குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
நகரத்தை அடைந்தாகிவிட்டது. வெளியே சிறிதான அளவில் ஒரு சாரல் மழை பெய்துகொண்டிருந்தது. கம்பளி ஆடைகளுக்குள் அடக்கமான மனிதர்கள். ஈரமான குடைகளின் மேற்பகுதி பிரகாசித்தது. இடையில் அவ்வப்போது மனிதர்களின் சத்தத்துடன் பாய்ந்தோடிக் கொண்டிருந்த குதிரை வண்டிகள்... நடைபாதையில் விலை கூறும் வியாபாரிகளுக்கு முன்னால் பலவித நிறங்களில் பழக்குவியல்கள்... சாலையோரத்தில் இருக்கும் மரங்களில் ஏராளமான மலர்கள்.
2
கேட்டிற்கு வெளியே கருங்கல்லில் எழுதப்பட்டிருக்கும் பழைய எழுத்துக்கள்... ‘வாலீஸ்’.
மலை அடுக்குகளை மரக்கிளைகளும் கொடிகளும் கிட்டத்தட்ட மறைத்துவிட்டிருந்தன. அவற்றின் நுனிகளிலிருந்து மழைத் துளிகள் எழுத்துக்களின் தொப்புள்கள் மீது விழுந்து சிதறிக் கொண்டிருந்தன.
மழை அதிகரித்திருந்தது. பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோதே, அதற்கான அடையாளங்கள் நன்கு தெரிந்தன.
“இதுதான்...”- பிரசாந்த் ஓட்டுனரிடம் சொன்னான்: “உள்ளே போ...”
கேட்டிற்கு எதுவும் செய்யவேண்டியதில்லை- வேண்டுமென்றால் இருக்கும் வண்ணத்தை மாற்றலாம்.
கம்பீரமான கேட் வளைவில் திரும்புவது வரை அதிலிருந்த கண்களை எடுக்க முடியவில்லை.
பாதையின் இரு பக்கங்களிலும், எப்போதோ பூத்து வாடிக் காணப்பட்ட ஒரு பூந்தோட்டம் உயிர்ப்பில்லாமல் கிடந்தது. சரியான கவனிப்பு இல்லாததால், வழிதவறி வளர்ந்த சில மரங்களில் நிறங்களின் விளையாட்டு தெரிந்தது. அங்கிருந்து பார்க்கும்போது வீடு தெரியவில்லை. அதற்குள் வண்டி போர்ட்டிக்கோவை அடைந்து மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு நின்றது.
படிகளில் ஏறிச் செல்லும் இடத்தில் நீளமான வராந்தா இருந்தது. வண்ணத்தை இழந்த தூண்கள். ஒரே பார்வையிலேயே அவை நாற்பதுக்குமேல் இருக்கும் என பட்டது. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. வராந்தாவில் ஆங்காங்கே மழைத்துளிகள் விழுந்து சிறிய குளங்கள் உண்டாகிக் கொண்டிருந்ன.
தன் கையிலிருந்த ப்ரீஃப் கேஸை தரையில் வைத்துவிட்டு, வாடகைக் காரோட்டியை அவன் அனுப்பி வைத்தான். வண்டி புறப்படும் சத்தத்தைக் கேட்டு யாராவது வருவார்கள் என்று அவன் நினைத்தது நடக்காமல் போய் விட்டது.
அழைப்பு மணியை அவன் பார்த்தான்.
அதைத் தொடாமல் வராந்தாவின் வழியாக நடந்தான். யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தைப்பற்றித் தெரிந்து கொள்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் இரையைத் தட்டி எழுப்பும் சுகம்.
வீட்டுடன் சேர்ந்து தாறுமாறாக கொஞ்சம் செடிகளும் பூச்சட்டிகளும் இருந்தன. அவை தரையில் இங்குமங்குமாக இருந்தன. கீழே கிடந்த ஒரு ஓட்டை எடுத்து சாதாரணமாக சோதித்துப் பார்த்தபோது மிகவும் பழமையான, கேள்விப்பட்ட, சென்ற நூற்றாண்டின் ஒரு ‘ப்ராண்ட்நேம்’ வெளியே தெரிந்தது.
வராந்தாவின் ஒரு இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த ஒரு ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது. நனைந்த இலைகள் இங்குமங்கமாகப் பறந்து கொண்டிருந்தன.
உள்ளேயிருந்து எந்தவிதமான சத்தமும் வரவில்லை. நிராகரிக்கப்பட்ட ஒரு வீட்டைப்போல அது இருந்தது.
கட்டிடத்தின் முன்பகுதியின் வலது மூலையின் கீழ்ப்பகுதியில் ஒரு தகவல் கல் இருந்தது. அதில் இருந்த எழுத்துக்களை வாசித்தபோது-
‘இந்த கட்டிடம் 1892-ஆம் ஆண்டில் ராவ் பகதூர் அஸ்லாம்கானால் கட்டப்பட்டது.’
வேலை செய்த மொத்த தொழிலாளர்கள்: 47,063.
வேலை முடிவடைய எடுத்துக்கொண்ட காலம்: மூன்று மாதங்கள், இருபத்து ஏழு நாட்கள்.
இஞ்சினியர்: கெ.ஆர். ராகவாச்சார்யா.
கன்ஸ்ட்ரக்ஷன் இஞ்சினியர்கள்: ஆர். புல்லையா, கரீம் ராஜா மொத்தச் செலவு: 37,049 ரூபாய்.’
பிரசாந்த் அந்த தகவல் கல்லை இரண்டு தடவை வாசித்தான்.
1892.
தொண்ணூற்று ஏழு வயதைக் கொண்ட தாத்தாதான் தனக்கு கிடைத்திருக்கும் மனிதர். அவரைத்தான் இப்போது அவன் போய் பார்க்கப் போகிறான்.
மழை நீரின் வழியாக யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. குடையால் முகம் மறைக்கப்பட்டிருந்தது. அளவெடுத்த உடல். நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மேலே இழுத்துக் கட்டப்பட்ட புடவைக்குக் கீழே, அழகான கால்களின் கீழ்ப்பகுதி தெரிந்தது.
அவள் எங்கிருந்து வந்தாள் என்பதை அவனால் உடனடியாக நினைக்க முடியவில்லை. ஒரு பெரிய மழைத்துளியுடன் சேர்ந்து விழுந்ததைப்போல அவள் இருந்தாள்!
குடையை மடக்கி, அவனை நேருக்கு நேராக சந்திக்கும்போது அவளுடைய கண்ளில் கேள்வியைவிட ஒரு அதிகாரத்தின் அடையாளம்தான் தெரிந்தது.
பிரசாந்த் தன்னை அவளுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான்:
“பிரசாந்த் மேனன். பம்பாயில் இருந்து வர்றேன்-கொலம்பஸ் க்ளோபல் கன்ஸ்ட்ரக்ஷனில் இருந்து. டாக்டர் ஷாநவாஸ்கானுக்கும் எங்களுக்கும் இடையே இந்த வீட்டைப் புதுப்பிப்பது சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் உண்டாயிருக்கு...”
“நீங்க அந்த நிறுவனத்தின்...?” - முகத்தில் எந்தவித உணர்ச்சி வேறுபாடும் இல்லாமலே அந்த இளம்பெண் கேட்டாள்.
“இங்கே நடக்கப் போகிற வேலைகளுக்கு நான்தான் பொறுப்பேற்று இருக்கேன்.”
ஒரு நிமிடம் அவனை அளந்து பார்த்த அவள் தூரத்தில் இருந்த நாற்காலிகளைக் காட்டினாள்: “உட்காருங்க.. நான் போய் சொல்லிவிட்டு வர்றேன்”
“நன்றி.”
அவள் மீண்டும் தன் குடையை விரித்துக்கொண்டு, வீட்டின் வலது பக்கமாக சுற்றி பின்பக்கம் சென்றாள்.
வயதைக் கணக்கிடும்போது கிழவனின் மகளாகத்தான் அவள் இருக்க வேண்டும். இருபத்தைந்தை நெருங்கியிருக்கலாம்.
நிலத்தின் எல்லையில் மழைத்துளிகளுக்கும் முள்ளாலான வேலிக்கும் அப்பால், ஓடு வேய்ந்த ஒரு நீளமான கட்டிடம் தெரிந்தது. அது கட்டப்பட்டிருந்த விதத்தையும் காலத்தையும் வைத்துக் கண்கிட்டுப் பார்க்கும்போது, அதுவும் இந்தக் கட்டிடத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருப்பதாக இருந்தால், அது பழமையான ‘பணி செய்பவர்களின் இல்ல’மாக இருக்க வேண்டும்.
முன் பக்கத்தில் இருந்த கதவைத் திறந்து கொண்டு அந்த இளம்பெண் வந்தாள்: “உள்ளே வரச் சொன்னார்.”
பேக்கை ஒரு மூலையில் வைத்துவிட்டு, அவன் அவளுடை சேர்ந்து நடந்தான்.
பெரிய அறைகள். பழைய இருக்கைகளின் ஆக்கிரமிப்பு. நிறம் மங்கிப்போன நிலைக்கண்ணாடிகள்... ஓவியங்கள்... நீளமான இடைவெளிகள். இடையில் பின்பகுதியில் இருந்த வேறொரு கட்டிடத்திற்குச் செல்லும் வழியைக் காட்டினாள். அங்கு மேலும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
வோறொரு வராந்தா. வேறு சில செடிகள் இருக்கும் சட்டிகள்.
ஒரு வாசலுக்கு வெளியே அவர்களுடைய பயணம் நின்றது. அந்த இளம்பெண் மெதுவாக கதவைத் தட்டினாள். உள்ளேயிருந்து வருமாறு அனுமதிக்கும் சத்தம் கேட்டது.
அவளுக்குப் பின்னால் பிரசாந்தும் அறைக்குள் நுழைந்தான்.
விசாலமாக இருந்த அறையின் மத்தியில் போடப்பட்டிருந்த பெரிய கட்டிலின் ஒரு பக்கத்தில் இருந்த தலையணைகளில் சாய்ந்து படுத்திருந்த மனிதன் சற்று முன்னோக்கி உடலை நகர்த்தி, கையை நீட்டித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“கான்...”
கட்டிலுக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் பிரசாந்த் உட்கார்ந்தான்.