குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
அவர்ளுக்கிடையே நடந்த உரையாடலை கவனித்தபோது ,தாயிடமிருந்து துர்கா சிறிது சிறிதாகத் தன் தந்தையை நோக்கி சாய்ந்து கொண்டிருப்பதை பிரசாந்த்தால் புரிந்து கொள்ள முடிந்தது.
செடிகளின் இலைகள் இருட்டில் மறைவது வரையில் அந்த சண்டை நீண்டு கொண்டிருந்தது.
மெதுவாக ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சண்டை படிப்படியாக அதிகமானது.
தோட்டத்திலிருந்து மரங்களுக்குப் பின்னால் இருந்தபோதும்,அதிகாலை சவாரிக்கு மத்தியிலும், கானின் அறையிலும் அதற்கு கடுமைத்தன்மை கூடிக்கொண்டுருப்பது தெளிவாகத் தெரிந்தது. தெறித்து விழுந்த உரையாடல் வார்த்தைகள், சில நேரங்களில் ஒரு கண்ணீர் கலந்த பார்வை, அச்சுறுத்தும் நடவடிக்கைகள், முரண்பாடுகளின் வாசனை நிறைந்திருந்த அறைகள்...
எதையும் கேட்கவில்லையென்றாலும் எல்லாவற்றையும் பார்த்துப் புரிந்து கொண்டிருக்கும் ஒரு தளத்தை நோக்கி அந்த சண்டை வளர்ந்து கொண்டிருப்பதை பிரசாந்த் உணர்ந்தான். அறிந்து கொள்ளாமல் அவனிடம் ஏதாவது மீதம் இருக்கிறது என்றால், அதை தெரியும்படி செய்வதற்கு எல்லா நேரங்களிலும் சுகன்யா வந்துவிடுவாள்.
ஊர்மிளா தன்னுடைய நிலையிலிருந்து அணு அளவுகூட விலகுவதற்குத் தயாராக இல்லை. அவளுடைய அந்தக் கடுமையான பிடிவாதத்தை மகளால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய திருமணத்தின் மூலம்அவர்களுக்கிடையே இருக்கும் விலகல் ஒரு முடிவுக்கு வந்தால் அது ஒரு நல்ல விஷயம்தானே என்று நினைத்துதான் துர்கா அந்த திருமணத்திற்குச் சம்மதிக்கவே செய்தாள். இல்லாவிட்டால் அவளுக்கு இப்போது அப்படியொன்றும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் சிறிதும் கிடையாது. தன்னை வலையில் மாட்ட வைத்துவிட்டு தன் தாய் தப்பித்தோடப் பார்க்கிறாளோ என்று அவள் சந்தேகப்பட்டாள். அப்படியென்றால், தேதிகூட நிச்சயிக்கப்பட்டுவிட்ட அந்தத் திருமணத்தைப் பற்றி இரண்டாவது தடவையாக அவள் யோசனை செய்ய வேண்டியதிருக்கும்.
அவளுடைய நடவடிக்கைகளில் முழுமையாக நிலைகுலைந்து போனவர் கான்தான். அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமான விஷயத்தை டாக்டர் பிள்ளையும் வேறொரு இதய நிபுணரும் அடிக்கடி அங்கு வந்து கொண்டிருப்பதிலிருந்து அவன் தெரிந்து கொண்டான்.
எனினும் கான் அது எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. பிரசாந்த், சுகன்யா ஆகியோருக்கு முன்னால் தன்னுடைய தன்னம்பிக்கை நிறைந்த புன்னகையுடன் அவர் அமர்ந்திருந்தார். இடையில் அவ்வப்போது இருக்கக்கூடிய இசை கூடல்களுக்கோ மாலைநேர கொண்டாட்டங்களுக்கோ சிறிதும் மாற்றங்கள் உண்டாகவில்லை.
கான் அந்தக் குதிரையை வாங்கி நிறுத்தியிருப்பதே தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் வெள்ளைநிறக் கொடிதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அது தட்டி எறியப்படப் போகிறது என்ற வேதனை மனிதனை பாதிக்காமல் இருக்காது என்பதைத் தெளிவாக பிரசாந்த் உணர்ந்திருந்தான். அவமானத்தை விழுங்கிக் கொண்டு அமைதியாக அவர் இருந்து கொண்டிருப்பதற்குப் பின்னால் மகளுடைய திருமணம் என்ற ஒரே ஒரு பிரார்த்தனை மட்டுமே இருக்கிறது என்பதும் வெளிப்படத் தெரிந்தது.
வேதனையான பல சம்பவங்களுக்கு மத்தியில் ஒரு மதிய நேரத்தில் துர்காவிற்கு வரப்போகும் கணவனின் உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டம் அங்கு வந்து சேர்ந்தது.
மூன்று மெர்ஸிடஸ் பென்ஸ் கார்களில் அவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் ஒரு எட்டு ஒன்பது பேர் இருந்தார்கள். மணமகனின் தந்தையும் தாயும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மணமகளின் ஒரு மாமா, வெளிநாட்டில் இருக்கும் ஒரு மனிதர் துர்காவைப் பார்க்கவில்லை, அவர் சென்றப்போது, அவருடன் எல்லோரும் சேர்ந்து சென்றார்கள். திருமணத்திற்கு முன்னால் ஏதாவது இறுதி விஷயங்களைப் பேசுவதாக இருந்தால், அவற்றையும் பேசிக் கொள்ளலாமே!
துர்காவிற்கு வரப்போகும் கணவன் ஃபைஸலின் குடும்பம் ஜெய்ப்பூரில் ஒரு அரசு குடும்பத்துடன் தொடர்ப்பு கொண்டது என்பதை பிரசாந்த் கேள்விப்பட்டிருந்தான். ஃபைஸல் டில்லியில் இருக்கிறான். வெளிநாடுகளிலும்கூட புகழ் பெற்றிருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய துணி மில்களில் ஒரு மில்லின் சொந்தக்காரர்கள்தான் மணமகனின் குடும்பத்தினர். வார்னீஷ் பத்திரிகைகள் அனைத்திலும் அந்த நிறுவணத்தின் வண்ண விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.
துர்கா கானின் ஒரு புகைப்படம் ஏதோ ஒரு ஃபாஷன் பத்திரிகையில் வந்திருப்பதைப் பார்த்து, அவளைப் பெண் கேட்டு வந்திருந்தவன்தான் அந்தக் கோடீஸ்வரரின் மகன்.
விருந்தாளிகள் வந்திருந்த நாளன்று பரபரப்புடனும், பதைபதைப்புடனும் இருந்தவள் சாராதான். வீட்டிலும் சமையலறையிலும் ஓய்வே இல்லாமல் அவள் ஓடிக் கொண்டிருந்தாள். ஒருமுறை அவளுடன் சேர்ந்து ஊர்மிளா புதிதாக ஒப்பனை அணிந்து கான் சாஹிப்பன் அறைக்கு அருகிலிருந்த விசாலமான வரவேற்பறைக்குச் செல்வதை பிரசாந்த் பார்த்தான். அங்கிருந்து விருந்தினர்களின் சிரிப்பொலிகளுக்கும், தமாஷான பேச்சுகளுக்கும் மத்தியில் ஊர்மிளாவின் மெல்லிய சிரிப்பு சத்தமும் கேட்டது.
டிரைவர்களும், உடன் வந்திருந்த பணியாட்களும் சுற்றி நடந்து வீடு, குதிரை லாயம், ஆகியவற்றின் அழகைப் பார்த்து ரசித்தனர். தான் ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டிருப்பதைத் தெரிந்து கொண்ட ஜூலியா, அழகியின் ஆணவத்துடன் நின்று கொண்டிருந்தது.
மொத்ததில் துர்கா தவறு செய்து கொண்டிருக்கிறாள் என்று கூறியது போளம்மாதான். வீட்டிற்கு வெளியில் இருக்கும் விசேஷங்களைத் தெரிந்து கொள்வதற்கும், சாராவிற்கு ஒரு கை உதவலாமே என்பதற்கும் அவள் மாளிகைக்கு வந்திருந்தாள்.
துர்கா விருந்தினர்களுக்கு முன்னால் போய் நிற்பதற்குத் தயாராக இல்லை என்றும், அது கான் சாஹிப்பிற்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சினைகளை உண்டாக்கும் என்றும் போளம்மா சொன்னாள்.
“அந்தப் பொண்ணுக்கு அங்கு வேறு ஒரு காதல் இருக்கு சார்... அதுதான் அவள் ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறாள். கொஞ்சம் பணம் வருதுன்னு சொன்னால், இப்போ இருக்குற பொம்பளப் பசுங்க விழுந்திடுவாங்களா?” - போளம்மா கேட்டாள்.
கானே நேரடியாக துர்காவின் அறைக்குச் சென்று கூறிய பிறகுதான், இறுதியில் அவள் விருந்தினர்களுக்கு முன்னால் போய் நின்றாள். அதற்கு முன்னால் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள்ளிருந்து உரத்த குரலில் வந்த பேச்சும் அழுகைச் சத்தமும் கேட்டன.
தந்தை தன் மகளுடைய கால்களைப் பிடித்து கெஞ்சியிருக்க வேண்டும்.
முகத்தை ஏதோ சடங்குக்காக கழுவித் துடைத்து, ஆடைகளைக் கூட மாற்ற சம்மதிக்காமல், தன் தந்தையுடன் அறையைத் திறந்து வெளியே வந்த அந்த இளம்பெண், நினைத்திருந்ததைவிட ஆபத்தானவள் என்பதை அன்று பிரசாந்த் புரிந்து கொண்டான்.
மாலை நேரம் வந்ததும், விருந்தினர்கள் அங்கிருந்து கிளம்பனார்கள். மலர்கள் பூத்திருந்த தோட்டத்திற்கு மத்தியில் இருந்த மணல் நிறைந்திருந்த பாதை வழியாக மூன்று கார்களும் ஓடி மறைந்த பிறகு, துர்கா தன் தாய்க்கும் கேட்கிற மாதிரி சாராவிடம் கூறுவது பிரசாந்த்தின் காதுகளில் விழுந்தது.
“நான் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கப்போறேன். யாரும் என்ன எழுப்பக் கூடாது.”
“உணவுக்கு?”
“எழுப்பக் கூடாதுன்னு சொன்னேன்ல?”- உரத்த குரலில் கோபத்துடன் கூறியவாறு அவள் கதவை அடைத்தாள்.