குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
மொழிபெயர்ப்பாளர் முன்னுரை
நாவலாசிரியர், திரைப்படக் கதை - வசனகர்த்தா, திரைப்பட இயக்குநர் என்று பல முகங்களைக் கொண்டவர் ப. பத்மராஜன். ‘நட்சத்திரங்களே காவல்’ என்ற நூலுக்காக கேரள சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். ‘பிரயாணம்’ என்ற (தமிழில் - சாவித்திரி) திரைப்படத்தின் மூலம் படவுலகத்திற்குள் கதாசிரியராக நுழைந்தார். சொந்தமாக இயக்கிய திரைப்படங்களையும் சேர்த்து 30 திரைக்கதைகளை எழுதியிருக்கிறார். 1991-ஆம் ஆண்டில் இம்மண்ணை விட்டு நீங்கினார்.
பத்மராஜன் படைப்புகளை கடந்த 25 வருடங்களாக நான் வாசித்து வருகிறேன். புதிய புதிய தளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதைக் கருக்களை வைத்து கதைகளை எழுதும் பத்மராஜனின் எழுத்தாற்றலைப் பார்த்துப் பல தடவை வியந்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நான் அவர் எழுதிய ‘வண்டியைத் தேடி’, ‘கள்ளன் பவித்ரன்’, ‘இதோ இங்கு வரை’ ஆகிய புதினங்களை மொழி பெயர்த்திருக்கிறேன். 1990-ஆம் ஆண்டில் பி. பத்மராஜன் எழுதிய ‘குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை’ கதையைப் படித்து முடிக்கிறபோது கதை நடக்கும் மலைப்பகுதியும், அங்குள்ள மாளிகையும், ஷாநவாஸ்கான், பிரசாந்த், சுகன்யா, ஊர்மிளா, சாரா, துர்கா ஆகியோரும் நம் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பிடித்து வாழ்வார்கள் என்பது நிச்சயம் என்பதை உணர்ந்தேன்.
நல்ல ஒரு நூலை மொழி பெயர்த்த திருப்தி இருக்கிறது எனக்கு. இதைப் படிக்கும் உங்களுக்கும் அது உண்டாகும் என்ற திடமான நம்பிக்கையும் இருக்கிறது.
அன்புடன்,
சுரா