குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
மகள் இப்படி ஓடிப்போனதால் உண்டான மனக் கவலையா? அதற்குக் காரணமான தாய்மீது கொண்ட கோபமா? இவற்றில் கான் சாஹிப்பை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் விஷயம் எதுவாக இருக்கும்? சந்தன வாசனை நிறைந்திருந்த டைனிங் சம்பந்தப்பட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தபோது, பிரசாந்த்தின் சந்தேகம் அதுவாகத்தான் இருந்தது. ஒரு உல்லாசப் பயணம் முடிந்ததைப்போல இரண்டு நாட்களுக்குள் மகள் திரும்பி வருவாளென்று எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் நம்ப மாட்டார் என்பது மட்டும் நிச்சயம். அப்படியென்றால் இப்படி அவர் வெறுமனே அமைதியாக இருப்பதற்கு அர்த்தம் என்ன?
மழை பெய்து கொண்டிருந்ததால் வெளியே வேலை செய்து கொண்டிருந்த பணியாட்கள் முன்கூட்டியே போய் விட்டார்கள். எந்த விஷயத்திலும் உற்சாகம் உண்டாகததால் டைனிங் ஹாலில் வேலை செய்து கொண்டிருந்த பணியாட்களையும் முன்கூட்டியே போகுமாறு கூறும்படி ராமுவிடம் கட்டளையிட்டான் பிரசாந்த்.
இனி, இப்போது எதற்காக அவரசப்பட வேண்டும்?
அந்த இளம் வயதைச் சேர்ந்த இருவரும் சேர்ந்து தோற்கடித்தது தன்னைத்தான் என்று பிரசாந்த் நினைத்தான். இருட்டில் முகத்தில் அடி விழுந்ததைப்போல அவன் உணர்ந்தான்.
மாலை நேரம் கடந்ததும் சாரா வந்து கான் சாஹிப் அழைப்பதாகக் கூறினாள்.
ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிப்பதற்காகத் தான் தன்னை அவர் அழைக்கிறார் என்று கருதி அவன் சென்றபோது, அங்கு ஒரு கூட்டமே இருந்தது. டைகர் இருந்தார். நல்ல நிலையில்தான். முன்பு பார்த்திராத வயதான ஒரு பாடகர் இருப்பதை பிரசாந்த் பார்த்தான். ஆர்மோனியத்தின்மீது விரல்களை ஓட்டியவாறு தன்னுடைய கரகரத்த குரலில் இளவேனிற்கால வெயிலையும் காட்டுச் சேலையையும் பற்றிப் பாடிக் கொண்டிருந்த அந்த மனிதர் பார்வை தெரியாத ஒருவராக இருந்தார். டாக்டர் பிள்ளையுடன், கானின் முன்பு பார்த்திராத ஒரு நண்பரையும் அவன் பார்த்தான் - நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பேராசிரியர்.
கான் எப்போதையும்விட தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக வேண்டுமென்றே காட்டிக்கொள்கிறார் என்பதாகப் பிரசாந்த்திற்குத் தோன்றியது. பார்வையற்ற மனிதருக்கு மதுவை ஊற்றித் தரும்போது, அவரைக் கிண்டல் செய்த கானின் செயல்களில், குழந்தைத்தனம் வந்து நிறைந்திருப்பதைப்போல இருந்தது. டைகரைப் பாராட்டும்போது அவர் தேவையில்லாமல் தன் குரலை உயர்த்திப் பேசியதும் எப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது.
பார்வை தெரியாத பாடகரின் பாடல் அதன் முழுமையை அடைந்த நேரத்தில், அதைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக எல்லோரும் கண்ணாடிக் குவளைகளை உயர்த்தியதைத் தடுத்துக்கொண்டு கான் சொன்னார் : “நில்லுங்க... நானும் கொஞ்சம்...”
வேறு யாரும் எதுவும் கூற ஆரம்பிப்பதற்கு முன்னால் அவர் ஒரு கண்ணாடிக் குவளையில் விஸ்கியை ஊற்றி, மற்றக் குவளைகளுடன் சேர்த்து வைத்து உயர்த்தினார். “உஸ்தாமின் குரலுக்கு...”
டாக்டர் பிள்ளையின் முகம் இருண்டு போனதைச் சிறிதும் கவனிக்காமல், ஒரே மடக்கில் கான் குவளையைக் காலி செய்தார்.
பிரசாந்திற்கு எங்கேயோ பயம் தோன்றியது.
குடிக்க ஆரம்பித்த பிறகு, பிள்ளையால் மட்டுமல்ல யாராலும் அவரைத் தடுக்க முடியவில்லை.
தொடர்ந்து மூன்று பெக்குகளை உற்றிக் குடித்து முடித்த பிறகு கான் சொன்னார் : “இனி மெதுவா இருந்தா போதும்.”
இரண்டு மூன்று மாதங்களாக முழுமையாகக் குடிப்பதை நிறுத்தியிருந்ததற்காகப் பழி வாங்கும் போக்கு அவருடைய வெறித்தனமான நடவடிக்கைகளில் தெரிந்தது.
கானின் மடியில் சித்தாரை வைத்துக்கொண்டு டைகர் சொன்னார் : “ஸாப்... இனிமேல் நீங்க பாடுங்க. உங்களை இப்படியொரு நல்ல மூடுல பார்த்து எவ்வளவு நாட்களாச்சு! உங்கக்கூட சேர்ந்து வாசிக்காததால், என் விரல்கள் என்மீது கோபத்தில் இருக்கு.”
பேராசிரியர் அதற்கும் “வாஃஹ் வாஃஹ்” கூறுவதை பிரசாந்த கேட்டான்.
ஐந்தாவது பெக் முடிந்தபோது, கான் பாட ஆரம்பித்தார்.
பாட ஆரம்பித்ததும் அவர் தன் கண்களை மூடிகொண்டு எதையும் பார்க்காமல், யாரையும் தெரியாமல், தனக்கு மட்டுமே சொந்தமான ஒரு உலகத்திற்குள் அவர் நுழைந்து போய் விட்டார் என்பதை பிரசாந்த்தால் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த வீட்டிற்கு வந்து சேர்த்த பிறகு, கேட்ட எல்லா பாடல்களையும் ஒன்றுமே இல்லாமல் செய்தது கானின் அந்தப் பாடல். பொதுவாகவே மெதுவான குரலில் பாட விருப்பப்படும் அவர், அன்று தேர்ந்தெடுத்ததே உச்ச ஸ்தாயியில் பாடும் ஒரு பாட்டு என்ற விஷயம் பிரசாந்திற்கு ஆச்சரியத்தைத் தந்தது.
கோபத்தைக் கைவிட்ட டைகரின் விரல்கள், வெளியே பெய்து கொண்டிருந்த மழையின் தாளத்தைத் தோல்வியடையச் செய்து, இரவுக்குள் ஊடுருவிச் சென்று வெடித்துச் சிதறின. இடையில் அவ்வப்போது வெளிப்பட்ட பார்வையற்ற மனிதரின் பாராட்டும் நடவடிக்கைகளில் விருப்பமும், உண்மைத் தனமும் தெரிந்தன. பாடல் பாதியை அந்தபோது, கதவுக்கு அப்பால் ஒரு ‘ஜல் ஜல்’ சத்தம் கேட்டது.
அங்கு ஊர்மிளா பாதி திறந்திருந்த கதவில் இடப்பட்டிருந்த திரைச்சீலைக்கு அருகில் வந்து நின்று கொண்டு கான் சாஹிப்பின் பாடலில் மட்டுமே தன் கண்களைப் பதித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவள் காஃபி ப்ரவுன் நிறத்தில் ஒரு புதிய புடவையை அணிந்திருந்தாள். அந்தப் புடவையில் ஊர்மிளாவின் அழகு முன்பு இருந்ததைவிடக் கூடியிருப்பதைப்போல இருந்தது. அவளிடமிருந்து கண்களை எடுக்க, எவ்வளவு முயற்சித்தும் பிரசாந்த்தால் முடியவில்லை.
ஷாநவாஸ்கான் ஊர்மிளா வந்திருப்பதைத் தெரிந்திருக்கவில்லை. மற்றவர்களும் அவள் வந்ததில் அசாதாரணமாக எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. டாக்டர் பிள்ளைக்கு மட்டும் சிறிய ஒரு பதைபதைப்புத் தோன்றியது.
பாடல் முடிந்து, கான் தன் கண்களைத் திறந்தார். பாராட்டுக்களின் ஒளிச் சிதறல்களில் முழுமையாக மூழ்கி முடித்த பிறகே, அவர் கதவுக்கு அப்பால் நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தார்.
கையில் எடுத்த கண்ணாடிக் குவளையை அவர் அடுத்த நிமிடம் மேஜைமீது வைத்தார். கண்டுபிடிக்கப்பட்ட திருட்டுக் குழந்தையின் பதைபதைப்புடன் அவர் என்னவோ கூற முயன்றார்.
ஆனால், அதற்காகக் காத்திருக்காமல் ஊர்மிளா அறைக்குள் நுழைந்து வந்தாள்.
வந்தவுடன் அவள் கான் சாஹிப்பின் முன்னால் முழங்கலிட்டு அமர்ந்து, அவருடைய கால்களில் விழுந்து வணங்கினாள்.
அதிகமாகத் திகைத்துப்போனது கான் சாஹிப்தான். என்ன கூற வேண்டுமென்றோ, என்ன செய்ய வேண்டுமென்றோ தெரியாமல் திகிலடைந்து போய்விட்டார் அவர்.
நிமிர்ந்து எழுந்த ஊர்மிளா அங்கிருந்த யாரையும் பார்க்காமல் வந்த வழியே திரும்பிப் போனாள். கான் சாஹிப்பின் முகத்தைப் பார்க்காமல் இருக்க, அவள் மிகவும் சிரமப்படுவது தெரிந்தது.
எதுவுமே நடக்காததைப்போல, கான் தன்னுடைய கண்ணாடிக் குவளையை எடுத்தார். அவருடைய விரல்கள், சித்தாரின்மீது வெறுமனே வெறுமனே தட்டி ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. மெத்தை விரிப்பில் இருந்த நதியையும் படகுகளையும் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய கண்களில் ஈரம் படர ஆரம்பிப்பதை பிரசாந்த் பார்த்தான்.
பார்வை தெரியாத மனிதர் மட்டும் தாழ்வான குரலில் யாரிடமோ விசாரிப்பதைப் போல கேட்டார்: “யார்? என்ன?”