Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

மேகான் லீவி

மேகான் லீவி  (Megan Leavey)

(2017 - ஹாலிவுட் திரைப்படம்)
சுரா

 

2017ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். இது ஒரு உண்மைக் கதை. ராணுவத்தில் பணியாற்றும் மேகான் லீவி என்ற பெண்ணையும், அவளுடன் சேர்ந்து திறமையுடன் செயல்பட்ட ரெக்ஸ் என்ற மோப்பம் பிடிக்கும் நாயையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது. இப்படத்தின் இயக்குநர் கேப்ரியேலா கவ்பெர்த்வைட். பிரபல அமெரிக்க திரைப்பட நட்சத்திரம் கேட் மாரா, மேகான் லீவி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார், ஹார்ட்லேண்ட் திரைப்பட விழாவில் இப்படத்திற்கு ‘மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படம்’ என்ற பிரிவில் விருது அளிக்கப்பட்டது.

     ‘மேகான் லீவி’ படத்தின் கதை இதுதான்.....

     மேகான் லீவி தன் தாயுடன் வசித்துக் கொண்டிருக்கிறாள். வாழ்கையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அவள் அமெரிக்க ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானிக்கிறாள். அவளுக்கு அங்கு பல சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஓடுதல், தாவுதல் என்று பலவற்றையும் அவள் அங்கு செய்கிறாள். மோப்ப நாயை  வைத்து அவள் மீது அதை பாயச் செய்கிறார்கள். அனைத்து சோதனைகளையும் தைரியமாக கடக்கிறாள் மேகான். இறுதியில் அவள் தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.

     ஈராக்கின் போர்க் களத்திற்கு அவள் அனுப்பப்படுகிறாள்.  அவளுடன் பணியாற்றுவதற்காக ரெக்ஸ் என்ற நாயும் அனுப்பப்படுகிறது. 2005இல் ஃபல்னுஜா என்ற இடத்தில் மேகான் லீவியும், ரெக்ஸும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். ஒரு வீட்டில் வெடிகுண்டுகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதை மோப்ப நாயான ரெக்ஸ் கண்டு பிடிக்கிறது. அதனால் நடக்க இருந்த மிகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்படுகிறது. இந்தச் செயலால் மேகான் லீவிக்கும் ரெக்ஸுக்கும் மிகச் சிறந்த பெயர் கிடைக்கிறது.

     பல நாட்கள் ஆபத்து நிறைந்த இடங்களில் பணியாற்றிய மேகான் லீவியும் ரெக்ஸும் திரும்பி அமெரிக்காவிற்கு வருகின்றனர். அனைவரிடமும் அவர்கள் இருவருக்கும் நல்ல பெயர்..... அதைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் ஈராக்கிலிருக்கும் ராமாடி என்ற இடத்திற்கு மீண்டும் ஒரு குழுவினர் அனுப்பப்படுகின்றனர். அந்தக் குழுவில் மேகான் லீவியும், அவளுக்குப் பிரியமான மோப்ப நாயான ரெக்ஸும் இருக்கின்றனர்.

     ரிமோட் மூலம் ஒரு மிகப் பெரிய வெடி குண்டு விபத்தை ஒரு கொடூர குணம் கொண்ட மனிதன் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறான். அப்போது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த பல கண்ணி வெடிகளை தன் மோப்ப சக்தியால் கண்டு பிடிக்கிறது ரெக்ஸ். எனினும், அப்போது நடக்கும் கடுமையான குண்டு வெடிப்பில் வீசி எறியப்படுகின்றனர் மேகானும், ரெக்ஸும். கிட்டத்தட்ட இருவருமே இறந்து விட்டார்கள். என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். பலமான காயங்களுடன் தரையில் விழுந்து கிடக்கிறாள் மேகான் லீவி. நாய்க்கும் பாதிப்பு உண்டாகியிருக்கிறது. எனினும், அதற்குப் பிறகும் செயல்படுகின்றனர். இருவரும். தன் மோப்ப சக்தியால், துப்பாக்கிகளுடன் ஏராளமான மனிதர்கள் பதுங்கியிருக்கும் ஒரு இடத்தைக் கண்டு பிடிக்கிறது ரெக்ஸ். அமெரிக்க ராணுவத்திற்கும் ஈராக்கிய தீவிரவாதிகளுக்குமிடையே கடுமையான சண்டை நடக்கிறது. அதில் நிறைய மனிதர்கள் உயிரிழக்கின்றனர். தீவிரவாதிகளை முழுமையாக அழிக்கிறது அமெரிக்க ராணுவம். இந்தச் செயலின் மூலம் பல இலட்சம் மக்கள் மரணமடைவதிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர். அந்தப் பெருமை மேகான் லீவிக்கும், ரெக்ஸுக்கும்தான்......

     அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள் மேகான். அவளுடைய ராணுவப் பணி முடிவுக்கு வருகிறது. ஆனால், தொடர்ந்து மோப்ப நாய் ரெக்ஸ் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அது தன் பணியைச் செவ்வனே செய்கிறது.

     நாட்கள் கடந்தோடுகின்றன. மோப்ப நாய் ரெக்ஸின் பணியும் முடிவுக்கு வருகிறது. தன் பணியையும், ரெக்ஸின் அரிய சேவையையும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த மேகான் லீவி, ‘ஃபேஸியல் பால்ஸி’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் ரெக்ஸை தான் தத்தெடுத்து வளர்க்க தீர்மானித்திருப்பதாக கூறுகிறாள். அதற்காக மக்களிடம் கையெழுத்து வேட்டை நடக்கிறது. ஏராளமான மக்கள் அதற்கு ஆதரவு தருகின்றனர்.

     மேகான் லீவி, ரெக்ஸ் இருவரின் திறமையான சேவைக்காக ஒரு மிகப் பெரிய விழாவில் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஆயிரக் கணக்கான மக்கள் அவ்விழாவில் திரண்டு வந்திருந்து, கைகள் தட்டி, சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். பல வருடங்கள் தன்னுடன் பணியாற்றிய தன் அன்பிற்குரிய நாய் ரெக்ஸுடன் மகிழ்ச்சி பொங்க நடக்கிறாள் மேகான் லீவி.

     அதற்குப் பிறகு பல வருடங்கள் மேகான் லீவியுடன் வாழும் ரெக்ஸ் 2012இல் மரணத்தைத் தழுவுகிறது.

     ரெக்ஸ் மரணமடைந்த தகவலை படம் முடிந்த பிறகு எழுத்து வடிவத்தில் காட்டுகிறார்கள். அதற்குப் பிறகு வேறொரு நாயை மேகான் லீவி வளர்க்கிறாள் என்ற தகவலும் எழுத்து மூலம் காட்டப்படுகிறது.

     ராணுவத்தில் பணியாற்றும் மேகான் லீவி கதாபாத்திரத்திற்கு கேட் மாரா மிகவும் அருமையாக பொருந்தியிருக்கிறார். அவருடைய தோற்றம், உடலமைப்பு, சீருடை அணிந்து அவர் செயல்படும் விதம் - அத்தனையும் அருமை !

     குண்டு வெடிக்கும் காட்சிகளும், அதில் உயிருக்கு ஆபத்து உண்டாகும் நிலையில் மேகான் லீவியும் நாய் ரெக்ஸும் வீசியெறியப்படுவதும் மிகவும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க ராணுவம் ஈராக்கிற்குள் நுழையும்போது ஒரு ராணுவ வீரர் ‘ஈராக்கியர்களுக்கு நாய்களைப் பொதுவாகவே பிடிக்காது’ என்றொரு தகவலை மேகான் லீவியும் கூறுவார். நாமே இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத செய்தி அது!

     ஈராக்கில் இருக்கும்போது, மேகான் லீவிக்கு ஒரு அமெரிக்க ராணுவ வீரருடன் நெருக்கமான நட்பு உண்டாகும். இருவரும் தங்களின் வாழ்க்கை பற்றியும், வேறு பல விஷயங்களைப் பற்றியும் மிகவும் ஆழமாக பேசிக் கொண்டிருப்பார்கள். ஆரம்பத்தில் நட்பு ரீதியாக பேச ஆரம்பித்த அவர்களுக்கிடையே பின்னர் உடல் ரீதியாக நெருங்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அந்த காட்சிகள் யதார்த்தமான விளக்கொளியில் கவித்துவ உணர்வுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன.

     மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்ணி வெடிகளையும் கண்டு பிடிக்கும் காட்சிகளில் நம்மை மறந்து ரெக்ஸைப் பாராட்ட தோன்றுகிறது. 

     ஆபத்து நிறைந்த இடங்களில் செய்த ராணுவ சேவைக்காக மேகான் லீவிக்கும், ரெக்ஸுக்கும் விருகள் வழங்கும்போது, உண்மையிலேயே நமக்கு இனம் புரியாத சந்தோஷம் இதயத்தில் உண்டாகிறது.

     ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே  உண்டாகாமல், மேகான் லீவி என்ற துணிச்சல் குணம் கொண்ட ஒரு சாகசப் பெண்ணின் வாழ்க்கையை நம் கண்களுக்கு முன்னால் பார்க்கிறோம் என்று தோன்றக் கூடிய வகையில் படத்தை இயக்கிய கேப்ரியேலா கவ்பெர்த்வைட்டிற்கு..... ஒரு பூச்செண்டு!

     ‘மேகான் லீவி’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பதாக உலகெங்கும் உள்ள முன்னணி பத்திரிகைகள் பாராட்டியிருக்கின்றன. ஆக்ஷன் படங்களை ஆண்கள்தான் அதிகமாக விரும்பிப் பார்ப்பார்கள் என்றாலும், இந்த படத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறார்கள். அதற்குக் காரணம்.. இது சாதனை படைத்த ஒரு பெண்ணின் கதை என்பதுதான்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version