
வெளியேறும் வழிக்கு அருகிலிருந்த கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு அவர்கள் செல்ல முயற்சித்தபோது, யோஷிக்கோ அங்கிருந்த எல்லாரின் காதுகளிலும் கேட்கும் வண்ணம் சாதாரணமாக கத்தினாள்: "குராக்கோ!'' அந்தக் கட்டடத்திற்கு வெளியே இருந்த விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த முகம் அங்கிருந்த மக்களுக்கு மத்தியில் லேசாக புன்னகைத்தது. "நீ இப்போது வீட்டுக்குத்தானே செல்கிறாய்? நாம் வீட்டுக்குச் சேர்ந்து செல்வோம். சரியா?'' தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த குராக்கோவைப் பார்த்து யோஷிக்கோ சொன்னாள். தங்களின் இல்லங்களை நோக்கி மிகவும் வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் அவர்கள் டோக்கியோ ஸ்டேஷனை நோக்கி நடந்து சென்றார்கள். அவர்கள் இருவருக்கும் நடுவில் சென்றுகொண்டிருந்த யோஷிக்கோ யுகாமிக்கு அவளுடைய கணவனின் மூலம் ஒரு குழந்தை இருந்தது. அவன் போரில் மரணமடைந்து விட்டான். ஆனால், அந்த மூவரில் அவள்தான் மிகவும் உற்சாகம் நிறைந்தவளாக இருந்தாள். இப்போது எவ்வாறு உறுதியாக நடக்கிறாளோ, அதேபோலத்தான் அவள் தன்னுடைய வாழ்க்கையிலும் திடமான முடிவுகளை எடுப்பாள் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அணிந்திருந்த அடர்த்தியான நீல நிற அரைக் கோட்டிற்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கூந்தல், அவளுடைய அகலமான தோள்களை மறைத்தன.
இடது பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த டோஷியோ முப்பதுகளின் பாதியைத் தாண்டி விட்டிருந்தாலும், அவனுடைய வயதைவிட அதிக வயதைக் கொண்டவனைப் போலத் தோன்றினான். அவனுடைய செயல்களில் மாறுபட்ட பல தன்மைகளையும், ஒரு ஊர் சுற்றித் திரியும் மனிதனின் களைப்பையும் ஒருவரால் மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும். ராணுவத்தில் அதிக காலம் இருந்தவர்களிடம் பொதுவாகவே அத்தகைய விஷயங்கள் இயல்பாகவே இருக்கும். ஆனால், அதே நேரத்தில் போர் மற்றும் ராணுவ வாழ்க்கையின் துயரங்களைக் கடந்து வாழ்ந்திருக்கும் ஒரு மனிதனுக்குள் மறைந்திருக்கும் பலத்தையும் அவனிடம் காணமுடியும். ராணுவத்தில் இருந்தபோது செய்ததைப்போலவே, அவன் தன்னுடைய நீளமான கால்களை இழுத்துக் கொண்டே நடந்தான்.
வலது பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்த குராக்கோ, கோடுகள் போட்ட வானத்து நீல நிறத்தில் பளிச்சென்றிருக்கும் ஆடையை அணிந்திருந்தாள். ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த சதுரமான இடத்திற்குள் அந்த மேலாடையின் கோடுகள் உருகிக் கொண்டிருப்பதைப்போல தோன்றின. அந்த இரவு நேரத்து வெளிச்சத்தில் அது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவள் மிகவும் குறைவாகவே பேசக்கூடிய குணத்தைக் கொண்டவளாக இருந்தாள். எதையும் மனம்திறந்து பேசக்கூடிய யோஷிக்கோவிடம்கூட அவள் அதிகம் பேசாதவளாக இருந்தாள். அவள் தரையைப் பார்த்துக் கொண்டே சிறுசிறு எட்டுகளை வைத்து நடந்து வந்து கொண்டிருந்தாள். பயணச் சீட்டுகள் வழங்கப்படும் சாளரத்திற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த மக்களின் வரிசைக்கு அருகில் வந்ததும், யோஷிக்கோ தன் வலது கையில் வைத்திருந்த ஒரு பெரிய பார்சலை அவர்களுடைய கண்களுக்கு முன்னால் நீட்டினாள். அங்கிருந்த குறிப்பிட்ட நபர் யாருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் அதைக் காட்டவில்லை. "நான் இன்றைக்கு இதைப் பார்த்துக் கொள்ளப் போகிறேன்'' என்றாள் யோஷிக்கோ.
“அது என்ன? நான் கேட்கலாம் அல்லவா?'' குராக்கோ கேட்டாள். “நான் இதை விற்பனை செய்யப்போகிறேன். இது ஒரு உரோமம்... கரடியின் தோல்...'' யோஷிக்கோ இதைக் கூறிக்கொண்டே, அந்த பார்சலின் ஒரு மூலையிலிருந்து கருப்பு நிற காலுறைகள் அணிந்த ஒரு பாதத்தை வெளியே இழுத்தாள். அவள் அதை குறும்புத்தனமாக இரண்டு முறை அசைத்துக் கொண்டே குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அது குராக்கோவையும் புன்னகைக்கச் செய்தது. “ஓ... ஒரு தோல்... அப்படித்தானே?'' டோஷியோ கேட்டான். அந்த தமாஷான கரடியின் பாதம் அவளுக்கு உபயோகமாக இருக்கிறது என்பதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான்.
“ஆமாம்.... இதற்கு எனக்கு அவர்கள் நான்காயிரம் யென்கள் தருவதாகக் கூறினார்கள். இது இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருந்தால், இன்னும் சற்று அதிகமாக பணம் கிடைத்திருக்கும். ஏனென்றால், இதை விற்பனை செய்யும்படி அவர்கள் என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். கடைசியில் நான் கொடுத்து விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். உண்மையாகவே இதற்குமேல் விற்பதற்கு என்னிடம் எதுவுமில்லை.'' யோஷிக்கோ சொன்னாள்.
“நான் அதே நிலைமையில்தான் இருக்கிறேன்... உனக்குத் தெரியுமா?'' குராக்கோ டோஷியோவின் பக்கம் திரும்பிக் கொண்டே புன்னகைத்தாள்.
யோஷிக்கோ சொன்னாள். “எல்லாரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம். அது பெரிய விஷயமில்லையா?''
“ஆனால், நீங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறீர்கள். ஏனென்றால், விற்பனை செய்வதற்கு உங்களிடம் ஏதாவது இருக்கிறதே.'' டோஷியோ சொன்னான். அவனுடைய வார்த்தைகள் வித்தியாசமானவையாக ஒலித்தன. ஆனால், திடீரென்று இரண்டு பெண்களின் அந்தரங்க வாழ்க்கைக்குள் தான் அறிமுகப்படுத்தப்படவே, அதனால் உண்டான பரபரப்பில் என்ன கூறுவது என்று அவனுக்கே தெரியாமலிருந்தது.
“சரி... இதே விஷயம் எப்போதும் நடந்து கொண்டிருக்க முடியாது. இன்னும் ஒரு வருடத்திற்குக்கூட இருக்காது... உன் நிலைமை என்ன?'' யோஷிக்கோ அவள் என்ன கூறுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவளை நோக்கித் திரும்பினாள்.
“இல்லை... '' குராக்கோ தன்னுடைய தலையை ஆட்டினாள். “என்னிடம் அப்படிப் பெரிதாக ஒன்றும் இல்லை.'' அவள் தலையை ஆட்டும்போது, ஒரு வகையான கவலையின் நிழல் அங்கு தெரிவதை டோஷியோ அவளுடைய முகத்தில் பார்த்தான்.
புகைவண்டி மிகவும் கூட்டமாக இருந்தது. அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தனர். பல மனித உடல்களாலும் அழுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது- அந்தப் பெண்களின் வாழ்க்கைகளை எது மிரட்டிக் கொண்டிருக்கிறதோ, அது தன்னுடைய எதிர் காலத்தையும் இருளச் செய்யும் என்று அவன் நினைத்தான். டோஷியோ பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம் அவனுடைய நண்பருக்குச் சொந்தமானது. அதில் பல வகையான பொருட்களும் இருந்தன. அதில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களிலிருந்து மேஜைகள், நாற்காலிகள், குழந்தைகளுக்கான சைக்கிள்கள் வரை இருந்தன. ஆனால், அந்தப் பொருட்களை மக்களுக்குக் கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தது. அந்த நிறுவனம் பொருளாதார பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு தள்ளாடிக் கொண்டிருந்தது. அவன் ஒரு காலத்தில் ராணுவத்திற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தாலும், அவன் கடந்த காலத்தில் ஆறு வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றிய வாழ்க்கை ஒரு க்ளார்க்கிற்கு இருக்க வேண்டிய திறமையை அவனிடமிருந்து முழுமையாகப் பறித்து விட்டிருந்தது.
யோட்ஷுயா ஸ்டேஷனில் குராக்கோ இறங்கிக் கொண்டாள். புகைவண்டியில் இப்போது குறைவான கூட்டம் இருந்தது. டோஷியோவும் யோஷிக்கோவும் நடுவிலிருந்த கதவுக்கு அருகில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
“அவள் அழகாக இருக்கிறாள். இல்லையா?'' யோஷிக்கோ கேட்டாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook