வெள்ளப்பெருக்கு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8156
நாய் அந்த ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தது. கோபத்திற்கு ஆளான அந்த நாய் குரைக்கத் தொடங்கியது. தொடர்ந்து அது மெதுவான குரலில் முனகியது. வாழ்க்கையைப் பற்றிய அச்சமும் பசியும் அந்த முனகல் சத்தத்தில் கலந்திருந்தன. எந்த மொழி பேசக் கூடிய மனிதனுக்கும் ஏன், செவ்வாய் கிரகத்திலிருந்து வருபவனுக்குக்கூட நன்றாகப் புரியக்கூடிய மொழி அது. யாருக்குத்தான் நாயின் அந்த மொழியைப் புரியாது?
இரவு வந்தது. பயங்கரமான காற்றும் மழையும் ஆரம்பித்தன. குடிசையின் மேற்கூரை அலைகள் மோதி இப்படியும் அப்படியுமாய் ஆடியது. இரண்டு முறை நாய் உருண்டு கீழே விழப் பார்த்தது. ஒரு நீளமான தலை நீருக்கு மேலே தெரிந்தது. அது ஒரு முதலை. நாய் மனவேதனையுடன் பயங்கரமாகக் குரைத்தது. சிறிது நேரத்தில் கோழிகள் கூட்டம் கத்தும் சத்தம் கேட்டது.
“எங்கோ நாய் குரைக்குதே! இங்கேயிருந்தவங்கதான் போயிட்டாங்களே!'' வாழை மரத்திற்குக் கீழே வைக்கோல், தேங்காய், வாழைக்குலை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு ஒரு படகு வந்து கொண்டிருந்தது.
“நாய் படகில் இருக்கும் மனிதர்களுக்கு நேராகத் திரும்பி நின்று குரைக்க ஆரம்பித்தது. பயங்கர கோபத்துடன் வாலை உயர்த்திக் கொண்டு நீருக்கு அருகில் வந்து நின்று மீண்டும் குரைத்தது. படகில் இருந்த ஒருவன் வாழை மரத்தின் மேல் ஏறினான்.
“நாய் வரும்னு நினைக்கிறேன்.''
நாய் முன்னோக்கி குதித்தது. அடுத்த நிமிடம் வாழை மரத்தில் ஏறியவன் பயந்துபோய் நீருக்குள் விழுந்தான். இன்னொரு ஆள் அவனைக் கையால் பிடித்துத் தூக்கினான். படகில் ஏற்றினான். நாய் குடிசையின் கூரையின்மேல் ஏறி உடம்பைக் குலுக்கியவாறு கோபத்துடன் குரைத்தது.
திருடர்கள் வாழைக்குலை அனைத்தையும் வெட்டினார்கள். “உனக்கு வச்சிருக்கோம்பா.'' தொண்டையே கிழிகிற மாதிரி குரைத்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்து அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வைக்கோல் முழுவதையும் படகில் ஏற்ற ஆரம்பித்தார்கள். கடைசியில் ஒருவன் குடிசையின் மேற்பகுதியில் ஏறினான். அவன் காலை நாய் கடித்தது. ஒரு வாய் நிறைய நாய்க்கு மாமிசம் கிடைத்தது. அவன் “அய்யோ!'' என்று கத்தியவாறு குதித்து மீண்டும் படகில் ஏறினான். படகில் இருந்த இன்னொருவன் கையில் இருந்த துடுப்பால் நாயை ஓங்கி அடித்தான். “ம்யாவ்! ம்யாவ்! ம்யாவ்!'' நாயின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு முனகலாக முடிந்தது. நாயால் கடிக்கப்பட்ட மனிதன் படகில் கிடந்து அழுதான். “பேசாம இருடா.'' இன்னொரு ஆள் சொன்னான். படகு நகர்ந்தது.
சிறிது நேரம் கழித்து படகு போகும் திசையைப் பார்த்து கோபம் மேலோங்க நாய் உரத்த குரலில் குரைத்தது.
நள்ளிரவு நேரம் ஆனது. பெரிய பசுவொன்று செத்துப் போய் நீரில் மிதந்து வந்தது. அது குடிசையின் மேல் வந்து இடித்தது. நாய் மேலே நின்றவாறு அதைப் பார்த்தது. கீழே அது இறங்கி வரவில்லை. அந்த செத்துப் போன பசு, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது. நாய் அதைப் பார்த்து முனகியது. குடிசையின் ஓலையை வாயால் அகற்றி, வாலை ஆட்டியவாறு, மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பசுவின் இறந்தபோன உடலை நோக்கி நாய் மெதுவாக இறங்கிக் கீழே வந்தது. பசுவின் உடலைத் தன்னுடைய விருப்பப்படி அது தின்ன ஆரம்பித்தது. அதன் கடுமையான பசிக்கு விரும்பும் அளவுக்கு உணவு கிடைத்தது.
"டே!” ஒரு அடி! நாயே காணாமல் போனது. செத்துப் போன பசு நீரில் மிதந்து வேகமாகப் போக ஆரம்பித்தது.
காற்று வீசும் சத்தமும் தவளைகளின் ஓசையும் அலைகளின் சத்தமும் தவிர வேறு எந்த ஒலியும் அந்த இரவு நேரத்தில் கேட்கவில்லை. ஒரே நிசப்தம். இதயமுள்ள வீட்டுக் காவல்காரன் அதற்குப் பிறகு நாயின் அவலக் குரலைக் கேட்கவில்லை. அழுகிப் போன பிணங்கள் அந்த நீர்ப்பரப்பில் ஆங்காங்கே மிதந்து வந்து கொண்டிருந்தன. காகங்கள் சில பிணங்களின்மேல் அமர்ந்து அவற்றைக் கொத்தித் தின்றன. அவற்றின் செயலை எந்த ஓசையும் கெடுக்கவில்லை. திருடர்களும் தங்கள் தொழிலை எந்தவித தொந்தரவும் இல்லாமல் செய்ய முடிந்தது. அமைதி... பயங்கர அமைதி!
சிறிது நேரம் கழித்து அந்தக் குடிசை கீழே விழுந்தது. அது நீரில் மூழ்கியது. பரந்து கிடந்த நீர்ப் பரப்பிற்கு மேலே எதுவும் தெரியவில்லை. தன்னுடைய எஜமானனின் வீட்டை தான் மரணம் அடையும் வரை அந்த நன்றியுள்ள நாய் காத்து நின்றது. அது மரணத்தைத் தழுவிவிட்டது. அந்த நாய்க்காக- அது முதலையிடம் கிடைக்கும் வரை அந்தக் குடிசை நீருக்கு மேலேயே நின்றிருந்தது. சிறிது நேரத்தில் அந்தக் குடிசை நீருக்குள் மூழ்கிக் காணாமலே போனது.
நீர் இறங்கத் தொடங்கியது. சேன்னன் நீந்தியவாறு நாயைத் தேடி குடிசையை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஒரு தென்னை மரத்திற்குக் கீழே நாயின் செத்துப் போன உடல் கிடந்தது. அலைகள் அதை அவ்வப்போது வந்து தொட்டு அசைத்துக் கொண்டிருந்தன. நாயையே உற்று பார்த்தான் சேன்னன். அது தன்னுடைய நாய்தானா என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது. நாயின் ஒரு காது கிழிந்து போயிருந்தது. உடல் அழுகிப் போயிருந்ததால், அதன் நிறம் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை.