குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
பாலை பூக்கும் வாசனை.
பேருந்து வளைவில் திரும்பியதிலிருந்து அதன் வாசனை வந்துகொண்டிருக்க, அதை பிரசாந்த் முகர்ந்து கொண்டிருந்தான். அது வெறும் தோணலாக இருக்கும் என்றுகூட இடையில் அவன் சந்தேகப்பட்டான். பெங்களூரிலிருந்து மைசூருக்குச் செல்லும் சாலையில் இந்த நடு உச்சி நேரத்தில் அந்த மணம் எப்படி வர முடியும்?
எனினும் வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்றில், தொடர்ந்து நறுமணம் வந்து கொண்டிருந்ததை அறிந்தபோது, அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. மிகவும் களைப்படைந்து போயிருந்த பேருந்துப் பயணத்தில் நினைப்பதற்கு ஒரு விஷயத்தைத் தந்து கொண்டு அங்கு வந்த அந்த காற்றுக்கு நன்றி கூறியவாறு, பிரசாந்த் தன் கண்களை மூடினான்.
கண்களை மூடியவாறு தான் சிறு பிள்ளையாக இருந்தபோது இருந்த மாலை நேரங்களை வரவழைத்தான். பழைய வயல்வெளிகளுக்கு மத்தியில் மாலை நேரத்தில் மலர்ந்த ஒற்றைப் பாலையையும், பாலை பரவவிட்ட அருமையான வாசனையையும் அவன் மீண்டும் தன் ஞாபகத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்தான். அப்போது, பேருந்து வளைவில் ஏறுகிறபோது உண்டாகிற சத்தம் நின்று, தலைகீழான இறக்கத்தில் சிறகை விரித்து ஓடிக்கொண்டிருந்த பேருந்திலிருந்து தூரத்தில் அடிவாரத்திலிருந்து பாலை பூக்கும் வாசனை மேலே வந்து கொண்டிருந்தது. அத்துடன் குளிரும்.
விமான நிலையத்திலிருந்து வாடகைக் காரை எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு குளிர் இருக்கும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. வாடகைக் காரின் பின் இருக்கையில் தனியாக உட்கார்ந்திருப்பது போர் அடிக்கக் கூடிய ஒரு விஷயம் என்று நினைத்துத்தான் உண்மையிலேயே அவன் பேருந்திலேயே ஏறி உட்கார்ந்தான். ஆனால், இப்போது உடலை ஊசியெனக் குத்தக்கூடிய குளிராக இருந்தது. மூக்கின் நுனியில் வந்து உட்கார்ந்த ஒரு ஈயை அடித்து விரட்டலாம் என்று விரலால் தொட்டால், பனிக்கட்டியும் பனிக்கட்டியும் உரசியதைப்போல இருந்தது.
வண்டியின் ஷட்டர்கள் பெரும்பாலும் கிழிந்துவிட்டிருந்தன. அதன் வழியாகக் குளிர்காற்று முனகியவாறு உள்ளே வந்து கொண்டிருந்தது. பயணிகளில் பெரும்பாலானவர்கள் கம்பளியாலான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சிலர் கடுமையான குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மஃப்ளரால் தலையை இறுகக் கட்டிக் கொண்டு, ஓவர் கோட்டுகள் அணிந்து நடுங்கியவாறு உட்கார்ந்திருந்தனர்.
மாலை நேரத்தில் மைசூரில் கடுமையான குளிர் இருக்கும். பிரசாந்த் நினைத்தான். பம்பாயின் வெப்பத்தில் இருக்கும்போது, இந்த அளவிற்கு குளிர் இருக்கும் என்பதை அவன் நினைக்கவேயில்லை. ஒழுங்காக சில கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்லும்படி நேற்றுகூட சுகன்யா கூறத்தான் செய்தாள்.
“அந்த அளவிற்கு குளிர் இருப்பது மாதிரி இருந்தால், உன்னை நான் அங்கே வரவழைச்சிடுவேன் - அதிகாரப்பூர்வமாகவே” - பிரசாந்திற்கு அப்போது அப்படித்தான் கூறத் தோன்றியது.
அதைக் கேட்டு சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள். தொடர்ந்து கண்களை மூடிக் கொண்டு உரத்த குரலில் வேண்டிக் கொண்டாள்:
“கடவுளே, அங்கே கடுமையான குளிர் இருக்கணும்!”
அவளுடைய வேண்டுதலுக்குப் பலன் கிடைத்துவிடும் போலத்தான் இருந்தது. சில நாட்கள் சென்ற பிறகு, போகும் இடம் போராடிக்க ஆரம்பித்துவிடும். பிறக்கப்போவது டிசம்பர் மாதம். குளிரின் ஆக்ரமிப்பு அதிகமாக இருக்கும். இரவில் விஸ்கியை மட்டும் அருந்திக்கொண்டு பதில் கூற முடியாது. அப்போது மேலதிகாரிக்கு எழுதும் கடிதத்தில் ஒரு வார்த்தை அதிகமாக சேர்ந்திருக்கும். ‘வெளிப்பகுதிக்கு இறுதி வடிவம் கொடுக்க விற்பன்னர் வந்து சேர வேண்டிய நேரமாகிவிட்டது. ஒரு ஆளை உடனடியாக இங்கு அனுப்பி வைக்கவும் - கூடுமானவரை செல்வி சுகன்யா டேனியல்.’
அதை வாசிக்கும்போது கிழவனின் கன்னங்களில் பரவியிருக்கும் திருட்டுச் சிரிப்பை பிரசாந்தால் இப்போதே பார்க்க முடிந்தது. அவர் அதை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்பார். இரண்டு நாட்களுக்கு முன்னால் மது கொஞ்சம் அதிகமானபோது அவர் அதைக் கூறவும் செய்தார்.
சுகன்யா என்பதால், அதைப்பற்றி யாருக்கும் பொறாமையோ குற்றச்சாட்டோ சிறிதும் கிடையாது. டிசைனிங் நிபுணியான சந்தியாராயாக இருந்தால், அலுவலகத்தில் ஒரு கத்திக் குத்தே நடந்திருக்கும். சுகன்யா என்னும்போது, அதைப்பற்றிக் கூற வேண்டிய அவசியமே இல்லை. அது அவளுடைய விருப்பம். தனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை அவள் செய்வாள். தோன்றுகிற ஆள், தோன்றுகிற நேரம்...
சாலையில் வலது பக்கத்தில், கீழே புகையிலைத் தோட்டங்களின் மேற்பகுதியில் ஒரு கிளிக்கூட்டம் எதிர்திசையை நோக்கிப் பறந்து போய்க் கொண்டிருந்தது. அவை பார்வையிலிருந்து மறைந்ததும், அதோடு சேர்ந்து பாலையின் மணமும் போய்விட்டது.
‘தங்கப் போகிற இடம் இருக்கும் இடத்தில் எங்காவது ஒரு பாலை பூத்திருந்தால் நன்றாக இருக்கும்’ என்று அவன் நினைத்தான். ‘எது தேவையாக இருந்தாலும் டாக்டர் ஷாநவாஸ்கான் என்ற மனிதரிடம் விஷயத்தைச் சொல்லி விட்டால் போதும்’ என்று அவனுடைய அலுவலகத்தில் கூறியிருந்தார்கள். தான் தங்கியிருக்கும் அறைக்கு வெளியே மலர்கின்ற பருவத்தில் ஒரு பாலையைக் கொண்டு வைக்க அவரிடம் கூறவேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.
பலரும் கூறியதை வைத்துப் பார்க்கும்போது, அதற்கும் அதற்கு அப்பாலும்கூட பல காரியங்களையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் அந்த மனிதருக்கு இருக்கிறது என்பதை அவன் தெரிந்துகொண்டான்.
பிரசாந்த் வெறுமனே டாக்டர் கானைப்பற்றி மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தான். ஒன்றிரண்டு தடவை அவன் தொலைபேசி மூலம் பேசியபோது, அவன் கவனித்தது அவருடைய குரலைத்தான். முரட்டுத்தனமாகவம் ஆழமாகவும் அந்தக் குரல் இருந்தது. அந்தக் குரலை வைத்து அவருடைய வயதைக் கணக்கிட முடியவில்லை. தனக்குத் தேவையான விஷயங்களைப் பற்றித் தெளிவான கொள்கைகளைக் கொண்டிருக்கும் மனிதர் அவர் என்பது மட்டும் புரிந்தது.
நல்ல வயதைக் கொண்ட மனிதராக அவர் இருக்க வேண்டும். பத்து, பதினைந்து லட்சம் ரூபாய்களைச் செலவழித்து பரம்பரை பாணியில் கட்டப்பட்ட ஒரு அரண்மனையைப் போன்ற வீட்டை புதுப்பிக்கலாம் என்று கோடீஸ்வரரர்களாக வயதான மனிதர்களுக்கு மட்டுமே தோன்றும் என்ற உண்மையை தன்னுடைய அனுபவங்கள் மூலம் பிரசாந்த் தெரிந்து கொண்டான். இளைஞனாக இருந்தால், இன்றைய காலகட்டத்தில் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு மரியாதை கிடைக்கிற மாதிரியான ஒரு புதிய வீட்டையோ அல்லது ஒன்றோ இரண்டோ ஃப்ளாட்டுகளையோதான் அவன் வாங்குவான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால். அவன் பணி செய்யும் நிறுவனத்தை அணுகக்கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் வயதான பண்காரர்களாகவோ, கிறுக்குத்தனமான மார்வாடிகளாகவோதான் இருந்தார்கள். அவர்களால்தான் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட முடியும்.
வெளியே வாகனங்கள் மற்றும் மனிதர்கள் உண்டாக்கிய சத்தங்ளைக் கேட்டு, பிரசாந்த் ஷட்டரை உயர்த்திப் பார்த்தான்.