வெள்ளப்பெருக்கு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8156
நம்முடைய அப்பிராணி நாய் காற்றில் மிதந்து வந்த அந்த மனிதக் குரலைக் கேட்டு பல நிமிடங்கள் காது களைக் கூர்மையாக வைத்துக் கொண்டு சிறிதுகூட அசையாமல் நின்றிருந்தது. இராமாயணத்தின் வரிகள் பாடலாக காற்றோடு கரைந்து எல்லா திசைகளிலும் கேட்டது. காற்றின் ஓசையும் நீரின் அலைகள் எழுப்பும் சத்தமும் தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.
வீட்டின் மேற்கூரைமேல் ஏறி நாய் படுத்திருந்தது. "புஸ் புஸ்” என்று அது சத்தமாகக் கேட்கிற மாதிரி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது விரக்தி தோன்ற அது முணுமுணுக்கவும் செய்தது. அப்போது ஒரு மீன் நீரில் துடித்தது. வேகமாக எழுந்த நாய் அதைப் பார்த்து குரைத்தது. மற்றொரு இடத்தில் தவளை குதித்தது. ஒரு மாதிரி ஆகிவிட்ட நாய் மெதுவான குரலில் முனகியது.
பொழுது புலர்ந்தது. மெதுவான குரலில் அது அழுதது. தொடர்ந்து இதயத்தையே பிழிகிற மாதிரியான ஒரு குரலில் அந்த நாய் ஊளையிட்டது. தவளைகள் நாயையே உற்றுப் பார்த்தன. நீருக்குள் குதித்து, அதன் மேற்பரப்பில் நீந்திக் கொண்டிருக்கும் தவளைகளையே பார்த்தவாறு நாய் நின்றிருந்தது.
நீர் பரப்பிற்கு மேலே தெரிந்து கொண்டிருக்கும் ஓலையாலான கூரைகளை அது ஆவலுடன் பார்த்தது. எல்லாமே வெறுமையாய் கிடந்தன. ஒரு இடத்திலும் நெருப்பு புகைவது மாதிரி தெரிய வில்லை. தன்னுடைய உடலைக் கடித்து சுகம் காணும் ஈக்களை நாய் கடித்துத் தின்றது. தன்னுடைய பின்னங்கால்களால் தாடைப் பகுதியைச் சொறிந்து ஈக்களை விரட்டியது.
சிறிது நேரத்தில் சூரியன் தெரிய ஆரம்பித்தது. அந்த இளம் வெயிலில் நாய் படுத்து உறங்க ஆரம்பித்தது. குடிசையின் ஒரு பக்கம் வாழை இலையொன்று உரச, அந்தச் சத்தத்தைக் கேட்டு எழுந்த நாய் உரத்த குரலில் குரைத்தது.
கருமேகங்கள் சூழ, சூரியன் மறைந்தது. சுற்றிலும் இருள் வந்து படர்ந்தது. காற்று அலைகளை உண்டாக்கியது. நீரின் மேற்பரப்பில் இறந்துபோன உயிரினங்கள் மிதந்து வந்தன. நீரில் ஆடி அசைந்து வரும் அவை எல்லாப் பக்கங்களிலும் அலை பாய்ந்து போய்க் கொண்டிருந்தன. அவற்றை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நம்முடைய நாய் முனகியது.
சற்று தூரத்தில் ஒரு சிறு படகு படுவேகமாக போய்க் கொண்டிருந்தது. நாய் எழுந்து நின்று தன்னுடைய வாலை ஆட்டியது. அந்தப் படகையே வைத்த கண் எடுக்காது பார்த்தது. சிறிது நேரத்தில் அந்தப் படகு தென்னந் தோப்புக்குள் நுழைந்து மறைந்தது.
மழை பெய்யத் தொடங்கியது. பின்னங்கால்களை மடக்கி வைத்துக் கொண்டு முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி உட்கார்ந்தவாறு அந்த நாய் நான்கு பக்கமும் பார்த்தது. அதன் கண்களில், பார்ப்போர் யாரையும் அழ வைக்கும் வண்ணம் ஒரு ஆதரவற்ற நிலை தெரிந்தது.
மழை நின்றது. வடக்குப் பக்கம் இருந்த வீட்டிலிருந்து வந்த ஒரு சிறு படகு மெதுவாக நகர்ந்து ஒரு தென்னை மரத்திற்குக் கீழே வந்து கொண்டிருந்தது. நம்முடைய நாய் வாலை ஆட்டிய வாறு கொட்டாவி விட்டவாறு முனகியது. படகுக்காரன் தென்னை மரத்தின்மேல் ஏறி கள்ளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். அவன் படகில் அமர்ந்து கள்ளைக் குடித்து விட்டு, துடுப்பைப் போட்டவாறு அந்த இடத்தை விட்டு நீங்கினான்.
சற்று தூரத்திலிருந்த மரக்கிளையில் இருந்து காகம் ஒன்று பறந்து வந்து, நீரில் மிதந்து வந்து கொண்டிருந்த செத்துப் போன எருமை மாட்டின் அழுகிப்போன உடல்மீது வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்து சேன்னனின் நாய் பயங்கரமாகக் குரைத்தது. அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத காகம் எருமையின் உடலைத் தன்னுடைய அலகால் கொத்தி மாமிசத்தைத் தின்று, பறந்து போனது.
ஒரு பச்சைக் கிளி குடிசைக்குப் பக்கத்திலேயே நின்றிருந்த வாழை மரத்தில் வந்து உட்கார்ந்து கத்தியது. அதைப் பார்த்து எரிச்சலான நாய் குரைக்க, கிளி அடுத்த நிமிடம் அங்கிருந்து பறந்து போனது.
வெள்ளத்தில் மிதந்து வந்த ஒரு எறும்புக்கூடு அந்த குடிசையில் பட்டு ஒதுங்கி எப்படியோ தப்பித்துக்கொண்டது. ஏதோ உணவுப் பொருள்தான் மிதந்து வருகிறது என்று நினைத்த நம்முடைய நாய் அதற்கு ஒரு முத்தம் கொடுத்தது. அடுத்த நிமிடம் அது தும்ம ஆரம்பித்துவிட்டது. அதன் மென்மையான மூக்கு சிவந்து தடித்தது.
பிற்பகல் நேரமானபோது ஒருசிறு படகில் இரண்டு ஆட்கள் அந்த வழியே வந்தார்கள். அவர்களைப் பார்த்து நாய் நன்றியுடன் குரைத்து தன்னுடைய வாலை ஆட்டியது. மனிதர்களின் மொழியுடன் மிகவும் நெருக்கமான மொழியில் அது என்னவோ சொல்வதைப்போல் இருந்தது. அடுத்த நிமிடம் நீருக்குள் இறங்கி படகுக்குள் குதிக்க அது தயாராக நின்றது. “அதோ ஒரு நாய் நிக்குது.'' படகில் இருந்த ஒருவன் சொன்னான். அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதைப்போல நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் நாய் லேசான முனகியது. “அது அங்கேயே இருக்கட்டும்.'' -இன்னொரு ஆள் சொன்னான். என்னவோ சொல்ல வருவதைப்போல நாய் தன்னுடைய வாயைத் திறந்து மூடியது. ஒரு மாதிரி முனகியது. பிரார்த்தித்தது. இரண்டு முறை அது படகில் குதிக்க முயற்சி செய்தது.
படகு நாயைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. நாய் மீண்டும் ஊளையிட்டு அழுதது. படகில் இருந்த ஒருவன் திரும்பிப் பார்த்தான்.
“அய்யோ!''
அது படகில் இருந்த மனிதன் சொன்னதல்ல. நம்முடைய நாயின் குரல்தான்.
“அய்யோ!''
இதயத்தை நெகிழ வைக்கும் அந்த வேதனைக் குரல் காற்றில் மிதந்து எதிரொலித்தது. மீண்டும் நிற்காத அலைகளின் சத்தம். யாரும் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. அதே இடத்தில் படகு மறையும் வரை பார்த்தவாறு நாய் நின்றிருந்தது. உலகத்திடமிருந்து இறுதியாக விடை பெற்றுக் கொள்வது மாதிரி, மெதுவான குரலில் முணுமுணுத்தவாறு அது மீண்டும் குடிசையின் மேல் ஏறியது. இனியொரு முறை மனிதர்கள் மேல் அன்பு செலுத்துவதில்லை என்று அது தனக்குள் தீர்மானித்திருக்கலாம்.
குளிர்ந்த நீரை அது நக்கிக் குடித்தது. மேலே வானத்தில் பறந்து போய்க் கொண்டிருந்த பறவைகளை அந்த அப்பிராணி நாய் பார்த்தது. அலைகளோடு சேர்ந்து ஒரு தண்ணீர்ப் பாம்பு வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவுதான்- பயந்துபோன நாய் மீண்டும் குடிசையின் மேல்பகுதி நோக்கி ஓட ஆரம்பித்தது. சேன்னனும் குடும்பமும் வெளியேறிய பிரிக்கப்பட்ட பகுதி வழியாக அந்தத் தண்ணீர் பாம்பு உள்ளே நுழைந்தது.