அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6428
அது மிகவும் வேகமாக அவனுடைய அடி மனதிற்குள் கிடந்த நினைவுகளுக்குள்ளிருந்து எழுந்து மேலே வந்து, தன்னால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அடக்க முடியாத அளவிற்கு ஒரு ஆக்கிரமிப்பை அவன்மீது உண்டாக்கியது. அது அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டது. ‘ஓ...... இல்லை...' அவன் ஒரு நிமிடம் தடுமாறினான். ‘ஓ.... என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது!' அவன் தன் தலையை ஆட்டினான். குழப்பத்தில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல், அவன் நடுங்கிக்கொண்டே நின்று கொண்டிருந்தான். வாழ்க்கையைப் பற்றியும் மனிதத்தன்மையைப் பற்றியும் எதிர்மறையான வார்த்தைகள் தன் மனதிற்குள்ளிலிருந்து எழுந்து வந்து கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான். அத்தகைய வார்த்தைகளைப் பற்றி அவனுக்கே தெரியாது. அது தாங்கிக்கொள்ள முடியாத தருணமாக இருந்தது. தன் சரீரத்தின் வழியாக பாய்ந்து செல்லும் இருண்ட மின்வெட்டலின் மூலம், தன் உடல் விரல்களின் நுனிப் பகுதிவரை பிரகாசமாக்கப்படுவதைப்போல அவன் உண்மையாகவே உணர்ந்தான்.
‘ஓ... நீ தவறாக நினைக்கிறாய். நீ அந்த மாதிரி நினைக்கக்கூடாது. உன்னால் மனிதத் தன்மையை எந்தச் சமயத்திலும் மறுக்க முடியாது. நீ அதிக அளவில் நம்பிக்கையுடன் இருக்கும் மனிதன். நீ ஒரு எளிமையான மனிதன். மனிதர்களிடம் சாதாரணமாகக் காணப்படும் நம்பிக்கையைவிட உன்னிடம் அதிகமாகவே இருக்கிறது.' அவன் தனக்குத்தானே உற்சாகம் உண்டாக்கிக் கொள்ள முயற்சித்தான். இன்னும் சொல்லப் போனால் போர்க்களத்தில் கிடைத்த அனுபவ அறிவு அவனுக்குள் மீண்டும் வந்ததைப்போல இருந்தது. போர்க்களத்தில் இருக்கும் மனிதர்கள் சராசரி வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களைவிட எவ்வளவோ தூரம் மாறுபட்டவர்கள் என்ற அறிவே அது. மனிதனுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகம் தன்மீது பாய்வதைப்போலவும், பற்களைப் பதிப்பதைப்போலவும் அவன் உணர்ந்தான். தன்னுடைய சக போர் வீரர்கள், போரின்போது தன்னுடைய உடலின் தசைகளில் உண்டாக்கிய கொடூரமான பல் அடையாளங்கள் இன்னும் மறையவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் அதே நேரத்தில், அதே மாதிரியான பற்களின் அடையாளங்களை தானும் தன்னுடைய நண்பர்களின் உடல்களில் பதித்துவிட்டிருப்பதை அவன் நினைத்துப் பார்த்தான். போர்க்களத்தில் தங்களுடைய வாழ்க்கை பயமுறுத்தப்படும்போது, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் காட்சிகளை நினைத்துப் பார்த்தபோது, உடலெங்கும் குளிர்ச்சி பரவியதைப்போல அவன் உணர்ந்தான்.
கடந்த காலத்தில் பார்த்த போர்க்களங்களைப் பற்றியும், மனிதத்தன்மையைப் பற்றியும் எதிர்மறையாக நினைப்பதற்கு அவளுடைய உருவம் தூண்டியது என்பதற்கான காரணம்- போரைப் பற்றிய அவனுடைய ஞாபகத்தில், வேதனையில் மூழ்கித் துன்பக் கடலில் துவண்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய நினைவும் இருந்ததே. குராக்கோ ஹோரிக்கவாவின் உருவத்தைப் பார்க்கும்போது, அந்தப் பெண்ணின் உருவம் ஞாபகத்தில் வந்தது. ஒரு பெண்ணின் உருவத்தை மனதில் இறுக அணைத்துக் கொண்டே போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிட்டயாமாவின் மனதில், எல்லா நேரங்களிலும் குராக்கோ, அந்த போர் நடந்த காலத்தின் துயரம் நிறைந்த நாட்களை ஆழமாக விதைத்துக் கொண்டே இருந்தாள்.
டோஷியோ கிட்டயாமாவிற்கு ஒரு காலத்தில் காதலி ஒருத்தி இருந்தாள். தன்னுடைய முழு மனதைக் கொண்டும் அவளை அவனால் காதலிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால்- அவள் அவனுடைய இழந்த காதலுக்கு மாற்றாக இருந்தாள். அவன் காதலித்த அந்தப் பெண் அவனை விட்டு எப்போதோ விலகிச் சென்று விட்டாள். அவன் காதலித்த அந்தப் பெண்ணிடம் அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிற அளவிற்கு மிகப் பெரிய தகுதிகள் எதுவுமில்லை. அவனுடைய கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்... அவளை அவன் தன்னுடைய இளமை நிறைந்த நாட்களில், முழுமையான மோகம் குடிகொண்டிருக்க சந்தித்தான். அப்படிப்பட்ட நிலையில் எந்த இளைஞர்களும் செய்வதைப்போலவே, அவனும் அவளையே மனதில் வைத்து ஆராதனை செய்து கொண்டிருந்தான். அவளிடம் இல்லாத நல்ல குணங்கள் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அவன் பிரமிப்பில் மூழ்கிக் கொண்டிருந்தான். கண் மூடித்தனமாக அவன் அவளை வழிபட்டான். தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பைத் தான் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என்பதாலும்; வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதற்கான திறமை அவனிடம் இல்லையென்பதை உணர்ந்து, வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்டதாலும்; அவனுடன் கொண்டிருக்கும் உறவிலிருந்து தான் விடுபட்டுச் செல்ல விரும்புவதாக அவள் கூறியபோது, அந்தப் பெண்ணை அவன் இயற்கையாகவே வெறுத்தான். எது எப்படி இருந்தாலும், அவளுடைய உருவத்தை உயிரோட்டத்துடன் தன் இதயத்திற்குள் அவன் நீண்டகாலம் வைத்திருந்தான்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அடுத்த பெண் அவனுக்கு முன்னால் தோன்றினாள். அவன் வேலை பார்க்கும் அதே போர்க்கருவிகள் இருக்கும் நிறுவனத்தில் அவள் ஒரு க்ளார்க்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் அவனைக் காதலித்தாள். முன்பிருந்த காதலியைப்போல அல்லாமல், அவள் உடனடியாக எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்தாள். அவள் மெலிந்துபோன பெண்ணாக இருந்தாள். ஆனால், அறிவாளியாகவும் சிறிய முகத்தையும், ஒடுகலான கழுத்தையும், சிறிய இடையையும் கொண்டவளாகவும் இருந்தாள். அவன் மனதில் எப்படி கற்பனை செய்து வைத்திருந்தானோ அதற்கு ஏற்றபடியும், அவன் நினைத்திருந்த பழக்க வழக்கங்களுடனும் இருக்கும் அளவிற்கு அவளிடம் ஏதோவொன்று இருந்தது. அந்த முகத்தைப் பார்க்கும்போது முந்தைய உறவில் தனக்கு உண்டான வேதனை நிறைந்த தோல்வியை அவன் உயிரோட்டமே இல்லாமல் நினைத்துப் பார்த்தான். அதே நேரத்தில், எப்போதும் தனிமையிலேயே இருக்க வேண்டுமென்ற வகையைச் சேர்ந்த மனிதனல்ல அவன். இன்னும் சொல்லப் போனால்- தன்னைக் காதலிக்கக்கூடிய ஒரு பெண் தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க, அதனால் உண்டான கர்வத்தையும் சந்தோஷத்தையும் விட்டெறியக் கூடிய மன பலத்துடன் அவன் இல்லை. அவளுடைய காதலை மறுக்கக்கூடிய தீர்மானத்தை எடுக்கும் அளவிற்கு அவன் பலமற்றவனாக இருந்தான். அவள் அவனிடம் முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தாள். அவளுடைய காதல் அவனுக்கு அனைத்தையும் அளித்தது. அவ்வளவு எளிதாக அளிக்கப்பட்ட அந்தக் காதலின் மதிப்புத் தெரியாத மனிதனாக அவன் இருந்தான். தன் வாழ்க்கையில் இரண்டு முறை காதல் வலையில் விழக்கூடாது என்று நினைப்பதைப்போல அவனுடைய செயல் இருந்தது. அவன் அவளை ஒரு மாற்றாகவே எண்ணினான். அதற்கேற்றபடி அவன் அவளைக் காதலித்தான். அவளைப் பார்க்கும் அவனுடைய கண்கள் மிகவும் மென்மையாகவும் ஆராய்ந்து பார்க்கக் கூடியனவாகவும் இருந்தன. அவளுடைய உறுதியான மார்பகங்களைத் தொடும்போது தன் இதயம் மிகவும் குளிர்ந்து விடுவதைப் போல அவன் உணர்ந்தான்.