அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6428
“தன்னுடைய குடும்பத்தில் உள்ள பலவிதப்பட்ட பிரச்சினைகளால் என் கணவர் பல துன்பங்களையும் அனுபவிக்கவேண்டிய துர்பாக்கியமான நிலையில் இருந்தார். ஆனால், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த மூன்று வருடங்களும் அவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார் என்று நான் நம்புகிறேன்.''
“அதற்குப் பிறகு அவர் ராணுவத்திற்குச் சென்றுவிட்டார். அப்படித்தானே?''
“ஆமாம்...''
“அவர் ஒரு அதிகாரியாக இருந்தார். இல்லையா?''
“இல்லை... அவர் ஒரு தனி அலுவலராக இருந்தார்.''
“அவர் சவுத் ஸீஸுக்குச் சென்றிருக்கிறாரா?''
“ஆமாம்... அங்கு ஏற்பட்ட ஒரு நோயால் பாதிக்கப்பட்டு அவர் இறந்து விட்டார்.''
“உங்களை தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்பது கவலைப்படக் கூடிய விஷயமே....''
குராக்கோ சற்று பதைபதைப்பு அடைந்ததைப் போலத் தோன்றியது. எனினும், தைரியமாக பதில் கூறினாள்.
“ஆமாம்... அரசாங்கத்தின் செலவில் அது ஒரு பயணமென்று அவர் கூறினார். ஆனால், அவர் என்ன உணர்ந்தார் என்பது எனக்குத் தெரியும்.''
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.''
“என் கணவர் மரணத்தைத் தழுவிய பிறகு, மனிதர்கள் தாங்கள் என்மீது கொண்டிருக்கும் பரிதாப உணர்ச்சியைப் பல நேரங்களிலும் வெளிப்படுத்துவார்கள். ஆனால், அதைவிட அதிகமான இரக்க உணர்ச்சி அவர் மீது இருக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன். இறந்துபோய்விட்ட யாரையும் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? என்னால் அதை வேறுமாதிரி நினைத்துப் பார்க்க முடியவில்லை...''
“......''
“இன்னும் சொல்லப்போனால், ஒருவர் மரண மடைந்து விட்டால் எல்லாமே முடிந்து விடுகிறது.... அனைத்தும் முடிவுக்கு வந்து விடுகிறது.''
“ம்...''
“அவர் இறக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தால், அவர் அதற்காக சந்தோஷப்பட்டிருப்பார்.''
“நம்மைச் சுற்றியிருக்கும் பலரும் உங்களைப் போன்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். இல்லையா?''
“நீங்கள் யோஷிக்கோவை மனதில் வைத்துக் கூறுகிறீர்களா?''
“ஆமாம்....''
“அவள் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் முறையைப் பார்த்து நான் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன்.''
அவன் தன்னுடைய கடந்தகால காதலைப் பற்றி அவளிடம் கூறினான். அப்போது அவள் தன்னுடைய மனதைத் திறந்து அவனிடம் பேசினாள். தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி அவளும் கூறினாள்.
“நீங்கள் கவலை அளிக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பீர்கள் என்று நான் நினைத்தேன்.''
அவள் சொன்னாள். அவர்கள் காபிக் கடையைவிட்டு வெளியே வந்தார்கள். தான் சில பொருட்களை வாங்க வேண்டியதிருக்கிறது என்று சொன்ன அவள் ஸ்டேஷனை நோக்கி நடந்தாள்.
அவன் அதே இடத்தில் சிறிது நேரம் நின்று அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மறைந்து, திரும்பவும் ஸ்டேஷனுக்கு முன்னால் ஆரவாரித்துக் கொண்டிருந்த- மக்கள் திரண்டு காட்சியளித்த இடத்தில் தோன்றினாள்.
அவளைப் பார்த்தபோது அவன் தன் மனதிற்குள் நினைத்தான்: ‘இவள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை நினைக்கும்போது, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இவளை அணைத்துக் கொள்வதற்கு இப்போது கைகள்கூட இல்லை. அழகாக இருக்க வேண்டிய இவளுடைய முகம் ஏன் அந்த அளவிற்கு கவலைகளில் மூழ்கிக் கிடக்கிறது?' தன்னுடைய கேள்வி எவ்வளவு பழமையான ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளாமலே, அவன் அவளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவளுடைய தோற்றத்தைப் பார்த்து அந்தக் கேள்வி எழுகிறதா அல்லது தன்னுடைய இதயத்திற்குள்ளிருந்து புறப்பட்டு வருகிறதா என்ற விஷயம் அவனுக்கே தெரியவில்லை, ஆனால், ஒரு தனிமை உணர்வு வெளியே கிளம்பி வந்து அந்தப் பகுதியையே ஆக்கிரமித்து விட்டிருந்தது. வானத்திலிருந்து கீழே இறங்கி வந்த மெல்லிய நிறத்தைக் கொண்ட இருளுடன் சேர்ந்து, அழிந்து கிடக்கும் உயரமான கட்டடங்களில் விரிந்து, அந்த பாழாய்ப்போன, போரை அனுபவித்த மனிதர்களின் மனங்களுக்குள் அந்த உணர்வு அமைதியாக நுழைந்து கொண்டிருந்தது.
சவுத் ஸீஸிலிருந்து டோஷியோவுடன் அனுப்பி வைக்கப்பட்ட அவனுடைய நண்பர்களில் ஒருவன் ஒருநாள் அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்தான்.
அவன் ஒரு கல்லூரி பட்டதாரி. முதலாண்டு போர் வீரனாக இருந்தான். ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட இறுதிப் படையில் அவன் இருந்தான். அங்கு வந்து சேர்ந்தபோது, அவன் மிகவும் தடிமனாக இருந்தான். அங்கு நிலவிய கடுமையான வெப்பம், அவனை ஒரே மாதத்தில் எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு மெலியச் செய்துவிட்டது. டோஷியோதான் அவனை கவனித்துக் கொண்டான். தண்டனைகள் கொடுக்கப் போகிறோம் என்று கூறி பயமுறுத்தப்படும்போது, மூத்த போர்வீரர்களின் ஆதரவைப் பணம் கொடுத்தோ வேறு வகைகளிலோ பெறுவதற்காகச் செயல்படும் ஒரு நம்பிக்கைத் துரோகியாக அவன் இல்லாமலிருந்தான் என்பதுதான் அதற்குக் காரணம். ஜப்பானுக்குத் திரும்பி வந்தபிறகு, ஒரு கல்லூரி நண்பன் மூலம் ஹாமாமாட்சு சோவிற்கு அருகிலிருந்த ஒரு சிறிய நிறுவனத்தில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது. அவன் எப்போதாவது டோஷியோவைப் பார்ப்பதற்காக வருவான். அவனுடன் உரையாடுவதன் மூலம் தன் மனதில் இருக்கும் கவலைகள் அனைத்தையும் அவன் வெளியேற்றுவான்.
“ஓ... பையா! இப்போது நான் உன்னைப் பார்த்து விட்டேன். கடந்த சில நாட்களாக நான் உன்னைப் பார்ப்பதற்கு எத்தனை முறை வந்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? அந்த மூலையில் இருக்கும் பழக்கடைக்கு அருகில் வந்து உன்னுடைய வெளிச்சம் இல்லாத அறையைப் பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்தான்! என்னுடைய கனமான கால் பாதங்களை இழுத்துக் கொண்டு திரும்பவும் நான் வீட்டுக்கு நடந்து செல்வதை கற்பனை செய்து பார்...'' சுவரின் மீது தன் முதுகைச் சாய்த்துக் கொண்டே தனக்கே உரிய வழக்கமான குரலில் சாபுரோ கட்டாலுக்கா கூறினான்.
“ம்... நீ என்னதான் கடுமையாக முயற்சி செய்தாலும், உன்னுடைய தடிமனான உடலைப் பார்க்கும்போது, மிகவும் அரிதாகவே இரக்க உணர்வு உண்டாகும், சாபுரோ...''
“உன்னுடைய பழைய நண்பர்களின் உணர்வுகளை நீ எந்தச் சமயத்திலும் புரிந்துகொண்டதே இல்லை... இல்லையா? நான் ஒவ்வொரு முறை வரும்போது, நீ இங்கு இருப்பதே இல்லை...''
“டாய்லெட்சு சுஸுக்கி கூறுவதைப்போல "பணம் கையில் இல்லை என்ற உணர்'வைக் கூறுகிறாயா?''
“ஆமாம்.... என்னிடம் சமீபகாலமாக பணமே இல்லை.... மூளைகூட வேலை செய்வதில்லை... ஆனால், மூளை நன்கு செயல்பட நீ உலாவிக் கொண்டிருக்கிறாய் என்பது பார்க்கும்போதே தெரிகிறது. நீ காதலில் ஈடுபட்டிருக்க வேண்டும். சமீபகாலமாக எல்லா இரவு வேளைகளிலும் நீ உன் வீட்டில் இருப்பதில்லை என்பதிலிருந்து அந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.''
“ம்... காதல்'' டோஷியோ சற்று தடுமாறினான். ஆனால், சொன்னான். “ஜப்பானில் என்னைக் காதலிக்கும் அளவிற்கு யாராவது பெண் இருக்கிறாளா என்ன?''