விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது, சுசீலா வழக்கமான வேலைகளில் மூழ்கிவிட்டிருப்பதை அவர் சாளரத்தின் வழியாகப் பார்த்தார். "அவள் எதையும் பார்க்கவில்லை. ஒரு வகையில் அது நல்லதாகப் போய்விட்டது." ஆசிரியரின் உள் மனம் முணுமுணுத்தது.
8
மாளிகையில் அமர்ந்து விஸ்வம் என்னவோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். சமீபகாலமாக எல்லா நேரங்களிலும் அவர் என்னவோ சிந்தனையில் மூழ்கியவாறே காணப்பட்டார். ருக்மிணி அவரின் அருகில் வந்த நின்றாள். அவள் கேட்டாள்: "சமீபகாலமாக உங்களுக்கு என்ன ஆனது? எப்போது பார்த்தாலும் இப்படி உட்கார்ந்து கொண்டு இந்த அளவிற்கு எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் உங்களின் மனைவி. என்னிடம் எதையும் ஏன் கூறாமல் இருக்கிறீர்கள்?''
மொத்தத்தில் வெறுப்படைந்து விட்டதைப்போல விஸ்வம் திட்டுகிற குரலில் சொன்னார்: "இங்கேயிருந்து போ. என்னைக் கொஞ்ச நேரம் வெறுமனே விடு.'' ஆனால், ருக்மிணி அங்கேயேதான் நின்று கொண்டிருந்தாள். இந்த மனிதருக்கு என்ன ஆகிவிட்டது என்று அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். படிப்பதில் ஈடுபடுவதைவிட, ஒருவரையொருவர் கிள்ளுவது, சத்தம் போடுவது போன்ற விஷயங்களில்தான்
அவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. தூரத்தில் பார்க்கும்போதே அது ஒரு பள்ளிக்கூடம் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியும். முற்றிலும் ஒரு பள்ளிக்கூடத்திற்கான சூழ்நிலை. திடீரென்று வெளியே ஒரு பெண்ணின் ஓலம் கேட்டது. மிகவும் உரத்த குரலில் இல்லை என்றாலும், அந்த அழுகைச் சத்தம் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது. அது வேறு யாருடைய குரலும் அல்ல- தன் மனைவி சுசீலாவின் அழுகைச் சத்தம்தான் என்பதை உடனடியாக ஆசிரியரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ஏன் அழ வேண்டும்? சுசீலாவிற்கு என்ன ஆனது?
"காப்பாத்துங்க... என்னைக் காப்பாத்துங்க'' என்ற கூப்பாடு ஆசிரியரை அதிர்ச்சியடையச் செய்தது. அவருடைய கையிலிருந்து புத்தகம் தரையில் விழுந்தது. ஆசிரியர் வெளிவாசலை நோக்கி ஓடினார். புதிய ஏதோ விளையாட்டைப் பார்க்கப் போகிறோம் என்பதைப்போல உற்சாகத்துடன் சிறுவர்களும் அவருக்குப் பின்னால் ஓடினார்கள். வெளியே வந்த பார்த்தபோது, அந்த அளவிற்கு நாடகத்தனமாக எதுவும் நடந்திருக்கவில்லை. ஒரு மிகவும் சாதாரணமான சம்பவம் மட்டுமே நடந்திருந்தது. ஆனால், ஆசிரியரைப் பொறுத்த வரையில் ஆச்சரியப்படக்கூடிய ஒரு சம்பவமாகத்தான் அது இருந்தது. அண்ணா மாட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தார். அஞ்சய்யாவும் பிரசாத்தும் சேர்ந்து தங்கள் பலத்தைப் பயன்படுத்தி சுசீலாவைப் பிடித்து இழுத்து வண்டியை நோக்கி கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.
ஆசிரியரின் வீட்டுக்கு முன்னால் நடைபெற்ற இந்த விஷயங்களை பள்ளி மாணவர்கள் புதிய ஒரு சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் உற்சாகத்துடன் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் மாணவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டும் இருந்தார்கள்.
"டேய்... டேய்... அங்கே பார். அங்கு என்ன நடக்கிறதுன்னு பார்த்தியா?'' அவர்கள் ஒருவரோடொருவர் கூறிக்கொண்டார்கள்.
நடைபெற்றது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல், வேலையில் முழுமையாக ஈடுபட்ட மனநிலையுடன் திகைப்படைந்து போய் விட்டதைப்போல ஆசிரியரும் அந்தப் பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார். பட்டப்பகல் வேளையில் கண்களுக்கு முன்னால் அவருடைய மனைவியை ஜமீன்தார்கள் பலவந்தப்படுத்தி இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளோ என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார்கள்.
அப்போது பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அந்தப் பகுதியெங்கும் வந்து சேர்ந்தார்கள். ஆனால், ஒரு மனிதன்கூட ஜமீன்தார்களைத் தடுக்க முயற்சிக்கவில்லை. மிகவும் பயங்கரமான ஒரு விளையாட்டு அமைதியாக, மிகவும் சாதாரணம் என்பதைப் போல நடப்பதாக ஆசிரியருக்குத் தோன்றியது. இந்தக் கொடுமையான செயலைச் செய்வதற்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? ஆசிரியர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
உடனடியாக அவர்களுக்கு முன்னால்போய் நிற்க வேண்டும் என்று தோன்றினாலும், உள் மனதில் உண்டான ஒரு இனம் புரியாத பயம் ஆசிரியரைப் பிடித்து நிறுத்தியது. அவருடைய கால்கள் அங்கேயே உறுதியாக நின்று கொண்டிருந்தன. இதயம் மிகவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி ஈர விழிகளுடன் அவர் அவர்களைத் தடுக்க முயற்சித்தார்.
"வேண்டாம்... நீங்க என்ன செய்றீங்க? இந்தப் பாதகச் செயலை நிறுத்துங்க.''
ஆனால், ஆசிரியரின் வார்த்தைகளை ஜமீன்தார்களா காது கொடுத்துக் கேட்பார்கள்?
அதற்குள் அவர்கள் சுசீலாவை வண்டிக்குள் நுழைத்துவிட்டிருந்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எப்படியாவது முரண்டு பிடித்து தப்பிப்பதற்கு அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஆசிரியரின் குழந்தைகள் உரத்த குரலில் அழ ஆரம்பித்தன.
"இங்கே பாருங்க... கொஞ்சம் உதவுங்க. அவர்களை உடனடியா தடுங்க...'' ஒரு பைத்தியக்காரனைப்போல உரத்த குரலில் அழுது கொண்டே ஆசிரியர் வண்டியை நோக்கி ஓடினார். அதை நெருங்கியவுடன், அவர் ஜமீன்தார்களைத் தடுக்க முயற்சித்தார். அஞ்சய்யாவுடன் அடிதடி ஆரம்பமானது. ஆனால், அவரைப் பொறுத்தவரையில், ஆசிரியர் எதுவாகவும் இருக்கவில்லை. வெறும் ஒரு புழுவையோ பிராணியையோ பார்ப்பதைப்போல் அஞ்சய்யா ஒரே ஒரு அடியில் அந்த அப்பாவி மனிதரை கீழே விழுமாறு செய்து விட்டு, வண்டியில் ஏறி உட்கார்ந்தார். பிரசாத்தின் சாட்டை காளைகளின் மேல் விழுந்த அடுத்த நிமிடமே, வண்டி ஓட ஆரம்பித்தது. மாட்டு வண்டி மிகவும் வேகமாக ஆசிரியரின் கண்களுக்கு முன்னால் கடந்து சென்றது.
அவருக்கு முன்னால், எத்தனையோ ஆட்கள் மற்றும் மாணவர்களின் கண்களுக்கு முன்னால் அந்த அயோக்கியர்கள் சுசீலாவை பலவந்தப்படுத்தி கொண்டு சென்றனர். அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. எதுவுமே நடைபெறாததைப்போல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வெறுமனே நின்று கொண்டிருந்தார்கள். எது எப்படியோ- சிறிதும் நம்பிக்கை வரவில்லை. ஆனால், நடக்க வேண்டியது நடந்து முடிந்திருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், அந்தச் சம்பவம் ஒரு கெட்ட கனவாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால், நடந்து முடிந்ததோ முழு உண்மையாக இருந்தது. அவருடைய தங்கமான குழந்தைகள் தங்களுடைய தாயைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க, பலத்தைப்
பயன்படுத்தி பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்கள். ஆசிரியரின் மனதிற்குள் சிந்தனையில் நூறுநூறு சிவப்பு எறும்புகள் வரிசையாக ஊர்ந்து கொண்டிருந்தன.
"இப்போது என்னுடைய அன்பான மனைவி என்னுடன் இல்லை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை." சிந்தனைகள் அலையடித்துக் கொண்டிருக்க, திடீரென்று ஆசிரியரின் உள்மனம் ஒரு போர்க்களமாக மாறியது. அவருடைய ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. ஆவேசத்தில் பெருக்கெடுப்பைத் தடுப்பது என்பது அவருக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. இது எப்படி நடந்தது?