அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6428
அவனுடைய கண்கள் தன் முந்தைய காதலியின் சதைப்பிடிப்பான மார்பகங்களுடன் அவளுடைய மார்பகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும். ஏதோ ஒரு வகையில் அவன் திருப்தியில்லாதவனாக ஆனான். தன் இதயம் சுருங்கிப் போய்விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவளுடைய வெளிறிப் போன முகத்தையும், அதில் சற்று துருத்திக் கொண்டிருந்து கன்ன எலும்புகளையும் பார்க்கும்போது அவனுக்கு வெறுப்பு உண்டானது. அந்த முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமலிருந்ததால், காமவெறி உண்டாகும் அளவிற்கு அவனை அது ஈர்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவளுடைய முகத்தில் நவ நாகரிக அம்சங்கள் பலவும் இருந்தன. அவளுடைய முகத்தை தனக்கருகில் கொண்டு வரும்போது, அவளுடைய தாறுமாறான ஒப்பனையில் ஒரு வகையான அவமதிப்பு இருப்பதைப் போல அவன் உணர்ந்தான். அதற்காக எல்லா நேரங்களிலும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டு அவன் கவலையில் மூழ்கியிருக்கவில்லை. அதுவே திரும்பத் திரும்ப நடக்க, அவளுடைய அர்ப்பணிப்பு என்ற கனமான சுமையின்கீழ் கிடந்து தான் நசுங்கிக் கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான்.
ஜப்பானின் ராணுவ முகாமில் இருந்தபோது, அவள் மரணத்தைத் தழுவி விட்டாள் என்ற தகவல் அவனுக்கு வந்து சேர்ந்தது. அவள் அவன்மீது வைத்திருந்த காதல் விஷயத்தில் தான் போலித்தனமாக நடந்து கொண்டோம் என்ற மிகப்பெரிய குற்றத்தை முதல் முறையாக அவளது மரணத்தின் போது அவன் மனதிற்குள் ஒப்புக்கொண்டான். புதிதாக பயிற்சிக்கு எடுக்கப்பட்ட ஒரு மனிதனின் தொல்லைகள் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு மத்தியில், காதலின் மதிப்பு என்ன என்பதை அவன் இறுதியாக உணர ஆரம்பித்தான். சக ராணுவ வீரர்கள் அவனிடம் கூறுவதுண்டு. ‘நீ ராணுவத்திற்குள் நுழையும் வரை, எந்தச் சமயத்திலும் நீ உன் தாயைப் பாராட்டமாட்டாய்.'
ராணுவ முகாமில் படுக்கையில் படுத்திருந்தபோது, அவன் தன் தாயையும் காதலியையும் நினைத்துப் பார்த்தான். ஒருவர் இன்னொருவர்மீது அன்பு செலுத்தும் மிக உயர்வான செயலை அவன் சிந்தித்துப் பார்த்தான். அப்படி நினைத்துப் பார்ப்பது ஒரு வகையில் சர்க்கரையைப்போல இனிப்பானதாகவும், வேடிக்கையான விஷயமாகவும் இருந்தது. முப்பது வயதைக் கடந்த ஒரு மனிதன் கண்ணீரில் நனைந்து கொண்டு, கடினமான விஷயங்களை மென்று கொண்டு ஒரு போர்வைக்குக் கீழே படுத்துக் கொண்டிருந்தான். இதற்குமேல் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை என்ற முடிவுக்கு அவன் வந்தான். அன்பு என்ற ஒன்று மட்டுமே மதிப்புமிக்க விஷயமாக அவனுக்குத் தோன்றியது. கடுமையான பயிற்சிகளும் தண்டனைகளும் நிறைந்த தன்னுடைய அன்றாட ராணுவ வாழ்க்கையிலிருந்து அவன் அதைத் தெரிந்து கொண்டான். ஒரு உறுதியான காலணியால் தாக்கப்பட்டு சிவந்துபோன தன்னுடைய வீங்கிய கன்னங்களை தன் குளிர்ச்சியான கையால் தொட்டுப் பார்த்தபோது, அவன் தன் அன்னையின் மென்மையான கைகளையும், தன் காதலியின் இளம் உள்ளங்கைகளையும் நினைத்துப் பார்த்தான். அவன் போர்ப் பயிற்சிக்காகப் புறப்பட்டு வெளியே செல்லும் நேரங்களில், இதுபோன்ற உணர்ச்சிமயமான விஷயங்கள் அவனுக்குள் அதிகமான மிருக பலத்துடன் வளர்ந்து காணப்பட்டன.
புதிதாக ராணுவத்திற்குள் நுழைந்து, ஜப்பானில் அதே போன்ற துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்துவதும், பரிதாபம் கொள்வதும், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதும் இருந்து கொண்டிருந்தன. அவர்கள் உணர்ச்சிகள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்வார்கள். அங்கிருந்த இருண்ட கழிப்பறைக்குப் பின்னால் தங்களின் தலைவிதியை நினைத்து அழுவார்கள். அதே நேரத்தில் இப்படிப்பட்ட இதயங்களைப் பரிமாறிக் கொள்ளும் போக்கு முதலாம் ஆண்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியில்கூட இல்லாமல் போய்விட்டது. போர்க்களத்தில் இருக்கும்போது, எல்லா நேரங்களிலும் அவர்களை பகைவர்களின் துப்பாக்கி குண்டுகள் வந்து சந்திப்பதும், உணவுப் பொருட்களுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதும் தான் நடந்து கொண்டிருந்தன. ஒரு மனிதன் கடுமையான போரில் ஈடுபட்டிருக்கும்போது, அவன் தன் சொந்தக் கைகளால் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்- தன்னுடைய துயரங்களுக்குத் தானே மருந்து போட்டு குணமாக்கிக் கொள்ள வேண்டும்- தன் சொந்த மரணத்தைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்னும் விஷயங்களை அவன் கற்றுக்கொண்டான். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையை ஒரு தோலாலான பைக்குள், அவனேகூட, ஃப்ளாஸ்க்கிற்குள் நீரைப் பாதுகாத்து வைத்திருப்பதைப்போல பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். ஒரு மனிதன் பிறருக்கு நீரைத் தரக் கூடாது. அதேபோல அவன் தன்னுடைய வாழ்வை பிறருக்காகத் தந்துவிடக் கூடாது. தன்னுடைய சக மனிதர்களைவிட, அவனுடைய உடல் சிறிது பலவீனமானதாக இருந்தால், அவன் உடனடியாக மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டு விடுவான். மரணம் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும். முழு ராணுவக் குழுவே பசியால் துடித்துக்கொண்டிருக்கும் போது, ஒருவன் தன்னுடைய உணவை இன்னொருவனுக்குத் தருகிறான் என்றால், அவன் மரணத்தைத் தேடிக் கொள்கிறான் என்று அர்த்தம். ஒரு உணவுத் துண்டுக்கு முன்னால் தோழர்கள் ஒருவரையொருவர் உயிரோட்டமே இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.
அவன் நினைத்துப் பார்க்க முடியாத நரம்புகளின் முறுக்கேற்றலுடன் போர்க்களத்தில் இருக்கும்போது, திடீரென்று அவன் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க ஆரம்பித்து விடுவான். தன்மீது உண்மையான அன்பு வைத்திருந்தவர்களில் யாருமே தான் பழகியவர்களிலோ, நெருங்கிய நண்பர்களிலோ, தன்னுடைய சக போர் வீரர்களிலோ இல்லை என்பதையும்; தன்னுடைய தாயும் அந்தப் பெண்ணும் மட்டுமே அப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். எதிரிகளின் படை திடீரென்று ஆச்சரியம் உண்டாகும் வகையில் குண்டு போடுவதை நிறுத்தியபோது, மூச்சுவிட முடியாத அளவிற்கு ஒரு வகையான அமைதி போர்க்களமெங்கும் நிலவிக் கொண்டிருந்தது. அவன் மலை மீதிருந்து பயன்படுத்தப்படும் தன் 4.1 துப்பாக்கியின் தூரநோக்கி வழியாகப் பார்த்தபோது, அவனுக்கு முன்னால் விரிந்து கிடந்த சமவெளியில் ஏதேவொரு மரம் இருந்தது. அந்த மரம்தான் துப்பாக்கியால் சுடுவதற்குரிய குறியாகப் பயன்பட்டுக் கொண்டிருந்தது. பிறகு தன்மீது உண்மையான அன்பு வைத்திருந்த அந்த இரண்டு உருவங்களும் அடித்துப் புரண்டு தன்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். தொலைநோக்கி மூலம் பார்த்தபோது தெரிந்த காட்சியில், அவனுடைய இறந்துபோன காதலி தனக்கே உரிய அழகான நடையுடன் நடந்து வந்து, தன்னுடைய நீளமான இடது காலை வெளியே நீட்டிக் கொண்டிருந்தாள். எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தும், அவளால் அந்த நடையை எந்தச் சமயத்திலும் குணப்படுத்தவே முடியவில்லை. அவளுடைய அந்த நடையை தன் மனதில் மீண்டும் கொண்டு வந்து பார்த்தபோது, அவள் நேராக வேதனை நிறைந்த தன் மனதிற்குள் நடந்து வந்து இறங்குவதைப்போல அவன் உணர்ந் தான்.