அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6428
ஒரு விதவையான குராக்கோ ஹோரிக்கவா தன் முகத்தில் வேதனை நிறைந்த உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். மிகவும் அமைதியாக இருந்த வண்ணம் மென்மையான உணர்வுகளை மறைத்து வைத்திருக்கக் கூடிய சில ஜப்பானியப் பெண்களிடம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய சுண்டி இழுக்கும் அழகு அவளுடைய முகத்தில் இல்லை. முகத்திற்கு நேர்மாறாக கண்களோ நாசியோ வாயோ செயல்படும்போது உண்டாகக் கூடிய வெளிப்பாடும் சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது. அந்த முகத்தைப் பார்க்கும் யாரும் அதில் ஒரு விரும்பத்தக்க உயர்வான தன்மை இருப்பதாகக் கூறுவார்கள். எது எப்படியோ, அவளுடைய முகம் மற்றவர்களிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டிருக்கிறது என்ற உணர்வை உண்டாக்கியதென்னவோ உண்மை. வாழ்க்கையின் போக்கில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு முழுமைத் தன்மை அந்த முகத்திலிருந்து திருடப்பட்டு விட்டிருக்கிறது என்பது மட்டும் அந்த முகத்தைப் பார்க்கும்போது தெரிந்தது. அந்த வித்தியாசத் தன்மை, நினைத்துப் பார்க்கமுடியாத சக்தியைக் கொண்டிருக்கும் ஒரு அழகை அந்த முகத்தில் நிறையச் செய்திருக்கிறது. அவள் முகத்திலிருந்த அந்த இனம் புரியாத கவலை, அவளுடைய உதடுகளின் மூலம் வெளிப்படுவதற்கு பதிலாக அவளுடைய கூந்தலிலும், அழகான நெற்றியிலும், அவளைச் சுற்றி நிலவிக் கொண்டிருந்த சூழலிலும் வெளிப்பட்டது. அவளுடைய உதடுகளோ வெளியே உண்டாகும் மாறுதல்களுக்கு ஏற்றவண்ணம் உணர்ச்சிகளுடன் மாறிக் கொண்டே இருந்தன.
தான் அவளை அதிகமாகப் பார்க்கப் பார்க்க, அந்த முகத்திலிருந்த உணர்ச்சிகள் படிப்படியாகத் தன்னுடைய இதயத்தின் அடித்தளத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை டோஷியோ கிட்டயாமா ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஒரு வருடத்திற்கு முன்னால், அவன் சவுத் ஸீஸ் என்ற பகுதியிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தான். அவனுக்கு நன்கு தெரிந்த ஒரு மனிதர் டோக்கியோ ஸ்டேஷனுக்கு அருகிலிருந்த கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார். இப்போது அவன் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவளை பெரும்பாலும் ‘எலிவேட்ட'ரில் வரும்போதோ ஓய்வு அறையைச் சுற்றி இருக்கும்போதோ பார்ப்பான். ஒவ்வொரு முறையும் அந்த இனம்புரியாத, வேதனையை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை அவளுடைய முகத்தில் பார்ப்பான். தன்னுடைய இதயத்தில் இருக்கும் ஏதோ வேதனை அவளுடைய முகத்தில் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை உணரும் அதே நேரத்தில், அதற்கு பதிலாக இனிமையான உணர்வும் ஒரு வலியும் தன் மனதில் உண்டாகி இருக்கின்றது என்பதையும் அவன் உணர்ந்தான்.
அவளுடைய வயது என்ன என்பதைப் பற்றி அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவள் அழகு அவளுடைய வயதை அவனிடமிருந்து மறைத்துக் கொண்டே வந்திருக்கிறது என்பதால், அவள் வயதைப் பற்றிய எந்தக் கேள்வியும் அவன் மனதில் உண்டாகவே இல்லை. நீண்ட காலமாகவே அவன் ஜப்பானியப் பெண்களைப் பார்க்கவே இல்லை என்பதுகூட அதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். இன்னும் குறிப்பாகக் கூறுவதாக இருந்தால், கடந்த காலத்தில் உண்டான சந்தோஷமளிக்காத ஒரு அனுபவத்தைத் தொடர்ந்து, பெண்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அவன் வாழ்ந்தான். அவள் ஏற்கெனவே திருமணமானவள் என்ற விஷயம் குறித்து அவன் சிறிதுகூட நினைத்துப் பார்த்ததில்லை. அவள் வயதில் மிகவும் இளையவள் என்றே அவன் கணக்குப் போட்டான். அதனால் அவனால் அப்படி நினைக்க முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால், இப்படிப்பட்ட விஷயங்கள் ஜப்பானியப் பெண்கள் மத்தியில் மிகவும் அரிதாகவே இருந்தன. அவளுடைய முகத்தில் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தனவோ, அவ்வகை உணர்ச்சிகள்தான் ஒரு இளம்பெண்ணின் முகத்தில் பொதுவாகவே தெரியும்.
அவனுடைய அலுவலகத்தைப் பார்த்தவாறு இருந்த ஹாலில் செயல்படும் ‘நியூயாச்சியோ இண்டஸ்ட்ரியல் கம்பெனி' என்ற நிறுவனத்தில் அவள் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அதேபோன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்து செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த ஹால் இருட்டாகவே இருக்கும். அவளுடைய முகத்தை சரியாகப் பார்த்ததுகூட இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவளை அவன் கடந்துசெல்ல நேர்ந்த அல்லது அவள் அவனைக் கடந்துசென்ற மணித்துளிகள் மிகவும் சிறியனவாக இருந்தன. ஹாலின் இருளடைந்த காற்றில் மிதந்து வருவதைப்போல அவளுடைய முகம் அவனை நெருங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும், அல்லது தான் திரும்பி ‘எலி வேட்ட'ரில் மனிதர்களின் முதுகுகளுக்கு மத்தியில் அவளுடைய முகத்தைப் பார்க்கும்போதும், அழகு நிறைந்த ஒரு சக்தி அவனை நோக்கி வந்து கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான். மலைகளின் உச்சியிலோ அல்லது வானத்தின் விளிம்பிலோ கற்பனை செய்து பார்க்க முடியாத இறுதி ஒளிக் கீற்றுகளுடன் பிரகாசமாகத் தோன்றி, காற்றின் எல்லையற்ற தன்மைக்குள் சூரியன் மறையும்போது, மறைந்து போகும் தெளிவான கீற்றுகளைப்போல அது இருந்தது.
ஆரம்பத்தில் அவளுடைய முகம்தான் அவனை ஈர்த்தது. ஆனால், அதே அளவில் அவளுடைய முழு சரீரத்திலிருந்தும் வெளிப்பட்ட வேதனை, அமைதி நிறைந்த ஆடையை அணிந்து, இருட்டான போர்வையைப் போர்த்திக்கொண்டு, அவளுடைய முகத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது. வேதனையில் நனைந்து விட்டிருக்கும் அவளுடைய சரீரம் தன்னுடைய கடந்தகால கசப்பான நினைவுகளை வெளியே கொண்டுவந்து மீண்டும் அசைபோட வைப்பதாக அவன் உணர்ந்தான். தன்னுடைய மனதிற்குள் இருக்கும் துயரங்களுக்கு ஏற்ற வண்ணம் அவளுடைய முகத்தில் ஒரு வகையான அழகு வெளிப்படுவதைப் போல அவனுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அது ஏன் தன்னுடைய இதயத்திற்குள் வந்து கூடு கட்டவேண்டும் என்பதை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. எது எப்படி இருந்தாலும்- அவளுடைய முகம் அவன் இதயத்திலிருந்த ஒரு காயத்தைத் தொட்டு விட்டது என்பதென்னவோ உண்மை. சில நேரங்களில் தன்னுடைய இதயத்தை ஏதோவொன்று அழுத்துவதைப்போல அவன் உணர்ந்தான். முதலில் அப்படிச் செய்வது எது என்பதை அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பிறகுதான் அவனே கண்டுபிடித்தான்- தன்னுடைய இதயத்தின் அடி ஆழங்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் வேதனையின் வெளிப்பாடுகளைப் பற்றிய நினைவுகள்தான் அதைச் செய்திருக்கிறது என்பதையே. தன் இதயத்தை ஈரமாக்கிய ஏதோவொன்றின் மையப்பொருளாக அவளுடைய முகம் இருப்பதை அவன் உணர்ந்தான். தன் மனதிற்குள் அவன் அவளுடைய முகத்தையே வெறித்துப் பார்த்தான். அதைத் தொடர்ந்து தன் இதயத்தில் வலி உண்டாவதைப்போல அவனுக்குத் தோன்றியது. தன்னுடைய சொந்தக் கால்களின் பாதங்களே தன்னுடைய கட்டளைகளைப் பின்பற்ற மறுக்கின்றன என்று, எப்படியோ உணர்ந்து கொண்ட உண்மை ஏற்படுத்திய மெல்லிய புரிதல் அவனுக்கு உண்டானது. இருண்ட, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்ச்சியின் ஒரு மின்வெட்டு திடீரென்று அவனுடைய சரீரம் முழுவதும் தோன்றியது.