குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6452
ஊர்மிளா கானின் சொந்த உலகத்தில் குற்றம் கண்டுபிடிக்கவும் சுகன்யா முயன்று கொண்டிருந்தாள். ஆனால், அது அந்த அளவிற்கு எளிதான ஒரு விஷயமாக இல்லை. சரிசமமாக எல்லோரிடமும் பழகுவது என்பது அந்தப் பெண்ணுக்கு அன்னியமான ஒரு விஷயமாக இருந்தது. எல்லாவற்றிலும் இருந்தும், எல்லோரிடமிருந்தும் தன்னை விலக்கி மூடிக்கொண்ருக்கும் குணத்தைக் கொண்டிருக்கும் அந்தப் பெண், கோட்டையைப் போன்றவள் என்பதை சுகன்யா புரிந்து கொண்டாள். காலை நேரத்தில் வாக்கிங் போகும்போது உடன் சென்ற அவளிடம் முதல் நாளன்றே வெளிப்படையாகக் கூறிவிட்டாள்- தனக்குத் தனியாக நடந்து செல்வதில்தான் விருப்பம் இருக்கிறது என்று.
ஒருநாள் மதிய நேரத்தில் ஊர்மிளாவின் அறை இருந்த பக்கத்திலிருந்து உரத்த குரலில் வாக்குவாதம் கேட்டது.
பிரசாந்த் சென்று பார்த்தபோது, மிஸஸ் காணுக்கும் சுகன்யாவுக்குமிடையே அது நடந்து கொண்டிருந்தது.
மிஸஸ் கானின் அறையை மாற்றிப் புதுப்பித்தே ஆகவேண்டும் என்றாள் சுகன்யா. அதற்குத் தேவையே இல்லை என்றாள் இல்லத்தரசி. அது தன்னுடைய தொழில் என்றும்: அதில் தலையிடுவதற்கு உரிமையாளருக்கு அதிகாரமே இல்லை என்றும் சுகன்யா ஒரேயடியாகக் கூறிவிட்டாள்.
“இந்த விஷயத்தில் உங்களின் விருப்பத்தையும் விருப்பமின்மையையும் பார்க்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லை மிஸஸ் கான்!” - சுகன்யா ஒரு புல்லைப் போல நினைத்துச் சொன்னாள்: “எங்களுடைய நிறுவனத்திற்கும் இந்தக் கட்டிடத்தின் உரிமையாளருக்குமிடையே போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நான் இங்கே வந்திருக்கேன். இந்த வீடும், இதைச் சுற்றியிருக்கும் இடங்களும் இப்போது முழுமையாக எங்களின் அதிகார எல்லைக்குள் இருக்கு. இந்தக் கட்டிடத்தின் முக்கியமான ஒரு அறையிலிருந்து தரைப் பகுதியிலிருக்கும் அறையில் மூலை வரை நான் சரி பண்ணவேண்டி இருக்கு. அதற்குத்தான் கம்பெனியிலிருந்து நான் சம்பளம் வாங்குறேன்.”
அவளுடைய அச்சமின்மைக்கு முன்னால், ஊர்மிளா கான் இறுதியில் தோல்வியே அடைந்தாள்- ஒன்றிரண்டு நிபந்தனைகளின் பேரில்.
ஒவ்வொரு நாளும் பூஜை நடக்கும் இரண்டு வேளைகளிலும், சாதகம் செய்யும் இரண்டு மணி நேரமும் அறைக்குள் எந்தவொரு வேலையும் நடக்கக் கூடாது. பிறகு... முடிந்தவரையில் மிகவும் அவசியமான ஒன்றோ இரண்டோ பணியாட்களை மட்டுமே அறைக்குள் அணுமதிக்க முடியும்.
அந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் சுகன்யா சம்மதித்தாள்.
“அதிகமாக யாரும் நுழையாம நான் பார்த்துக்குறேன் மிஸஸ் கான்” - சுகன்யா தன்னுடைய வசீகரமான புன்னகையைத் தவழவிட்டாள். தொடர்ந்து அவள் சொன்னாள்: “முடிந்த வரையில் நான் மட்டுமே அறைக்குள் இருப்பேன். நீங்க ஒரு கை உதவ முடியாமல் இருக்கும்போது மட்டுமே நான் வேறு யாரையாவது அழைக்க வேண்டியிருக்கும் என்ன, போதுமா?”
சுகன்யா சொன்னதைப் போலவே செய்தாள்.
அதைத் தொடர்ந்து பெரும்பாலான நேரமும் மிஸ். சுகன்யா டேனியல், ஊர்மிளாவின் அறைக்குள்ளேயே இருந்தாள். தன்னுடைய பழக்கங்களையும் திறமைகளையும் அவள் ஒவ்வொன்றாக வெளிப் படுத்துவதை ஊர்மிளா மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தாள். அதிகமாக எதுவும் பேசாமல் தன்னுடைய பணியில் மட்டுமே மூழ்கியிருக்கும் அந்த இளம்பெண்ணின் சுறுசுறுப்பும் திறமையும் ஊர்மிளாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. முன்கூட்டியே உறுதியாகக் கூறியதைப் போலவே அத்தியாவசிய தேவைக்கு கையாளாக இருப்பதற்கு அவள் தயங்கவில்லை. ஒருநாள் தம்புராவை எடுத்து சாதகம் செய்ய இருந்த அவள் சுகன்யாவை அறைக்குள் இருப்பதற்கு அனுமதித்ததைப் பார்த்தபோது, பிரசாந்த்திற்கு மகிழ்ச்சி உண்டானது.
“பாருங்க... நாளைக்கு அவங்க என்னோடு பேசுவாங்க”- மாலை நேரத்தில் பாரில் அமர்ந்து கொண்டு மூன்றாவது பெக் பிராந்தியைப் பருகும்போது சுகன்யா பெருமையுடன் சொன்னாள்.
அது வெறும் பெருமைப் பேச்சல்ல என்பது அடுத்த நாளே தெரிந்து விட்டது. புதிய நிறங்ளும் விரிப்புகளும் இலைகளும் வண்ணத்துப் பூச்சிகளும் அறைக்குள் வருவதைப் பார்த்துக்கொண்டே தன்னுடைய படுக்கையில் சாய்ந்து படுத்திருந்த அந்தப் பெண்ணைக் கொஞ்சமாவது பேச வைக்க அன்று சுகன்யாவால் முடிந்தது.தொடர்ந்து வந்த நாட்களில் அவள் எல்லாவற்றையும் கூறிவிட்டாள்.
கான் கூறிய கதையைத்தான் ஊர்மிளாவும் சொன்னாள். கானின் அளவுக்கும் அதிகமான மது அருந்தும் பழக்கத்தையும், மது அருந்திய பிறகு அவரின் வெறித்தனமான நடவடிக்கைகளைப் பற்றிய அதிர்ச்சி தரும் கதைகளையும் அவள் கூறினாள். “இப்போதும் குடித்துவிட்டால் அந்த மனிதர் வெறுப்பளிக்ககூடிய ஒருவரே” - ஊர்மிளா அப்படிதான் சொன்னாள். “நான் இங்கே எவ்வளவு நாட்கள் இருக்கிறேனோ, அவ்வளவு நாட்களும் மதுவைத் தொடமாட்டேன் என்று வாக்குறுதி தந்ததால் தான் நான் இப்போ இங்கே வந்தேன். இதுவரை குடிக்கலைன்னு நினைக்கிறேன். குடிச்சிருந்தால், அவர் எனக்குத் தொந்தரவுகள் தர வந்திருப்பார்.”
ஊர்மிளாவிடமிருந்து வேறொரு உண்மையையும் தெரிந்து கொள்ள முடிந்தது. குதிரைகளைப் பற்றியோ குதிரைப் பந்தயங்களைக் குறித்தோ திருமணம் ஆவது வரையில் அவளுக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை. அந்த வெறியை உண்டாக்கியதே கான்தான்.
குரு ..... ஸ்ரீ ஜோக்குடன் தான் கொண்டிருந்த உறவு தன் கணவனிடம் உண்டான சந்தேகங்களைப் பற்றிக் கூறவும் ஊர்மிளா தயங்கவில்லை. அதைப் பற்றி சுகன்யா திரும்பத் திரும்பக் கேட்டதற்கு அவள் சுகன்யாவிடம் திருப்பிக் கேட்டாள்: “ஒரே தொழிலில் தங்களை தாங்களே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இரண்டு நபர்களுக்கு இடையில் எந்த அளவிற்கு நெருக்கம் உண்டாகும்! நீ எதற்காக கடந்துபோன ஒரு நாளில் அந்த பிரசாந்துடன், அதோ அங்கே தெரியிற ஹோட்டலில் ஒரு இரவு நேரத்தில் இருந்தே? உனக்கு அந்த ஆண்மீது காதல் இருக்குன்னு அர்த்தமா?”
அதைக் கேட்டப்போதுதான் எப்போதும் தன்னுடைய அறையை மூடிக்கொண்டு உள்ளே இருக்கும் அந்தப் பெண் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் எல்லா அசைவுகளையும் அவ்வப்போது தெரிந்து கொண்டிருக்கிறாள் என்ற விஷயத்தையே பிரசாந்த்தால் புரிந்து கொள்ள முடிந்தது.
துர்காவின் திருமணம் முடிந்தவுடன், திரும்பப் போய்விட வேண்டும் என்பதுதான் ஊர்மிளாவின் தீர்மானம். தந்தையும் தாயும் அங்கு இருக்கிறார்கள் என்ற விஷயத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு மட்டுமே அவள் அங்கு வருவாள். பிறகு பெண்ணைப் பார்ப்பதற்கு யாராவது வரும்போது ஒரு குருவியைப்போல சிரித்து நடித்துக் கொண்டிருப்பதற்கு அவள் அங்கு அவசியம் இருந்தாக வேண்டும். அதற்கும் அவள் தயார்தான்.
துர்கா வருவது மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பது தான் அவளுடைய குற்றச்சாட்டாக இருந்தது. கூறி விளையாடி விட்டு இனி ஒருவேளை அவள் வராமல் இருந்துவிட்டால்...? அப்படிச் செய்வதற்கு தயங்கக்கூடியவள் அல்ல அவள் என்று அவள் சொன்னாள்.
ஆனால்,தொடர்ந்து கடுமையான காற்று வீசியது. மரங்கள் வேரோடு விழுந்து கொண்டிருந்த இரவுக்குப் பிறகு வந்த புலர்காலைப் பொழுதில், காற்றை எதிர்த்துக்கொண்டு வேகமாக வந்த ஒரு குதிரைவண்டியை விட்டு துர்கா இறங்கி வந்தாள்.