அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6428
அவன் நாக்காகவாவுடன் சேர்ந்து சிறிது நேரம் தரையில் விழுந்து கிடந்தான். ஆனால், இறுதியாக வரிசையின் கடைசிப் பகுதியைப் பின்தொடர்ந்து நடந்தார்கள். அவர்கள், துருத்திக் கொண்டிருந்த எலும்புகளைக் கொண்ட ஒரு குதிரையின் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஆனால், குதிரையின் காலடிகளுடன் போட்டி போட்டு நடப்பதற்கான பலத்தை அவர்கள் இழந்துவிட்டிருந்தார்கள். அவர்களுடைய கால்களிலிருந்த உணர்ச்சிகள் காணாமலே போய்விட்டன.
அந்தக் கால்களுடன் அவர்களால் இரண்டு நாட்களுக்கு நடக்கவே முடியாது. சற்று மேடாக இருந்த இடத்தில் வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் தங்களுடைய உடல்களிலிருந்து குருதியைக் குடிப்பதைப்போல உணர்ந்தார்கள். தற்காலிகமாக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு படைத்தலைவரும் உயர் அதிகாரியுமான ஒருவர் கீழே இறங்கி வந்து சொன்னார்: ‘நீங்கள் என்ன நாசம் பிடித்த காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?' அதைக் கூறிவிட்டு, கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்த அவர்களின் கைகளில் சாட்டையைக் கொண்டு அடித்தார். ‘குதிரையை இப்படியா பிடித்துக் கொண்டு திரிவது? அந்தக் குதிரை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? மனிதர்களே, உங்களுக்கு மாற்றாக ஏராளமான ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், குதிரைகளுக்கு இல்லை... இந்த அளவிற்கு கடுமையாக வெப்பம் இருக்கும்போது, தேவையில்லாமல் எனக்கு தொந்தரவு தராதீர்கள்.' அவர்கள் அந்த வெளியிலிருந்து வந்திருக்கும் உயர் அதிகாரியையே எந்தவொரு வார்த்தையும் பேசாமல் பார்த்தவாறு, தாங்கள் பிடித்திருந்த கடிவாளத்தைக் கைவிட்டார்கள்.
அவர்கள் குதிரையிலிருந்து விலகிச் சென்றார்கள்.
அவர்கள் எந்த அளவிற்கு ஆழமாக சுவாசித்தார்களோ தெரியவில்லை, அவர்களுடைய நுரையீரல்களில் அசுத்தக் காற்று நிறைந்திருந்தது. இன்னும் சொல்லப் போனால் அவர்களால் மூச்சு விடவே முடியவில்லை. இறுதியாக, அவர்களின் வலது பக்க தோள்களை அழுத்திக் கொண்டிருந்த க்யாஸ் நிறைக்கப்பட்ட கவசங்கள் இறுதி அடியைக் கொடுக்கும்போலத் தோன்றியது. பகல் வேளையில் ஆதவனின் வெப்பத்தில் குளித்த மலைவெளி, இரவு நேரத்தில் மூச்சை விட்டுக் கொண்டிருந்தது. அது வியர்வையும் தூசியும் நுழைந்திருக்கும் மிகச்சிறிய துவாரங்களைக் கொண்ட ராணுவ வீரர்களின் உடல்களை போர்வையென மூடிக்கொண்டிருந்தது. அவர்கள் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சரியாகக் கூறுவதாக இருந்தால்- அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த அவர்களுடைய குழு, அவர்களுடைய உடல்களை முன்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தது.
குதிரைக்கு அப்பாலிருந்து நாக்காகவாவின் குரல் வந்ததை டோஷியோ கேட்டான். ‘என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது.' நாக்காகவா அதே வார்த்தையை அதற்கு முன்பும் பல முறை திரும்பத் திரும்ப கூறி விட்டிருந்தான். ஒவ்வொரு முறை கூறும்போதும், அந்த வார்த்தை டோஷியோவின் பலவீனமான இதயத்தைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது. முழுமையாககளைத்துப் போய், நாக்காகவா தன்னுடைய எலும்புகள் நிறைந்த நீளமான உடலில் எந்தவித சக்தியும் இல்லாமல் இருந்தான். ‘இந்த முறை நான் உண்மையாகவே கூறுகிறேன். என்னால், முடியவில்லை. இதற்கு மேல் என்னால் நடக்க முடியாது' நாக்காகவா சொன்னான். எனினும், சுமார் அரைமணி நேரம் குதிரை தன்னை இழுத்துச் செல்லுவதை அவன் எப்படியோ சமாளித்துக் கொண்டான்.
அந்தக் குழு மவுண்ட் சாமத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது. அங்கு உடனடியாக ஒரு அணிவகுப்பு கட்டாயம் தேவைப்பட்டது. இல்லாவிட்டால், வலது பக்கத்திலிருந்து சிறந்த ஏற்பாடுகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் வந்து கொண்டிருந்த எதிரிகளின் படையினரிடமிருந்து பலமான அடியை அந்தக் குழு கட்டாயம் வாங்கும். அதனால் அங்கு சிறிதுகூட நிற்காமல், அந்தப் படை தன்னுடைய நடையைத் தொடர்ந்தது. ‘நான்.... நான் என் கையை விடப் போகிறேன்.... நான் விடுவதைத் தவிர வேறு வழி இல்லை.' நாக்காகவாவின் குரல்.... அவனுடைய நண்பன் முழுமையாக களைப்படைந்து போய் விட்டான் என்பதை டோஷியோவுக்கு உணர்த்தியது. வார்த்தையின் இறுதிப் பகுதி இறந்துபோய்விட்டது. முதலில், அந்த குரல் டோஷியோவின் பெயரைக் கூறி அழைப்பதைப்போல இருந்தது. ஆனால், அது முடிவடைவதற்குள் அந்த அழைப்பு மறைந்து போய்விட்டது. அதற்குப் பிறகு வந்த குரல் ஏதோ அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டதைப் போன்று அவனுக்கு தோற்றம் தந்தது. இன்னும் சொல்லப்போனால்- தன்னுடைய மன ஓட்டம் தன் கடந்தகால வாழ்க்கையின் வழியாக முற்றிலும் ஓடிக் கொண்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அந்த மனதைத் தொடும் வார்த்தைகள் டோஷியோவின் இதயத்தின் அடித்தளத்தில் போய்ச் சேர்ந்தன. ஆனால், தன்னுடைய தோழனுக்கு உதவக்கூடிய அளவிற்கு அவனுக்கு சக்தி இல்லாமலிருந்தது. அவனுடைய தோளைத் தட்டிக் கொடுக்கவோ, அவனை உற்சாகப்படுத்தவோகூட அவனால் முடியவில்லை. அப்படியே டோஷியோ ஏதாவது செய்ய ஆரம்பித்தால், தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்வதற்கான பக்க பலத்தைக்கூட அவன் இழந்து மரணத்தைத் தழுவ வேண்டியதிருக்கும். அவன் அமைதியாக இருந்தவாறு தன்னுடைய நடையைத் தொடர்ந்தான். அவன் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான். அப்போதும் நாக்காகவாவின் குரல் அவனைக் கிட்டத்தட்ட பிடித்து இழுத்தது. ‘நான் போகப் போகிறேன்.' திணறிக் கொண்டே நாக்காகவா கூறினான். அவனுடைய கைகள் அந்த அணியிடமிருந்து விடுபட்டிருந்தது. அவன் கீழே விழுந்து, அசைவே இல்லாதவனாக ஆனான். அடர்த்தியான தூசி படிந்து விட்டிருந்த அந்த சாலையைத்தான் தன்னைப் புதைக்கும் இடமாக அவன் தேர்ந்தெடுத்திருந்தான். அவன் தன் தலையை லேசாக ஆட்டினான் அதன் மூலம் இதுவரை அடிமைத்தனம் என்ற கயிறால் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்த தன் உடலை, மரணம் விடுதலை செய்திருக்கிறது என்று கூறுவதைப்போல அந்தச் செயல் இருந்தது. தொடர்ந்து அவன் தரையில் சரிந்து கிடந்தான். செயல்களை மிகவும் மெதுவாகச் செய்யக் கூடியவனாகவும், ஞாபக சக்தியில் மிகவும் மோசமானவனாகவும், அடிக்கொருதரம் உயர் அதிகாரிகளால் அடிக்கப்படக் கூடியவனாகவும் இருந்த நாக்காகவாவின் வாழ்க்கை மவுண்ட் சாமத்திற்கு அருகில் முடிவடைந்தது. அந்த வகையில் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன் கண்களுக்கு முன்னால்- டோஷியோ ஒரு தோழனை மரணத்தைத் தழுவ விட்டான். தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, தன் அன்னையும் மரணத்தைத் தழுவி விட்டாள் என்ற விஷயத்தை அவன் தெரிந்து கொண்டான்.
வசந்த காலத்தில் ஆரம்பத்தில் ஒருநாள், அதே நிறுவனத்தில் வேலை பார்த்த யோஷிக்கோ யுகாமியுடன் சேர்ந்து டோஷியோ அலுவலகத்தை விட்டு வெளியேறினான். அன்றைய பகல் வேளையில், அலுவலகப் பணியாட்கள் எலிவேட்டரின் வாசலுக்கு முன்னால் கூட்டமாக நின்றிருந்தார்கள். ஒரு வர்த்தக நிறுவனத்தின் புகை பிடிக்கும் பகுதியில் இருந்த- வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசும் இடத்திற்கு அருகில் போடப்பட்டிருந்த மேஜையின்மீது சில்லரை குவியல்களாகக் குவிந்திருக்க அதற்கு முன்னால் மக்கள் கூட்டமாகக் குழுமியிருந்தார்கள்.