குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
ஆனால், அந்த முடிவுக்கு ஆயுள் மிகவும் குறைவாக இருந்தது. நிலமாக இருந்த அந்தப் பகுதிக்கு காரணமே இல்லையென்றாலும், காரணத்தை உண்டாக்கிக் கொண்டு அவன் அடிக்கடி போய்க் கொண்டிருந்தான். போகும்போது மூடப்பட்டிருக்கும் வாசல் கதவை அவன் தன்னையே அறியாமல் பார்ப்பான்.
அன்று பகல் முழுவதும் அந்த கதவு மூடப்பட்டே இருந்தது. சாரா மட்டும் ஒன்றிரண்டு முறை போவதையும் வருவதையும் அவன் பார்த்தான். அங்கு அவள் உணவைக் கொண்டுபோய் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
வந்த பிறகு அந்தப் பெண், ஷானவாஸ்கானைப் பார்க்கவே இல்லை என்ற உண்மை பிரசாந்த்தைக் குழப்பத்திற்குள்ளாக்கியது. அங்கு அவள் வந்திருப்பதைத் தெரிவிக்கும் மரியாதை நிமித்தமான விஷயம்கூட இல்லாமல்...
அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளிக்கு தான் மனதில் நினைத்திருந்ததைவிட ஆழம் அதிகமாக இருப்பதை பிரசாந்த் உணர்ந்தான்.
நிலைமை அப்படி இருக்கும்போது எந்தக் காரணத்திற்காக அந்தப் பெண் அங்கு வந்தாள்? வெறுமனே ஒரு அறைக்குள் முடங்கிக் கிடப்பதற்காகவா?
கானின் அறையிலும் பகல் நேரம் முழுவதும் எந்த ஒரு சலனமும் இல்லை. இடையில் அவ்வப்போது காற்றில் கலந்தொலிக்கும் கித்தாரின் அழுகைச் சத்தம் அன்று கேட்கவேயில்லை.
சற்று நடக்கலாம் என்று தோன்றும்போது அவர் சிறிது நேரம் வெளியே வருவதுண்டு. வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்திலும் குதிரை லாயத்தைச் சுற்றியிருக்கும் இடத்திலும் சிறிது நேரம் செலவழிப்பது என்பது அவரின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
அன்று அது எதுவும் நடக்கவில்லை.
கொஞ்சம் இளம் வெயில் காய்ந்து கெண்டிருந்தபோது, நாகராஜ் குதிரையை அழைத்துக்கொண்டு சாலையைத் தாண்டியிருந்த புல்வெளிக்குப் போய்விட்டுத் திரும்ப வந்தான்.
பணியாட்கள் எல்லோரும் போனபிறகு, டாக்டர் பிள்ளையின் வெள்ளை நிற மாருதி கானின் அறையை நோக்கிச் சென்றது.
இரவில் தாமு சிறிதும் பிடி தராமல் ஒதுங்கிவிட்டான். எவ்வளவு வலியுறுத்தியும் ஒரு பெக் பருகக்கூட அவன் தயாராக இல்லை.
மறுநாள் பெழுது விடியும் நேரத்தில் ஊர்மிளா கேட்டைத் தாண்டி வெளியே போவதைப் பார்த்துதான் பிரசாந்த் படுக்கையை விட்டே எழுந்தான்.
அப்போது தான் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது.
ஊர்மிளா வெள்ளைநிற ட்ராக் சூட் அணிந்திருந்தாள். உறுதியான கால் வைப்புடன் மிகவும் வேகமாக அவள் நடந்து போவதைப் பார்த்தப்போது, என்ன காரணத்தாலோ ஜூலியாவைப் பற்றிய ஞாபகம் அவனுக்கு வந்தது.
அவளுடன் ஏதாவது பேச வேண்டுமென்றால் அதற்கேற்ற சூழ்நிலை இதுதான் என்பதை பிரசாந்த் புரிந்து கொண்டான். அதற்குப் பிறகு அவன் தாமதிக்கவேயில்லை, காலில் வெள்ளைநிற க்யான்வாஸ் ஷீவை அணிந்து கொண்டு அவனும் வெளியேறினான். அரைக்கால் ட்ரவுசரும் பனியனும் அணிந்து கொண்டது ஒரு விதத்தில் நல்லதாகப் போய்விட்டது.
சாலை பள்ளத்தாக்குகள் வழியாக வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. ஒரே இனத்தைச் சேர்ந்த மரங்கள் சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஒரே உயரத்தில் வளர்ந்து நின்றிருந்தன. மரங்களுக்கு மேலேயும் புல்வெளியிலும் ஆங்காங்கே மூடுபனி உருகாமல் இருந்தது.
ஊர்மிளாவிற்கு எதிராக வருவது மாதிரி, அவன் ஒரு குறுக்குப் பாதையைக கண்டு பிடித்தான்.
சிறிதும் எதிர்ப்பார்க்காமல் சந்திப்பவர்களைப்போல அவர்கள் ஒரு வளைவில் சந்தித்தார்கள். அவள் அவனைக் கண்டு கொண்டது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
“குட் மார்னிங் மேடம்.”
தன்னுடைய நடையின் வேகத்தை சிறிதும் குறைக்காமல் அவளும் ‘குட் மார்னிங்’ சொன்னாள்.
அவளுடன் சேர்ந்து நடந்தவாறு பிரசாந்த் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். முந்தின நாள் அவள் வந்து இறங்கியப்போது, தான் அங்கு நின்றிருந்ததைக் கூறி அவன் ஞாபகத்தைப் புதுப்பித்துக்கொண்டான்.
ஊர்மிளாவிடம் குறிப்பிட்டுக் கூறும்படி அப்படியொன்றும் ஆர்வம் தெரியவில்லை.
“மேடம், உங்க அறையைத் தயார் பண்ணியது நான்தான். ஏதாவது சொல்லணும்னோ, கருத்து தெரிவிக்கணும்னோ இருந்தால், அதை செய்து தர நான் தயாரா இருக்கேன்.”
“எதுவும் வேண்டாம்...” ஊர்மிளா சொன்னாள்: “இப்போ இருக்கிறதே அதிகமா தெரியுது-ஹோட்டல் அறை மாதிரி.”
அதைக் கேட்டபோது, முகத்தில் அடித்ததைப்போல அவனுக்கு இருந்தது.
ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றுக் கொள்ளாமலே அவர்கள் பிரிந்தார்கள்.
அது வாய் நாக்குதானா? கான் சாஹிப் காரணம் இல்லாமலா அவளை வீட்டை விட்டு வெளியேற்றினார்? பிரசாந்த் வெறுப்புடன் நினைத்துப் பார்த்தான்.
அன்று மத்திய நேரத்திற்கு பிறகு வீடு பகல் தூக்கத்தில் விழுந்து கிடந்த நேரத்தில், ஊர்மிளாவின் அறையிலிருந்து தம்புராவின் மெல்லிய ஓசை கேட்டது. அதோடு சேர்ந்து ஊர்மிளா ஒரு ராகத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.
அதற்கு முன்னால் சாரா ஒரு தம்புராவை அந்த அறைக்குக் கொண்டு செல்வதை பிரசாந்த் பார்த்தான்.
தன்னையே மறந்து பாடிக்கொண்டிருந்தாள் ஊர்மிளா. அவளுடைய குரலில் ராதாவின் விரகதாபம் நிறைந்திருந்தது. ஆரோகண அவரோகண வெள்ளப் பெருக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படகைப்போல அவளுடைய இசை அந்த வீட்டைச் சுற்றிலும் கேட்டது.
‘கடம்பை மரங்கள் யமுனைக்குள் விழ வைத்த ஒவ்வொரு பூவிதழும் சிற்றலைகளைப் பார்த்துக் கேட்கின்றன: வரும் வழியில் எஙகேயாவது எங்களின் கண்ணனைப் பார்த்தீங்களா?
கடந்து செல்லும் காற்றைப் பிடித்து நிறுத்தி மாலை நேரங்கள் கேட்கின்றன: உங்களிடம் சமீபத்தில் எங்கேயாவது ஒரு வேணுகானம் மிதந்து வந்ததா?
யாருக்கும் பிடி தராமல் மறைந்து நின்றிருக்கும் மாயாவி.
உன்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து என் மார்பகங்களில் செம்பஞ்சு சாற்றின் நிறம் மறைய ஆரம்பிக்கிறது.’
பின்பகுயில் இருந்த கட்டிடத்தின் ஒரு அறை ஜன்னலுக்கு அருகில் ஷாநவாஸ்கான் அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார்.
9
“லண்டனில்தான் எனக்கு ஊர்மிளா அறிமுகமானாள். எங்களின் ஈஸ்டர்ன் இந்தியா க்ளப்பின் வருடக்கொண்டாட்டத்திற்கு குரு ஹரிகிருஷ்ணா... ஸ்ரீ ஜோக்குடன் சேர்ந்து பாடுவதற்காக அவள் வந்திருந்தாள். ... ஸ்ரீ ஜோக்கைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே! இந்துஸ்தானி இசையில் மிகப்பெரிய பெயரைப் பெற்றிருப்பவர்களில் ஒருவர் அவர். அந்தச் சமயத்தில் ஊர்மிளா அவரின் சிஷ்யையாக இருந்தாள்.”
ஊர்மிளா கான் என்ற பெயரும் இப்போது புகழ்பெற்ற ஒன்றுதான் என்பதை பிரசாந்த் நினைத்துப் பார்த்தான். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் பல நேரங்களில் கேட்டிருக்கும் அந்தப் பெயருக்குச் சொந்தக்காரி இந்தப் பெண்தான் என்ற விஷயம் தனக்கு இதற்கு முன்பு எப்படி ஞாபகத்தில் வராமல் போனது என்று அவன் ஆச்சரியப்பட்டான்.
“அப்போது எனக்கு வயது இருபத்தைந்தோ இருபத்தாறோ நடந்து கொண்டிருந்தது. இங்கிலாண்டிலும் ஜெர்மனியிலும் ஹாங்காங்கிலும் என் தொழில் பரவி வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் பயன்படுத்தும் இரும்புக் கருவிகளையும் வாகனங்களையும் தயாரித்து விநியோகம் செய்வதுதான் எங்களின் தொழில்.