விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
கிராமத்தில் வந்து சேர்ந்த பிறகு, சுசீலாவிற்கு கிடைத்த முதல் அனுபவமாக அது இருந்தது. ஆனால், அதைவிட ஆச்சரியமான அனுபவம் அன்று சாயங்காலம் ஆசிரியருக்குக் கிடைத்தது.
அன்று சந்தை நாள். பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகு, சமையல் பொருட்கள் வாங்குவதற்காக அவர் சந்தைக்குச் சென்றிருந்தார். அத்துடன் ஊரைச் சேர்ந்த சில மனிதர்களுடன் அறிமுகமாக வேண்டும் என்பதும் அவருடைய நோக்கமாக இருந்தது. மிகவும் பயங்கரமான சூறாவளி வரப்போகிறது என்பதைப்போல சந்தை முழுவதும் மிகப் பெரிய ஒரு பயம் பரவியிருந்தது. வர்த்தகர்கள் பொருட்களை அவசர அவசரமாக எடுத்துக்கட்டி, வேக வேகமாக ஓட ஆரம்பித்தார்கள். அந்தச் சமயத்தில் ஆசிரியருக்கு அருகில் தூசியைப் பரக்கச் செய்து கொண்டு ஒரு மாட்டுவண்டி சூறாவளியைப்போல வந்து நின்றது. ஜமீன்தார் சகோதரர்கள் நான்கு பேரும் அதில் இருந்தார்கள்.
ஆசிரியர் ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அவர்களுடைய செய்கைகளைப் பார்க்க ஆரம்பித்தார். அவர்கள் வண்டியை விட்டு இறங்கி, சந்தையைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டை, கோழி, மாமிசம் போன்ற எதுவாக இருந்தாலும் சரி... தங்களுக்கு விருப்பமான பொருட்களை ஒவ்வொருவரும் எடுத்தார்கள்.
பதைபதைத்துப் போய் நின்றிருந்த வர்த்தகர்களில் காசு கேட்கக் கூடிய தைரியத்தை வெளிப்படுத்தியவர்களைப் பார்த்து, அவர்கள் வாயில் வந்த மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டி, அவர்களுக்கு அடி, உதைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணின் கோழியை அஞ்சய்யா தன் கையில் எடுத்தார். மிகவும் சிரமப்பட்டு தீனி போட்டு
வளர்த்த அந்த கோழிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்த்தாள். அவள் கேட்டாள்: "கோழிக்கான காசு?''
கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அவளுடைய கன்னத்தைத் தடவியவாறு அஞ்சய்யா சொன்னார்: "சாயங்காலம் மாளிகைக்கு வந்து கோழிக்கான காசை வாங்கிக்கோ. அத்துடன் கோழிவிற்கும் பெண்ணுக்கான காசையும்...''
கோழிக்கு கிட்டத்தட்ட எவ்வளவு எடை வரும் என்று கையில் வைத்துப் பார்த்துக்கொண்டே அண்ணா வண்டியில் ஏறினார். விஸ்வம் அதற்கு முன்பே போய் உட்கார்ந்திருந்தார். மேலும் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்ட பிறகு, மற்ற சகோதரர்களும் வண்டியில் ஏறி உட்கார்ந்தார்கள். தூசியை எழச் செய்து கொண்டு மாட்டு வண்டி உடனடியாக அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டது. வர்த்தகர்களின் முகங்களிலும், பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்தவர்களின் முகங்களிலும் பரவிய பயமும் கண்களில் தோன்றிய வெறுப்பும் மேலும் சற்று அதிகமானது.
அந்தப் பகுதி முழுவதும் மிகுந்த அமைதியில் ஆழ்ந்துவிட்டதைப் போல இருந்தது. ஒரு கல்லாலான சிலையைப்போல ஆசிரியர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். ஓடிக் கொண்டிருக்கும் மாட்டு வண்டியையே கண்களை இமைக்காமல் அவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
கிருஷ்ணப்பா ஆசிரியரின் அருகில் வந்து சொன்னான்:
"ஆசிரியர் அய்யா, உங்களுக்கு இவர்கள் யார் என்று தெரியலைன்னு தோணுது.''
"ஆமாம்... இவங்க யார்?'' ஆசிரியர் கேட்டார்.
"இவங்களா? இவங்கதான் இங்கே உள்ள ஜமீன்தார்கள். இவர்களுடைய பேய்கூத்து செயல்களின் காரணமாக கிராமத்து மக்கள் எல்லாரும் கவலையிலும் சிரமத்திலும் இருக்காங்க. கோழியைக் கையில் எடுத்துக்கொண்டு முதலில் வண்டியில் போய் உட்கார்ந்தவர் அண்ணா. எல்லாரையும்விட மூத்தவர். அவர் இதுவரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. கோழிவிற்கும் பெண்ணின் கன்னத்தைத் தடவினார் அல்லவா? அவர்தான் அஞ்சய்யா. அவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்னால் அவரை விட்டு விலகி எங்கோ போயிட்டாங்க. அதற்குப் பிறகு திரும்பி வரவேயில்லை. கர்ப்பம் ஆனதால் திரும்பி வரவில்லை. இப்படித்தான் அஞ்சய்யா சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு அருகில் நின்று கொண்டு என்னவோ சொல்லிக்கொண்டு இருந்தவர் பிரசாத். அவருடைய மனைவி இறந்துவிட்டாள். அவள் தற்கொலை பண்ணிக்கொண்டாள் என்று சிலர் சொல்றாங்க. இவங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அந்த அப்பாவிப் பெண்ணை சாகடிச்சிட்டாங்கன்னும் பேச்சு இருக்கு.'' அவன் தொடர்ந்து சொன்னான்: "பிறகு... வண்டியிலேயே ஒரு ஆள் உட்கார்ந்திருந்தார் அல்லவா? அவர்தான் விஸ்வம். எல்லாரையும்விட இளைய ஆள். விஸ்வத்திற்கு திருமணம் ஆயிடுச்சு. ஆனால், உண்மையைக் கூற வேண்டுமல்லவா? அய்யா, இவங்களுக்கு எந்தச் சமயத்திலும் மனைவியின் தேவையே இல்லை. இவர்கள் ராஜாக்கள்... ராஜாக்கள்... இவங்களுக்கு தேவை என்று தோன்றுவதெல்லாம் அந்தந்த நேரத்துல கிடைக்கும். கிடைக்காவிட்டால் இவங்க தட்டிப் பறிச்சிடுவாங்க. மிகப் பெரிய முரடர்கள்.''
கிருஷ்ணப்பாவின் வார்த்தைகளைக் கேட்டு ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். அவருடைய முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளும் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
சாயங்காலம் வீட்டுக்கு வந்தபோது, அவருடைய மனைவி முகத்தை ஒரு மாதிரி கவலையாக வைத்துக்கொண்டு இருப்பதை அவர் பார்த்தார். "என்ன நடந்தது?'' அவர் கேட்டார். அந்த நொடியே அவள் கோபத்துடன் சொன்னாள்: "உங்களை யார் இங்கே வரச் சொன்னது? இங்கே இருப்பவர்கள் எந்தவொரு நாகரீகமும் இல்லாதவர்களாக இருக்காங்க.''
சந்தையில் நடைபெற்ற சம்பவத்தை நினைத்து திடீரென்று ஆத்திரமடைந்து அவர் சொன்னார்: "என்னை இங்கேதான் இடம் மாற்றம் செய்யணும் என்று நான் சொன்னேனா என்ன?''
அவர் அமைதியாக கட்டிலில் போய் உட்கார்ந்தார். மனைவி உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
சுசீலா சாதாரணமாக இருப்பதைப்போல இருந்தாலும், சந்தையில் நடைபெற்ற சம்பவம் ஆசிரியரின் மனதை மிகவும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்காக அவர் வெளியேறியபோது, வீட்டுக்கு அருகில் ஒரு மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தார். விஸ்வத்தைத் தவிர, எஞ்சியிருந்த மூன்று சகோதரர்களும் வண்டியில் அமர்ந்துகொண்டு வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆசிரியரைக் கண்டவுடன் அண்ணா கேட்டார். "புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்தானே?''
"ஆமாம்...'' என்பதைப்போல ஆசிரியர் தலையை ஆட்டினார். அதற்குப் பிறகு முன்னோக்கி நடந்து கைகளைக் குவித்துக்கொண்டு சொன்னார்: "நான்தான் ராமகிருஷ்ணரெட்டி. புதிதாக மாறுதல் கிடைத்து வந்திருக்கும் ஆசிரியர்... முன்பு நகரத்திலிருந்த பள்ளிக் கூடத்தில் வேலை பார்த்தேன்.''
"இங்கே இருக்கும் மாணவர்களை நன்கு படிக்க வைக்கணும். பொல்லாத பசங்க. இதற்கு முன்பு இருந்த ஆசிரியர் அந்த அளவுக்கு
சரியாக பாடம் சொல்லித் தரவில்லை. நீங்க கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும்...'' அண்ணா அறிவுரை கூறும் குரலில் சொன்னார். அஞ்சய்யா சாட்டையால் காளையை அடித்து வண்டியைக் கிளப்பினார். "நன்கு படிக்க வைக்கணும்" என்ற அண்ணாவின் வார்த்தைகள் தன்மீது விழுந்த சாட்டை அடியைப் போல ஆசிரியருக்குத் தோன்றியது.