குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
ஒருமுறை இந்தியாவிற்கு இசை நிகழ்ச்சிகளுக்காகச் சென்றிருந்த அவள் உடனடியாக திரும்பி வரவில்லை. இரண்டு மாதங்ளுக்குப் பிறகு ஷானவாஸ்கான் ஊருக்குச் சென்று, கல்கத்தாவிலிருந்த குரு ஸ்ரீஜோக்கின் பாடசாலையிலிருந்து அவளை அழைத்து வரவேண்டிய தாகிவிட்டது.
அறுபது வயதைத் தாண்டியவாறாக இருந்தாலும், குரு ஸ்ரீஜோக் நல்ல உடல் நிலையுடன் இருந்தார். இசையைத் தாண்டி வேறு எந்தவொரு வாழ்க்கையும் இல்லாத அவரைப் பொறுத்தவரையில், இசைக்கலையின் பொக்கிஷமாக இருந்தாள் ஊர்மிளா கான்.
கானின் வியாபார உலகத்தில் பிரச்சினைகள் உண்டாக ஆரம்பித்தன. சரியான மனநிலை இல்லாமல் அவர் எடுத்த முடிவுகள் பலவும் கம்பெனிக்குப் பெரிய அளவில் இழப்புகளை உண்டாக்கின.
இதற்கிடையில் அவருடைய திருமண வாழ்க்கையில் முழுமையாக இனிமை குறைந்து விட்டிருந்தது.மனைவிக்கும் கணவருக்குமிடையே நடக்கும் உரையாடல்களில் உக்கிரம் அதிகமாக வெளிப்பட்டது. எவ்வளவு சிறிய காரணத்தைக் காட்டியும், ஒருவரையொருவர் விட்டு விலகுவதற்கு இருவருமே தயாராக இருந்தார்கள்.
வீட்டிற்குள்ளிருக்கும் இறுக்கமான சூழ்நிலை சிறிதும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக துர்காவை ஆரம்பத்திலேயே பம்பாயில் தங்கிப் படிக்கும்படி செய்துவிட்டார் கான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் மகள்மீது அக்கறை செலுத்தும் அளவிற்கு அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லையே!
பொருளாதார சூழ்நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் விஷயத்தைத் தெரிந்த பிறகும், ஊர்மிளாவின் நடவடிக்கைகளில் எந்தவித மாறுதல்களும் உண்டாகவில்லை. அந்த விஷயம் அவரை மேலும் கோபம் கொள்ளச் செய்தது.
ஒரு குதிரைப் பந்தயத்தில் ஊர்மிளாவிற்குப் பெரிய ஒரு தொகை கிடைத்தது. வேறு யாரிடமும் அதைப்பற்றிக் கூறாமல் அந்தப் பணத்தைக் கொண்டு ஊர்மிளா வேறொரு சம்பாத்தியத்தை உண்டாக்கினாள்.
நான்கு லட்ச ரூபாய் விலை கொண்ட ஒரு பெண் குதிரை.
அதைத் தெரிந்துகொண்ட நாளன்று கானுக்கு வெறியே வந்துவிட்டது. கம்பெனிக்கு நேர்ந்திருக்கும் புதிய ஒரு இழப்பைக் கூறி கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு முன்னால் அவள் அந்தக் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தியப்போது, கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி அவர் சத்தம் போட்டார்.
மதுவும் வாய் வார்த்தைகளும் அதிகமான அந்த இரவு வேளையில் அவர் ஊர்மிளாவை கணக்கே இல்லாமல் தண்டித்தார். பதின்மூன்று வருட திருமண வாழ்க்கைக்கு மத்தியில் அன்றுதான் முதல் தடவையாக அவர் தன் மனைவியை அடித்தார்.
மறுநாள் ஊர்மிளா அவரிடம் விடைகூட பெறாமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினாள். இந்தியாவிற்கு- குரு இருக்கும் இடத்திற்கு...
மிகவும் வற்புறுத்தி எழுதிய பிறகுதான் ஊர்மிளா இப்போது பள்ளத்தாக்குகளுக்கு வருவதற்கு சம்மதித்ததாக கான் சொன்னார்.
துர்காவின் திருமண விஷயம்தான் இப்போது அவர்களைத் திரும்பவும் ஒன்று சேர்த்திருக்கிறது.
தந்தையும் தாயும் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கும் ஒரு சூழ்நிலை உண்டாகும்போது மட்டுமே தான் வீட்டிற்கு வருவதோ, திருமணத்திற்குச் சம்மதிப்பதோ நடக்கும் என்ற துர்காவின் பிடிவாதத்திற்கு முன்னால் அந்தப் பெண் கொஞ்சம் குனிய வேண்டிய நிலை உண்டாகிவிட்டது.
அந்தத் திருமணத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காகதான் இப்போது மாளிகையை அழகுபடுத்தும் முடிவை கான் எடுத்தார். அவருக்கு இருப்பது ஒரே மகள். ஒருவேளை அவருடைய வாழ்க்கையில் இனி எஞ்சியிருக்கும் ஒரேயொரு கொண்டாட்டமே அவளுடைய திருமணமாகக்கூட இருக்கலாம்.
“திருமணம் முடிந்த பிறகும், மிஸஸ் கான் இங்கேயே இருப்பாங்களா?”
“தெரியாது...”- அதைக் கூறும்போது ஷாநவாஸ்கான் அமைதியற்ற நிலையில் இருந்தார்.
1.
எல்லா தயார் நிலைகளுடனும் சுகன்யா டேனியல் அங்கு வந்து சேர்ந்தாள்.
தொலைபேசி வழியாக பல நேரங்களில் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்த விஷயங்களை வைத்துக் கொண்டு அவள் அந்த மாளிகையைப்பற்றி ஒரு உருவத்தைத் தன் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்தாள். வீட்டை நேரில் பார்த்தப்போது அவள் முதலில் சொன்னதே-தான் கற்பனை பண்ணி வைத்திருந்த ஓவியத்திற்கும் மாளிகையின் உண்மையான தோற்றத்திற்குமிடையே இருந்த ஆச்சரியமான ஒற்றுமையைத்தான்.
வெறுமனே நேரத்தை வீண் செய்யும் பழக்கம் சிறிதும் இல்லாத அவள், வந்து சேர்ந்த நாளன்றே தன்னுடைய வேலைகளைத் தொடங்கிவிட்டாள். நீளமான வராந்தாவிற்கு எதிரில் வீட்டிலிருந்து மூன்றடிகள் விட்டு, வெயிலும் நீரும் கிடைப்பது மாதிரி, ஒரு நீளமான ஸ்லாப்பை உருவாக்க வேண்டும் என்று அவள் பிராசாந்திற்கு எழுத்துப் பூர்வமாகச் சொன்னாள். அந்த மாதிரியான விஷயங்கள் எதிலும் அவளிடம் சிறிதுகூட விளையாட்டுத்தனம் இருக்காது. சிறிதுகூட குறைபாடு இருக்ககூடாது என்பாள். தான் கேட்பதைச் செய்து கொடுக்கவில்லையென்றால், பிரச்சினையாகி விடும். சில நேரங்களில் வேலையை விட்டுவிட்டுக்கூட அவள் போய் விடுவாள்.
தேவதாசிக்குக் கிடைத்த கட்டிடத்தில் இருக்கும் பாரில் உட்கார்ந்து பிரசாந்த் அவளிடம் ஊர்மிளாவைப் பற்றிக் கூறினான். ஒரு ஆண் என்ற நிலையில் அந்த பனிக் குதிரையிடம் பழக தனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும்; அதனால் சுகன்யா அந்த வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு சிறிய வருத்தத்துடன் அவன் அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.பொதுவாகவே மற்றவர்களின் சொந்த விஷயங்களுக்குள் எட்டிப் பார்ப்பதில் தயக்கம் காட்டக்கூடிய அவள் அந்த வேலையை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டபோது, அவனுக்கு நிம்மதி தோன்றியது.
“அவளைப் பற்றி அப்படி என்ன அக்கறை?” - சுகன்யா கேட்டாள்: “என்னை ஒண்ணும் பிம்ப் ஆக்கலையே”
“உன்னை எப்படி நான் பிம்ப் ஆக்க முடியும்?”- பனிக்கட்டித் துண்டுகளில் ஒட்டியிருந்த மதுத் துளிகளை நக்கிகொண்டே அவன் சொன்னான்: “ஆனால், அவளைப் பற்றி எனக்கு ஆர்வம் இல்லாமல் இல்லை. அவளுடைய காலை நேர சவாரிகளின்போது அசையும் ட்ராக் ஸூட் என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்யாம விட்டிருந்தா, இவ்வளவு சீக்கிரமா உன்னை நான் வரவச்சிருக்கவே மாட்டேன்.”
“வளைக்கப் பாருங்க” -சுகன்யா சென்னாள்: “நீங்க அந்த அழகான பெண்ணை வளைக்கிற நேரத்துல நான் ஜூலியாவை வசீகரிக்கப் பார்ப்பேன். எனக்கு இப்போ காதல் அவள்மீதுதான்.”
யாருடனாவது, எதோடாவது எப்போதும் புதிதாகக் காதல் தோன்றிக் கொண்டிருக்கவில்லையென்றால், வாழ்க்கையே வீண் என்று ஆகிவிடும் என்ற தன்னுடைய சொந்த தத்துவத்தை, அன்று இரவு நேரத்தில் நீண்ட நேரம் கடந்த பிறகு அவள் மீண்டும் ஒருமுறை திரும்பச் சொன்னாள்.
ஜூலியா எதிர்பார்த்திருந்தைவிட வேகமாக சுகன்யாவிற்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். அவளைப் பற்றிய விஷயங்களை நாகராஜைக் கைக்குள் போட்டு அவள் தெரிந்து கொண்டாள். அவளுடைய தலையிலிருந்த ரோமங்களில் இருந்த வைக்கோல் துண்டுகளைப் பிரித்து எடுப்பதற்கும், தீவனம் கொடுப்பதற்கும், சொறிந்து விட்டு சுகம் உண்டாக்குவதற்கும் சுகன்யாவிற்கு வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் கிடைத்தது. ஒருநாள் காலையில் அதிகாலை பயிற்சிக்காகச் சென்ற ஜூலியாவின்மீது சுகன்யா ஏறி உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, பிரசாந்த் வியப்பில் உறைந்து விட்டான். நாகராஜுக்கு போரடிக்காமல் இருப்பதற்கு சுகன்யா அங்கு வந்திருப்பது மிகவும் உதவியாக இருப்பதையும் அவன் உணர்ந்தான்.