ஒரு காதல் கதை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8213
“இது என்ன பைத்தியக்காரத்தனம்? நான் உங்களுக்குச் சொந்தமானவள்தானே?”
“ம்..”
அவன் கோபத்துடன் மெதுவான குரலில் முனகினான். அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள்.
ஒருமுறை அவன் அவளை மார்போடு அணைத்து, கையால் இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டே பற்களைக் கடித்தவாறு கேட்டான் :
“நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வில்லையென்றாலும், நீ என்னைக் காதலிப்பாயா?
அவளால் அந்த கேள்வியைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“என்ன சொல்றீங்க?”
அவன் திரும்பக் கூறவில்லை.
“ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை...
பின்னர் ஒருமுறை அவன் கேட்டான் !
“நான் பிஸினஸ் செய்து பணக்காரனாகி வாழக்கையில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை உனக்கு இல்லையா?”
அந்தக் கேள்வி அவளிடம் கேட்கப்பட வேண்டியதா? அந்தக் கேள்விக்கான நோக்கம் என்ன? ஏதோ இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. அவள் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“அதற்குத் தேவையானவற்றை நீ செய்வாய் அல்லவா? சகித்துக்கொள்ள வேண்டியவற்றையெல்லாம் சகித்துக் கொள்வாய் அல்லவா?”
அதற்கு பதில் கூறவேண்டிய அவசியமில்லை.
அந்த கிராமத்து இளம்பெண்ணிடம் அவன் மிடுக்கான குரலில் நீளம் நீளமாக சொற்பொழிவாற்றுவான். அடுத்தடுத்து இரண்டு பாறைகளின்மீது அமர்ந்து அவன் பெரிய விஷயங்களைக் கூறுவான். அவள் எதுவுமே புரியாமல் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். தன்னை அன்புடன் கொஞ்சிய அந்தக் காதலனா என்று அவள் சந்தேகப்பட்டிருக்கிறாள். பயந்திருக்கிறாள்... அதே உருவம்தான்... குரல்கூட மாறியிருக்கிறது.
வாழக்கையைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு பெண்! விளையாடி, சிரித்து வாழவேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். ஆனால், விளையாட்டு இல்லை... சிரிப்பு இல்லை. சுமைகள் நிறைந்த ஒரு வாழ்க்கையாக அது இருந்தது. அது அவளை பயமுறுத்தியது.
அவன் கூறுவது வாழ்க்கை பற்றிய தத்துவஞானம். தாயின் பாலிலிருந்து அவனுக்கு கிடைத்த ஒரு தத்துவ ஞானம்! பிஸினஸ் செய்பவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமானது அவனுடைய பிஸினஸ்தான். அதன் வெற்றிக்கான சூழ்நிலைகளை அவன் உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். சில நேரங்களில் கடுமையான செயல்களை அவன் செய்ய வேண்டியதிருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் அவன் இருண்ட இதயத்தைக் கொண்டவனாக இருப்பானோ என்று தோன்றும்- யாருமே கேட்காத அந்தச் சொற்பொழிவு அவ்வாறு போய்க்கொண்டிருந்தது. பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியுமே!
உண்மையிலேயே அப்படி எதையும் கூறவேண்டும் என்று பேபி நினைக்கவில்லை. ஆனால், தன்னையே அறியாமல் அவன் கூறிவிடுவான். அதற்குப்பிறகு எதற்கு இதையெல்லாம் கூறினோம் என்று அவன் சிந்திப்பான். அந்த நேரங்களில் ஒரு சிறிய குழந்தையைப்போல அவளை அவன் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான். அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்துவிடும்.
ஒருநாள் அவளுடைய தந்தை சொன்னான் :
“தோட்டத்தை விற்கப் போறாங்க.”
பேபியால் அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை.
மறுநாள் மூன்று நான்கு பேர் தோட்டத்தைப் பார்ப்பதற்காக வந்தார்கள். அன்றே பேபி நகரத்திற்குத் திரும்பிவிட்டான்.
பேபிக்கும் அவனுடைய தந்தைக்குமிடையே உரசல் உண்டாகிவிட்டது என்ற தகவல் பரவியது. பேபிக்கு கிழக்கு திசையில் எங்கோ ஒரு பெண் இருக்கிறாள் என்ற தகவலும்... அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற செய்தியும் இனிமேல் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட விஷயம் நடக்கப் போவதில்லை. பணத்திற்கு எங்கே போவது? அவனுடைய தந்தை தோட்டத்தை விற்று விட்டார். சொத்துக்கள் சம்பந்தமாக சில ஏற்பாடுகளைச் செய்யப் போகிறார். பேபிக்கு எதுவும் கொடுப்பார் என்று தோன்றவில்லை. நீதிபதியின் மகளை பேபிக்கு திருமணம் செய்துவைக்கிறேன் என்று அவனுடைய தந்தை வாக்களித்திருந்தார். பேபிக்கு அதில் சம்மதமில்லை.
இப்படிப்பட்ட ஒரு காட்டுத்தீக்கு மத்தியில் நகரத்திற்கு வந்தான். எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும் இதே கேள்விதான். தோட்டத்தை எதற்காக விற்பனை செய்தார்கள் என்ற விஷயம் இப்போது பேபிக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது.
வயதானவர்கள் அறிவுரை கூறினார்கள். “நல்ல பெயன். கஷ்டம்! கிறுக்கு பிடித்து அலைகிறானே!” என்று அவர்கள் பரிதாபப்பட்டார்கள். பேபிக்கு அது புரிந்தது. ஆனால், அது மனதை வேதனைப் படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது.
தந்தையை எதிர்த்தவன் என்ற கெட்ட பெயர். அதை எப்படி அவன் சந்தித்து வாழ்வான்? அவனுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது. தன் தந்தையைப் பற்றி பேபிக்கு நன்றாகத் தெரியும். ஒரு கண்டிப்பான மனிதர். ஒரு மகனை வேண்டாம் என்று உதறிவிட நினைத்தால், எந்தவொரு சக்தியாலும் அதை திரும்பக் கொண்டுவர முடியாது. தந்தை வீசியெறிந்து விட்டால்... அதற்குப் பிறகு என்ன செய்வது?
பேபி தளர்ந்து போய்விட்டான். எதிர்காலம் இருண்டு கிடப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. கனவு கண்டு கொண்டிருந்த பிஸினஸ் - அது நடக்கப் போவதில்லை. பிறகு? பேபிக்கு ஒரு வழியும் தெரிய வில்லை.
எனினும், அந்த திருமண உறவில் ஈடுபடுவதற்கு அவனுக்கு மனம் வரவில்லை.
அந்த திருமண உறவைப்பற்றி அவனுடைய தந்தை கூறிய நாளிலிருந்து அவனுடைய மூளையில் ஒரே குழப்பங்களாகவே இருந்தது. தெளிவான ஒரு வடிவுமே அவனுக்குக் கிடைக்கவில்லை. என்ன செய்ய வேண்டுமென்பதும் பற்றி முடிவு செய்வதற்கே அவளால் முடியவில்லை.
அந்த ஏழைப்பெண் அவனை நம்பினாள். நம்பாதே என்று கூறவேண்டுமென்று நினைத்தான். ஆனால், கூறவில்லை. அவள் அந்த அளவிற்கு புத்திசாலித்தனம் கொண்டவளில்லை. அவனால் புரிந்து கொள்ள முடியாத வகையில் கூறியிருப்பதாக பேபி நினைத்தான்.
அவள் அங்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்!
கள்ளங்கபடமற்ற தன்மையுடன் அந்த கிராமத்தின் எல்லையில் ஒரு பட்டாம்பூச்சியைப்போல அவள் நடந்து திரிந்தாள். யாராவது ஒரு வேலைக்காரன் அவளுடன் வந்துசேர்ந்திருக்கலாம். ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்து, குழந்தைகளும் பிறந்து, சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள். அந்த வாழ்க்கையில் மிகுந்த சுகங்களைக் கண்டு திருப்தியடைந்து, துயரங்களை சகித்துக்கொண்டு, அந்த வாழ்க்கையை முடித்திருக்கலாம். அவளை எதற்காக தட்டியெழுப்ப வேண்டும்? சாத்தானின் வெறி!
வரக்கூடிய நல்லது, கெட்டதுகளைப் பற்றிக்கூட சிந்திக்காமல் அவள் கீழ்ப்படிந்தாள். அவளை அவன் என்னவெல்லாம் செய்யவைத்தான்! அவளுடைய கன்னித்தன்மையை நாமசாக்கவில்லையா? அதுவும் அந்த தாயிடமும், தந்தையிடமும் கூறி நம்பவைத்து, அவர்களுடைய கண்களில் மண்ணைத் தூவிவிட்டு!
அதே நேரத்தில் முழுமையாகப் பார்த்தால்... தான்தான் அதற்குப் பொறுப்பா? அவள் அந்த இடத்தில் மறைந்துநின்று பார்த்துக் கொண்டிருந்தது? அவன் ஒரு எட்டு முன்னோக்கி வைக்காமல் இருந்திருந்தால், அவனுடைய புத்தியும் பணக்கொழுப்பும் செயல்படாமல் இருந்திருந்தால் அவள் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது முடிவுக்கு வந்திருக்கும்- அவளும் ஆனந்தத்தை அனுபவித்தாள் அல்லவா? ஆமாம்... அந்த மறைவிடங்களில் நடைபெற்ற சந்திப்புகள் அவளுக்கு இன்பத்தை அளித்திருக்கின்றன.