விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
பத்திரிகை ஆசிரியர் அவரிடம் கேட்டார்: "சரி... என்ன விஷயம்?''
மீண்டும் ஒருமுறை தன்னுடைய சோகக் கதையை ஆசிரியர் கூற வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் கேட்டபிறகு, பத்திரிகை ஆசிரியர் சொன்னார்: ''ஆசிரியர் அய்யா, நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மைதான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், மன்னிக்க வேண்டும். ஜமீன்தார்களுக்கு எதிராக எங்களால் எதையும் பிரசுரிக்க முடியாது. எங்களுடைய சிரமத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?''
அனைத்து விஷயங்களும் ஆசிரியருக்கும் புரிந்தன அயோக்கியர்களான ஜமீன்தார்கள் எந்த அளவிற்கு சாமர்த்தியமாக நாடு முழுவதும் வலையை வீசியிருக்கிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் இனிமேல் என்ன செய்வது? இனி கலெக்டரும்... இல்லை... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீதியை நிலைநாட்டுவதில் புகழ் பெற்றவர்கள். ஆமாம்... இனிமேல் கலெக்டர்தான் ஏதாவது செய்ய முடியும். ஆசிரியர் நினைத்தார்.
ஆசிரியர் பத்திரிகை அலுவலகத்திலிருந்து நேராக கலெக்டரின் அலுவலகத்திற்குச் சென்றார். அவர் முதலில் ப்யூனைப் பார்த்தார். அவன் ஆசிரியரைப் பார்த்ததும் சொன்னான்: "அய்யா மிகவும் பிஸியாக இருக்கிறார்.''
"மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக அய்யாவைப் பார்க்கணும். மிகவும் தூரத்தில் இருக்கக் கூடிய கிராமத்திலிருந்து வருகிறேன். நான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். நான் என்ன செய்ய வேண்டும்?'' அவர் கேட்டார்.
"நீங்கள் சில விஷயங்களைச் செய்யத்தான் வேண்டும் சார்.'' ஒரு துண்டுத்தாளை எடுத்து ஆசிரியரின் கையில் கொடுத்தவாறு அவன் சொன்னான்: "பெயரையும் வந்ததன் நோக்கத்தையும் இதில் எழுதுங்க... நான் அய்யாவிடம் கூறுகிறேன்.''
ப்யூன் கூறியதன்படி ஆசிரியர் பெயரையும் வந்திருக்கும் நோக்கத்தையும் தாளில் எழுதி அவனிடம் கொடுத்தார். அதை வாசித்துக் கொண்டே அவன் கலெக்டரின் அறைக்குள் சென்றான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்ததும் அவன் ஆசிரியரிடம் சொன்னான். "தயவு செய்து இன்னொரு நாள் வாங்க... அய்யா மிகவும் பிஸியாக இருக்கிறார்.''
கையற்ற நிலையில் நின்றிருந்த ஆசிரியரின் முகத்தில், இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் முழுமையான ஏமாற்றத்தின் கரிய நிழல் படர்ந்தது. அதே இடத்திலேயே ப்யூன் நின்று கொண்டிருந்தான். அவர் வெளியே செல்வதற்காகத் திரும்பினார். ஒவ்வொருவரும் தன்னைப் பார்த்து கிண்டல் மட்டுமே பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை ஆசிரியர் உணர்ந்து கொண்டார். தான் ஒரு கிண்டலுக்குரிய கதாபாத்திரமாக ஆகிவிட்டிருக்கிறோம் என்ற விஷயம் அவரை காரணமே இல்லாமல் கோபம் கொள்ளச் செய்தது. அவர் ப்யூனிடம் சண்டை போட ஆரம்பித்தார். "நீ பொய் சொல்கிறாய். உனக்கு லஞ்சம் தர வேண்டும். நீ அந்தத் தாளை கலெக்டரிடம் காட்டவே இல்லை.''
"காட்டவில்லை. ஆமாம்... காட்டவில்லை. நீங்க என்ன செஞ்சிடுவீங்க? என்னை டிஸ்மிஸ் பண்ணிடுவீங்களா?'' அவன் திரும்பக் கேட்டான்.
அதற்குள் அலுவலகத்தில் இருந்த மற்ற ப்யூன்களும், கிடைக்கக் கூடிய சந்தர்ப்பத்தை எதற்கு வீணாக்க வேண்டுமென்று நினைத்தார்கள். ஆர்வமான வேறு சிலரும் அங்கு வந்து கூடினார்கள். எல்லாரையும் ஒன்றாகப் பார்த்ததும், ஆசிரியர் உரத்த குரலில் சொன்னார்:
"நானே கலெக்டரைப் போய் பார்த்துக் கொள்கிறேன்.''
"ராஸ்கல்... நீ என்ன கவர்னரா? பெரிய பிரச்னைக்குரிய ஆளாக இருக்கியே! நட... கலெக்டர் அய்யாவிடம் கொண்டு போய் சேர்க்கிறோம்'' என்று கூறியவாறு அங்கிருந்த ப்யூன்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அவரைப் பிடித்து தரையில் இழுத்துக் கொண்டு சென்று அலுவலகத்திற்கு வெளியே தள்ளி விட்டார்கள்.
"போ... எங்கே வேணும்னாலும் போ....'' அங்கு இருந்த எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பழி வாங்கிவிட்ட மன மகிழ்ச்சி அவர்களுக்கு!
பாவம்! ஆவேசமடைந்த ஆசிரியர் பரிதாபமான நிலையில் அவமானப்பட்டுக் கொண்டிருந்தார். மீண்டும்... மீண்டும்... !
இருளில் மூழ்கியிருந்த மாளிகையின் ஒரு அறையில் சுசீலா படுத்திருந்தாள். அவள் மதிய உணவு சாப்பிடவில்லை. சாப்பாடு இருந்த பாத்திரம் ஒரு மூலையில் கிடந்தது. விரிப்பில் படுத்துக்
கொண்டே அவள் தன்னைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். அப்போது போச்சம்மா இரவு உணவுடன் அங்கு வந்தாள். மதிய உணவு இருந்த பாத்திரம் அங்கு இருப்பதைப் பார்த்ததும் அவள் சிறிது நேரம் என்னவோ சிந்தித்து, அதை திரும்ப எடுத்துக் கொண்டு சென்றாள்.
சமையலறைக்குச் சென்று போச்சம்மா ருக்மிணியிடம் கூறினாள்: "நேற்றிலிருந்து அவங்க எதையும் சாப்பிடவில்லை. மதிய உணவு வைக்கப்பட்ட நிலையிலேயே அங்கே இருக்கு!''
"நான் என்ன செய்யணும்? அங்கே போய் புகழ்ந்து பேசணுமா?'' ருக்மிணி கேட்டாள்: "நான் அவளுக்கு அருகில் போய் “மகாராணி...” உணவு சாப்பிடுங்கன்னு கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டுமா? அவங்க சுசீலாவை அவளுடைய குழந்தைகளிடமிருந்து பிரித்திருக்கிறார்கள் என்ற விஷயம் உனக்குத் தெரியுமல்லவா?'' தொடர்ந்து பாராட்டுவதைப்போல பெண்களுக்கே உரிய இரக்கத்துடன் அவள் சொன்னாள்: "அவள் எப்படி உணவு சாப்பிடுவாள்? குழந்தைகளை தாயிடமிருந்து பிரித்து விட்டு...''
"அப்படின்னா, இந்த பாத்திரம்...?'' கையில் இருந்த பாத்திரத்தைக் காட்டியவாறு போச்சம்மா கேட்டாள்.
"அதை இங்கேயே வை. இல்லாவிட்டால்... வேண்டாம். அதை இங்கே தா...'' ருக்மிணி போச்சம்மாவிடமிருந்து பாத்திரத்தை வாங்கினாள். அதை கையில் எடுத்துக்கொண்டு அவள் சுசீலாவின் அறைக்குள் சென்றாள். கதவிற்கு எதிராகத் திரும்பியவாறு சுசீலா அப்போதும் படுத்துக் கொண்டிருந்தாள். ருக்மிணி வந்ததைத் தெரிந்து கொண்டிருந்தாலும், அவள் சிறிதுகூட அசையவில்லை. கதவிற்கு அருகில் நின்று கொண்டு ருக்மிணி சொன்னாள்: "ம்... இங்கே பாருங்க... உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். இதைச் சாப்பிடுங்க...''
ஆனால், மவுனம் மட்டுமே பதிலாக இருந்தது.
"என்ன... காதில் விழவில்லையா?''
மீண்டும் அதே மவுனம்.
"ஏன் இப்படி பட்டினி கிடக்க வேண்டும்? சாக வேண்டும் என்பது உங்களுடைய விருப்பமா என்ன?'' ருக்மிணி பாசம் நிறைந்த கோபத்துடன் கேட்டாள்.
ஆனால், எதையுமே காதில் வாங்காததைப்போல மீண்டும் அதே மவுனம் மட்டுமே பதிலாக இருந்தது.
"உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? சுருக்கமாகச் சொல்லப் போனால்- அவர்களுக்காகவாவது ஏதாவது சாப்பிடுங்க. குழந்தைகளுக்கு தாய் இல்லாமல் போனால், நன்றாக இருக்காதே!''
“குழந்தைகள்!” விரிப்பு சற்று அசைந்தவுடன், ருக்மிணி மேலும் கொஞ்சம் அவளுக்கு அருகில் சென்றாள். தொடர்ந்து சொன்னாள்: "எழுந்து உணவு சாப்பிடுங்க... தேவையான அளவிற்கு மட்டும் சாப்பிட்டால் போதும். குழந்தைகளை நினைத்தாவது ஏதாவது சாப்பிடாமல் இருக்கக் கூடாது!''
சுசீலா சற்று திரும்பிப் படுத்தாள். தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். "கெட்டவளின்" கண்களில் அன்பும் இரக்கமும் நிறைந்திருப்பதை சுசீலா பார்த்தாள். ருக்மிணியின் கையிலிருந்து பாத்திரத்தை வாங்கி அவள் உணவைச் சாப்பிட ஆரம்பித்தாள்.