அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6430
“ஆமாம்... எனக்கு உண்டாகியிருக்கிறது. அது வினோதமான ஒரு விஷயமாக உங்களுக்குப்படுகிறதா?''
ஒரு பூங்காவில் கூட்டமாக மனிதர்கள் அவர்களைக் கடந்துசெல்ல, அவர்கள் வெளியே வந்து ‘ஜின்ஸா'விற்குச் சென்றார்கள்.
“எல்லா நேரங்களிலும் உங்களையே நான் பணம் செலுத்தும்படிச் செய்திருக்கிறேன். அதனால், இன்று இரவு தயவுசெய்து என்னை பணம் செலுத்த அனுமதியுங்கள்.''
“நீங்கள் சொல்கிறீர்கள் ‘எல்லா நேரங்களிலும்' என்று. ஆனால், நாம் பருகுவது காபி மட்டும்தானே!''
“இருக்கட்டும்... எது எப்படியோ... என்னை பணம் செலுத்த அனுமதிப்பீர்கள் அல்லவா? ஏனென்றால் இன்று இரவுக்கு என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது.''
அவர்கள் ஒரு எளிமையான சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, அருகிலிருந்த காபி ஹவுஸுக்குள் காபி பருகுவதற்காக நுழைந்தார்கள். தாங்கள் பேசவிரும்பும் ஏதோ சில விஷயங்கள் தங்களின் மனங்களில் இருக்கின்றன என்றும், அவற்றைப்பற்றி தாங்கள் பேசியே ஆகவேண்டும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இறுதியில், அவனுடைய ஆர்வம் நிறைந்த கண்களைப் பொருட்படுத்தாமல், எப்போதும்போல அந்த அமைதியை குராக்கோ உடைத்தாள்.
“டோஷியோ!'' அவள் சொன்னாள்: “நீங்கள் எதையோ தேடிக் கண்டுபிடிக்கப் போவதாக சொன்னீர்கள் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். நீங்கள் அதை கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதைப் போல தோன்றுகிறதே!''
“இல்லை.... அதை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. எனினும், நான் மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டேன். வேலையைச் செய்து கொண்டிருக்கும்போதே, படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் போன்ற உணர்வு எனக்கு உண்டாக ஆரம்பித்திருக்கிறது. ஒருநாள் நான் நல்ல ஒரு மனிதனாக ஆவேன். அப்படி ஒரு நல்ல மனிதனாக ஆனபிறகுதான் மரணமடைய வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.''
“......''
“அந்தப் போருக்கு மத்தியில் எப்படியோ வாழ்வதற்கு கற்றுக் கொண்டேன். அந்த வகையில் வாழாமல் போயிருந்தால், நான் எப்போதோ இறந்திருப்பேன்.''
“நல்ல நாட்கள் வருமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.''
“யாருக்கு? ஜப்பானியர்களுக்கா?''
“சரிதான்....'' அவள் தடுமாறினாள்.
“.......''
“உண்மையாக நல்ல ஒரு நபரை உங்களுக்காகக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.''
“அப்படியா?'' டோஷியோ அந்த இடத்தில் நிறுத்தினான். அவளுடைய வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தைப் பற்றி சிந்தித்த அவன் குரலைச் சற்று மாற்றி வைத்துக்கொண்டு சொன்னான். “நன்றி.... ஆனால், நீங்கள் எப்படி?''
“ஓ... நானா?'' அவள் தன்னுடைய முகத்தைச் சற்று பின்னோக்கி இழுத்துக் கொண்டாள்.
“நான் சொல்ல நினைத்தது என்னவென்றால்... உங்கள்மீது யாரோ ஈடுபாட்டுடன் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்'' அதே தொனியில் டோஷியோ கூறினான்.
“ஓ... நீங்கள் கேள்விப்பட்டீர்களா?'' அவனுடைய அமைதியான குரலால் நசுக்கப்பட்டவளைப்போல குராக்கோ கேட்டாள்.
“ஆமாம்.... நான் கேள்விப்பட்டேன்.''
“ஆனால்...'' அவள் தடுமாறினாள்: “அதைப் பற்றி நானே முயற்சித்தாலும், என்னால் சந்தோஷம் கொள்ள முடியாது. டோஷியோ, மீண்டும் திருமணம் செய்துகொள்வது என்பது நல்ல விஷயம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?''
“ஒரு வகையில் பார்த்தால்... நல்ல விஷயம்தான்.''
“அப்படியா?'' அவர்கள் தங்களுடைய இதயங்களை தூரத்தில் வைத்துக்கொண்டு ஒருவரோடொருவர் ஒரு வார்த்தைகூட பேசிக் கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் யுராக்குச்சோ ஸ்டேஷனுக்கு வந்தபோது, நேரம் சற்று அதிகமாகி விட்டிருந்தது. எட்டு மணியைத் தாண்டி நீண்ட நேரமாகியிருந்தது. நடைபாதையில் அதிகமான ஒப்பனையுடன் கேபரே பெண்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். மங்கலான விளக்கொளிகளுக்குக் கீழே அவர்கள் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். நடைபாதையின் எல்லையில் நின்றிருந்த பெண்களிடமிருந்து விலகி, டோஷியோவும் குராக்கோவும் தங்களுடைய கண்களுக்கு முன்னால் கீழே பரந்து காட்சியளித்த இருண்ட நகரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியே செல்லக்கூடிய ரயில்கள் ஒன்றுக்குப்பின் இன்னொன்று என்று வந்துகொண்டிருந்தன. ஆனால், அவர்கள் எந்த ரயிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்களோ, அந்த சுரங்கத்தைக் கடந்து செல்லக்கூடிய ரயில் வரவே இல்லை.
‘அவள் இப்படியே எவ்வளவு நாட்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்? தன்னிடமிருக்கும் பொருட்களை விற்றுத்தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவள் கூறினாள். விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்து முடித்து விட்டால், அதற்குப் பிறகு அவள் என்ன செய்வாள்?' தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த குராக்கோவைப் பற்றி, இரவு நேரத்தின் மங்கலான தெரு விளக்குகளைப் பார்த்துக்கொண்டே அவன் நினைக்க ஆரம்பித்தான்.
‘இந்த பூமியில் நான் என்ன செய்ய வேண்டுமென்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்? எதை நான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்?' அவன் தொடர்ந்து சிந்தனையில் மூழ்கினான்.
‘அவளிடமிருந்து நான் காதலை எதிர்பார்க்கிறேனா? போர்க்களத்தில் தன்னுடைய கணவனை இழந்த ஒரு பெண், போர்க்களத்தில் இருக்கும்போது தன்னுடைய இறந்துபோன காதலியைப் பெருமையுடன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதனுடன் வந்து இணைந்திருக்கிறாள்!' அது மொத்தத்தில்- ஒரு புதுமையான விஷயம்போல தோன்றியது. திடீரென்று தனக்கு அருகில் ஆடிக் கொண்டிருக்கும் சிறிய வாழ்க்கையை அவன் நினைத்துப் பார்த்தான். எங்கு பார்த்தாலும் துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கும், குராக்கோவின் உடலுக்குள் மிகவும் ஆழத்தில் மறைந்து கிடக்கும் ஒரு வாழ்க்கை.... வாழ்வின் ஆழத்திற்குள் ஏதோ மிருகத்தைப்போல அந்த துயரங்கள் மிகவும் அமைதியாக அங்கு நிறைந்திருந்தன. ‘இல்லை... நான் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனோ, அது அவள் இல்லை.... அவள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாளோ, அது நானும் இல்லை. என்னுடைய துயரங்கள் விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவள் சொன்னாள். அவளுடைய துயரங்களுக்கு முன்னால் நானும் எதுவும் செய்ய முடியாமல் நின்று கொண்டிருக்கிறேன். எனக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் அந்த ஒற்றை ஆன்மாவிற்கு என்னால் ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். அதே நேரத்தில்- என்னுடைய வாழ்க்கை என்னுடையது- அவளுடைய வாழ்க்கை அவளுடையது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.' அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான். மீண்டும் வெளியே செல்லும் ஒரு ரயில் வந்தது. திடீரென்று அவள் ரயிலை நோக்கி நடந்துகொண்டே கூறினாள்.
“நாம் அதில் ஏறுவோம்.''
“ஏன்?'' அவளுடைய சிறிய பின்பகுதியால் பிடித்து இழுக்கப்பட்டதைப்போல, அவளைப் பின்தொடர்ந்து கொண்டே டோஷியோ கேட்டான்.
“நாம் பயணம் செய்வோம். எது எப்படியோ... நாம் இதில் செல்வோம்.'' அவள் அவனை வேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ரயிலுக்குள் நுழைந்து சென்றாள். அவனை அவள் பார்க்கவேயில்லை.
அவளுடைய உடலின்மீது விட்டெறியப் பட்டதைப்போல அவன் அவளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அவளுடைய முகத்தில் ஒரு இளமையான தூண்டுதல் நிழலாடிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.