குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
சுகன்யா வடிவமைத்த அந்தத் தோட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது துர்காவிற்கும் பின்டோவிற்கும்தான். அது அவர்களுடைய தனிப்பட்ட உலகமாக மாறியிருக்கிறது என்பதை சிறிது பொறாமையுடன் பிரசாந்த் புரிந்து கொண்டான். சிறிதும் நினைக்காமல் இலைகளுக்கு அப்பாலிருந்து கேட்கும் ஒரு சிரிப்புச் சத்தம்... மாலை நேரத்தின் சிவப்பிலிருந்து நடந்து வரும் இரண்டு நிழல்கள்... மீன் குளத்தின் படிகளில் பனி விழுவதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கும் இரண்டு பேரின் பின் பகுதிகள், கிட்டாரின் மெல்லிய இசைப் பின்புலத்தில் இளம்பெண்ணின் அறைக்கு வெளியே மிகந்து வந்த ஆண் குரலில் மறைந்து கிடந்த தாகம்...
துர்கா அவனிடம் முழுமையாக விழுந்து கிடக்கிறாள் என்பதை தெளிவாக தெரிந்தது.
அதைப் பார்த்தப்போது பிரசாந்திற்கு ஞாபகத்தில் வந்தது- குரு ஸ்ரீஜோக்குடன் ஊர்மிளா கொண்டிருந்த உறவுதான்.
கானின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றவும் பிரசாந்திற்குத் தெரியவில்லை. தன் மகளுடைய திருமணத்தை முடிந்தவரையில் மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்பது ஒரு பிடிவாதமாகவே அவரிடம் மாறிவிட்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. இடையில் சில நேரங்களில் பறந்து வரும் கார்களில் வந்து இறங்கக்கூடிய மணமகனின் உறவினர்களை அவர் மலர்ந்த சிரிப்புடன் வரவேற்றார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் சம்பந்தமாக நிறையபேர் ஒவ்வொரு நாளும் அவரைப் பார்க்க வந்து கொண்டிருந்தார்கள்.திருமணத்திற்குப் பிறகு நடக்கப் போகிற வரவேற்பு மாளிகையிலேயே நடப்பதால், அதோடு தொடர்புடைய சில புதிய பணியாட்களை இடைவெளிகளிலும், பிற இடங்களிலும் பிரசாந்த் பார்த்தான். கொஞ்சம் ஊனமாகி விட்டிருந்த வலது காலுடன் வீட்டிலும், வீட்டைச் சுற்றி இருந்த இடங்களிலும் கான் எப்போதும் ஓடி நடமாடிக்கொண்டிருந்தார். எங்காவது ஒரு பலப்ஃப்யூஸ் ஆனால், அதை முதலில் கண்டுபிடிப்பவர் அவராகத்தான் இருக்கும்.
ஜூலியாவிற்கு ஸாப் தரும் முக்கியத்துவத்திற்கான காரணம் என்ன என்பதை நாகராஜ் புரிந்து கொண்டான். என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும். அவன் அவளை மேலும் அதிக கவனம் செலுத்திப் பார்த்துகொள்வதும், கொஞ்சுவதுமாக இருந்தான். நடக்கப் போகும் திருமணத்துடன் ஜூலியாவிற்கு முக்கியமான ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை அவன் நினைத்து வைத்திருக்கிறான் என்ற விஷயம் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது பிரசாந்திற்குத் தெரிந்தது. கான் சாஹிப் தன் மருமகனுக்குக் கொடுக்கப்போகிற திருமணப் பரிசே ஜூலியாதான் என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டுருந்தான். பல தடவை அவன் அந்த விஷயத்தைப்பற்றி சாராவிடம் விசாரித்தும், தனக்கு, அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூற, அவனிடமிருந்து விலகிப் பேய்க் கொண்டிருந்தாள். அவள். பிரசாந்த் அவன் மனதில் இருப்பதை மாற்ற முயலவில்லை.
பின்டோ வந்து சேர்ந்த பிறகு, தந்தையையும் தாயையும் துர்கா சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைந்தன. தாயும் மகளும் சந்திக்கும் நிமிடங்களில், அழுத்தப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சி என்பதைப்போல உரசலின் நெருப்புகள் சிதறிக் கொண்டிருந்தன. கானின் அறையில் இயல், இசைக் கூட்டங்களில் துர்கா பங்கு பெற்றாள். அவளுடன் பின்டோவும். புகழ்பெற்ற பாடகன் என்பதைக் கேள்விப்பட்டிருந்தாலும், அந்த இளைஞனாலும், அந்த இளைஞனுடைய பாடலைக் கேட்க, கான் சாஹிப் உட்பட அங்கிருந்த யாருக்கும் விருப்பமில்லை.
அப்படிப்பட்ட ஒரு இரவு முடிந்து திரும்பும்போதுதான் ஜப்போய் விபத்தில் சிக்கிக் கொண்டார். ஜீப் இறங்கிப் போய்க் கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை விட்டு விலகி பள்ளத்தில் போய் விழுந்தது.
அந்தச் செய்தி தெரிந்த இரவு நேரத்திலேயே கான் சாஹிப்புடன் பிரசாந்ததும் சேர்ந்து மருத்துவமனைக்குச் சென்று ஜப்போயைப் பார்த்தார்கள். அவருடைய இளம் வயதைக் கொண்ட மனைவியும் சிறு குழந்தைகளும் வேறு சில உறவினர்களும் அடி விழுந்தவர்களைப்போல திகைத்துப்போய் நின்றிருந்தார்கள்.
ஜப்போய்க்கு நினைவு திரும்பவில்லை. தலையில் பட்ட காயம் சற்று பெரியது என்று டாக்டர்கள் மூலம் தெரிந்தது. உடனே எதுவும் நடந்துவிடும் என்று கூறிவிடுவதற்கில்லை. எனினும், பழைய நிலைமைக்குத திரும்ப மாதங்களோ, வருடங்களோ ஆகலாம். ஒருவேளை இதே படுத்த படுக்கையாகக் கிடக்கும் நிலை தொடர்ந்தாலும் தொடரலாம்.
அதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் கவலையாக இருந்தது.
திருமண நாளன்று இரவு நேரத்தில் ஒரு ‘கலக்கு கலக்க ஜப்போய் இருக்க மாட்டார். வாசலில் நடு இரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் இனிமேல் கேட்காது.
அந்தச் சமயத்தில் வீசும் காற்றுடன் சேர்ந்து ஒளிக்கும் ஜப்போயின் ஆர்ப்பாட்டங்கள் அன்று கெட்ட கனவுகளுக்கு மத்தியிலும் பிரசாந்த்தை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன.
பொழுது புலரும் நேரத்தில்தான் அவன் சற்று கண்ணயர்ந்தான். அதனால் வெயில் வந்த பிறகுதான் அவன் எழவே செய்தான்.
எழுந்தவுடன் முதலில் அவன் காதில் விழுந்த செய்தி துர்காவையும் பின்டோவையும் காணவில்லை என்பதுதான்.
14
துர்கா தன்னுடைய நண்பனுடன் ஓடிப்போன விஷயத்தை இடைவெளிகளில் ‘குசுகுசு’வென்று பேசிக் கொள்வதிலிருந்துதான் அவன் தெரிந்து கொண்டான். யாருக்கும் அந்த விஷயத்தை உரத்த குரலில் கூற தைரியம் இல்லை.
அவர்களின் இரண்டு அறைகளும் திறந்து கிடந்தன. அவர்கள் கொண்டு வந்திருந்த சிறு பொருட்களும் பேக்குகளும் அறையில் இல்லை.
செய்தியைக் கேள்விப்பட்டு போளம்மா அங்கு வந்தாள். வேறு யாருமே இல்லாமல் பிரசாந்த் மட்டும் தனியாக அங்கு இருப்பதைப் பார்த்தவுடன், அவள் ஒரு வெற்றி பெற்ற பெண்ணைப்போல கேட்டாள்: “நான் என்ன சொன்னேன்?”
மதிய நேரம் கடந்த பிறகுதான் சாராவிடமிருந்து அதைப்பற்றிய பேச்சு வந்தது.
கான் சாஹிப் மொத்தத்தில் நிலை குலைந்து போய்விட்டார் என்ற விஷயத்தை அவளிடமிருந்து பிரசாந்த் தெரிந்து கொண்டான். வெளியே எதுவுமே நடக்கவில்லை என்பது மாதிரி காட்டிக் கொண்டாலும், மதிய வேளையில் அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை என்று சாரா சொன்னாள். “அவங்க எங்கே போனாங்கன்னு தேடிப் பார்க்க வேண்டாமா? என்று டாக்டர் பிள்ளை கேட்டதற்கு, “எதற்கு? என்றொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் கான்.
ஊர்மிளாவையும் வெளியே பார்க்க முடியவில்லை. அவள் ஒரு நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதை மட்டும்தான் அவன் தெரிந்து கொண்டான்.
அன்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை தூறிக் கொண்டிருந்தது. இடையில் கொஞ்ச நேரம் பெய்யாமல் இருக்கும். இலைகளில் பிரகாசத்தைப் பார்த்தவுடன் மீண்டும் பெய்ய ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்ட ஒரு ஜாதி மழை!
மழையை நம்ப முடியாத காரணத்தால் அன்று ஜூலியாவை வெளியே கொண்டு போகவில்லை. தினந்தோறும் நடக்கக்கூடிய செயல் நடக்காமல் போனதால் உண்டான கோபத்தில் பாதி திறந்திருந்த கதவுக்கு அப்பால், கள்ள மழையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த அவருடைய கண்களில் யார் மீதோ உள்ள கோபம் தெரிந்தது.