குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6452
மீண்டும் சுத்தமாகக் கால்களைக் கழுவித் துடைத்துவிட்ட பிறகுதான் அவளைத் திரும்பவும் அவன் அவளுடைய அறைக்குள் கொண்டுபோய் நிறுத்துவான்.
“காலில்தான் சார் குதிரையின் உயிரே இருக்கு” - ஜூலியாவின் குளம்பின் அடியிலிருந்து புற்களையும் தூசியையும் குத்தி எடுத்து சுத்தப்படுத்துவதற்கு மத்தியில் நாகராஜ் சொன்னான்: “ஒரு பழமொழியைக் கேட்டிருக்கீங்களா! கால் இல்லைன்னா, குதிரையே இல்லை.”
பழைய ஜாக்கியாக (பந்தய குதிரைக்காரன்) இருந்தவன் நாகராஜ். இப்போது அவனுக்கு ஐம்பது வயது கடந்துவிட்டது. பருமனாகிவிட்டதால், எடை அதிகமாகிவிட்டது. முதுக்கெலும்பில் உண்டான ஒரு முறிவு அவனைத் தரையில் உட்கார வைத்துவிட்டது. தான் பங்கு பெறாத குதிரைப் பந்தயங்கள் உலகத்தில் இல்லை என்று அவன் தற்பெருமையுடன் கூறிக் கொள்வான். அவன் பெயர்மீது, லட்சங்களையும் கோடிகளையும் பந்தயம் வைத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. நாகராஜ் அந்தத் தொழிலை விட்டு வெளியேறியப்போது, ஆரவாரம் செய்த பல்லாயிரக்கணக் குரல்களை நினைத்துப் பார்த்தபோது, அவனுடைய கண்களில் நீர் நிறைந்து விட்டது.
ஒரு இரவு வேளையில் பிரசாந்த் நாகராஜை தன்னுடைய அறைக்கு வரச் செய்து உபசரித்தான். நாகராஜ் ரம் மட்டுமே குடிப்பான்.
கடந்துபோன சாதனைகளைப் பற்றிய கதைகளை அவன் சுவையும் சுவாரசியமும் சேர்த்துக் கூறுவதை பிரசாந்த் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான். ஒருமுறை ஷார்ஜாவில் நடைபெற்ற ஒரு போட்டிக்குப் போய்விட்டு, லெபனானைச் சேர்ந்த ஒரு ராஜகுமாரியின் படுக்கை அறையில் தூங்கக் கிடைத்த வாய்ப்பை அவன் மிகவும் அழகாக விவரித்தபோது, மது அருந்தாத ஆளாக இருந்தாலும் தாமு உரத்த குரலில் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். தொடர்ந்து வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு கட்டம் எல்லா ஜாக்கிகளின் விஷயத்திலும் தவிர்க்க முடியாத ஒன்று என்று கூறி, அவன் சமாதானப்படுத்தி கொண்டான்.
பழைய அந்த சூப்பர் ஸ்டார் குதிரைப் பாய்ச்சல்களுக்கு மத்தியில் திருமணம் செய்வதை மறந்து விட்டிருந்தான்.
8
ஊர்மிளா வந்து சேர்ந்த நாளன்று, வெளியே சிறிய அளவில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. வேகமாக வீசிய மலைக் காற்றில் குளிரின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. முற்றத்திலும் சாலையிலும் வெள்ளை மேகங்கள் திரண்டு நின்றிருந்தன.
வாடகைக் காரின் ஓட்டுநர் முகத்தைப் பார்த்தபோது, அன்று பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்ததைப்போல இருந்தது.
காரிலிருந்து பெரிய சூட்கேஸையும் சிறிய பேக்கையும் எடுத்துக்கொண்டு ஊர்மிளாவே இறங்கினாள். கார் டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, நான்கு பக்கங்களிலும் பார்த்தப்போதுதான் பிரசாந்த் அவளுடைய அவளுடைய முகத்தையே சரியாகப் பார்த்தான். முதலில் கண்களில் பட்டது அவளுடைய எடுப்பான மூக்கு நுனியிலும், விரிந்த கண்களிலும் தெரிந்த அதிகார தொனிதான்.
ஊர்மிளா புடவைக்கு மேலே ஒரு சிவப்பு நிறக் கம்பளி சால்வையை அலட்சியமாக இழுத்துப் போர்த்தியிருந்தாள். அந்தச் சிவப்பின் பரதிபலிப்பு அவளுடைய முகத்தை மேலும் சிவப்பாக்கியது. அளவெடுத்ததைப்போல் அமைந்த உடலும், ஈர்க்ககூடிய விதத்தில் இருந்த அசைவுகளும் சேர்ந்த வார்த்தைகளால் விவரித்துக் கூறமுடியாத ஒரு அசாதாரணத் தன்மையை அந்தப் பெண்ணிடம் உண்டாக்கியிருப்பதை பிரசாந்த் கண்டான்.
அவளுக்கு வயது நாற்பதுக்குக் கீழேதான் இருக்கும். அதுகூட பதினெட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பதைத் தெரிந்திருந்தால் போட்ட மதிப்புதான். வயது முப்பது என்று கூறினால்கூட யாரும் நம்பத்தான் செய்வார்கள்.
கேட்டிற்கு வெளியே ஒரு இலை பறந்து வந்தால்கூட முதலில் அதைத் தெரிந்து கொள்பவள் சாராதான். அவள் ஓடி வந்தாள்.
“குட் ஆஃப்டர் நூன் மேடம்.”
“குட் ஆஃப்டர் நூன் ”- ஊர்மிளா திரும்பச் சொன்னாள்: “நீ எப்படி இருக்கே சாரா?”
அவளுடைய குரலிலும் ஒரு பக்கமாக சாய்ந்திருந்த பார்வையிலும் அதிகாரத்தின் சாயம் தெரிந்தது.
“நல்லா இருக்கேன் மேடம்.”
சாராவின் அசைவுகளில் பணிவு இருந்தது.
“மேடம் உங்க அறை அந்தப் பக்கம் இருக்கு. வாங்க! பெட்டியையும் பேக்கையும் நான் எடுத்துக்கொண்டு வர்றேன்.”
சாரா காட்டிய பாதையில் நடந்து போவதற்கு மத்தியில் ஊர்மிளாவின் கண்கள் ஒரு நிமிடம் பிரசாந்திற்கு நேராகப் பாய்ந்து விழுந்தன. கொஞ்சம் புன்னகைக்க வேண்டும் என்றும்; தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவன் நினைத்தான். ஆனால், அதற்கெல்லாம் சிறிதும் இடம் கொடுக்காமல் ஊர்மிளா வராந்தாவிலிருந்த உயரமான தூண்களைத் தாண்டியவாறு நடந்து சென்று மறைந்தும் விட்டாள்.
நடையின் வேகத்தை கவனிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. அவளுடன் சேர்ந்து செல்வதற்காக சாரா சிறிய அளவில் தாவித் தாவிப் போய்க் கொண்டிருந்தாள்.
அவள் அப்படிப் போய் மறைந்து, என்ன காரணத்தாலோ அந்த நேரத்தில் பிரசாந்த்திற்கு தேவையில்லாத ஒன்று என்பது மாதிரி பட்டது. வேறு ஏதோ வேலை இருக்கிறது என்பது மாதிரி காட்டிக் கொண்டு, மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்த வாசலுக்குச் சென்று, வீட்டைச் சுற்றி அவன் வெறுமனே நடந்தான்.
ஊர்மிளா அவளுடைய அறையின் முன்பகுதியில் சாராவிடம் என்னவோ பேசியவாறு நின்று கொண்டிருந்தாள். தூரத்திலிருந்து அசைவுகளைப் பார்த்தப்போது அது வெறும் குசலம் விசாரிப்புதான் என்பதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. எதையோ செய்யச் சொல்லியோ, கட்டளை பிறப்பித்தோ... இப்படி என்னவோ அங்கு நடந்து கொண்டிருந்தது. ஆணை பிறப்பிக்கும் சக்தி நிறைந்த அவளுடைய அசைவுகளுக்கு முன்னால் சாரா முற்றிலும் சிறிதாகி விட்டதைப்போல் தோன்றினாள்.
சாராவை ஏதோ வேலையைச் செய்யும்படிக் கூறி அனுப்பவிட்ட ஊர்மிளா மெதுவாகப் புல்வெளியை நோக்கி நடந்தாள். அவளுடைய கண்கள் தூரத்தில் தெரிந்த பள்ளத்தாக்குகளையே பார்த்தன. மிகவும் பழக்கமான ஒரு காட்சி நீண்ட காலத்திற்குப் பிறகு திரும்பவும் கண்ணில் தெரிந்ததை வெளிப்படுத்தும் ஒளி அவளுடைய முகத்தில் சிறிது சிறிதாக மலர்வதை பிரசாந்த் பார்த்தான். அறைச் சுவருடன் ஒட்டி நின்றுகொண்டு அவள் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தப்போது, பிரசாந்த் வேறு எங்கோ பார்வையை மாற்றிக்கொண்டு ஒரு மரத்திற்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பப் பார்த்தபோது, அங்கு ஊர்மிளா இல்லை. சற்று முன்பு திறந்திருந்த அறையின் கதவு மூடப்பட்டிருந்தது.
பிரசாந்த்திற்கு குற்ற உணர்ச்சி உண்டானது. தன்னைப் பார்த்துவிட்ட காரணத்தால் ஒருவேளை அவள் கதவை அடைத்திருப்பாளோ என்று அவன் நினைத்தான். அப்படியென்றால் நிலைமை நல்லது இல்லைதான். அவளுடைய அசைவுகளை மோப்பம் பிடித்துக்கொண்டு நடந்து திரியும் தன்னுடைய போக்கிலிருந்து அவன் தன்னைதானே விலக்கிக் கொண்டான். இனி அவள் இந்தப்பக்கம் பேசிக் கொண்டு வருவதுவரை அந்தப்பக்கமே பார்க்கக்கூடாது என்று அவன் முடிவெடுத்தான்.