விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும், விஸ்வம் ஒரு வார்த்தைகூட வாய் திறக்கவில்லை. அவர் புறப்படுவதற்காக எழுந்து நின்றார். "நான் இனிமேலும் வருவேன்'' என்று உரத்த குரலில் கூறியவாறு விஸ்வம் அறையிலிருந்து வெளியேறினார்.
17
மாளிகையில் அப்படியே நாட்கள் கடந்து கொண்டிருந்தன. வெறுப்பு, காதல், அதிகார உரிமை ஆகியவற்றின் பெயரில் அங்கு எப்போதும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ருக்மிணிக்கும் சுசீலாவுக்குமிடையே பெரிய அளவில் பேச்சு எதுவுமில்லை. வாயாடியாக இருந்த போச்சம்மாவிற்கு அது ஒரு நல்ல விஷயமாக அமைந்துவிட்டது. அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு "ருக்மிணி புராண"த்தை இன்று போச்சம்மா கூறிக் கொண்டிருந்தாள். "உங்களுடன் மட்டுமல்ல. சின்ன எஜமானிடமும் அவங்க எதுவும் பேசறதே இல்லை. நீங்கள் வெளியிலிருந்து வந்த ஒரு பெண். ஆனால், அவர் என்ன அப்படியா? சின்ன எஜமான்தான் உண்மையான கணவர். அவர் அது எதைப் பற்றியும் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை.'' போச்சம்மா சுசீலாவிடம் கூறினாள்.
"அப்படின்னா, சின்ன எஜமான் எதைத்தான் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்?'' உடனடியாக சுசீலா கேட்டாள்.
"உங்களுக்கு எதுவுமே தெரியாததைப்போல...'' வாயில் வெற்றிலையை நுழைத்துக் கொண்டே போச்சம்மா தொடர்ந்து சொன்னாள்: "இப்போது சின்ன எஜமானுக்கு உங்கள்மீதுதான் அதிக விருப்பம். இப்போது அவர் உங்களுடைய அடிமை. பிறகு உங்களை எடுத்துக்கொண்டால், அதற்கு முற்றிலும் தகுதியானவங்க நீங்க...'' இங்குமங்கும் பார்த்துக்கொண்டே
அவள் தாழ்வான குரலில் சொன்னாள்: "நீங்கள் அவங்களைவிட ஆயிரம் மடங்கு அழகு படைச்சவங்க. அறிவு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அவங்களுக்கு உங்களுடைய அறிவில் பாதிகூட இல்லை. நாட்டு நடப்பு பற்றியோ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியோ அந்த அப்பாவிக்கு எதுவுமே தெரியாது. எதுவுமே இல்லைன்னாக்கூட நீங்கள் ஒரு ஆசிரியரின் மனைவி ஆச்சே!''
ஆசிரியர் என்று கூறி முடிந்தவுடன், அப்படிக் கூறியிருக்க வேண்டியதில்லை என்று போச்சம்மாவிற்குத் தோன்றியது. அடுத்த நொடியே அவள் பேச்சின் போக்கை மாற்றினாள்: "சமீபகாலமாக நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் அல்லவா? பெரிய எஜமான் லும்பாடாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார். தற்போதைக்கு அவங்களோட இன்னொரு வீட்டில் இருக்க வச்சிருக்காங்க. நான் அவளைப் பார்த்தது இல்லை.''
ஆனால், கூறலாமா கூறாமல் இருக்கலாமா என்ற சந்தேகத்துடன் அவள் தொடர்ந்து சொன்னாள்:
"லும்பாடாக்காரி உங்களைவிட அதிகமான அழகைக் கொண்டவள் என்று கேள்விப்பட்டேன். வயதும் அவளுக்கு மிகவும் குறைவு. அதனால்தான் சமீபகாலமாக அவர் உங்களுக்குத் தொல்லை கொடுக்காமல் இருக்கிறார். அவர்கள் ஆண்கள். ஆண்கள்! அவர்களுக்கு எப்போதும் புதுசாவேணும். ஏதாவது ஒரு பெண்ணை பயன்படுத்தி முடிஞ்சாச்சுன்னா, அதற்குப் பிறகு அவள்மீது அந்த அளவுக்கு விருப்பத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது அந்தக் காலத்துல இருந்தே ஆண்களின் குணமாக இருந்து வந்திருக்கிறது என்ற விஷயம்தான் உங்களுக்குத் தெரியுமே! சரி... நேரம் கொஞ்சம் ஆயிடுச்சுல்ல... சரி... அப்போ நான் போறேன்... கொஞ்சம் வேலை இருக்கு...''
"ருக்மிணி புராணம்" சுசீலாவுக்கு சுவாரசியமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவள் எல்லாவற்றையும் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அங்கிருந்து எழுந்து போச்சம்மா ருக்மிணியின் அறைக்குச் சென்றாள்.
"நீங்கள் எதைப் பற்றியும் பதைபதைப்பு அடைய வேண்டாம். மிகவும் சீக்கிரமே அவங்க மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவாங்க. இன்றைக்கு நடந்த விஷயம்... ஓ... நான் அதை எப்படி உங்களிடம் கூறுவேன்?'' போச்சம்மா அங்கும் ஒரு கதையைக் கூறினாள். சுவாரசியமாக "புராணம்" முழுவதையும் கூற வேண்டும் என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால், சிறிதும் எதிர்பாராமல் ருக்மிணி போச்சம்மாவிற்கு நினைவூட்டினாள். "உன் வேலை முழுவதும் முடிஞ்சிடுச்சா?''
உடனடியாக அவள் சொன்னாள்: "ஓ... பேச்சுக்கு மத்தியில் நான் அதை மறந்திட்டேன். எல்லாவற்றையும் இப்போ செஞ்சிடுறேன்.''
வேலை செய்து முடிந்தபிறகு மீண்டும் அவள் இதைப் பேசிக் கொண்டிருப்பதற்காக சுசீலாவைத் தேடி வந்தாள். போச்சம்மா வருவதற்கு முன்பு, சுசீலா என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவள் கேட்டாள்: "போச்சம்மா, நீ கிராமத்திற்குப் போவதுண்டா?''
"தினமும் போவதுண்டு.'' அவள் சொன்னாள்.
"எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நீ என்றைக்காவது என்னுடைய...'' கணவரை என்று கூறுவதற்கு விரும்பினாலும், சுசீலா திருத்திக் கொண்டாள்: "குழந்தைகளைப் பார்த்திருக்கிறாயா?''
"கட்டாயமா...'' போச்சம்மா சொன்னாள்.
"என்னுடைய அவரை உனக்கு தெரிந்திருக்குமே, போச்சம்மா?''
"அவரை யாருக்குத்தான் தெரியாது? ஒவ்வொரு கிராமத்து மனிதனுக்கும் அவரைத் தெரியும். அவர் ஆசிரியரல்லவா?''
"போச்சம்மா, நீ அவரிடம் கொஞ்சம் போக முடியுமா? எனக்காக அவரிடம் சில விஷயங்களைக் கூற முடியுமா?''
"நிச்சயமா சொல்றேன். நான் என்ன சொல்ல வேண்டும்? நீங்கள் சொல்ற மாதிரியே செய்யிறேன்.'' போச்சம்மா அவளைத் தேற்றினாள்.
"அவரிடம்... அவரிடம்...'' வேகமாகத் துடித்துக் கொண்டிருந்த இதயத்துடன், தன் கணவருக்கு என்ன செய்தியைக் கூறி அனுப்புவது என்று சுசீலா சிந்திக்க ஆரம்பித்தாள். இங்கிருந்து எப்படியாவது தப்பிப்பதற்கு விரும்புகிறேன் என்று சொன்னால் என்ன? அல்லது ஒரு நாள் இங்கு வந்து நீங்கள் என்னை அழைத்துக்கொண்டு செல்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் அமைதியாக எல்லாவற்றையும் நான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாமா? ஆனால், அவர் எங்கே இருக்கிறார்? என்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு அவர் என்ன செய்தார்? எதுவுமே செய்யவில்லை.
சுசீலா போச்சம்மாவிடம் கருத்து கேட்டாள்: "நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா என்று கேட்டால் எப்படி இருக்கும்? வேண்டாம்... ஆமாம்... ம்... அப்படியே கேட்கலாம். பிறகு அவரிடம் குழந்தைகளைப் பற்றி கேட்கலாம்.''
"மிகவும் நல்லது.'' தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியவாறு முன்னோக்கி நடக்கும்போது போச்சம்மா சொன்னாள்: "அவருடைய பதிலுடன் சாயங்காலம் வர்றேன்...''
சாயங்காலம் அவள் சொன்னாள்: "தானும் குழந்தைகளும் வீட்டில் சுகமாக இருப்பதாக ஆசிரியர் சொன்னார். நீங்கள் சுகமாக இருக்கீங்கன்னு தெரிந்து கொண்டதில், அவருக்கு மிகவும் சந்தோஷம்.''
"ஆசிரியர் வேறு ஏதாவது சொன்னாரா?'' சுசீலாவின் கண்களில் சூரிய உதயம் தெரிந்தது. "எதுவுமே சொல்லவில்லை.'' போச்சம்மா தொடர்ந்து சொன்னாள்: "ம்... அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.''
"இல்லை...'' சுசீலா அதிர்ச்சியடைந்து சொன்னாள்: "அது நடக்காது. அவர் எந்தச் சமயத்திலும்...''
தந்திரத்துடனும் அர்த்தத்துடனும் போச்சம்மா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். "அவங்க ஆம்பளைங்க...'' அவள் சொன்னாள்: "அவங்களுக்கு எப்போதும் ஒரு பெண் வேண்டும். பெண் இல்லாமல் வாழ முடியாது.''