குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
15
இரவு பதினொரு மணிக்கு மைசூரிலிந்து புறப்படும் ட்ரெயினில் ஊர்மிளா போய்விட்டாள். வந்தபோது கொண்டு வந்திருந்த சூட்கேஸையும் பேக்கையும் மட்டுமே அவள் போகும்போது எடுத்துச் சென்றாள்.
போகப் போகும் விஷயத்தை அவள் ஏற்கனவே சாராவிடம் கூறியிருக்க வேண்டும். காரணம் - வழக்கத்திற்கு மாறாக இரவு நேரத்திலும் அவளை வராந்தாவிலும் இடைவெளிகளும் அவன் பார்த்தான். சாராவிற்கு மட்டும் என்று ஆயிரம் ரூபாயையும், சமையலறையிலும் மற்ற இடங்களிலும் வேலை செய்யும் மீதி பணியாட்கள் எல்லோருக்கும் சேர்த்து வேறொரு ஆயிரம் ரூபாயையும் அதாவது இரண்டாயிரம் ரூபாயை சாராவிடம் கொடுத்து விட்டுத்தான் அவள் வீட்டை விட்டுக் கிளம்பினாள். போகும்போது ஊர்மிளா பிரசாந்த்திடம் விடைபெற்றுக் கொள்ளவில்லை. அவன் அதை எதிர்பார்க்கவும் இல்லை. பலமாக பெய்து கொண்டிருந்த மழையில், அவளுடைய கார் கேட்டைக் கடந்து போவதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, அவனுக்கு யாரையோ கொலை செய்ய வேண்டும்போல இருந்தது. கனமாகப் பெய்து கொண்டிருந்த மழை, ஒரு நேரம் வந்தபோது மெதுவாகப் பெய்ய ஆரம்பித்தது. இலைகளில் மழைத்துளிகள் விழும் சத்தத்தைப் பிரித்துப் பார்த்தவாறு பிரசாந்த் தன்னுடைய அறையில் படுத்திருந்தான். தொடர்ந்து மழைத்துளிகள் குறைவதை அவன் அறிந்தான். மழைத்துளிகளுக்கு மத்தியில் மவுனம் நீண்டு கொண்டிருப்பதை அவன் கேட்டான்.
கானின் அறையில் விளக்கு அணையவில்லை. அவர் அங்கு தனியாக இருந்தார். விருந்தாளிகள் எல்லோரும் கிளம்பிப் போனபிறகு, இறுதியாக அறையை விட்டு வெளியே வந்தவன் பிரசாந்த்தான். டாக்டர் பிள்ளையிடம், “இனிமேல் இன்னைக்கு மதுவைத் தொட மாட்டேன்” என்றொரு சத்தியம் செய்யல் நடந்தாலும், பிள்ளை அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டதும் அவர் புதிய ஒரு புட்டியை எடுக்கவே செய்தார்.
ஊர்மிளா போன விஷயம் கானுக்கு தெரியும். இல்லாவிட்டாலும், அவள் தன் கால்களில் விழுந்து வணங்கியபோதே அவர் புரிந்து கொண்டிருப்பார். அது ஒரு இறுதி விடை பெறல் என்று.
மழை மெதுவாகப் பின்வாங்கியது. நிலவு உதித்தது. வெளிச்சம் இல்லாமல், காற்றிலும் இலைகளிலும் இருந்த ஈரத்தை மட்டும் தழுவிய ஒரு நிலவு.
அந்த நிலவு தன்னுடைய அறையின் ஜன்னல் கம்பிகளில் படர ஆரம்பித்தபோது, பிரசாந்த் கண்ணயர்ந்தான்.
பாதி தூக்கம், ஆழமான உறக்கத்தை நோக்கிப் போவதற்கு மத்தியில் ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டு அவன் அதிர்ச்சியடைந்து எழுந்தான்.
முதலில் என்ன நடந்தது என்றே அவனுக்குத் தெரியவில்லை. எங்கோ யாரோ ஓடுவதாலும், விளக்குகள் ஒளிர்வதாலும் உண்டான சத்தங்கள் அவனுக்குக் கேட்டன. யாரோ என்னவோ கூறுகிறார்கள்.
பிரித்தெடுத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலவிதங்களிலும் ஒலித்த சத்தங்களுக்கு மத்தியில் சாராவின் குரலை அவன் தனியாக அடையாளம் கண்டு பிடித்தான்.
அப்போது மீண்டும் ஒரு சத்தம் கேட்டது. ஒரு குண்டு வெடித்த சத்தம். மாளிகையின் சுவர்களையும் இரவையும் பள்ளத்தாக்குகளையும் நடுங்கச் செய்த அதன் முழக்கம் நின்றது.
தெற்குப் பக்க வாசலில் ஆரவாரம் கேட்டது.
ஜூலியா ஹவுஸின் வாசலில் மங்கலான வெளிச்சத்தில் யாரெல்லாமோ நின்றிருந்தார்கள்.
பணியாட்கள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து ஓடி வரும் டார்ச்சும் வெளிச்சமும்.
மங்கலான நிலவு வெளிச்சத்தில், கான் சாஹிப்பை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமில்லாத ஒரு விஷயமாக இருந்தது. அவரின் கையில் அப்போதும் புகை நின்றிராத ஒரு ரிவால்வர் இருப்பதை பிரசாந்த் பார்த்தான். முழுமையாகத் தரையில் நின்றிராத கால்களுடனும், கலங்கிய கண்களுடனும், தொண்டைக் குழியில் அடக்க முடியாத அழுகையுடனும் நின்றிருந்த அந்த மனிதருக்கு அருகில் செல்ல யாருக்கும் தைரியம் இல்லை. சிறிதளவிலாவது அவருக்கு அருகில் சென்றவள் சாரா மட்டும்தான்.
குதிரை லாயத்தின் மறைவில், இருட்டில், அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த நாகராஜ் தன் குரலை உயர்த்த முடியாமல் ஒளிந்து நின்றிருந்தான்.
லாயத்தின் வாசலில், குழாய் அமைத்து திருப்பிவிடப்பட்ட எல்லையுடன் சேர்த்து ஜூலியாவின் உடல் கிடந்தது. நெற்றியைத் துளைத்துச் சென்ற ஒரு குண்டில், அவளுடைய தலை சிதறிப் போயிருந்தது. கழுத்துப் பகுதியிலிருந்த துளையிலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு பந்தயத்தில் நடப்பதைப்போல, அவளுடைய இரத்தம் வெளியே சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.