அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6428
ஏற்கெனவே வெப்பத்தாலும் களைப்பாலும் சோர்வடைந்து போயிருந்த அவனுடைய இதயத்தை அவளுடைய தாறுமாறான நடை உலுக்கி எடுத்தது. அவள் உயிருடன் இருந்தபோது, அவன் அவளுடன் சேர்ந்து நடந்திருக்கிறான்- அவளுடைய இடது காலை தன் மனதிற்குள் அவன் திட்டியிருக்கிறான்- சபித்திருக்கிறான். அவளை மிகவும் கசப்புடன் அவன் நடத்தியிருக்கிறான். ‘என்னை மன்னித்து விடு.... மன்னித்து விடு...' எதிரிகளின் எல்லையைப் பார்த்த நிமிடத்தில், அவன் தன் மனதிற்குள் கூறிக் கொண்டான். தன்னிடமிருந்து எதுவுமே பெறாத தன் காதலியின் உருவத்தை மனதில் கட்டிப் பிடித்துக் கொண்டு, அவன் போரின் துயரங்களை மறந்து கொண்டிருந்தான்.
அவன் ‘சவுத் ஸீஸ்' என்ற பகுதியில் இருந்த படைக்கு மாற்றப்பட்டான். புதிதாக படைக்குள் நுழைக்கப்பட்ட மனிதன் என்ற வகையில், அவனைப் பொறுத்தவரையில் அது எதிரிகளுக்கு எதிரான போராக இருக்கவில்லை. ஜப்பானிய போர் வீரர்களுக்கு எதிரான போராக அது இருந்தது. வெப்பம், குதிரைகளின் முதுகுகளில் பித்த வெடிப்புகளை உண்டாக்கியது. அவற்றின் முதுகுப் பகுதிகளிலிருந்து தோல் உரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அதனால் சேணமாகக் கட்டப்பட்டிருந்த போர்வைகள் பயனற்றவையாக ஆயின. அதனால் குதிரைகளுக்கு பதிலாக புதிதாக ராணுவப் படைக்குள் சேர்க்கப்பட்ட மனிதர்கள் துப்பாக்கி வண்டிகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்கள். வெப்பம் மிகவும் கடுமையாக இருந்தது. அதனால் பகல் வேளைகளில் படைகள் நடந்து செல்வதென்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது. அந்தக் காரணத்தால் படைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன.
அதிகாலை ஒரு மணிக்கு கண் விழிப்பது; ஒன்று முப்பதுக்கு புறப்படுதல்; காலை பதினொரு மணிக்கு தூங்கச் செல்வது. ஆனால் புதிதாகப் படையில் சேர்ந்த வீரர்கள் குதிரைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்; போர்க் கருவிகளைச் சோதித்துப் பார்க்க வேண்டும்; துப்பாக்கிகளை சரி பார்க்க வேண்டும்; உணவுப் பொருட்களைத் தயார் செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால், அவர்கள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்க முடியும். களைத்துப் போன போர் வீரர்களால் இழுக்கப்பட்டுச் செல்லும் துப்பாக்கி வண்டிகள் அந்த அளவிற்கு வேகமாகச் செல்லாது. நான்கு அல்லது ஐந்து வருடங்கள் ராணுவத்தில் இருந்தவர்களான உயர் தனி அதிகாரிகள், குதிரைகளாக வண்டியை இழுத்துச் செல்லும் வீரர்களை மிகவும் கொடூரமான வகையில் திட்டுவார்கள். உயர்நிலையில் இருக்கும் போர்வீரர்களின் தாக்குதல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்கள் படாதபாடு படுவார்கள். புதிதாக படைக்குள் நுழைந்திருப்பவர்களுக்கு உண்மையான எதிரிகள் யார் என்றால்- அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் வெளிநாட்டுப் படை வீரர்களல்ல. அந்த எதிரிகள்- நான்காவது அல்லது ஐந்தாவது வருட வீரர்கள், பயிற்சியாளர்கள், பிறகு.... அதிகாரிகள்.
உயர்நிலையில் இருக்கும் போர்வீரர்களால் திட்டப்பட்ட- அடிக்கப்பட்ட டோஷியோ, தோள்களில் வேதனை உண்டாக அடர்ந்த காடுகளின் வழியாக துப்பாக்கி வண்டியை இழுத்துச் செல்லும்போது, தன்னுடைய காதலியின் உருவத்தை தன் இதயத்திற்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.
‘நீங்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அதைப் பற்றி மீண்டும் நினைக்கிறீர்கள்.... அப்படித்தானே?' காதல் என்ற ஒன்று உண்டான பிறகு ஒரு வார்த்தைகூட பேசாமல் படுத்திருந்த அந்தப் பெண் டோஷியோவைப் பார்த்து மென்மையான குரலில் கேட்டாள். தன்மீது அவனுக்கு அந்த அளவிற்கு திருப்தியில்லை என்ற விஷயம் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவன் அந்த இன்னொரு பெண்ணை நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று அவள் நினைத்தாள். "இல்லை... எதுவுமில்லை...'' அவன் உடனடியாக மறுத்துக் கூறுவான். ஆனால், அந்தக் குரல் எதையும் மறுப்பதைப்போல இருக்காது. அதற்கு பதிலாக அவள் கூறியதை ஒப்புக் கொள்வதைப் போலவே அது இருக்கும்.
‘உங்களைக் காதலிப்பதைத் தவிர, வாழ்வதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றியெல்லாம் நான் அக்கறை செலுத்திக் கொண்டிருக்க முடியாது!' அவள் அவனுக்கு எழுதுவாள்: ‘என்றாவது ஒருநாள் நீங்கள் என் மனதைப் புரிந்து கொள்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், அந்தச் சமயத்தில் நான் இறந்து போயிருப்பேன்.' அவளைப் பற்றி அவன் நினைக்கும்போதெல்லாம் அந்த வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் அவளுடைய இதயம் அவனுடைய நெஞ்சுக்குள் நுழைவதைப்போல இருக்கும். எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பதற்கும் தான் தகுதியானவனே என்று அவன் அப்போது நினைப்பான். அவன் தனக்குள் கூறிக் கொள்வான்: ‘இன்னும் துயரங்களை அனுபவிக்க வேண்டும்!' அதைக் கூறி விட்டு ஐந்தாவது வருட போர்வீரர்களின் சாட்டை அடிகளை வாங்கிக் கொண்டு துப்பாக்கி வண்டியை இழுத்துச் செல்வான். கீழே மிகவும் தூரத்தில் ஃபிலிப் பைன்ஸ் நாட்டுப் போர்வீரர்களால் எரிக்கப்பட்ட சீனிக் கிழங்கு தோட்டம் கரிந்துபோய் காணப்படும். வானத்தின் விளிம்பிற்கு மேலே ஒரு பெரிய சிவப்பு நிலா வந்து கொண்டிருக்கும். போர்வீரர்கள் எழுப்பிய தூசிகளால் அது மறைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் நிற கன்னங்களைக் கொண்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களும், அவர்களுடைய வியர்வையில் நனைந்த சீருடைகளும் நிலவின் ஒளியைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயம் ஏற்றப்பட்டவர்களைப்போல தோன்றுவார்கள். ஒடுகலாகவும், நீளமாகவும் இருக்கும் அந்த ராணுவ வீரர்களின் படை அணிவகுப்பு பெரிய அளவில் கட்டளை எதுவும் இல்லாமலே, ஒரு மலைப் பாதையைக் கடந்து அணி வகுத்துச் சென்று கொண்டிருக்கும். அது படிப்படியாக மிகவும் ஒடுங்கிப் போன வரிசையாக மாறிவிடும்.
‘இரண்டாம் எண்ணும் மூன்றாம் எண்ணும் வெளியே வாங்க!' ஒரு குழுவின் தலைவரின் மிகவும் மென்மையான குரல் பின்னாலிருந்து ஒலித்தது. அப்படி அழைக்கப்பட்டவர்கள் வரிசையின் நடுப்பகுதியிலிருந்து க்யாஸ் நிறைக்கப்பட்ட கவசத்துடன் வெளியே வந்து, ஒரு வார்த்தைகூட வாய் திறந்து கூறாமல் நன்கு மூச்சை விட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆடைகள் வேர்வையும் தூசியும் கலந்து கருப்பு நிறத்தில் காட்சியளித்தன. டோஷியோ தன்னுடைய இரண்டாவது கயிறை வேறொரு மனிதனிடம் கொடுத்துவிட்டு, மூன்றாவது கயிறை வைத்திருந்த தனி அதிகாரி நாக்காகவாவுடன் வரிசையை விட்டு வெளியே வந்தான். நாக்காகவா மீனவனாக இருந்தவன். தான் எப்போது வரிசையை விட்டு வெளியே வந்தோம் என்ற விஷயமே டோஷியோவிற்குத் தெரியாது. அவனுடைய கழுத்து மிகவும் வெப்பமாக இருந்தது. அவனுடைய கண்கள் அவன் தலைக்குள் நீச்சலடித்துக் கொண்டிருந்தன. அவனுடைய இதயம் துள்ளிக் குதித்து மார்பின் சுவர்கள்மீது வந்து வேகமாக மோதிக் கொண்டிருந்தது.