
வாகனங்களின் ஒரு உறுமல் சத்தம் அவனுடைய உடலில் வந்து மோதியது. மீனவனான நாக்காகவாவின் வார்த்தைகள் அவனுடைய காதில் வந்து விழுந்தன. ‘இதற்குமேல் என்னால் நடக்க முடியாது!' ஒரு உறுமல் சத்தத்துடன் கலந்து அந்தக் குரல் மீண்டும் ஒலிக்க, அவன் கேட்டான்: ‘நான் இதை கையிலிருந்து நழுவ விடப்போகிறேன்... நான்... நான்...' வாகனங்களின் இரைச்சல் சத்தம் அவனுடைய உடலின் ஆழங்களுக்குள்ளிருந்து வெளியே வந்தது. ஏதோ வெப்பமான ஒன்று அவனுக்குள்ளிருந்து கிளம்பி வெளியே வந்தது. ‘நான் இதை கையிலிருந்து நழுவவிடப் போகிறேன்.... நான் நழுவவிடப் போகிறேன்.' நாக்காகவாவின் உடல் தன்னிடமிருந்து விலகி மரணத்தை நோக்கி நகர்ந்து செல்வதை அவன் உணர்ந்தான். நாக்காகவாவை மரணத்திற்குள் தான் தள்ளி விடுவதை அவனே பார்த்தான். புகைவண்டி தான் போய்க்கொண்டிருந்த ஒரு குகைப் பாதையை அதிரச் செய்தது. தன்னுடைய இருண்ட சிந்தனைகள் தன் உடம்பிற்குள் இருந்து புறப்பட்டு மேலே வருவதைத் தொடர்ந்து, அவன் வேதனையில் மூழ்கினான். ‘என்னால் உதவ முடியாது... என்னால் உதவ முடியாது... என்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள... என்னுடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள... வேறு வழியே இல்லை. அப்போது நான் எப்படி இருந்தேனோ, அதேமாதிரிதான் நான் இப்போதும் இருக்கிறேன். இதே போன்ற சூழ்நிலையில் இருக்கும் பட்சம், யாராக இருந்தாலும், என் கண்களுக்கு முன்னால் ஒரு நண்பனை மரணத்தைத் தழுவவிட்ட அதே செயலைத்தான் செய்வார்கள். நான் என்னுடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டேன். அவளுக்கும், அவளுடைய துயரங்களுக்கும் உதவுவதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.'
அவளுடைய சோர்வடைந்துபோன முகத்திலிருந்து வெளியேறி அவனை நோக்கி வந்த அவளுடைய இதயத்தின் அகலத்தை அவனால் உணரமுடிந்தது. ‘நான் அவளுடைய வாழ்க்கையில் இருக்க மாட்டேன். நான் என் சொந்த வாழ்க்கையில் தான் இருப்பேன்.' அவளுடைய இதயத்திற்குள் இருப்பதுடன் தான் தொடர்பு கொள்வதற்கில்லை என்று அவன் நினைத்தான். ‘என்னால் முடியாது.... பிற உயிர்களின் வாழ்க்கைகளில் என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் என்னுடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது, பிற உயிர்களின் வாழ்க்கைகளை நான் எப்படி காப்பாற்ற முடியும்?'
புகைவண்டி யோட்சுயா ஸ்டேஷனை அடைந்தது. புகைவண்டி நின்றது. கதவு திறந்தது. குராக்கோ தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவளுடைய சிறிய வலது பக்கத் தோள் அவனுடைய இதயத்தை அழைப்பதை அவன் பார்த்தான். ‘நான் அவளை வீட்டில் கொண்டுபோய் விடலாமா? நான் என்ன செய்வது?' அவன் சிந்தித்தான். ‘இல்லை... நான் மாட்டேன்... நான் மாட்டேன்...'
“குட்பை...'' அவன் தன் தலையை குனிந்துகொண்டே சொன்னான்.
“ம்...'' இயந்திரத்தனமாக செய்வதைப்போல, தன்னுடைய முகத்தை பின்னோக்கி இழுத்துக் கொண்டே அவள் சொன்னாள். ஒரு உயிர்ப்பு இல்லாத புன்னகை அவளுடைய முகத்தில் தோன்றியது. அவள் புகைவண்டியை விட்டு இறங்கினாள். கதவு மூடியது. புகைவண்டி புறப்பட்டது. புகை வண்டியில் அமர்ந்திருந்த தன்னைத் தேடிக் கொண்டிருந்த அவளுடைய முகத்தை ஒரு கண்ணாடியின் வழியாக அவன் பார்த்தான். நடைபாதையில் இருந்த அவளுடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தில் விலகிப் போய்க் கொண்டிருந்தது. கீறல் விழுந்த கதவின் கண்ணாடி அவளுடைய முகத்தைக் கீறுவதை அவன் பார்த்தான். தன் வாழ்க்கை அவளுடைய முகத்தைக் கீறுவதை அவன் பார்த்தான். தன் வாழ்க்கை அவளுடைய வாழ்க்கையைக் கீறுவதை அவன் பார்த்தான். ஒரு பளபளவென்றிருந்த கண்ணாடி தங்களுடைய வாழ்க்கைகளுக்கு இடையே முடிவற்ற வேகத்துடன் கடந்து சென்று கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook