Lekha Books

A+ A A-

குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 10

kulir kalathuku engiya kuthirai

அது பிரசாந்திற்கு ஒரு சிறிய  ஏமாற்றத்தைத் தந்தது. அந்த வீட்டில் சூழ்நிலையில் இருந்து அப்படியொன்றும் அதிகமாக விலாகமல் அதைப் புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பமாக இருந்தது. பரவாயில்லை... சுகன்யா வரும்போது வீட்டின் மொத்த முகமும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அப்போது அவள் அந்த அறையை முக்கிய கவனம் எடுத்துப் பார்த்துக் கொள்வாள்.

குதிரை லாயம் சம்பந்தப்பட்ட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். அதற்குத் தேவைப்பட்ட வினோதமான சேனிட்டரி பொருட்களை கான் இத்தாலியிலிருந்து வரவழைத்திருந்தார். வெப்பமும் குளிர்ச்சியும் காற்றை நிரப்ப வைக்கக்கூடிய வசதியும் அங்கு இருந்தன. கடுமையான குளிரும், உடம்பை சுடக்கூடிய வெப்பவும் பந்தயக் குதிரைக்கு ஒத்து வராதவை.

சுற்றிலும் இருந்த முற்றத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து முடிந்தது, உருண்ட குழாய்களால் எல்லைகளை உண்டாக்கினான். அந்தப் பெண் விருப்பப்படும் பட்சம், அவள் தன் விருப்பப்படி வெளியில் போய் நிற்கலாம்.

குதிரை லாயத்தின் முன் வாசலுக்கு வெளியே செப்பலான தகட்டில் எழுதப்பட்ட அழகான பெயர்ப் பலகை. ‘ஜூலியா ஹவுஸ்’.

ஜூலியாவின் வீடு.

வரப்போகும் பெண் குதிரையின் பெயர் தான் ஜூலியா. ‘குதிரை லாயம்’, ‘குதிரைத் தொழுவம்’ என்ற வார்த்தைகளை உரையாடலின்போது பிரசாந்த் பயன்படுத்தியதை கான் விரும்பவில்லை என்ற விஷயத்தை ஆரம்பம் முதலே அவன் உணர்ந்துதான் இருந்தான். அப்படிக் குறிப்படுவதை அவன் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்குத்தான் ஆரம்பத்திலேயே அவர் இப்படியொரு பெயர்ப் பலகையைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக  இருந்தாரோ என்று அவன் சந்தேகப்பட்டான். எது எப்படி இருந்தாலும், கானும் பிரசாந்தும்  குதிரை லாயத்தைப்பற்றி உரையாடுகிற நேரங்களிலெல்லாம் ஜூலியா ஹவுஸ் என்ற வார்த்தைதான் உச்சரிக்கப்பட்டது. அதனால் தான் பெயர்ப்பலகை வைத்திருந்ததை பார்த்தபோது, பிரசாந்த்துக்கு அதைப்பறி அசாதாரணமாக எதுவும் தோன்றவில்லை.

ஆனால், சாராவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“மாநகராட்சி அலுவலகத்தில் போய் சொன்னா, அவங்க ஒரு எண்ணைக்கூட எழுதிட்டுப் போயிடுவாங்க” - அவள் சிரிதளவு கிண்டல் கலக்க சொன்னாள்.

“சொல்லணும். எண் எழுத வைக்கணும்” - பிரசாந்த் அழுத்தத்தை விடாமல் கூறியதைப் பார்த்து அவளுக்கு ஆச்சரியம்தான் தோன்றியது.

ஜூலியா ஹவுஸ் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிவடைந்ததைப் பார்ப்பதற்காக சாராவுடன் அவள் அக்கா போளம்மா என்று அழைக்கப்படும் போளியும் வந்திருந்தாள். போளம்மாவிற்கு  உயரம்  மிகவும் குறைவாக இருந்தது. வாத்தை நினைவூட்டுகிற மாதிரியான நடையை அவள் கொண்டிருந்தாள். குரல்கூட அப்படித்தான் இருந்தது.

“வீடு எப்படி இருக்கு?”

சாராவிடமிருந்து ஒரு பாராட்டைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரசாந்த் கேட்டான்.

“நல்லா இருக்கு.என் வீட்டைவிட நல்லா இருக்கு” - சாராவின் குரலில் பாராட்டும் உண்மையும் நிறைந்திருந்தன.

“நல்லா இருக்குன்றது மட்டுமில்லை...” - சிரித்தபோது போளம்மாவின் நாக்கு நுனி கன்னத்தில் ஒரு மேட்டை உண்டாக்கியது. “ரொம்பவும் அருமையா இருக்கு...”

அந்தப் பாராட்டில் அவனுடைய உள்ளம் குளிர்ந்ததை உணர்ந்த தைரியத்தில் போளம்மா தொடர்ந்து சொன்னாள்: “நீங்க இங்கே தட்டுறதையும் இடிக்கிறதையும் கேட்டப்போ உண்மையாகச் சொல்லப்போனால், எல்லாவற்றையும் இடிச்சு ஒரு வழி பண்ணப் போறீங்கன்னுதான் நான் நினைச்சேன். இப்போதுதான் மனசுக்கு சந்தோஷமா இருக்கு.”

வேலை முற்றிலும் முடிவடைந்த ஜூலியா ஹவுஸ், கான் சாஹிப்பை சாதாரணமாக சந்தோஷப்படுத்திவிடவில்லை. ஓய்விலிருந்து நடப்பதற்கு ப்ரமோஷன் கிடைத்த அவர், குதிரை வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.

தன் மனைவி வந்து சேர்வதற்கு முன்னால் ஜூலியா வந்து விடவேண்டும் என்பது கானின் ஒரு விருப்பம் என்பதை பிரசாந்த் தெரிந்துகொண்டான். அந்த இரண்டு விருந்தாளிகளின் வருகைக்கு இடையில் ஏதோ ஒரு தொடர்பு மறைந்திருப்பதாக அவன் உணர்ந்தான்.

பெயர்ப் பலகையைப் பார்த்து கான் பலமாகச் சிரித்தார்.

“இன்னொரு அறைக்கும் ஒரு பெயர்ப் பலகை வேண்டாமா? இப்போ சரி பண்ணி வைத்திருக்கும் அந்த அறைக்கு?” - பிரசாந்த் இடையில் புகுந்து கேட்டான்.

தேவையில்லை... கான் சொன்னார்: “இது ஒரு தனி கட்டிடமாக இருப்பதால் பெயர்ப் பலகை இருக்க வேண்டியதுதான். வீட்டிலேயே ஒரு அறை இருக்குறப்போ, அதற்கான அவசியமே இல்லையே!”

“உங்க மனைவியின் பெயர் என்ன?” - தன் குரலை முடிந்த வரையில் சாதாரணமாக  ஆக்கிக் கொண்டு பிரசாந்த் கேட்டான்.

கான் அந்த கேள்வியைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதைப் பார்க்கும்போதே தெரிந்தது. தன்னையே அறியாமல் அவர் பிரசாந்தின் முகத்தைக் குழப்பத்துடன் பார்த்தார். பிரசாந்த் ஏதாவது நினைத்து விடக் கூடாதே என்று தோன்றியிருக்க வேண்டும். அவர் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு சொன்னார்:

“ஊர்மிளா.. .ஊர்மிளா கான்... ஆனால், நீங்களும், உங்களுடன் வேலை செய்பவர்களும் மிஸஸ் கான் என்று  சொன்னால் போதும். கீழே இருக்குறவங்க யாரும் முழுப் பெயரையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை...”

“புரியுது...” பிரசாந்த் தன்னுடைய கம்பீரத்தைச் சிறிதும் விடாமல் தலையை ஆட்டினான்.

ஊர்மிளா கான்... எங்கேயோ... எங்கேயோ... கேட்டிருப்பதைப்போல...

7

பிறகு ஒரு நாளில்,கேட்டில் இருந்த கல் எழுத்துக்களில் வெயில் பரகாசித்துக் கொண்டிருந்த ஒரு உச்சிப் பொழுதில், ஜூலியா வந்து சேர்ந்தது.

லாயத்தின் வேலை முடிந்த மூன்றாவது நாள்.

பார்த்தவுடன் முழுவதுமாக மூடப்பட்டிருந்த ட்ரெயிலரைப்போல தோன்றிய மோட்டார் ஹோல்ஸ் பாக்ஸில் தான் அவள் வந்தாள். அவளுடைய உடல் நலம் பற்றிய விஷயங்களை மிகவும் கவனமாகப் பாத்துக் கொள்வதற்காக நாகராஜ் என்ற குதிரைக்காரனும் உடன் வந்திருந்தான்.

அவள் வருவதை முதலில் பார்த்தவள் சாராதான். அவள் வருவதை எல்லோரிடமும் கூறும்படி, ராமிடமும் சில வேலைக்காரர்களிடமும் கூறிய அவள், ஸாபிடம் விஷயத்தைக் கூறுவதற்காக ஓடினாள். அவள் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய நிமிடங்கள் அவை.

பணியாட்கள் அன்று முப்பதுக்கும் மேலாக இருந்தார்கள். ஒரே மாதத்தில் எல்லா வேலைகளையும் முடித்துவிட வேண்டுமென்ற ஒப்பந்தம் இருந்ததால் கிடைக்ககூடிய பணியாட்களைக் கொண்டு, வேலையை முடிக்கவேண்டும் என்ற முடிவுடன் பிரசாந்த் செயல்பட்டுக் கொண்டிருந்தான். தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பணிகளுக்கு மத்தியில் கிடைத்த அந்த தருணத்தை பணியாட்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். தங்களின் சொந்த வியர்வையைச் சிந்தி  உண்டாக்கிய வீட்டிற்கு வரும் விருந்தாளியைப் பார்ப்பதற்காக, அவர்கள் எல்லோரும் ஆவலுடன் இருப்பதைப்போல் தோன்றியது.

கான் ஸாஹிப் வந்த பிறகுதான் குதிரையைக் கூண்டைவிட்டு வெளியே வரும்படி செய்வார்கள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel