அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6428
“ம்...'' ஏதோ சிந்தனையில் மூழ்கிவிட்டிருக்கிறான் என்பதைப் போல டோஷியோவின் குரல் இருந்தது.
“நீங்கள் அப்படி நினைக்கவில்லையா?''
“ஆமாம்... அவள் அழகாக இருக்கிறாள்... மிகவும் அழகாக இருக்கிறாள்...'' அவன் அவசரமாகக் கூறினான். ஆனால், குராக்கோவிடமிருந்து தான் பெற்ற வேதனை நிறைந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு தன்னிடம் வார்த்தைகள் இல்லாமல் இருந்தான். ‘அழகு' என்பதோ ‘வசீகரம்' என்பதோ அதற்குப் பொருத்தமான வார்த்தை இல்லை. அது அவனுடைய இதயத்தை மிகவும் ஈரமாக்கி விட்டது. இன்னும் சொல்லப் போனால்- அது அவனுடைய இதயத்தை பலமாகக் குலுங்கச் செய்தது.
“மிகவும் சிறிய வயதில் இருக்கும்போதிலிருந்தே அவளை நான் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்தக் காலத்தில் அழகான ஆண்கள் என்னைக் கவர்ந்ததே இல்லை. அதே நேரத்தில் அழகான பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்தச் சமயத்திலும் நான் சோர்வு அடைந்ததே இல்லை.'' யோஷிக்கோ சொன்னாள்.
“அது சரிதானா?'' டோஷியோ கேட்டான்.
தொடர்ந்து யோஷிக்கோ அவனிடம் சொன்னாள்: “உங்களுக்குத் தெரியுமா? அவள் என்னை மாதிரியேதான்...''
“உங்களை மாதிரியா?''
“ஆமாம்... போரில் அவள் தன்னுடைய கணவனை இழந்து விட்டாள்.''
“அப்படியா?'' டோஷியோவின் குரல் வேறு மாதிரி ஒலித்தது. ஆனால், அதற்குப் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. குராக்கோவின் உருவம் தன் கண்களுக்கு முன்னால் தோன்றுவதைப்போல அவன் உணர்ந்தான். அவன் தன்னுடைய கண்களுக்கு முன்னால் அவளுடைய முகத்தைக் கொண்டு வந்தான். அந்த அழகு நினைத்துப் பார்க்க முடியாத சக்தி படைத்ததாகவும், அது அவளுடைய முகத்திலிருந்து நேராகத் தன்னுடைய இதயத்திற்குள் வேகமாகப் பாய்ந்தோடி வருவதாகவும் அவனுக்குத் தோன்றியது. முதல் முறையாக அவளுடைய முகத்திலிருந்த அந்த வேதனைக்குக் காரணம் என்ன என்பதை அவன் தெளிவாகத் தெரிந்து கொண்டான்.
குராக்கோ காதல் வலையில் விழுந்திருக்கிறாள். திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். மூன்று வருடங்களுக்குப் பிறகு தன் கணவனை அவள் இழந்திருக்கிறாள் என்ற விஷயங்களை அவன் யோஷிக்கோ கூறி தெரிந்து கொண்டான். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. அவர்களுடைய சந்தோஷத்தை போர் வந்து அழித்துவிட்டது. சமீபத்தில், அவளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கலாம் என்பதற்காக முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவள் ஒப்புக்கொள்ளவில்லை.
டோஷியோ ஷின்ஜுக்கு ஸ்டேஷனில் யோஷிக்கோவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு, ஸ்டேஷனுக்குப் பின்னாலிருந்த ஒரு குறுகலான தெருவில் அவன் மட்டும் தனியே நடந்து சென்றான். தன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் எரிந்திருப்பதால், அந்த அப்பார்ட் மெண்டில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் ஒரே இருட்டாக இருக்கும். அதைப் பார்த்தால் தான் வெறுப்படைந்து விடுவோம் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். அவன் ஒரு சிறிய காபி கடைக்குள் நுழைந்து, கொஞ்சம் பலகாரங்களுக்கும் ஒரு கப் காபிக்கும் ‘ஆர்டர்' பண்ணினான். தன்னுடைய அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட அரிசி சாதத்தை ஒரு சூடான தட்டில் வைத்து அவன் சாப்பிட்டான். இன்னொரு முறை காபி கொண்டு வருமாறு கூறிவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
அந்த இரண்டு விதவைகளைப் பற்றியும் அவன் சிந்தித்துப் பார்த்தான். போர் கொடுத்த அடிகளால் உண்டான வேதனை என்ன என்பதை மிகவும் அருகிலும், சிறப்பாகவும் அவனால் இப்போது உணரமுடிந்தது. அந்த கரடியின் கறுப்பு உறைகள் கொண்ட கால் பாதங்களை நினைத்துப் பார்த்த அவன் உயிரோட்டமே இல்லாமல் புன்னகைத்தான். தொடர்ந்து தன்னுடைய இதயத்தில் ஒரு வேதனையை அவன் உணர்ந்தான். அவனுடைய முகமெங்கும் பரவுவதற்கு முன்பே, அவனுடைய புன்னகை மறைந்து விட்டது. அவளுடைய கணவன் அவள்மீது ஆழமான அன்பை வைத்திருக்க வேண்டும் என்றும், அதேபோல் அவளும் அவன்மீது நிறைய அன்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் அவன் நினைத்தான். அவளுடைய கணவன் இறந்துபோன பிறகு, அவள் எப்படி வாழ்ந்து கொண்டிருப்பாள்? அன்பு செலுத்தப்பட்ட உயிர் மறைந்துபோன பிறகு, அவளுடைய அன்பு எதை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும்? பகல் நேர சூரியனைவிட மறைந்து கொண்டிருக்கும் சூரியன் மிகவும் பயங்கரமாக எரிவதைப்போல, அது வானத்திலிருக்கும் காற்றை எரிப்பதற்கு முயற்சிக்குமோ? அந்த முழுமையடையாத அன்புதான் அவளுடைய முகத்தில் வேதனையை உண்டாக்கியிருக்க வேண்டும். அவளுடைய முகத்தில் வெளிப்படும் அந்த பாதிக்கப்பட்ட அழகு, தனிமையில் எரிந்து கொண்டிருக்கும் அந்த அன்பிலிருந்து உண்டாகியிருக்க வேண்டும்.
அவன் காபிக் கடையைவிட்டு வெளியேறி, ஸ்டேஷனுக்கு முன்னால் இருந்த கடைகளில் நிலவிக் கொண்டிருந்த ஆரவாரங்களுக்குள் மீண்டும் போய் கலந்து கொண்டான். தரம் தாழ்ந்த எண்ணெய் கொதிக்கும்போது உண்டாகும் தாங்க முடியாத ஒரு நாற்றம் அந்தப் பகுதி முழுவதும் பரவி விட்டிருந்தது. மின்சார விளக்குகள், உணவுப் பொருட்களைமென்று கொண்டிருக்கும் மனிதர்களின் முகங்களில் ஒரு மங்கலான வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. சூப் விற்பனை செய்யப்படும் ஓரத்திலிருந்த ஒரு கடையில், தன்னுடைய வாய்க்கு மிகவும் அருகில் உணவுப் பொருளை வைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனை அவன் பார்த்தான். மிகவும் ஒடுங்கிப்போய் இருந்த அந்த மனிதனின் முகத்தையே அவன் பார்த்தான். அந்த மனிதன் ஒரு பருத்தியாலான ராணுவச் சீருடையை அணிந்திருந்தான். அது இடுப்புப் பகுதியில் மிகவும் இறுக்கமாக இருந்தது.
அந்த இளைஞன் மிகவும் பசியில் இருந்திருக்க வேண்டும். அவன் ஒரு பகல் நேரத் தொழிலாளியாக இருக்கவேண்டும் என்று டோஷியோ நினைத்தான். மின் விளக்குத் தூண்களில் வைக்கப்பட்டிருந்த வேலைக்கு ஆள் எடுக்கும் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகைகளை அவன் நினைத்துப் பார்த்தான். அவற்றில் ‘... யென் நாளொன்றுக்கு. அறை, உணவு தனி...' என்று இருக்கும். இந்த உலகத்தில் தன்னைத் தானே அவன் எப்படி காப்பாற்றிக் கொள்கிறான்? விற்பதற்கு அவனிடம் எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால்- இந்த நிலையில் இருக்கும் ஒரு இளைஞனுக்கு நிச்சயம் நல்ல சம்பளம் கிடைக்காது. அதே நேரத்தில்- அவனுக்கு நாம் என்ன உதவி செய்ய முடியும்? அவன் நினைத்தான். இயந்திரத்தனமாக எதையோ மென்று கொண்டிருந்த அந்த மனிதனின் வாயையே டோஷியோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வாய்க்கு வெளியே இருந்த உதடுகள் மிகவும் தடிமனாக இருந்தன. அவை ஈரமாக இருந்தன. அந்த உண்ணும் பொருளுக்கு மேலே அவை ஒளிர்ந்து கொண்டிருந்தன. திடீரென்று அந்த வாய், போர்க்களத்தில் டோஷியோ அடித்துக் கொன்ற பன்றியின் வாயாக மாறியது.