகவும் பாராட்டுகிறேன்.''
அதற்குள் பிரசாத் மக்கள் கூட்டத்திற்குள்ளிருந்து கோவிலுக்கு வெளியே வந்துவிட்டிருந்தார்.