அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6429
நெருப்பில் எரிந்து சாம்பலாகிப் போன கட்டடங்களைப் பற்றியோ, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக இருக்கும் கடைகளைப் பற்றியோ, அங்கு குழுமியிருக்கும் மக்களைப் பற்றியோ அவன் இப்போதெல்லாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை. ஆனால், அவளுடைய முகத்தில் வெளிப்பட்ட அந்த வேதனை நிறைந்த துயரம், பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்தது.
வீட்டுக்குத் திரும்பி வரும்போது, அவர்கள் பல நேரங்களில் ஜின்ஸாவிற்குச் சேர்ந்து போவதுண்டு. அவள் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து இருந்தாள். ஆனால், தன்னுடைய வாழ்க்கை அந்த அளவிற்கு சுதந்திரம் நிறைந்ததாக இல்லையென்று அவள் கூறினாள். அவளுடைய சொந்தக்காரர்கள் அவளுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்ததே அதற்குக் காரணம். எட்டு மணிக்கு வீட்டுக்குக் கட்டாயம் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பதில் அவள் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். அந்த முடிவில் இருந்து அவளை மாறி இருக்கச் செய்யவேண்டும் என்று அவன் முயற்சி செய்ததே இல்லை. தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய காலடியை எடுத்துவைக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால், அதை எப்படிச் செய்வது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை.
தன்னை அழுத்திக் கொண்டிருந்த கடந்த காலத்தின் கனமான விஷயங்களை மனதிலிருந்து தூக்குவதுதான் அவனைப் பொறுத்த வரையில் அவனுடைய முதல் தீர்மானமாக இருந்தது. அதை எப்படிச் செய்வது என்பதுதான் அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் அவன் ஒரு கேள்வியைக் கேட்க முயற்சித்தான்: “இதே வாழ்க்கையை நீங்கள் தொடர நினைக்கிறீர்களா?''
“ஆமாம்...'' அவள் சொன்னாள்.
“அதில் தீர்மானமாக இருக்கிறீர்களா?''
“ஆமாம்... நான் தெளிவாக இருக்கிறேன்.''
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, டோஷியோ தொடர்ந்து, சொன்னான்: “என்னைவிட நீங்கள் அதிகமான வெளிப்படைத் தன்மையுடன் வாழ்வது தான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும்.''
“நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?''
“ஒரு உயிர் இன்னொரு உயிரை சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய ஒரு விஷயமது. அப்படிச் செய்யக்கூடிய ஒரு உயிரை இதுவரை எந்தச் சமயத்திலும் நான் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால்- என்னாலேயே அதைச் செய்ய முடியாது. அதே நேரத்தில்- உங்களால் அதைச் செய்ய முடியும். இன்னும் கூறுவதாக இருந்தால்- அதுதான் உங்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டிருக்கிறது.''
அது ஒரு சாயங்கால நேரம். ஒரு வகையான மஞ்சள் சாயம் படர்ந்த வசந்தகால வானம் நகரமெங்கும் தெரிந்து கொண்டிருந்தது. ஒரு காபி ஹவுஸின் மாடியிலிருந்த சாளரத்திற்கு அருகில் அவர்கள் உட்கார்ந்து ஆழமான உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள். கல்லூரியில் படிக்கும்போது தான் தன்னுடைய தாயின் ஆசைகளைப் பொருட்படுத்தவே இல்லை என்றும், சட்டம் படிப்பதிலிருந்து கலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தான் மாறிவிட்டதாகவும் அவன் சொன்னான். தன்னுடைய தாயார் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விட்டாள் என்று அவன் சொன்னான். கல்லூரியை விட்டு வெளியே வந்தபிறகு, ஒரு வேலை கிடைப்பதற்கு அவன் மிகவும் சிரமப்படுவான் என்ற உண்மையை அவள் உணர்ந்திருந்தாலும், அவள் அதை ஏற்றுக்கொண்டாள். தனக்காக தன்னுடைய அன்னை தன் முழு வாழ்க்கையையும் தியாகம் செய்தாள் என்றான் அவன்.
“அதனால், நான் அவளை மீண்டும் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.'' அவன் சொன்னான். குராக்கோ எதுவுமே கூறவில்லை. தான் கூறிய விஷயம் அவளை அவளுடைய கணவனைப் பற்றி நினைக்கச் செய்திருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான்.
“இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு வெளியே வரவே முடியாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், ராணுவத்திலிருந்த ஆறு வருடங்களும் என் வாழ்க்கையை முழுமையாக அழித்து விட்டன. நான் மிக விரைவிலேயே ஏதாவ தொன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். என்னுடைய சக்தியை நான் மீண்டும் பெறுவேன். நான் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னால் எதையும் செய்யமுடியும் என்கிற அளவிற்கு ராணுவம் என்னுடைய உடலுக்கு சக்தியைக் கொடுத்திருக்கிறது.'' அவன் அவளிடம் சிறிது நேரம் போரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். ‘போர்க்களத்தில் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தன்னை இருக்கச் செய்தது தன்னுடைய படிப்பு அல்ல: தன் மனதில் இருந்த கவலைகள்தான்' என்றான் அவன்.
“உங்களுடன் நான் இருக்கும்போது, உங்களுக்காக எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால், அது என்னுடைய சக்திக்கு மிகவும் அப்பாற்பட்டது என்பதையும் என்னால் தெளிவாக உணர முடிகிறது.'' தன்னுடைய மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்ற உடைந்த குரலில் அவள் கூறினாள். அதற்கு என்ன கூறுவது என்று தெரியாமல் இருந்தான் டோஷியோ. அவர்கள் ஒருவரையொருவர் சிறிது நேரம் ஒரு வார்த்தைகூட பேசாமலேயே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் டோஷியோ படிகளில் ஏறி மூன்றாவது மாடிக்கு வந்து கொண்டிருந்தான். அப்போது படியின் நடுப்பகுதியில் குராக்கோ தலையை குனிந்தபடி நின்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான். “என்ன நடந்தது?'' டோஷியோ கேட்டான்.
அவள் சுற்றிலும் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு சொன்னாள். “நான் இங்கு சிறிது தடுமாறிவிட்டேன்'' தொடர்ந்து அவள் சொன்னாள். “நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன்....'' அவளுடைய முகத்தில் ஏதோவொரு சோக உணர்வு நிறைந்திருந்ததை டோஷியோ பார்த்தான்.
அவர்கள் தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது சந்தித்தார்கள். அவர்கள் எந்தவொரு நோக்கமும் இல்லாமல் கோஃபுக்குபாஷி செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தார்கள். குராக்கோ என்றுமில்லாத அளவிற்கு மிகுந்த கவலையில் மூழ்கிக் காணப்பட்டாள். அவளுடன் சேர்ந்து நடந்து செல்லும்போது, அவனுடைய மனம் அவனிடம் இல்லை என்பதையும், அது எங்கோ அவளுக்குள் இறங்கிச் சென்றிருக்கிறது என்பதையும் அவன் உணர்ந்தான். அது காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரமாக இருந்தது. வெள்ளை நிறத்தில் தூசி தெருவில் சுழன்று கொண்டிருந்தது. மரத்தாலான பாலத்திலிருந்த விளம்பரப் பலகைகள் ஆடிக் கொண்டிருந்தன. அவர்கள் ஆற்றின் வழியே நடந்தனர். “உங்களுடைய பாதங்கள் சரியாகி விட்டனவா?'' சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் கேட்டான்.
“ஓ.... பாதங்கள்'' அவள் திரும்பியபோது, கூந்தல் அவளுடைய முகத்தில் விழுந்தது.
“ஆமாம்... நீங்கள் படிகளில் தடுமாறி விட்டீர்கள். அதற்குப் பிறகு நொண்டிக் கொண்டிருந்தீர்களே?''
“ஓ, நான் இப்போது முற்றிலும் குணமாகி விட்டேன். சமீப காலமாக நான் மிகவும் அமைதியாகி விட்டேன். நான் எதைப் பற்றியெல்லாமோ சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதில் அந்த விஷயத்தையே மறந்துவிட்டேன்.''
“......''
“அந்த நாட்களை நான் திடீரென்று கனமானவையாக நினைக்க ஆரம்பித்துவிட்டேன். ஏன் என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு அனுபவம் எந்தச் சமயத்திலும் எனக்கு உண்டானதே இல்லை.''