அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6429
“அது ஒரு ஆச்சரியப்படக்கூடிய விஷயமில்லை. ஆண் பெண்ணைக் காதலிப்பது என்பது இயற்கையாகவே நடைபெறக்கூடிய ஒரு விஷயம்தான். நாம் போரில் தோல்வியடைந்து விட்டாலும், ஒரு ஆணுக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள். அவளுக்கு அவன் தேவைப்படுகிறான்.''
“இந்த மாதிரியான கவர்ந்து இழுக்கக்கூடிய உடலை வைத்துக்கொண்டு நீ காதலில் இறங்கப் போகிறாயா?''
“ஏன்? கட்டாயம் ஈடுபடுவேன். நான் காதலில் ஈடுபட்டால், என்னுடைய எடையில் கொஞ்சம் இழப்பேன்!''
நன்கு சூடாக்கப்பட்ட சீனிக்கிழங்கை அவர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
“நான் எனக்கு உணவு தேடிக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறேன்.'' சாபுரோ சொன்னான்: “அதனால், வருகிற மாதத்திலிருந்து இன்னொரு சிறிய வேலையையும் பார்க்கலாமென்று தீர்மானித்திருக்கிறேன்.''
“அப்படியா?''
“உனக்கும் அப்படியொன்றைத் தேடிக் கொள்ளலாமென்று நினைக்கிறாயா?''
“மொழிபெயர்த்தல் அல்லது வேறு ஏதாவது?''
“என்ன? இல்லை... அது கறுப்புப் பண சந்தை...''
“அப்படியா?''
“நான் சொல்வது என்னவென்றால்... கிட்டத்தட்ட ஒரு விற்பனை பிரதிநிதியைப்போல... மருந்துகள் விற்பனை செய்வது... உன்னுடைய ஓய்வு நேரத்தில் நீயே பண்ணலாம். உதவியாக இருக்கும் என்றால் நீ அதைச் செய்வதற்கு தயாராக இருக்கமாட்டாயா?''
“சரிதான்.... நான் இப்போதுதான் சுமாரான நிலைக்கு வந்திருக்கிறேன். ஆனால், ஒரு விற்பனையாளன் வேலையை என்னால் செய்ய முடியாது.''
“சரி... நீ கூறுவது சரியாக இருக்கலாம்.''
சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது. பிறகு சாபுரோ உரையாடலைத் தொடர்ந்தான். “ஒருநாள் நான் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது யமனாக் காவின் வீட்டுக்குச் சென்றேன். நம்முடைய குழுவில் இருந்த எல்லாருமே சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.'' அவர்களால் வெளியேற்றப்பட்ட ஒரு தோழன்தான் யமனாக்கா.
“அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?''
“ஓ... அவன் சாக்லெட்டுகள் விற்றுக் கொண்டிருக்கிறான். உனக்கு அந்த சாக்லெட் பார்களைத் தெரியு மல்லவா? அவன் அவற்றை வாங்கி அதை கிராமப் பகுதிகளில் சுற்றியலைந்து விற்பனை செய்வான்.''
“அப்படியா? யமனாக்கா அதைச் செய்கிறான் என்று நீ சொல்கிறாயா?''
“உண்மைதான். ஆனால், ஒரு சாக்லெட் பார் உன்னை ஏமாற்றவே ஏமாற்றாது. நம்மைவிட அவன் சாக்லெட்டுகளை வைத்துக்கொண்டு எவ்வளவோ சிறப்பாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிறான்! அவன் ஒரு பாருக்கு ஏழு யென்களையும் ஐம்பது ஸென்களையும் செலுத்துகிறான். அதை கிராமங்களிலிருக்கும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு எட்டு யென்கள் ஐம்பது ஸென்களுக்கு விற்பனை செய்கிறான். தன்னிடம் மூவாயிரத்து ஐநூறு யென்கள் இருக்கின்றன என்று அவனே கூறுகிறான். ஓ... நான் இந்த விஷயத்தை உன்னிடம் கூறவேண்டுமென்று நினைத்தேன், டோஷியோ. தான் ஒரு சாக்லெட் வியாபாரியாக மாறிய முதல் நாளன்று அவன் எங்கு சென்றான் என்று நீ நினைக்கிறாய்? அட்டாமியில் புதிய யென்கள் ஏராளமாக இருக்கின்றன என்ற விஷயம் உனக்கே தெரியும். அங்கு போனால் எளிதில் சம்பாதித்து விடலாம் என்று நினைத்து அங்கு சென்றிருக்கிறான். ஆனால், தான் நினைத்ததைப்போல அங்கு அவனால் ஒரு பாரைக்கூட விற்பனை செய்ய முடியவில்லை. சாக்லெட் பார்கள் அடங்கிய சுமையைப் பின்னால் வைத்துக் கொண்டு, ஸ்டேஷனுக்கு முன்னாலிருக்கும் மலைமீது ஏறிச்செல்லும்போதுதான் யோஷினாக்கா கிஷோவின் மரணத்தைப் பற்றி மனதில் நினைத்ததாகக் கூறினான்.''
“யோஷினாக்கா?''
“இறுதியாக யோஷினாக்கா காயம்பட்டுக் கிடந்ததையும், தன்னுடைய மனிதர்களிடம் தன்னுடைய படைக் கருவிகள் மிகவும் கனமாக இருப்பதைப் போல தான் உணர்வதாகக் கூறியதையும், அதற்கு முன்பு அதைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை என்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டு வா. தன்னுடைய முதுகிலிருந்த ஒவ்வொரு சாக்லெட் பாரும் ஒரு இரும்பு பாரைப்போல தனக்குத் தோன்றியது என்றான் யமனாக்கா. உன் பற்கள் அதில் பட்டால், அவை உடைந்துவிடும் என்று நீ நினைக்கிறாய் அல்லவா? ஆச்சரியமே பட வேண்டாம்- அவனால் எதையும் விற்க முடியாது.''
“அப்படியா?''
“நீ சிரிக்கக்கூடாது. என்னுடைய நகைச்சுவை அந்த அளவிற்கு நல்லதல்ல. எது எப்படி இருந்தாலும்... நம் யாருக்கும் காரியங்கள் ஒழுங்காக இல்லை. உண்மைதானே? நீ திரும்பி வந்தபோது, உன்னுடைய சொந்த வீடு எரிந்து சாம்பலாகி விட்டிருந்தது. உனக்கு அணிவதற்குக் கூட எதுவுமே இல்லை என்ற நிலை... அதற்குப் பிறகு நடந்தது என்ன? உன்னுடைய வீட்டின் உரிமையாளர் உன்னை அங்கிருந்து போய் விடும்படிக் கூறினார். இதற்குமேல்... வேலைகளில் இடமில்லை. முழுமையாக அவை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டிருந்தன. நீ என்ன செய்ய முடியும்? உதாரணத்திற்கு- ஒருநாள் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் அவர்கள் கொசுவலைகளை வினியோகம் செய்து கொண்டிருந்தார்கள். அது நல்ல விஷயம்தான். ஆனால், அதை வாங்குவதற்குக்கூட உன்னிடம் பணம் இல்லாமலிருந்தது. நீ அவற்றில் ஒன்றை வாங்கினால், அது உடனடியாக கறுப்புச் சந்தை வியாபாரியிடம் போய்ச் சேர்ந்துவிடும். ஓ... அந்த நாசம்பிடித்த கறுப்புச் சந்தை வியாபாரிகள்! போரால் பாதிக்கப் பட்டவர்களுக்கென்று விசேஷமாகத் தரப்பட்ட ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த மனிதர்கள் அவர்கள்! நேற்று வினியோகிக்கப்பட்டதில் நான் என்ன வாங்கினேன் என்று நீ நினைக்கிறாய்? ஒரு ராணுவத் தலையணை உறையையும் குழந்தைக்களுக்கான ஷூக்களையும்....''
“...........''
“நான் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தேன் என்று நீ நினைக்கிறாய்? யாரையாவது காதலிக்க வேண்டுமென்று நினைத்தேன்''
“உன்னால் அந்த காரியத்தைச் செய்ய முடியுமென்று நான் நினைக்கவில்லை... மிகச்சிறந்த விஷயமேதான்.''
“நடக்காமல் போனாலும் போகலாம்... அப்படியென்றால், நான் என்றென்றைக்கும் தடிமனாகவே இருக்க வேண்டியதுதான்.''
“சரி... நீ என்ன சாப்பிடுகிறாய்?''
‘ஒரு கடையில் உருளைக் கிழங்குகளால் செய்யப்பட்ட பதார்த்தங்களை...'
“உருளைக் கிழங்குகளால் செய்யப்பட்டவையா? அவற்றை எனக்குப் பிடிக்கும். ஆனால், எனக்கு அதிக எடை உண்டாகவில்லையே!''
“என்ன காரணமென்று உனக்குத் தெரியுமா? ஏனென்றால், நீ காதலில் ஈடுபட்டிருக்கிறாய்!'' அவர்கள் சிரித்தார்கள்.
தான் காதலில் ஈடுபட்டிருப்பதாக- குறிப்பாக டோஷியோ நினைக்கவில்லை. ஆனால், அவனுக்கு அது தேவைப்பட்டது. அவளுடன் அவன் இருக்கும் வரை தன் அளவிற்கு வேறு யாரும் துன்பத்தை அனு பவித்திருப்பார்கள் என்று அவன் எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை. அவளுடைய முகத்தைத் தான் பார்க்கும்போதெல்லாம், மிகவும் கவலையே இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல அவனுக்குத் தோன்றும். போர்க்களத்தின் துயரங்களை கிட்டத்தட்ட அவன் மறந்து விட்டான். அவன் முதலில் ஜப்பானுக்கு வந்தபோது, தாறு மாறான நிலையில் கிடந்த தன்னுடைய வீடு அவனை உண்மையிலேயே நிலைகுலையச் செய்தது. ஆனால், அந்த பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.