குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
ஒரு பீரை எடுத்துத் திறந்தபடி பிரசாந்த் குளியல் தொட்டியில் இருந்த வெந்நீருக்குள் இறங்கினான்.
குளிரடித்துக் கொண்டிருந்த அந்தப் பொழுதில் வெந்நீரில் குளித்தது அன்று வரை தன்னிடமிருந்த மொத்த அழுக்கையும் முழுமையாகக் கழுவி முடித்ததைப்போல பிரசாந்த் உணர்ந்தான்.
குளித்து முடிந்து ஆடைகள் அணிந்து இரண்டாவதாக ஒரு பீரையும் எடுப்பதற்காக முயன்றபோது வாசல் தட்டப்படும் சத்தம் கேட்டது. சாராதான்.
“கம்பளி ஆடைகள்.. சில நேரங்களில் இங்கு இவை தேவைப்படும்னு ஸாப் சொன்னாரு.” தொடுவதற்கு சுகமாக இருந்த பஞ்சைப் போன்ற கம்பளி ஆடைகள் மஃப்ளர்கள், குரங்கு தொப்பிகள்.
“இது கட்டாயம் தேவைதான்” - பிரசாந்த் சிரித்தான் “ஸாபுக்கு நன்றி சொல்லுங்க.”
“சொல்றேன்.”
தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்பது மாதிரி அவள் அந்த நிமிடமே அந்த இடத்தை விட்டுப் போக ஆரம்பித்தாள்.
“சாரா...!” - எதற்கு என்ற தீர்மானம் இல்லாமலே அவன் வெறுமனே அவளை அழைத்தான். அவன் நின்றாள்.
அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியாமல் ஒரு நிமிடம் அவள் குழம்பிப் போய் நின்றான். ஏதாவது தமாஷாக கூறலாம் என்றால், அவளுடைய முகத்தில் தெரிந்த கடுமையைப் பார்த்து அதற்கான தைரியம் அவனுக்கு வரவில்லை.
“என்ன கூப்பட்டீங்க?” என்ற ஒரு கேள்வி சாராவின் முகத்தில் பொறுமையைக் கடந்து நின்று கொண்டிருந்தது.
“இல்ல.... நான் கேட்க நினைச்சது” அவன் வார்த்தைகளுக்காகத் தடுமாறினான். தொடர்ந்து அங்கு வந்து சேர்ந்த நிமிடத்திலிருந்து தொண்டைக்குள் நின்றுகொண்டிருந்த கேள்வி வெளியே வந்தது.
“கான் ஸாப்பின் குடும்பம் இங்கே இல்லையா? ஸாபின் மனைவி..”
சாராவின் கண்களில் அதிர்ச்சியின் அடையாளம் தெரிந்தது. தொடர்ந்து அவள் படுவேகமாகக் கூறினாள்.
“இருக்காங்க.... வருவாங்க.... இதையெல்லாம் நேரில் கேட்பதுதான் நல்லது. தான் வரட்டுமா.”
அதற்குப் பிறகு அவள் அங்கு நிற்கவில்லை.
மழை கிட்டத்தட்ட நின்று விட்டிருந்தது. வாசலில் நனைந்திருந்த புற்களின்மீது இரண்டு பெரிய பஞ்சுக்குவியல்களைப் போன்ற மேகக்கூட்டம் உருண்டு விளையாடிக் கொண்டிருப்பதை பிரசாந்த் பார்த்தான்.
4
‘பள்ளத்தாக்குகள்’ என்று அந்த வீட்டிற்குப் பெயர் வைத்தது யாராக இருந்தாலும், பெயர் வைத்த அந்த ஆளுக்கு நல்ல ஞானம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
மாலை நேரத்திற்கு சற்று முன்பு, வீட்டிற்கு முன்னால் சாலைக்கு அப்பால், வெயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது அத்துடன் எண்ணற்ற பள்ளத்தாக்குகளில் நிழலும் வெயிலும் ஒன்று சேர்ந்து விழுந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில் இருக்கும் வேறொரு மலையின் உச்சியில் இன்னொரு மாளிகையின் சாளரங்களிலும் வாசலிலும் விளக்குகள் எரியத் தொடங்கியிருப்பதை பிரசாந்த் பார்த்தான். இந்த நேரத்தில் விளக்கு எரிய வேண்டிய அவசியமே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.
சாலையில் ஒரு ஒற்றைக் குதிரை வண்டியின் சத்தம் கடந்து சென்றது. அது மறைந்ததும் ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவின் முனகல் கேட்டது.
அந்த வழியில் பொதுவாகவே வாகனங்கள் செல்வது குறைவுதான், நேராகச் சென்று ஏறும் நான்கு சாலைகள் சந்திக்கக்கூடிய சந்திப்பிலிருந்து வண்டிகள் அந்தப் பக்கமாக திரும்பிப் போகின்றன. காதுகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், அங்கு போய்க் கொண்டிருக்கும் லாரிகள் மற்றும் பேருந்துகளின் மெதுவான முனகல்களைக் கேட்கலாம்.
ஆட்டோ ரிக்க்ஷா கேட்டைக் கடந்து உள்ளே வருவதைப் பார்த்தபோது, பிரசாந்தால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆட்டோவிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர் வயதானவர். ஜிப்பாவும் பைஜாமாவும் தலையில் பெரிய தலைப்பாகையும் அணிந்து மெலிந்து காணப்பட்ட மனிதர் அவர். அவருடன் இருந்த மனிதன் இளைஞனாக இருந்தான். நல்ல நிறத்தையும், கறுப்பு மீசையையும், எடுப்பான நாசியையும், சற்று நீளமாக வளர்ந்திருந்த தலைமுடியையும் அவன் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொண்டவனாக அவன் இருந்தான். பெரிய அளவிற்கு உயரமில்லை. முழங்கால்வரை தொங்கிக்கொண்டிருக்கும் நீளமான ஜிப்பாவும், முளை கட்டப்பட்ட பைஜாமாவும் சேர்ந்து அவன் ஒரு பட்டானியனாகவோ அல்லது பாக்கிஸ்தானியாகவோ இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்டின.
வயதான மனிதர் ஆட்டோவிற்கு பணம் கொடுத்தபோது இளைஞன் அதற்குள்ளிருந்து இரண்டு நீலநிறத்தைக் கொண்ட துணிக்கட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தான். அவற்றில் தபலா இருந்தன. அவற்றுடன் வேறொரு இசைக்கருவியின் கூடும் இறங்கியது. பெட்டியைப் பார்த்தபோது, சாரங்கியாக இருக்கவேண்டும் என்று பட்டது. அந்த இளைஞன் தபலாக்களை எடுத்தான். வயதான மனிதர் இன்னொரு பெட்டியை எடுத்தார். அவர்கள் முன்னால் சென்று பெல் அடிப்பதற்காக நிற்காமல் நேராக நடந்து வீட்டின் இடது பக்கமாக சுற்றி பின் பக்கத்திற்குச் சென்றார்கள். அங்கு வந்து பழக்கமானவர்கள் அவர்கள். அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர்கள் குருவும் சிஷ்யனுமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
அவர்கள் நடந்து சென்ற பாதை வழியாக, சிறிது நேரம் கழிந்து ஒரு வெள்ளை நிற மாருதி கார் உள்ளே போவதை பிரசாந்த் பார்த்தான். அந்தக் காருக்குள் ஓட்டும் மனிதர் மட்டும் இருந்தார். மூன்றாவது பீரையும் குடித்துவிட்டு, பிரசாந்த் எழுந்தான். வெறுமனே கொஞ்சம் நடந்து விட்டு வரலாம். அத்துடன் வீட்டின் எஞ்சிய பகுதிகளையும் பார்த்தது மாதிரியும் இருக்கும் என்று அவன் நினைத்தான்.
கேட்டிற்கு அப்பால் இருந்த நிலத்தை இரண்டு மூன்று பணியாட்கள் வெட்டிக் கொண்டும் தோண்டிக் கொண்டும் இருந்தார்கள். பிரசாந்தைப் பார்த்ததும், அவர்கள் தங்களின் பேச்சை நிறுத்திவிட்டு அவளை மரியாதையுடன் வணங்கினார்கள்.
எவ்வளவு தூரத்திலிருந்தும் எந்த பள்ளத்தாக்கிலிருந்தும் பார்க்கக்கூடிய மாதிரி ‘பள்ளத்தாக்குகள்’ கம்பீரமாக நின்றிருந்தது. சற்று தூரத்தில் நின்று கொண்டு பார்க்கும் போதுதான் அந்தக் கட்டிடத்தின் கம்பீரமும் அழகும் சரியாகக் கண்களில் தெரிந்தன.
பனி பெய்ய ஆரம்பத்திருந்தது. காற்றுக்கு குளிர்ச்சியும் பலமும் அதிகரித்துக் கொண்டிருந்தன.
சாலையில் பயணிகள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். எப்போதாவது ஒருமுறை ஒரு காரோ, குதிரை வண்டியோ, சைக்கிளோ....
தூரத்தில் மலையில் பார்த்த பிரம்மாண்டமான கட்டிடம் பழைய ஒரு மன்னர் கட்டியது என்ற விஷயத்தை ஒரு பயணியிடம் இருந்து பிரசாந்த் தெரிந்து கொண்டான். இறுதியாக ஆட்சி செய்த மன்னனின் தந்தையின் தந்தை கட்டியது. ஐ.டி.டி.சி. இப்போது அங்கு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை நடத்திக்கொண்டிருந்தது.
நட்சத்திர ஹோட்டலின் குளிர்ந்துபோன பார்கள் சுகன்யாவிற்கு மிகவும் பிடிக்கும் என்பதை திடீரென்று அவன் நினைத்தான்.
வழியில் சென்ற மனிதன் அந்த மாளிகையைப் பற்றி வேறொரு தகவலையும் சொன்னான். ‘மன்னர் அதை ஒரு தேவதாசிக்காக கட்டிக் கொடுத்தார். ஒரு நடனமாடும் பெண்ணுக்கு’ என்பதே அந்தத் தகவல்.
புத்திசாலிப் பெண்.