குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6494
சொல்லப் போனால் அப்போது இந்த விஷயத்துல எங்க நிறுவணம்தான் ஏகபோக குத்தகை எடுத்திருந்தது...”
டாக்டர் கான் மெல்லிய கோடுகளால் அந்தக் காலத்தின் படத்தை வரைந்தார்.
“எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியாகவே அமைந்து கொண்டிருந்த அதிர்ஷ்டமான நாட்கள் அவை. புதைக்கும் பணம் அத்தனையும் பண மரமாக மாறிக்கொண்டிருந்த சந்தோஷமான வருடங்கள் அவை. பல நாடுகளுக்கும் பயணங்கள், கருத்தரங்குகள், ஹோட்டல்கள், பார்ட்டிகள், குதிரைப் பந்தயங்கள், காசினோக்களில் சூதாட்டம், இசைப் பைத்தியம், அழகான பெண்கள், வெறி பிடித்த இளமை...”
அவர் எல்லாவற்றையும் மனம் திறந்து கூறுவதற்குத் தயாராகி விட்டார் என்பதை பிரசாந்த் உணர்ந்தான்.
வருவது வரட்டும் என்று மனதில் முடிவெடுத்துக்கொண்டு அவன் அவரைப் பார்த்து உடனடியாகக் கேட்டான். அதற்கான தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்காக ஏழு ‘ப்ளாக்லேப’லைக் குடித்து முடித்தான்.
கேள்விக் கேட்டு முடித்தபோது, அவன் நினைத்ததைப் போல எந்தவித பிரச்சினையும் உண்டாகவில்லை. யாரிடமாவது இந்த விஷயங்கள் அனைத்தையும் மனம் திறந்து கூறுவதுற்கு அவரும் விரும்பயிருக்கிறார் என்பதை பிரசாந்த் புரிந்து கொண்டான்- அவன் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொன்னதைப் பார்த்து.
ஊர்மிளா வந்து சேர்ந்த நான்காவது நாள்... இசைக் குழு பிரிந்து, வந்திருந்த விருந்தினர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். பிரசாந்தும் கான் சாஹிப்பும் மட்டுமே இருந்த இரவு நேரத்தில், என்ன காரணத்திற்காகத் தன் மனைவியை இந்தப் பக்கம் அவர் அழைக்காமல் இருக்கிறார் என்ற கேள்வியைக் கேட்டு பிரசாந்த் விசாரணைக்குத் தொடக்கம் இட்டான்.
இருபது வருடங்களுக்கு முன்னால், லண்டனில் அப்போது நடைபெற்ற வசந்தகால இசை நிகழ்ச்சியில், குருவின் ஒரு பக்கத்தில் சற்று பின்னால் உட்கார்ந்து கொண்டு பாடிய அந்த இளம்பெண் ஆரம்பத்திலேயே கானின் கண்களில் பட்டுவிட்டாள். இடையில் தனியாக இருக்ககூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அவள் தன்னுடைய குரல் இனிமையையும் பாடும் திறனையும் நன்கு தெரியும்படி காட்டியப்போது, அவருடைய மனதில் அமைதி என்ற ஒன்று இல்லாமல் போனது. இசை, அழகு ஆகியவற்றின் மீது எப்போதும் வெறித்தனமான ஈடுபாடு கொண்டிருந்த ஷானவாஸ்கானின் அந்த இரவு தூக்கமில்லாத இரவாக ஆனது.
மறுநாள் குருவிற்கும் இசை குழுவினருக்கும் டாக்டர் கானின் சார்பாக பார்ட்டி நடந்தது.
பார்ட்டியில் ஊர்மிளாவுடன் அவர் பேசினார்.
அவள் மலையாளி. பிறந்ததும் வளர்ந்ததும் வட இந்தியாவில். அவளுடைய தந்தை ராணுவத்தில் அதிகாரியாக இருந்தார்.
பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது, நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் கான் ஒரு ‘கஸல்’ பாடினார்.
அதைப் பார்த்து ஊர்மிளா மகிழ்ச்சியடைந்தாள்.
இரண்டு நாட்கள் கழிந்து இந்தியாவிற்குத் திரும்பிய அவளுக்கு, அவர் தந்த சிறிய பரிசுப் பொட்டலத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
‘இந்த பரிசுப் பொட்டலம் என் ஊர்மிளாவிற்கு.’
அடுத்த வருடம் தொலைபேசி உரையாடல்களும் கடிதங்களும் நிறைந்த வருடமாக ஆனது.
அடுத்த வசந்த காலம் வந்தபோது, ஊர்மிளா மீண்டும் லண்டனுக்குச் சென்றாள்- குரு இல்லாமல் அவள் மட்டுமே இசை நிகழ்ச்சியை நடத்த.
ஐரோப்பாவில் பல இடங்களிலும் ஊர்மிளாவிற்கு வேறு ஏழு இசை நிகழ்ச்சிகள் இருந்தன.
அவளுடைய ஸ்பான்ஸராக இருந்தவர் ஷானவாஸ்கான். அவருடைய ஆளுமையும் திறமையும் இனிய குரலும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஆரம்பமாக இருந்தது. ஒரு பாடகி என்ற நிலையில் அவரைப் பற்றி அப்படியொரு எண்ணம்தான் அவளுக்கு உண்டானது.
அந்தப் பயணங்களுக்கு நடுவில் ஏதோ ஒரு இடத்தில் வைத்து அவர்கள் தம்பதிகளானார்கள்.
அதற்கு பின்னால் வந்த பதின்மூன்று வருடங்கள் அவள் அவருடைய மனைவியாக வாழ்ந்தாள்.
அந்தக் காலகட்டத்தில் ஊர்மிளா கானின் புகழ் இசை உலகில் பெரிய அளவில் இருந்தது. மனைவியின் திறமை சிறிதும் குறைந்து விடாமல் மிகவும் பத்திரமாக இருக்கும்படி பார்த்துகொள்வதில் கணவர் மிகவும் கவனமாக இருந்தார்.
அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். மகளுக்கு அவர்கள் துர்கா என்று பெயர் வைத்தார்கள்.
புகழ்பெற்ற பாடகியின் ஒளிவீசும் போர்வைக்குப் பின்னால் ஊர்மிளா வினோதமான குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். இசைதான் அவளுடைய வெறித்தனமான விஷயமாக இருந்தது. கணவரிடமோ மக்களிடமோ வாழ்ந்துகொண்டிருக்கும் வேறு நபர்களிடமோ இருப்பதைவிட அவளுக்கு மனரீதியான நெருக்கம் இருந்தது இசையுடன் தான் என்ற விஷயத்தை ஒருமுறை அவரே அவளிடம் மனதைத் திறந்து கூறவும் செய்தார். அது உண்மையும்கூட.
இசை அல்லாமல் வேறு இரண்டு விஷயங்கள் மீதுகூட அவளுக்கு தீவிரமான ஈடுபாடு இருந்தது- சீட்டு விளையாட்டு, குதிரைப் பந்தயங்கள்.
பாடுவது மூலம் கிடைத்த பெரிய தொகை முழுவதையும் அவள் அந்த இரண்டு விஷயங்களுக்கும் செலவழித்தாள்.
அவரைப் பொறுத்தவரையில் அவள் சம்பாதிக்கும் பணம் ஒரு தேவையே இல்லை. மனைவியின் சம்பாதிக்கும் பணம் எவ்வளவு என்பதை விசாரிப்பதுகூட ஷானவாஸ்கானின் கவுரவத்திற்குப் பொருத்தமற்றதாக இருந்தது.
ஆரம்பத்தில் தன் மனைவியின் பொழுதுபோக்கு விஷயங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று மட்டுமே நினைத்திருந்த அவர், இறுதியில் தன் குரலை வேறு மாதிரி மாற்றிப் பேச ஆரம்பித்தார்.
வருமானம் அதிக அளவில் வந்து கொண்டிருந்தாலும், தன்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஊர்மிளா பல நேரங்கலில் கானை எதிர்பார்த்துத்தான் இருந்தாள். அப்படிக் கிடைக்ககூடிய சந்தர்ப்பங்களில் கையிலிருக்கும் பணத்தைத் தாறுமாறாகச் செலவழிப்பதைக் குறித்து அவர் அவளைக் கண்டபடி திட்டுவார். நிறைய குற்றச் சாட்டுகளைக் கூறுவார்.
ஆனால், அவளால் அந்தப் பழக்கங்களிலிருந்து விடுபட முடியவில்லை. இசை நிகழ்ச்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் என்று பல நாடுகளையும் சுற்றித் திரிவதற்கு மத்தியில், உலகத்தின் பல பகுதிகளிலும் நடக்ககூடிய குதிரைப் பந்தயங்களில் அவள் தொலைபேசி மூலம் பெரிய தொகைகளுக்கு பெட் செய்துகொண்டிருந்தாள். புக்கீஸ், பந்தயங்களை நடத்துப்பவர்கள் ஆகியோரின் உலகத்தில் ஊர்மிளா கானுக்கு இசை உலகத்தில் இருப்பதைவிட மரியாதையும் மதிப்பும் இருந்தன என்ற விஷயத்தை வெளி உலகம் அறிந்திருக்க வில்லை.
அதைப்பற்றிய விளக்கங்களை அவரிடம் அவள் கூறவில்லையென்றாலும், பணம் கிடைக்ககூடிய நாளும், போகும் நாளும் அவளுடைய முகத்தைப் பார்த்தே அவருக்குத் தெரிந்துவிடும்.
வருடத்தில் ஒரு மாதமோ ஒன்றரை மாதமோ இந்தாயவிற்குச் சென்று குருவிடம் இசைப் பயிற்சி பெறுவது என்பது அவளுடைய வழக்கமாக இருந்தது. குரு அவளைப் பொறுத்தவரையில் இசையின் ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவாகவும் இருந்தார். குருவை விட்டு விலகி இருக்கும்போது, தன்னிடம் இருக்கும் இசை வற்றிப்போய்விடுமோ என்று அவள் பயப்பட்டாள். குரு தனக்கு அருகில் இருப்பதும், அவரிடமிருந்து பயிற்சி பெறுவதும் தனக்குள் இருக்கும் பாடகிக்கு உயிர் காற்றைப்போல மிகவும் முக்கியமானவை என்பதை அவள் மனப்பூர்வமாக நம்பினாள்.