குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
சாரா பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
“படிப்பு அவ்வளவுதானா? பேசும் ஆங்கிலம் அந்த அளவிற்கு அசலா இருக்கே!” அவளை மேலும் கிளறுவதற்காக அவன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “நான் நினைச்சது....”
அவள் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். அவள் சொன்னாள்: “சின்ன பிள்ளையா இருப்பதில் இருந்து இந்த மாளிகையில்தானே எனக்கு வேலை. இங்கே நிரந்தரமா வேலை செய்றதா இருந்தா, கொஞ்சமாவது ஆங்கிலம் பேசத் தெரிஞ்சிருக்கனும்.”
அந்த இடத்தில் தன் உரையாடலை முடித்துவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
புதர்களை வெட்டி பழைய குதிரைகளின் சாணங்களை அள்ளிச் சுத்தம் செய்வதற்கே நான்கு நாட்கள் ஆயின. ஒவ்வொரு நாளும் இருபது பணியாட்கள் வேலை செய்தார்கள். உயிரைக் கொடுத்து வேலை செய்யக்கூடிய பணியாட்கள் சாஹிப்பின் வீட்டைப் புதுப்பிப்பது குறித்து அவர்கள் எல்லோருக்கும் கூலி என்பதையும் தாண்டி வேறு ஏதோ ஒரு ரகசிய சந்தோஷம் இருக்கிறது என்பதாக பிரசாந்த் உணர்ந்தான்.
நீளமான தூண்களுக்கும் மண்ணுக்குள் புதைத்து கிடந்த கருங்கல் பலகைகளுக்கும் மத்தியில் மூன்று பெரிய பாம்புகளும் இரண்டு பாம்புக் குட்டிகளும் கிடைத்தன. அவை வல்லாவற்றையும் பணியாட்கள் கொன்று நெருப்பில் எரித்தார்கள்.
ரெஃப்ரன்ஸுக்காக கான் தந்த தடிமனான புத்தகங்களில் மிகவும் நவநாகரீகமான குதிரை லாயத்தை எப்படி அமைப்பது என்பதைப்பற்றிய விளக்கங்கள் கூட இருந்தன. அதற்குள் நுழைந்து போனபோதுதான் வினோதமான அந்த உலகத்தைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
கான் அதற்கு உதவினார்.
இந்த விஷயங்கள் தெரியாமல் தான் ஒரு கேலிப் பொருளாக ஆகியிருப்பது நிச்சயம் என்பதை அவன் தெரிந்து கொண்டான். குதிரை லாயத்தில் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து நிறுத்தி தன்னை கேலி பண்ண கான் தயங்கியிருக்கவே மாட்டார்.
லாயத்தை உண்டாக்குவதற்கு மட்டுமே ஆகும் செலவைக் கணக்கிட்டுப் பார்த்தபோது பிரசாந்த் அதிர்ந்து போய்விட்டான். அந்தப் பணத்தைக் கொண்ட கிராமத்தில் ஒரு சிறு குடும்பம் விசாலமாக வாழ்வதற்கேற்ற கான்க்ரீட் கட்டிடமொன்றைக் கட்டலாம்.
அந்த நாட்களில் பிரசாந்த் முழுக்க முழுக்க தன்னுடைய வேலைகளின் உலகத்தில் மட்டுமே மூழ்கிவிட்டான். டைகரையும் நியாஸையும் அதற்குப் பிறகு அவன் பார்க்கவேயில்லை. டாக்டரின் வெள்ளைநிற மாருதியை ஒன்றிரண்டு மாலை வேளைகளில் பார்த்தான். சில நடு இரவு வேளைகளில் வாசலில் இருந்த செடிச் சட்டிகள் கீழே விழுந்து உடைவதையும் கேட்டான்.
அதற்குப் பிறகு அவன் கானின் அறைக்குச் செல்லவில்லை. ஒரு இரவு நேரத்தில் அவனுக்கு அழைப்பு வந்தது, வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி அவன் மறுத்துவிட்டான். சில நேரங்களில் நன்கு தூங்கிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் கித்தாரின் அழுகைச் சத்தம் காதில் விழும். அவ்வப்போது இருக்கும் சாரல் மழையும் மூடுபனியும் சேர்ந்து நாட்களை குளிர்ச்சியில் உறையச் செய்து கொண்டிருந்தன.
குதிரை லாயத்தைத் தொடர்ந்து வீடு சம்பந்தப்பட்ட வேலைகளை ஆரம்பிப்பதில் கானுக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை. முதலாவதாக செய்ய வேண்டியது விருந்தினர்கள் தங்கியிருக்கும் இடம் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்தார்.
ராம் விவேச்சாவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி தன் அலுவலகத்திற்கு அவன் ஃபோன் செய்தான். ராம்தான் அவனுடைய ரசனைக்கு ஒத்துப் போகக்கூடிய மனிதன். ராம் வந்து சேர்ந்துவிட்டால், பாதி தலைவலி தீர்ந்த மாதிரிதான். மிகுந்த ஈடுபாட்டுடன் வேலைகளில் ஈடுபட்டுவிடுவான். அவனிடம் ஒரு சீனியர் என்பதைவிட ஒரு மூத்த சகோதரன் என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது.
பிரசாந்தின் அறையில் இருந்த ஸ்டாண்டுகளிலும் மேஜைமீதும் பெரிய தாள்கள் சுருண்டும் விரிந்தும் கிடந்தன. வரைபடங்களும் திட்டங்களும் டிசைன்களும் வண்ணத்திட்டங்களில் சோதனைகளும் அடங்கிய தாள்கள் அவனுடைய அறையெங்கும் நிறைந்திருந்தன.
சில நாட்கள் கடந்த பிறகு வேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு ஊன்றுகோலின் துணையுடன் கான் வந்தார். இப்போது அவருக்குக் கொஞ்சம் நடக்கக்கூடிய அளவிற்கு பலம் கிடைத்திருந்தது. எனினும், வலது காலை ஊன்ற முடியவில்லை. படிகளில் இறங்குவதற்கு வேறு யாருடைய உதவியாவது அவருக்குத் தேவைப்பட்டது.
இப்படிப்பட்ட விஷயங்களில் ஸாபிற்கு உதவியாக இருப்பது சாராதான். மருந்துகளை எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பது, சலவை செய்த ஆடைகளை தயார் பண்ணி வைப்பது எல்லாமே அவள்தான். அவற்றை அவன் செய்வது முழுமையான ஈடுபாட்டுடனும், நிறைவான மனதுடனும் என்பதை பிரசாந்த் நன்கு அறிந்திருந்தான். அவர் இருக்கும்போது மட்டும் அவளுடைய முகத்தில் தெரியும் வார்த்தையால் விவரிக்க முடியாத பிரகாசம், ஒரு தாயின் தன்னிச்சையான செயல்கள், விளையாட்டுப் பேச்சுகள்…
வெளியே பார்ப்பதையும் தாண்டி அவர்களுக்கிடையில் ஏதாவது உறவு இருக்குமோ என்று சந்தேகப்படாமல் அவனால் இருக்க முடியவில்லை. யார் பார்த்தாலும் அப்படித்தான் நினைப்பார்கள்.
ஒரு இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு நல்ல போதையில் இருந்த தாமுவைக் கிளறியபோது அவன் சொன்னான்: “அவள் தப்பானவள் சார்... சாஹிப்பை ஒரு வழி பண்றதுக்குத்தான் அவளை அந்த ராபர்ட் இங்கே கொண்டு வந்து விட்டிருக்கான். அவள் எப்படியெல்லாம் ஆட்சி பண்றான்றதை நீங்கதான் பார்த்திருப்பீங்களே சார்? சாஹிப்போட பொண்டாட்டி மாதிரியில்ல அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கு!”
“ அவளுக்கும் ஸாபுக்கும் இடையில்...?”
“இருக்கும்...” கிழவன் படி கொடுக்காமல் சொன்னான்.
”பார்க்காமலே எப்படி?”
எப்படியெல்லாம் வளைத்தும் திருப்பியும் கேட்டும் கானுக்கும் சாராவுக்குமிடையே ஏதாவது ரகசிய உறவு இருக்கிறது என்பதை உறுதியான குரலில் கூறுவதற்கு தாமு அண்ணன் தயாராக இல்லை. அப்போது பிரசாந்த், கானின் மனைவியைப் பற்றி விசாரித்தான். அவள் எங்கு இருக்கிறாள்? உயிருடன் இருக்கிறாளா? இல்லாவிட்டால் இறந்துவிட்டானா?
கானின் மனைவியைப் பற்றி தாமுவிற்கு மிகவும் கொஞ்சம்தான் தெரிந்திருந்தது. எப்போதும் ‘பேகம் ஸாஹிப்’ என்று மட்டுமே கூறிக் கொண்டிருந்ததால் அவளுடைய பெயர்கூட அவனுக்குத் தெரியவில்லை. “அவங்க இருக்காங்க. எங்கோ கிராமத்துல” என்று மட்டுமே தாமுவிற்குத் தெரிந்திருந்தது. அந்த வீட்டில் சாஹிப்புடன் ஆறேழு தடவை வந்து தங்கிச் சென்றிருக்கிறாள் என்பது மட்டும்தான் அந்தப் பெண்ணைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருந்த விஷயமாக இருந்தது. மனைவிக்கும் கணவனுக்குமிடையில் இப்போது ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. அதைப்பற்றி அதற்குமேல் அவனுக்குத் தெரியவில்லை. யாருக்குமே தெரியவில்லை. அவர்கள் இருவரையும் தவிர.
“குழந்தைகள்?” பிரசாந்த் விசாரித்தான்.
“ஒரு மகள் இருக்கு ஒரே ஒரு மகள்”
அந்த ஒரு மகளும் எங்கே இருக்கிறாள் என்ற விஷயம் தாமுவிற்குத் தெரியவில்லை.