அழிந்து போகும் காலடிச் சுவடுகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6854
கடற்கரையில் வெளிநாட்டு மனிதனின் காலடிச் சுவடுகள் விலகி விலகிப் போயிருப்பதை அவள் கவலையுடன் பார்த்தாள். அவள் அந்தக் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்ந்து சென்றாள். நிலவு உள்ள இரவு நேரமாக இருந்ததால் காலடிச் சுவடுகள் தெளிவாகத் தெரிந்தன. காற்று மெதுவாக வீசிக் கொண்டிருந்தது. இல்லாவிட்டால் காற்றில் பறக்கும் மணல் துகள்கள் காலடிச் சுவடுகளை அழித்துவிடுமே என்று அவள் நினைத்தாள்.
காலடிச் சுவடுகளை ஒட்டி, அவற்றுக்கு அருகில் நடந்தபோது தன்னுடைய காலடிச் சுவடுகளும் வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகளுக்கு அடுத்தாற்போல் பதிகின்றன என்பதை அவள் நினைக்கவில்லை. அந்த விஷயத்தை நினைத்திருந்தால், ஒரு வேளை அவள் தன்னுடைய காலடிச் சுவடுகளைச் சரிபண்ணி, அழித்துவிட்டு மட்டுமே நடப்பாள் என்பதை ஒரு மனிதனால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? கற்பனை பண்ணலாம். ஆனால், கற்பனை பண்ண மட்டுமே முடியும். உண்மை அவளுக்குத்தானே தெரியும்? அவளைப் பின் தொடர்ந்து பின்னால் வரும் யாராவது ஒரு ஆள் அவளும் வெளிநாட்டுக்காரனும் கைகளைக் கோர்த்துக் கொண்டு கடற்கரையில் நடந்து செல்வதைப் பார்த்ததாக ஒரு பொய்யான கதையை உருவாக்கிக் கூறினால், அந்தக் கதை பொதுவாக உண்மையான ஒன்றுதான் என்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி ஆழமாக சிந்திப்பதற்கோ கவலைப்படுவதற்கோ அவள் தயாராக இல்லை. இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி யாராலும் உறுதியாகக் கூற முடியாதே! அதேநேரத்தில் கடற்கரையில் வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகள் விலகி விலகிப் போயிருப்பதை அவள் கவலையுடன் பார்த்தாள் என்பதும், அந்தக் காலடிச் சுவடுகளை அவள் பின் தொடர்ந்தாள் என்பதும் உண்மை. நிலவு இருக்கும், பெரிய அளவில் காற்று இல்லாத இரவு நேரமாக இருந்ததால் காலடிச் சுவடுகள் மிகவும் தெளிவாகத் தெரிந்தன. அந்தச் சுவடுகளுக்கு அருகிலேயே மிகவும் வேகமாக அவள் நடந்தாள்.
அவளுடைய நடை அவளை ஒரு அலையின் பக்கம் கொண்டுபோய்ச் சேர்த்தது. அமைதியான ஒரு அலை வந்து அவளுடைய பாதங்களைப் பாசத்துடன் தொட்டபோது அவள் நடப்பதை நிறுத்தினாள். வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகளும் அங்கு நின்றிருந்தன. அப்படியென்றால்...? அவளுக்கு ஆழமான கவலை உண்டானது.
காற்று மிகவும் மெதுவாக வீசிக் கொண்டிருந்தது. நிலவொளியில் கடல் எதையோ விழுங்கி வயிறு வீங்கிப்போன ஒரு பெரிய பாம்பைப்போல மெதுவாக முணகிக் கொண்டிருந்தது. கடலின் ஆரவாரம்கூட மிகவும் மெதுவாகவே இருந்தது. கடித்து அழுத்தப்படும் ஒரு வேதனையின் மெல்லிய ஓசையைப் போல அது இருந்தது. மரணப் பாட்டுக்களின் ஓசை எப்போதும் தாழ்வாகவும் சரளமாகவும் இருக்கும் என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். அலையின் அன்பான தொடலுக்கு திடீரென்று ஒரு குளிர்ச்சி வந்து சேர்ந்தது. நிலவு உள்ள இரவு வேளையில் கடல் நீருக்கு உப்பும் உஷ்ணமும் அதிகமாககும் என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், இப்போது அப்படியல்ல. கடுமையான குளிர்ச்சி விரல் நுனிகளிலிருந்து கால் நரம்புகள் வழியாக மேலே மேலே ஏறிக் கொண்டிருந்தது.
அவள் எதிர்பார்த்த வெப்பம் அலை கொண்டுவந்த நீருக்கு இல்லாமலிருந்தது. கடல்கூட தன்கைக் கைவிட்டு விட்டதோ என்று அவள் கவலைப்பட்டாள். கனிவு, கருணை ஆகியவற்றின் கொடுமையான குளிர்ச்சிதான். அந்த நேரத்தில் வேறொரு அறிவும் அவளைக் கவலைப்படச் செய்வதற்காக வந்து சேர்ந்தது. அலைகள், கடல்நீர் ஆகியவற்றின் நிறம் சிவப்பாக இருந்ததை அவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள். சிவப்பு! ரத்தச் சிவப்பு! ஆனால், ரத்தத்தின் சூடு சிறிது கூட இல்லை. ரத்தத்தின் குளிர்ந்த, இரக்கமற்ற சிவப்பு! யாருடைய ரத்தம் நீருக்கு சிவப்பு நிறத்தைத் தந்தது? யாருடைய ரத்தத்திற்கு இந்த அளவிற்குக் கடுமையான குளிர்ச்சி இருக்கிறது?
அப்படியென்றால்...?
வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகள் ரத்தக் கடலின் கரையில் வந்து முடிவதை அவள் மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அவளுடைய காலடிச் சுவடுகளும் அங்கு முடிகின்றன. இனி முன்னோக்கிக் காலை வைத்தால் அங்கு சுவடுகள் உண்டாகாது. காலை எடுக்கும்போது கடலலை மட்டுமே எஞ்சியிருக்கும்.
கடலின் அமைதியான அலைகளில் இப்படியும் அப்படியுமாக ஆடிய சந்திரனின் நிறம் சிவப்பாக இருந்ததா என்ன? அவள் தன் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தாள். ஆகாயத்திலிருந்த சந்திரனிலும் கடலின் சிவப்பு நிறம் படர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். ஆகாயத்தின் இயல்பான நீல நிறத்தின்மீது ஒரு சிவப்பு நிறப் பறவை பறந்து கொண்டிருக்கிறதோ என்று அவள் சந்தேகப்பட்டாள். ஒருவேளை வெளிநாட்டுக்காரனின் காலடிச் சுவடுகளுக்கும் சிவப்பு நிறம் இருந்திருக்குமோ? வெளிறிப் போன ஒரு உயிரற்ற பொருளாக இருந்தது இரவு. மிகவும் பலவீனமான அழுகையாக இருந்தது கடலின் இரைச்சல்.
அப்போது யாரெல்லாமோ சேர்ந்து வேறொரு ஆளைத் தாக்குவதை அவள் பார்த்தாள். தாக்கப்பட்ட ஆள் தன்னால் முடிந்த வரைக்கும் போராடிப் பார்த்தான். ஆனால், தாக்கியவர்கள் அவனை இரும்புக் குழாய்களைக் கொண்டு தாக்கினார்கள். பெரிய கற்களைக் கொண்டு இடித்தார்கள். அவனுடைய உடல் உறுப்புகளிலிருந்து சூடான ரத்தம் சீறிப் பாய்ந்தது. அந்த ரத்தம் வெட்டவெளிக்கு சிவப்பு நிறத்தைத் தந்தது. அந்த ரத்தத்தின் வீரியத்துடன் அவன் தன்னைக் காப்பாற்றிக்
கொள்வதற்காகப் போராடினான். தாக்கியவர்களில் சிலர் அடிவாங்கிக் கீழே விழுந்தார்கள். எனினும் அவர்கள் எழுந்து மீண்டும் அவனைத் தாக்கினார்கள். இறுதியில் தன்னுடைய ரத்தம் ஒடிக் கொண்டிருந்த ஆற்றோரத்தில் தன்னுடைய ரத்தம் விழுந்திருந்த மணல் மெத்தையின் மீது அவன் துடிதுடித்து விழுந்தான். அவனுடைய மூச்சும் முணகலும் காற்றில் முழுமையாக நிறைந்திருந்தது. படிப்படியாக அவை பலவீனமாயின. இறுதியில் அவை நின்றன. பாறைகளுக்குக் கீழே கடல் பரப்பில் அவன் தனியே கிடந்தான். ரத்தம் அருவியென ஓடிக் கொண்டிருந்த கரையில் ரத்தத்தில் மூழ்கிய மணல் படுக்கையில் அவன் அசைவே இல்லாமல் கிடந்தான்.
சாட்சி உரத்த குரலில் அழைத்தது. உரத்த குரலில் கத்திய சாட்சி அவள்தான். அவளுடைய அலறல் சத்தம் காற்று, ஆகாயம், நிலவு, கடல் ஆகியவற்றையும் தாண்டி வேறு சாட்சிகளை நோக்கி ஒரு தொற்றுநோயைப் போல பரவியது. அலறல் சத்தம் இருட்டில் வளர்ந்தது. நிலவை மறைத்தது. ஆகாயத்தையும் கடலையும் கரையையும் மூடியது. அவள் அலறிக் கொண்டே இருந்தாள். அலறிக் கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில் ஒரு தீப்பந்தத்துடன் அங்கு வந்தது யார்? அவளைத் தொட்டு அழைத்தது யார்? அந்தத் தொடலின் மூலம் அவளுக்குள் கருணையின் வெப்பத்தைப் பரவவிட்டது யார்? வெளிநாட்டுக்காரனா?