குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
இரவு முழுவதும் பிரசாந்த் அமைதியற்ற மனநிலையுடன் இருந்தான்.
கான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மனவேதனைகளைவிட பிரசாந்த்தைக் கவலை கொள்ளச் செய்தது அந்த இளம்பெண்ணின் வாயிலிருந்து வந்த தூக்க மாத்திரை என்ற வார்த்தைதான். அவள் ஏதாவது செய்யக் கூடாததைச் செய்து விடுவாளோ என்று அவன் பயப்பட்டான்.
அந்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு, இரவு ஒரு மணிக்குப் பிறகு துர்காவின் அறையிலிருந்து அவளுடைய குரல் கேட்டது.
ஓடிச்சென்று கவனித்தப்போது, துர்கா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். சிறிதும் நிறுத்தாமல், அழுகையும் கோபவும் குற்றச்சாட்டும் கலந்த பேச்சிலிருந்து எதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. அவள் தன் குரலை உயர்த்திப் பேச வேண்டியதிருக்கிறது.
தூரத்தில், மிகவும் தூரத்தில் இருக்கும் யாரையோ அழைப்பதைப்போல.
13
யூகித்தது சரியாகிவிட்டது.
துர்கா அழைத்த ஆள் அவளுடைய அழைப்பைக் கேட்டுக் கொண்டான் என்பது தெரிந்துவிட்டது- இரண்டு நாட்களுக்குப் பிறகு பின்டோ வந்து சேர்ந்தபோது.
அவன் வருவதற்கு முன்பே பிரசாந்த் அப்படியொரு விருந்தாளியை எதிர்பார்த்தான். தாமுவிடம் ஒரு புதிய அறையை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று முன்கூட்டியே துர்கா கூறியிருந்தாள்.
துர்காவே அவனை எல்லோரிடமும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினாள்: “பின்டோ என் நெருங்கிய நண்பர். பம்பாயில் சொந்தமாக பின்டோஸ் என்ற பெயரில் ஒரு இசைக் குழு வைத்திருக்கிறார். மிகவும் புகழ் பெற்ற ட்ரம் இசைக் கலைஞர். பாடவும் செய்வார். இப்போ ஒரு இந்தி திரைப்படத்தில் பாடியிருக்கிறார்.”
பின்டோவைப் பற்றி தான் ஏற்கெனவே கேள்விப்படிருப்பதாக சுகன்யா சொன்னாள். பம்பாயிலிருக்கும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் க்ளப்களில் அவன் ஒரு நட்ச்சத்திரம். அப்படியே இல்லையென்றாலும், அவளுக்கு இந்த வகையான ஆட்கள்மீது ஒரு தீவிர ஈடுபாடு உண்டு.
ஆறடிக்கும் அதிகமான உயரத்தையும் நீளமான கைகளையும் கால்களையும் கொண்டிருந்த பின்டோவின் முகம் ஒரு குழந்தையின் முகத்தைப்போல இருந்தது. க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட சிவந்த கன்னங்களும், சுருண்டு நீண்ட தலைமுடியும் மெல்லிய மயக்கத்தில் இருப்பதைப்போன்ற அவனுடைய கண்களும் அவனுக்கு சிறப்பு சேர்த்தன. அதிகபட்சம் அவனுக்கு வயது இருபத்திரண்டு இருக்கும்.
பின்டோவுக்கு மது அருந்தும் பழக்கமோ புகை படிக்கும் பழக்கமோ கிடையாது. மீனோ, மாமிசமோ, காப்பியோ, தேநீரோ- எந்தப் பழக்கமும் இல்லை. அதிகம் பேசாத வகையைச் சேர்ந்தவன்.
அறிமுகமாகும்போது கான் அவனிடம், “திருமணத்திற்கு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்பது காதில் விழுந்தது- ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதைப்போல. சிறிதளவு பெண்மைத்தனமான குரலில், “ஆமாம்” என்று பின்டோ பதில் சொன்னப்போது, அவருடைய முகத்தில் இனம் புரியாத ஒரு நிம்மதி படர்வதை பிரசாந்த் கவனித்தான்.
திருமண நாளன்றோ, அதற்கு முந்தைய நாளோ ஒரு ட்ரம் செட் வரவழைக்கலாம் என்று கான் சொன்னார். டைகரையும் வர வைக்கலாம். தபலாவும் ட்ரம்மும் சேர்ந்த ஒரு ஜூகல் பந்தி.
அதைக் கேட்டபோது கான்சாஹிப் பின்டோவை ஒரு எதிரியாகப் பார்க்கறாரோ என்று காரணமே இல்லாமல் பிரசாந்திற்கு சந்தேகம் உண்டானது.
வீடு சம்பந்தப்பட்ட வேலைகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருந்தன. இரண்டு டைனிங் ஹால்கள் இருப்பதில், முன்னால் இருக்கும் கட்டிடத்தில் இருக்கும் ஹாலின் வேலை மட்டுமே இனி முக்கியமாக செய்ய வேண்டியதிருந்தது. சந்தனப்பலகைகளாலான சுவர்களை வைக்கும்படி கான் அவர்களிடம் கூறியிருந்தார். திட்டமிட்டிருப்பதைப்போல நல்ல இனத்தைச் சேர்ந்த மரக்கட்டைகள் கிடைப்பதற்குக் கால தாமதம் ஆனதால் அந்த அறை மட்டும் முடியாமலே இருந்தது. இப்போது மரக்கட்டைகள் கிடைக்கும் என்றாகிவிட்டது.
ஒரு நாள் காலையில் கான் சாஹிப் பிரசாந்தின் அறைக்குச் சென்று துர்கா கானுக்கும் ஃபைஸலுக்குமிடையே நடக்கப் போகிற திருமணத்தைப் பற்றிக் குறிப்பாகக் கூறினார்.திருமணம் முடிந்த பிறகு கிளம்பினால் போதும் என்று அவர் ஒரு அண்ணாவின் அதிகாரத்துடன் கறாராகக் கூறினார்.
உண்மையாகச் சொல்லப்போனால் பிரசாந்த் போவதற்கான காலம் முடிந்துவிட்டிருந்தது. அவன் அங்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. வரும்போது இவ்வளவு நாட்கள் அங்கு இருப்போம் என்று அவன் நினைக்கவே இல்லை.
வேண்டுமென்றால் இந்தச் சூழ்நிலையில் இறுதி அழகூட்டும் வேலைகளை ராமிடம் ஒப்படைத்துவிட்டு, திரும்பப் பேகலாம். அப்படிச் செய்தால் கானுக்கு உண்டாகக்கூடிய மனவருத்தத்தை விட பிரசாந்த்தை அங்கு இருக்கச் செய்தது அவனாலேயே புரிந்து கொள்ள முடியாத வேறு ஏதோ உணர்வுதான்.
சுகன்யாவின் வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்திருந்தன. காடும் கொடியும் நிறைந்திருந்த அந்த இடத்தை அவள் சொர்க்கத்திற்கு நிகராக ஆக்கினாள். எல்லையில் திரும்ப, உயரத்தில் வளைத்து கட்டப்பட்ட முள்வேலிக்கு அப்பால் அவள் எங்கிருந்தோ அளவில் சற்றுப் பெரிதாக இருக்கும் ஏராளமான ஜாதிப் பூ மரங்களை வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்து வைத்தாள். ஒரு இலைகூட வாடாமலும் கீழே விழாமலும் சிரத்தை எடுத்து கவனிக்கப்பட்டதால், வந்து சேர்ந்த ஒரு வாரம் கடந்தவுடன் அவை எப்போதிருந்தோ அங்கு வளர்ந்து நிற்ககூடிய மரங்கள் மாதிரி ஆகிவிட்டன. இலைகளையும் மலர்களையும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் விரியச் செய்து அவை தங்களுக்கு இடம் மாற்றம் நடந்ததே தெரியாதது என்பது மாதிரி காட்டிக் கொண்டிருந்தன. எந்தக் காலத்திலிருந்தோ அங்கு தங்கியிருப்பவர்கள் என்பது மாதிரி பல இனத்தைச் சேர்ந்த கிளிகளும் அவற்றின் கிளைகளில் கூடுகள் கட்டிக் கொண்டு பாடிக்கொண்டிருந்தன.
முன் பக்கத்திலிருந்து தோட்டம் சுகன்யாவின் படைப்புத் திறமையையும் அவளுடைய அழகுணர்ச்சியையும் காட்டக்கூடிய புதிய சான்றாக மாறியது. மாளிகையின் கம்பீரமான தோற்றத்திற்கு ஒரு சிறு குறைகூட உண்டாகாத அளவிற்கு அவள் அவை ஒவ்வொன்றையும் செய்திருந்தாள். விசாலமான புல்வெளிகள், டென்னீஸ் மைதானம், மாலை நேரங்களில் வந்து உட்காருகிற மாதிரி கொடிகளால் மூடப்பட்ட பார்கள், நான்குபேர் விளையாடக்கூடிய ஷட்டில் கோர்ட், தாமரை மலர்களுக்குக் கீழே பல வண்ணங்ளிலும் இருக்கும் மீன்கள் நீந்தி ஓடிக் கொண்டிருக்கும் விசாலமான மீன் குளம்- இப்படி ஒரு அங்குலத்தைக்கூட மீதம் வைக்காமல் அவள் செயல்படுத்தியிருந்தாள்.
தொடுவதற்கு பயந்ததைப்போல கேட்டை மட்டும் தொடவேயில்லை. நிறத்தைக்கூட மாற்றவில்லை. கருங்கல்லில் கொத்தப்பட்ட ‘வாலீஸ்’ என்ற எழுத்துகளில் படித்திருந்த பாசியைக்கூட அங்கிருந்து அவள் அகற்றவில்லை.
பம்பாய்க்குக் கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் அவள் பிரசாந்தின் அறையிலேயே இருந்தாள்.
“நீங்க இங்கே இப்படி இருக்குறப்போ, எனக்கு ரொம்பவும் பயம் ஒரே ஒரு பொண்ணைப் பார்த்துதான்”- பொழுது விடியும் நேரத்தில் எப்போதோ அவள் சொன்னாள்: “அந்த போளம்மாவை...”