குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
பம்பாயிலிருந்து அவள் ட்ரெயினில் வந்தாள். வழி நெடுக மரங்கள் வேரோடு விழுந்து கிடந்ததால், ஸ்டேஷனிலிருந்து வாடகைக் கார்கள் எதுவும் வர முடியாது என்று கூறிவிட்டார்கள் என்ற விஷயத்தை அவள் சாராவிடம் கூறுவதை அவன் கேட்டான். வரச் சம்மதித்தவர்கள், வயதான அந்தக் குதிரையும், வயதான குதிரைக்காரனும்தான். அதனால் வழி நெடுக்க கதைகளைக் கேட்டுக்கொண்டே வரமுடிந்தது என்று அவள் மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
பத்து ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து சந்தோஷப்படுத்திய பிறகுதான், அவள் வயதான குதிரை வண்டிக்காரனை அங்கிருந்து அனுப்பியே வைத்தாள்.
11
தந்தை, தாய் இருவரின் இளமை முழுவதும் துர்காவிடம் இருப்பதை பிரசாந்த் பார்த்தான். தாயைவிட வடிவத்திற்கேற்ற உயரம், தந்தையின் கண்களும் அவளுக்கு இருந்தன. பெரிய அளவில் கவலையை எதுவும் அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவளுடைய மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கத் தயாராக இருக்கறது என்பதை பிரசாந்தால் உணர முடிந்தது.
துர்கா பம்பாயில் படிக்கிறாள். எம்.எஸ்ஸி, ஹோம் சயின்ஸ்தான் அவளுடைய பாடம்.
அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் பொருட்களை இறக்கி வைத்த துர்கா முதலில் போனது தன்னுடைய அன்னையை நோக்கித்தான். தொடர்ந்து தன் தந்தையின் அறைக்குச் சென்றாள். இரண்டு இடங்களிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக அவள் செலவழிக்கவில்லை. குளித்து முடித்து வேறு ஆடைகள் அணிந்த பிறகுதான் அவள் ஜூலியாவைத் தேடிச் சென்றாள்.
ஜூலியா ஹவுஸுக்கு வெளியே அப்போது சுகன்யாவும் நாகராஜும் பிரசாந்தும் நின்றிருந்தார்கள். பெயர்களைக் கேட்டவுடனே, அவள் எல்லோரையும் அடயாளம் தெரிந்து கொண்டாள்.
அதைப் பார்த்தபோது துர்கா நல்ல ஒரு புத்திசாலிப் பெண் என்பது தெரிந்தது.
சுகன்யாவிற்கு துர்காவின் ஒன்றிரண்டு தோழிகளை ஏர்கெணவே தெரிந்திருந்தது. பம்பாயில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் பழகும்போது உண்டான அறிமுகம். அவர்களைப் பற்றிய கதைகளையும் விளையாட்டுகளையும் கூறி சுகன்யாவுடன் துர்கா சீக்கிரமே நெருக்கமாகிவிட்டாள்.
இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால், தன் தாயிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு எல்லோருடனும் வெகு சீக்கிரமே நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளக் கூடிய குணத்தைக் கொண்டவளாக துர்கா இருந்தாள். வேலை நடந்துகொண்டிருந்த எல்லா இடங்களையும் அவள் போய் பார்த்தாள். ராமுவிற்கும் அவளுக்குமிடையே நல்ல ஒரு நட்புறவு வளர்ந்திருப்பதை பிரசாந்த் கவனித்தான். பொதுவாகவே பெண்களைப் பார்ப்பதையே விரும்பாத ராமு திடீரென்று தன்னுடைய ஆடைகளில் மிகுந்த அக்கறை செலுத்துவதைப் பார்த்து பிரசாந்தும் சுகன்யாவும் கண்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பணியாட்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களை வந்து சேர்ந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே துர்கா மனப்பாடமாக ஆக்கியிருந்தாள். அவர்களுடன் பேசும்போது பெயரைச் சொல்லி அழைத்து உரையாடுவதில் அவள் எப்போதும் கவனமாக இருந்தாள்.
சில நாட்களில் அதிகாலை சவாரிகளின்போது ட்ராக் ஸூட் அணிந்த மகளையும் அவன் பார்த்தான். வராந்தாவிலிருந்த ஊஞ்சலில் சில மதிய நேரங்களில் தாயின் மடியில் படுத்து ஆடிக்கொண்டிருந்த மகளை பிரசாந்த் பார்த்தான்.
ஷாநவாஸ்கான் மகள்மீது உயிரையே வைத்திருந்தார். ஊன்றுகோலில் துணையே இல்லாமல் இப்போது அவரால் நடக்க முடிந்தது. மிகவும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே கொஞ்சம் அவர் விந்தி விந்தி நடப்பது தெரியும்.தந்தையும் மகளும் சேர்ந்து குதிரை லாயத்தின் வாசலிலும், சுகன்யா உண்டாக்கிய கேட் இருக்கும் பகுதியிலும் வெறுமனே சுற்றிநடந்து கொண்டிருப்பதைப் பெரும்பாலான நேரங்களில் பிரசாந்த் பார்த்திருக்கிறான்.
மற்றவர்களுடன் பேசும்போது தேவையானதற்கு மட்டுமே பேசக்கூடிய துர்கா தந்தையிடமும் தாயிடமும் உரையாடும்போது மட்டும் வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருப்பதை பிரசாந்த் கவனித்தான். தூரத்திலிருந்து பார்க்கும்போது, அவள் எவ்வளவோ விஷயங்களை அவர்களிடம் கூற வேண்டியதிருக்கிறது என்பது மாதிரி தோன்றும்.சில நேரங்களில் அது சர்ச்சையாகவும் சண்டையாகவும் மாறுவதையும் அவன் பார்த்தான். ஒரு பகல் முழுவதும் அவள் வெளியிலேயே வரவில்லை. தன் தாயிடம் எதையோ கூறி கோபத்தில் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே இருக்கிறாள் என்பதை சுகன்யா மூலம் அவன் அறிந்தான். மாலை நேரத்தில் கான் சாஹிப்பன் அறைக்கு சாரா அவளை அழைத்துக் கொண்டு செல்வதை பிரசாந்த் பார்த்தான். தந்தையும் மகளும் நீண்ட நேரம் அறையை அடைத்துக் கொண்டு உட்கார்ந்து பேசினார்கள். சண்டை முடிவுக்கு வந்தது காரணமாக இருக்கலாம்-மறுநாள் காலையில் தன் தாயுடன் மகளும் சேர்ந்து நடந்து செல்வதை பிரசாந்த் பார்த்தான்.
ராஜஸ்தானிலிருந்து புகழபெற்ற நாடோடிப் பாடகர் வந்திருந்த நாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு டைகர் கமாலை பிரசாந்த் பார்த்தான். அன்று எல்லோரும் கான் சாஹிப்பன் அறையில் ஒன்று சேர்ந்தார்கள்-ஊர்மிளாவைத் தவிர.
கான் குடிக்க ஆரம்பிக்கவில்லை. அவருடைய இதயமும் ஈரலும் இப்போதும் சரியான நிலையில் இல்லை என்று டாக்டர் கூறிவிட்டார். மூன்று நாட்களுக்கு முன்னால்கூட பார்த்தாகிவிட்டது.
கானை குடிப்பழக்கத்திலிருந்து தேவையில்லாமல் தடுத்து நிறுத்தியிருப்பதாகக் கூறி, ஜப்போய் டாக்டரை வாய்க்கு வந்தபடி திட்டினார். ஜப்போயின் புலம்பல்கள் எல்லாவற்றுக்கும் சாந்தமான ஒரு புன்சிரிப்பு மட்டுமே பிள்ளையின் பதிலாக இருந்ததால், தேவையில்லாத பிரச்சினை எதுவும் உண்டாகவில்லை.
டாக்டர் பிள்ளை வேண்டாம் என்று விலக்கி இருக்கும் ஒரே காரணத்தால கான் மது அருந்தாமல் இருக்கிறார் என்ற விஷயத்தில் பிரசாந்திற்கு சந்தேகம் உண்டானது.
எது எப்படியோ, எல்லோரையும் அப்படி நம்பும்படி செய்ய வேண்டும் என்பதுதான் கானின் விருப்பம் என்பது தெளிவாகவே தெரிந்தது.
12
“அம்மா! உங்களுக்காகதான் அப்பா அதை வாங்கியிருக்காரு” -ஒரு மாலை நேரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த நிலத்தின் மூலையில் வளர்ந்திருந்த புதருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த துர்காவின் குரல் கேட்டது. “அம்மா நீங்க அதை வாங்கிக்கணும்.”
புதருக்கு அப்பால் மழை வருவதற்கான அடையாளம் சிரிதும் இல்லாததால், சிறிதளவில் நரைத்து சிவப்பு நிறத்தில் இருந்தது வானம்.
ஜூலியாவைப் பற்றித்தான் துர்கா பேசினாள். மகளுடைய திருமண நாளன்று ஊர்மிளாவிற்குப் பரிசாகத் தருவதற்காக கான் வாங்கி அவளை நிறுத்தியிருக்கிறார்.
இந்த விஷயம் ஏற்கெனவே பிரசாந்த் யூகித்து வைத்திருந்ததுதான்.
தனக்கு யாருடைய பரிசுப் பொருளும் தேவையில்லை என்ற கொள்கையில் ஊர்மிளா மிகவும் உறுதியாக இருந்தாள். அவை அனைத்தும் அந்த மனிதரின் உத்திகள். தன்னை திரும்பவும் கொண்டு வந்து வைத்துக் கொள்வதற்காக செய்யப்படும் தந்திரச் செயல்கள். அது இனிமேல் நடக்காது.
“உனக்கு உன் அப்பாவைப் பற்றி என்ன தெரியும்?”- ஊர்மிளா தன் மகளிடம் சாதாரணமாகக் கேட்டாள்.
அன்றும் பேச்சு, சண்டையாக மாறியது. தன் நிலையிலிருந்து கீழே விழாமல் பார்த்துக் கொள்ளவதிலும் பிடிவாதம் பிடிப்பதிலும் தாயைவிட துர்கா சற்றும் பின்னால் இல்லை.