அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6429
சுராவின் முன்னுரை
புகழ் பெற்ற ஜப்பான் எழுத்தாளரான ஹிரோஷி நோமா (Hiroshi Noma) எழுதிய ‘A red moon in her face’ என்ற அருமையான புதினத்தை ‘அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா’ (Aval mugathil oru sivappu nila) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன். 1915-ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கோபே என்ற இடத்தில் ஒரு புத்த மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த நோமா, க்யோட்டோ பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
அங்கு அவர் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் படித்தார். மார்க்ஸிய மாணவர் இயக்கங்களில் மிகவும் துடிப்புடன் செயல்புரிந்தவர் நோமா.
அவரின் முதல் புதினமான ‘ஷிங்கு சிட்டாய்’ 1952-ல் பிரசுரமானது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் பிரசுரமான போர் சம்பந்தப்பட்ட புதினங்களில் மிகச் சிறந்தது என்ற பெயரை அந்நூல் பெற்றது. 1971-ஆம் ஆண்டில் நோமாவிற்கு ஜப்பானின் புகழ்பெற்ற ‘தனிஸாக்கி விருது’ அவர் எழுதிய ‘ஸெய்னென் நோ வா’ என்ற நூலுக்காகக் கிடைத்தது. 1972-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான தாமரை விருது (Lotus Prize) அவருக்கு வழங்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு அவர் மரணத்தைத் தழுவினார்.
‘அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா’ 1947-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வாசகர்களை புதினத்துடன் ஆழமாக கட்டிப்போட்டு வைக்கக் கூடிய அபார திறமை ஹிரோஷி நோமாவிற்கு இருப்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்வார்கள். அது எவ்வளவு பெரிய விஷயம்! இக்கதையில் இடம்பெறும் டோஷியோவையும் குராக்கோவையும் நம்மால் மறக்கத்தான் முடியுமா?
சிறந்த ஒரு ஜப்பானிய நாவலை மொழிபெயர்த்த திருப்தி எனக்கு உண்டானதைப் போல, இதைப் படிக்கும் உங்களுக்கும் உண்டாகும்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,