விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
இறுதியில், அவர் மவுனமாக வீட்டிற்குத் திரும்பி வந்தார். கிழவியிடமிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு வந்தார். தந்தையின் இடத்துடன் தாயின் இடத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய முயற்சியில் இப்போது ஆசிரியர் இருந்தார். எந்தவொரு உணர்ச்சிகளும் இல்லாமலே ஆசிரியர் எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருந்தார். உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்தைத் திறந்து பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதும் பிற வேலைகளும் மிகவும் சிரமமான விஷயங்களாக அவருக்கு இருந்தன. ஜமீன்தார் சகோதரர்கள் தன்னுடைய மனைவியை பலவந்தப்படுத்தி இழுத்துக் கொண்டு சென்ற அந்த மோசமான நாள் ஆசிரியரின் ஞாபக அறையில் தானே மேலே தலையை நீட்டிய வண்ணம் இருந்தது. எனினும், தோல்வியிலிருந்து உண்டான ஒரு உறுதியான முடிவுடன் அவர் அன்றாடச் செயல்களில் மூழ்கிக் கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு ஆசிரியர் இப்போது “அம்மாவாகவும் ஆகிவிட்டிருந்தார்.”
பள்ளிக்கூடத்தை விட்டு வந்தபிறகு, ஆசிரியர் கோவிலுக்குச் செல்லும் போது, அவர் மாளிகை இருந்த பக்கம் பார்க்கக்கூட இல்லை. மக்கள் இருந்த பக்கமும் அவர் பார்க்கவில்லை. அங்கு அவர் மீண்டும் பூசாரியைப் பார்த்தார்.
"இப்போ எப்படி இருக்கிறாய் மகனே?'' அவர் கேட்டார்.
"முன்பைவிட சுகமாக இருக்கிறேன்!''
ஆசிரியரின் தளர்ந்து போய் காணப்பட்ட முகத்தை ஆறுதல் கூறுகிறதைப் போல பார்த்துக் கொண்டே பூசாரி சொன்னார்:
"இன்னும் சில நாட்கள் செல்லட்டும். உனக்கு இதை விட சந்தோஷம் கிடைக்கும்.''
நாட்கள் அப்படியே கடந்து கொண்டிருந்தன. சுசீலா மதிய நேரத்தில் தன்னுடைய அறையின் கதவுக்கு அருகில் தனியாக உட்கார்ந்து ஒரு காகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விரக்தியடைந்த முகம். எங்கும் எதுவும் நடக்கவில்லை. அவளுக்கு முன்னால் ஒரு கோப்பை தேநீர் இருந்தது. திடீரென்று ஒரு உற்சாகம் உண்டானவளைப்போல அவள் எழுந்து தேநீர் கோப்பையை சமையலறையில் கொண்டு போய் வைத்தாள்.
ருக்மிணியும் போச்சம்மாவும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டிருந்தார்கள். சுசீலாவைப் பார்த்ததும், அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டார்கள்.
"நான் ஏதாவது உதவி செய்யணுமா?'' சுசீலா கேட்டாள். ஆனால், பதிலெதுவும் கூறாமல் அவர்கள் தங்களுடைய வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
சுசீலா மீண்டும் சொன்னாள்: "இங்கே பாருங்க... நான் ஏதாவது உதவி செய்யிறேன். உங்களுடன் சேர்ந்து வேலை பார்த்தால் நல்லா இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.'' இனிமேல் தான் என்ன சொல்வது என்றோ என்ன செய்வது என்றோ சுசீலாக்குத் தெரியவில்லை. தனக்கு அவமானம் உண்டாகக் கூடிய வகையில் இருந்த அவர்களுடைய செயல் அந்தப் பெண்ணை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. முன்பு நல்ல முறையில் நடந்து கொண்ட ருக்மிணிகூட ஏன் எதுவும் பேசவில்லை? அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
ருக்மிணியும் போச்சம்மாவும் வேலை செய்து கொண்டேயிருந்தார்கள். அவர்கள் எதுவும் பேசாமல் இருந்ததால், சுசீலா கோபத்துடன் அறைக்குள் சென்றாள். உண்மையிலேயே அழ வேண்டும்போல அவளுக்கு இருந்தது. ஆனால், தொண்டை அடைத்துக் கொண்டிருந்ததும், அவமானமும், தனிமையும் சுசீலாவின் இதயத்தைப் பற்றி எரிந்து வேதனைப்படுத்திக் கொண்டிருந்தன.
16
தன்னுடைய புதிய வாழ்க்கையுடன் ஆசிரியர் இப்போது முழுமையாக ஒன்றிப் போய்விட்டிருந்தார். பொழுது புலர்ந்தவுடன், சுசீலா செய்வதைப்போலவே அவர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களையும் தினமும் செய்து கொண்டிருந்தார். வீட்டைப் பெருக்கிவாரி, துடைத்து, சுத்தம் செய்வது... குழந்தைகளைக் குளிக்கச் செய்து உணவு தருவது... பள்ளிக்கூடத்திற்குச் சென்று பாடம் கற்றுத்தருவது... இப்படி அனைத்தையும். ஒரேயொரு வித்தியாசம் மட்டும். குழந்தைகளை அவர் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டு செல்வார். இல்லாவிட்டால் பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது அவருடைய கண்கள் இடையில் அவ்வப்போது வீட்டை நோக்கிக் சென்று கொண்டிருக்கும். எது எப்படி இருந்தாலும், கடுமையான வாழ்க்கையின் யதார்த்தங்களை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். யாரும் தனக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருப்பதோ, அவர்களுடைய கேலியோ, வெறித்துப் பார்ப்பதோ ஆசிரியரை இப்போது கவலை கொள்ளச் செய்வதேயில்லை. அவை எதைப் பற்றியும் கவனம் செலுத்தாமல் எப்படி வாழ்வது என்பதை அதற்குள் அவர் தெரிந்துகொண்டு விட்டிருந்தார்.
பிறகு... குழந்தைகள் விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவர்களும் முன்பு இருந்ததைவிட முற்றிலும் மாறிவிட்டிருந்தார்கள். குழந்தைகள் எப்போதாவது தங்களின் அன்னையைப் பற்றி விசாரித்தால், கலங்கிவிடாமல் பதில் கூறுவதற்கு இப்போது ஆசிரியரால் முடிந்தது. இப்படி நடந்துகொண்டிருந்தாலும், இரவு நேரங்களில் அவர் மிகவும் வேதனைப்பட்டார். சில இரவு வேளைகளில் அவர் வெளியே கூற முடியாத அளவுக்கு சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். எனினும், வாழ்க்கை இப்போது இயல்பான நிலைக்கு மாறிவிட்டிருந்தது. அசாதாரணமாக ஏதாவது இருக்கின்றன என்றால்,
அவை இரவோ, இரவில் காணக்கூடிய பயங்கரமான கனவுகளோ மட்டும்தான்.
ஒரு இரவு நேரத்தில் தான் எங்கோ செல்வதைப்போல ஆசிரியர் கனவு கண்டார். தனித்து நடக்கும்போது ஜமீன்தார் சகோதரர்களில் மூத்தவரான அண்ணா கட்டிலில் படுத்திருப்பதை திடீரென்று அவர் பார்த்தார். அவர் ஆழமான உறக்கத்தில் மூழ்கியிருந்தார். ஆசிரியரின் கால்கள் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தன. கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அந்த அயோக்கியரின் பாதி திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. கோபம் கொப்பளித்துக் கொண்டிருக்க, இனம் புரியாத ஒரு வகையான வெறுப்பு ஆசிரியருக்கு அவர்மீது உண்டாக ஆரம்பித்தது. அவருடைய ரத்தம் கொதிக்கவும் கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறக்கவும் ஆரம்பித்தன. தன்னுடைய கைகளைக் கட்டுப்படுத்த ஆசிரியர் மிகவும் படாதபாடு பட வேண்டியதிருந்தது. மிகவும் சத்தமாக இரைச்சலிட்டுக் கொண்டிருந்த கோப அலை அவரின் மனதிற்குள் இருந்த அமைதியை இல்லாமல் செய்து கொண்டிருந்தது.
ஒரே அமைதி. நாலா பக்கங்களிலும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது. முழுமையான அமைதி. குறட்டைச் சத்தத்தைத் தவிர, வேறு எந்த வகையான சிறு சத்தம்கூட அங்கு கேட்கவில்லை. வேறு யாரையும் அங்கு காணவும் முடியவில்லை. அருகில் யாருமில்லை என்று ஆசிரியருக்குத் தோன்றியது. தானும், எலும்பும் சதையும் உள்ள ஒரு மோசமான உருவமும் மட்டும்- முற்றிலும் தனிமைச் சூழ்நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்கு அங்கு யாருமே இல்லை. அருகிலேயே ஒரு கல் கிடந்தது. கரடியின் உடலையொத்த உரோமங்கள் நிறைந்த அந்த உடல் ஒரே கல் எறிதலில் முகமே இல்லாததாக ஆகிவிடும். ஆமாம்... வெறும் ஒரே எறிதலில்! ஒரு பைத்தியம் பிடித்த மனிதரைப் போல ஆசிரியர் அடுத்த நிமிடம் கல்லின் அருகில் சென்றார்.