அன்னக்குட்டி - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7402
அழுகிப்போன மீன், சீனி, நாற்றமெடுத்த அரிசி- இவைதான் அவனின் நித்திய உணவு. ஸோஃபாவில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருக்கும் அன்னக்குட்டியின் தாயை அவன் பலமுறை கண்டிருக்கிறான். அவனின் அன்னையோ கிழிந்துபோன ஜாக்கெட்டும், நார் நாராகிப்போன ஒரு துண்டுத் துணியையும் இடுப்பில் சுற்றியவாறு வேலையிலிருந்து திரும்பி வரும் கணவனை எதிர்பார்த்து நித்தமும் குடிசை வாசலில் காத்திருக்கிறாள். நினைத்துப் பார்க்கப் பார்க்க இந்த வித்தியாசங்கள் பூதாகரமாய் நின்று அந்தப் பிஞ்சு இதயத்தை அலைக்கழித்தன. என்ன காரணத்தாலோ, அன்னக்குட்டி மேல் அவனுக்கு வெறுப்பும், பொறாமையும் உண்டாயின. இலவ மரத்தின் மேல் சாய்ந்து தரையை பார்த்தவாறு மௌனமாக நின்றான் அவன்.
அன்னக்குட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. அருகில் சென்று அவனை உலுக்கினாள். “என்கிட்ட கோபமா ஜான்?”
“ம்.” -முகம் உயர்த்தாமல் கூறினான் ஜான்.
“எதுக்கு? நான் ட்ரஸ் தர்றேன்னு சொன்னதுக்கா?”
“உன்மேல மட்டுமல்ல... எல்லார் மேலயும் எனக்குக் கோபம் கோபமா வருது...” கூறிவிட்டு ஓடிவிட்டான் அவன்.
அன்று மாலை தன் தந்தையுடன் காரில் சவாரி போனாள் அன்னக்குட்டி. தெருவின் ஒரு மூலையில் சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஜான் அவள் கண்ணில் பட்டான். சினிமா நோட்டீஸ் ஒன்றை கையில் ஏந்தியவாறு, மற்ற குழந்தைகளிடம் அவன் என்னவோ கூறிக்கொண்டிருந்தான். அவன் பேசுவதைக்கேட்டு மற்ற குழந்தைகள் சிரித்தன. சிறுமி ஒருத்தி அவனின் தோளைப் பற்றி நின்று கொண்டிருக்கிறாள். மற்றொரு சிறுமி அவனை உரசியவாறு நின்றுகொண்டு சினிமா நோட்டீஸிலிருந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அன்னக்குட்டிக்கு அந்தக் காட்சி என்னமோ போலிருந்தது. கார் அதற்குள் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டது.
அடுத்த நாள் காலை ஜான் மதில் மேல் அமர்ந்து தோட்டத்தைப் பார்த்தபோது அன்னக்குட்டி மாமரத்தின் மீது சாய்ந்தவாறு எதையோ பறிகொடுத்த மாதிரி நின்றுகொண்டிருந்தாள். தன்னை அவள் இன்னும் கவனிக்கவில்லை என்று நினைத்த அவன் நாய் மாதிரி குரைத்தான். அவள் அப்போதும் பார்க்கவில்லை. அவளுக்கு மிகவும் அருகில் சென்று ஒரு குதி குதித்தான். அப்போதும் அவள் அசைவதாகத் தெரியவில்லை. கோமாளி மாதிரி இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டிப் பார்த்தான். அவள் சிரிக்கவில்லை. அவளின் கையைப் பிடித்துச் செல்லமாக இழுத்தான். ‘வெடுக்’கென்று பிடுங்கிக் கொண்டாள் அவள். ஜானுக்கு கோபம் வந்துவிட்டது. “அப்படின்னா நான் போறேன்.”
“போ. அவுங்க கூட போய் விளையாடு” முகம் உயர்த்தாமல் தாழ்ந்த குரலில் கூறினாள் அன்னக்குட்டி.
“யாரு கூட?”
“நேத்து சாயங்காலம் பார்த்தேனே... அவங்ககூட...”
ஜானுக்கு இதனால் மகிழ்ச்சியே உண்டானது. பொதுவாக தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன் ஜான் விளையாடப் போவதில்லை. ஆனால் தன்னைத் தவிர அவனுக்கு வேறு பல நண்பர்களும் உண்டு என்று அன்னக்குட்டி நினைப்பது தனக்கு நல்லதுதான் என்று நினைத்தான் அவன். “நான் தினமும் அவுங்ககூட விளையாடுவேன். அதனால் உனக்கென்ன?”
அதற்குமேல் அன்னக்குட்டிக்குப் பொறுமையில்லை. “நேத்து உன் தோளைப் பிடிச்சு நின்ன பொண்ணு யாரு?”
ஜான் கேலிச் சிரிப்புடன் கூறினான். “யார், ரோஸை சொல்றியா? அவள் எவ்வளவு கெட்டிக்காரி தெரியுமா?”
அன்னக்குட்டிக்கு அழுகையே வந்துவிட்டது. “போயி அவ கூட விளையாடு என் கூட வரவேண்டாம்.”
“நான்னா அவளுக்கு ரொம்பவும் இஷ்டம். எனக்கும்தான்.”
இனிமேலும் அன்னக்குட்டியால் சகித்துக்கொண்டிருக்க முடியாது. அவள் தேம்பித் தேம்பி அழுதாள். அவளைக் கட்டிப் பிடித்துக் கூறினான் ஜான். “நான் இனிமேல் போகமாட்டேன் அன்னக்குட்டி. அழாதே... போகமாட்டேன்.”
அவளின் முகத்தை ஏறிட்டு நோக்கினாள் அன்னக்குட்டி. அவளைத் தொட்டு சத்தியம் செய்தான். இனி ஒருபோதும் அவளையல்லாமல் வேறு யாருடனும் விளையாடப் போக மாட்டேனென்று அன்னக்குட்டிக்கு திருப்தி உண்டாகிவிட்டது. மேலும் நெருக்கமாயின அவ்விரு இதயங்களும்.
பதினான்கு வருடங்கள் படுவேகமாக ஓடி மறைந்தன. நதிகள் பல இந்த இடைப்பட்ட காலத்தில் முற்றிலுமாக வற்றிப்போயின. சில நதி மலைச்சரிவுகளில் சோககான மிசைத்தவாறு எந்தவிதமான லட்சியமுமின்றி பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன. வேறு சில நதிகள் ஆழத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. வேறு சில கட்டுக்களை மீறி உடைத்து கம்பீரமாக ஓடிக்கொண்டிருந்தன. மிக சொற்பமானவைதான் எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி சாதாரணமாக சமவெளியில் கீதம் இசைத்து ஓடிக் கொண்டிருந்தன. சில நதிகள் ஒன்றாய் இணைந்து ஓடின. வேறு சில பிரிந்து வெவ்வேறு திரை நோக்கி ஓடின. வாழ்க்கையும் அதுபோலத்தான்.
ஜான். இப்போது ரெயில்வே ஸ்டேஷன் ஒன்றில் போர்ட்டராக இருக்கிறான். அவனுடைய தந்தை இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. தாய், மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் எல்லோரையும் காப்பாற்ற வேண்டியது அவன்தான். பொழுது புலர்வதற்கு முன்பே ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுவான். அவன் மாலை வீடு திரும்பிய பிறகுதான் வீட்டில் அடுப்பே புகையும்.
மாலை நேரம் - மெயில் வண்டி ப்ளாட்ஃபாரத்தில் வந்து நின்றது. “கூலி கூலி” என்று சப்தமிட்டவாறு ஜன சமுத்திரத்திற்குள் ஓடினான் ஜான். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ‘டிப்-டாப்’பாக உடையணிந்த இளைஞன் ஒருவன் ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினான். “சார், கூலி வேணுமா சார்?” ஜான் அந்த இளைஞனை நோக்கி நடந்தான்.
அவனுக்குப் பின்னால் நவநாகரீக உடையணிந்த பெண்ணொருத்தி அந்த இளைஞனின் கையைப் பிடித்தவாறு ஒயிலாக பெட்டியிலிருந்து இறங்கினாள். ஜான் இரண்டடி தள்ளி நின்று, அவளையே வைத்த கண் எடுக்காத பார்த்தான். எதையும் கண்டு கொள்ளாத பாவனையில் அவன் மேல் மேலும் ஒட்டியவாறு நின்றாள் அவள்.
இரண்டு மூன்று போர்ட்டர்கள் பெட்டிகளையும் படுக்கைகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். “வெளியே கார் நிக்குது” என்று சொன்ன அந்த இளைஞன் தன்மேல் சாய்ந்திருக்கும் பெண்ணை அர்த்தபுஷ்டியுடன் பார்த்துச் சிரித்தான். ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் அவ்விளம் தம்பதி- ஆம், அவர்கள் தம்பதிதாம்- நடந்து போனார்கள். செயலற்று நின்றிருந்தான் ஜான்.
முகம் குனிந்து, சேலைத்தலைப்பை வலது கையில் பிடித்தவாறு, பின்பக்கம் சேர்த்துக் கட்டிய கூந்தலை இடது கையால் தடவிக்கொண்டு, தன் கணவன் மீது உரசியவாறு அவள் நடந்து போனாள். திடீரென்று- எதையோ மறந்தது போல பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவளின் விழிகள் ஜானின் பார்வையோடு மோதின. இனம் புரியாத ஒரு உணர்வு அப்போது அவள் முகத்தில் தோன்றியது. அடுத்த நிமிஷமே ஒன்றும் நடக்காத மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் இருவரும் சிறிது நேரத்தில் மறைந்து போனார்கள்.
“அன்னக்குட்டி... அன்னக்குட்டி...” ஜானின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.
பிரயாணிகள் போய் ப்ளாட்ஃபாரம் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஜான் அப்போதும் அசையவில்லை. அவன் வாய் மட்டும் மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
“அன்னக்குட்டி... அன்னக்குட்டி...”