குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
“என் நண்பர்” - வரப்போகிற விருந்தாளியைப் பற்றி கான் முன்கூட்டியே சொன்னார். “ப்ளேன்டர். கேரளத்தில் இங்குமங்குமாக நிறைய எஸ்டேட்டுகள் இருக்கு. இங்கேயும் கொஞ்சம் இருக்கு.”
ஆர்ப்பாட்டத்துடனும் சத்தங்களுடனும் ஜப்போய் அங்கு வந்து சேர்ந்தார். முப்பது முப்பத்தைந்து வயது தோன்றக்கூடிய சற்று தடிமனான ஒரு மனிதர்.
“இன்றைக்கு எத்தனை சட்டிகளை உடைச்சீங்க?” கான் கேட்டார்.
அதற்கு பதிலாக கான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். தொடர்ந்து ஒரு க்ளாஸை எடுத்து நிரப்பினார்.
“என்னை என் மனைவி விவாகரத்து செய்யப் போறாளாம்.”- - அவர் எல்லோரிடமும் சொன்னார்.
“உன்னை இவ்வளவு காலமா சகிச்சிக்கிட்டு இருந்ததுக்கே அவங்களுக்கு விருது தரணும்” - பிள்ளை சொன்னார்.
“அது உண்மைதான்.” - ஜப்போய் ஒப்புக் கொண்டார். “நான் மது அருந்துவதைப் பற்றி அவளுக்குப் பிரச்சினையே இல்லை. மது அருந்திவிட்டு வண்டியை எடுக்குறதுலதான் பிரச்சினையே.”
“அது உண்மைதானே.”
“என்ன உண்மை? அப்போ என்னதான் செய்யிரது.”
வந்ததைப் போலவே சிறிது நேரம் கடந்த பிறகு ஆரவாரம் செய்தவாறு ஜப்போய் போகவும் செய்தார். போவதற்கு முன்னால் பிரசாந்த்தின் தோளில் அடித்தவாறு அவர் சொன்னார். “கான் சாஹிபின் மாளிகையை கம்பீரமாக இருக்குறது மாதிரி செய்யணும். நாம இங்கே ஒரு கலக்கு கலக்க வேண்டியதிருக்கு.”
‘கலக்கு’ என்றால் என்ன அர்ட்தம் என்று தெரியாவிட்டாலும் கம்பீரமாக இருக்குறது மாதிரி செய்யிறேன் என்று பிரசாந்த் வாக்குறுதி கொடுத்தான்.
இரண்டு மணி தாண்டி எல்லோரும் பிரிந்தபோது, பிள்ளை தன்னுடைய வீட்டிற்குச் சென்றார். டைகரும் நியாஸும் அன்று அங்கேயே தங்கினார்கள். அதிகாலையில் இருக்கும் பேருந்தில் பெங்களூருக்கு அவர்கள் செல்வார்கள்.
பிரியும் நேரத்தில் சற்று வெட்கம் தோன்ற கான் பிரசாந்திடம் ஒரு விருப்பத்தைச் சொன்னார்.
“வீடு சரி பண்ணுவதை இரண்டு நாட்கள் கழித்து ஆரம்பித்தால்கூட அதுனால பிரச்சினையில்லை. தெற்குப் பக்கம் இருக்கும் நிலத்தில் வளர்ந்திருக்கும் முள் காடுகளுக்கு மத்தியில் கொஞ்சம் கருங்கல்லாலான தூண்களும் பலகைகளும் கிடக்கின்றன. முன்பு ஒரு குதிரை லாயம் இருந்த இடம் அது. முதலில் அந்த இடத்தைச் சரிபண்ணி, ஒரு ஒற்றைக் குதிரையை அங்கே நிறுத்துகிற அளவிற்கு லாயம் உண்டாக்கித் தரணும் அது சரியானவுடன் கொண்டு வருவதற்காக ஒரு பெண் குதிரையை விலைக்கு வாங்கி ஊட்டிலில் நிறுத்தியிருக்கேன். முதலில் அவன் வரணும். அப்போத்தான் இந்த வீடு உயிர்ப்புடன் இருக்கும்.”
5
பழைய குதிரை லாயம் இருந்த இடத்தைக் காட்டுவதற்காக அவனுடன் வந்தவள் சாராதான். ஒன்றோ இரண்டோ கருங்கல் தூண்களைத் தவிர, வேறு எதுவும் வெளியில் இருப்பது மாதிரி தெரியவில்லை. காட்டுக் கொடிகள் அவற்றை முழுமையாக மூடி விட்டிருந்தன. இடையில் பயமுறுத்தும் பார்வையுடன் வளைந்து அப்படியும் இப்படியுமாகப் பிரிந்து சென்ற பல இனங்களையும் சேர்ந்த செடிகள் வளர்ந்திருந்தன.
“பாம்புகள் இருக்கும்” - சாரா சொன்னாள்: “யாரும் இந்த வழியா நடக்குறதே இல்ல.”
“இது விசாலமான இடமா இருக்கே!” - பிரசாந்திற்கு அது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்தது, “இந்த இடம் முழுவதும் குதிரை லாயமாகவா இருந்தது.”
சாரா தலையை ஆட்டினாள். தொடர்ந்து அவன் முன்பு எப்போதோ அங்கு இருந்த குதிரை லாயத்தைப் பற்றிச் சொன்னாள். பத்து பன்னிரண்டு குதிரைகள் நிற்கும் அளவிற்குப் பெரிய ஒரு இடமாக அது இருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த அளவில் அங்கு மூன்று நான்கு குதிரைகள் இருந்தன.
ஷாநவாஸ்கானுக்கு அவருடைய தந்தையிடமிருந்து கிடைத்ததுதான் இந்த குதிரைகள்மீது கொண்ட மோகம். அவருடைய தந்தை உலகமெங்கும் புகழ்பெற்ற பந்தயத்குதிரைகளைச் சொந்தத்தில் வைத்திருந்தார்.
பேச ஆரம்பித்த பிறகு அவளைப் பேச வைப்பது என்பது மிகவும் எளிதான விஷயமாகவே இருந்தது. முதலில் இருந்த அறிமுகமின்மை சற்று விலகி விட்டிருந்தது. ஸாப் அவனிடம் காட்டக்கூடிய அன்பும் நெருக்கமும் சிறிதளவில் அவளுக்கே தெரியாமல் அவளிடமும் பரவியிருந்தது.
கான் ஸாஹிப் குதிரைப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த தன்னுடைய வெள்ளை நிறக் குதிரையைக் கொண்டு வந்து அதோ அந்த வட்டத்தில் ஓட வைத்துப் பயிற்சி பெறும் காட்சி அவளுடைய சிறு பருவத்து நினைவுகளில் ஒன்றாக இப்போதும் தங்கியிருந்தது. ஸாப் விடுமுறையில் வரும்போது மட்டுமே பார்க்க முடிகிற ஒரு காட்சி அது.
“அப்போது ஸாப் பார்க்குறதுக்கு எவ்வளவு அழகா இருப்பார் தெரியுமா? வெள்ளைக் குதிரைமீது ஸாப் உட்கார்ந்திருக்கும் ஒரு பழைய புகைப்படம் இப்பவும் இருக்கு. பார்க்குறதுக்கு ஒரு பளிங்கு பொம்மையில் புகைப்படம் மாதிரியே இருக்கும். குதிரைக்கும் குதிரைமீது அமர்ந்திருக்கும் மனிதருக்கும் ஒரே மாதிரியான சதைகள்... ஒரே சிற்பியின் கையால் செய்யப்பட்டது அது என்பதைப் பார்த்த உடனேயே தெரிந்து கொள்ளலாம். “அடடா என்ன நிறம்!”
அவளை மனதைத் திறந்து பேசவிட்ட காரணத்தால் கானைப் பற்றிய வேறு சில தகவல்களும் வெளியே வந்தன.
கானின் பள்ளிக்கூடம் டேராடூனிலும் கல்லூரிகள் லண்டனிலும் அமெரிக்காவிலும் என்று பரந்து கிடந்தன. அவர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அது முடிந்ததும் நீண்ட காலம் அவர் வெளிநாட்டில்தான் இருந்தார். திரும்பவும் சொந்த ஊருக்கு வந்து வசிக்க ஆரம்பித்து ஐந்தாறு வருடங்கள்தான் ஆகின்றன. சிறு வயது முதல் எப்போதாவது சிறிய விடுமுறைகளில் வரும்போது தான் பார்த்த கான் சாஹிப்பின் உருவம் அவளுடைய மனதில் கடவுளுக்கு இணையாக இருந்து கொண்டு இருக்கிறது என்பதை பிரசாந்தால் புரிந்துகொள்ள முடிந்தது.
சாரா தன்னைப்பற்றியும் கூறினாள். அவள்தான் தற்போது இந்த வீட்டின் கேர் டேக்கர். முள்வேலிக்கு வெளியே தெரியும் நீளமான கட்டிடம் பிரசாந்த் மனதில் நினைத்ததைப் போலவே அந்த மாளிகையில் பணிபுரியும் பணியாட்கள் தங்குமிடம்தான். அங்குதான் அவள் பிறந்ததும் வளர்ந்ததும். அவளுடைய தந்தையும் தாயும் அங்கு வேலை பார்ப்பவர்களாக இருந்தார்கள். இப்போது அங்கு இருப்பவர்கள் சாராவும் அவளுடைய அண்ணனும், அண்ணனின் மனைவியும் மட்டும்தான். அவளுடைய தந்தை இறந்து விட்டார். அண்ணனின் மனைவியுடன் அனுசரித்து வாழ முடியாததால் அவளுடைய தாய் தன் சொந்த ஊருக்கே போய்விட்டாள். இப்போது அவள் ஊட்டியில் இருக்கிறாள். அங்கு இருக்கும் ஒரு அக்காவின் வீட்டில் வாதநோய் பிடித்துப் படுத்துக்கிடக்கிறாள்.
அவளுடைய அண்ணன் ராபர்ட் கார்ப்பரேஷனில் ஓட்டுநராக பணிபுரிகிறான். அக்கா போளி வெறுமனே வீட்டில் இருக்கிறாள். குழந்தைகள் இல்லை. அதனால் மற்றவர்களின் குறைகளைவும் குற்றங்களையும் பேசிக்கொண்டு தன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறாள் போளம்மா.