அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6428
தாங்கிக்கொள்ள முடியாத ஒரு உணர்வை அவன் அப்போது அனுபவித்தான். அதைத் தொடர்ந்து தன்னுடைய சரீரத்தின் ஒரு மூலையிலிருந்து வெப்பம் கிளம்பி வெளியேறுவதைப்போல அவன் உணர்ந்தான்.
‘ஓ.... இல்லை... இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது....' தான் நடந்து கொண்டிருந்தபோதே அவன் மறுத்துக் கூறினான்.
‘பன்றி! பன்றி!' அவன் உரத்த குரலில் கூறினான். தன்னுடைய சரீரத்தின் அடி ஆழங்களுக்குள் இருந்து வெப்பமாக ஏதோவொன்று கொதித்துக் கொண்டு வெளியே வருவதைப்போல அவனுக்குத் தோன்றியது. டோஷியோவின் தலைக்குள் பன்றியின் உதடுகள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தன. ‘அந்த பாழாய்ப் போனவனின் மகன் மாட்சு சாக்கா என்னுடைய ஃப்ளாஸ்கில் இருந்த நீரை லிங்காயென் வளைகுடாவில் இருந்தபோது திருடி விட்டான். நான் உணவை வாயில் வைத்துக் கொண்டு படாதபாடு பட்டேன். பயங்கரமான அனுபவம்...' அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான். பன்றியின் ஈரமான உதடுகள் அவனுடைய தலைக்குள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தன. 'மாட்சு சாக்காவின் வாய் பன்றியின் வாயைப் போலவே இருக்கிறது. என்னுடைய வாயும்தான்.' அவன் கூறிக் கொண்டான்.
அவை மிகவும் பயங்கரமானவையாகவும் திரும்பத் திரும்ப மனதில் தோன்றிக் கொண்டும் இருந்தன. ‘ஓ கடவுளே!' அவன் சிறிது நேரத்திற்கு பயத்தால் பீடிக்கப்பட்டவனைப்போல இருந்தான்.
அவன் தன்னுடைய கண்களை இறுக மூடிக் கொண்டு, தன் தலையை ஆட்டினான். பன்றியின் வாய் மறைந்ததும், மிகவும் அடர்த்தியான கருப்பு நிறத்தில் காட்சியளித்த எல்லையில் அவன் ஒரு கருப்பு ஜுவாலையைப் பார்த்தான். அவன் தன் கண்களைத் திறந்தான். அவனுடைய சரீரத்திற்குள்ளிருந்து கிளம்பி மேலே வந்த உணர்வுகள் அலையைப்போல மறைந்தன.
உணர்வுகள் எழுந்து மேலே வந்து கொண்டிருந்த தன் மனதைக் கூர்ந்து பார்த்தவாறே அவன் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். இதயத்தின் உணர்வுகளின் சில பகுதிகள் ஒரு கருப்பு நிற ஜுவாலையைப்போல தங்கி விட்டிருந்தன. அந்த உணர்வு எவ்வளவு பலம் கொண்டதாக இருந்தாலும், மனிதத்தன்மைக்கு எதிரானதாக இருந்தாலும் அது சில மணித் துளிகள் மட்டுமே நீடித்து நிற்கும். "மற்ற நேரங்களில் நான் மனிதத் தன்மையுடன் நடந்து கொண்டு, என்னுடைய உணவைச் சாப்பிட்டுக் கொண்டு, நடந்து, மூச்சு விட்டுக் கொண்டு இருப்பேன். "அவன் தனக்குள் கூறிக் கொண்டான். அதே நேரத்தில்- அங்கே சாப்பிட்டுக் கொண்டும் நடந்து கொண்டும் இருந்த மனிதர்களுக்கு அன்பு என்றால் என்னவென்று எப்போதும் தெரியவே தெரியாது என்ற விஷயத்தை அவன் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தான். ‘அந்த போர்க்களத்தில் இருக்கும் போது, நான் எப்படி என்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேனோ, அதேபோல தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்ததைத் தவிர, அவர்கள் வேறு எதுவுமே செய்தது இல்லை. ஒரு சிறிய உணவுத் துண்டுக்கு முன்னால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். தங்களுடைய சொந்தக் கண்களுக்கு முன்னால், அவர்கள் ஒரு தோழனைச் சாக விடுவார்கள்.' வானத்தில் பறந்த வண்ணம் போரில் ஈடுபட்டிருந்தபோது, தன்னுடைய தாய் இறந்து விட்டாள் என்ற செய்தி வந்து சேர்ந்ததை நினைத்த அவன், தன் அன்னையைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். ஒரு தாயின் அன்பு கண்மூடித் தனமானது என்று அவர்கள் சொன்னார்கள். ஒரு அன்னையைத் தவிர, மனிதப் பிறவி வேறு யார்மீது அன்பு செலுத்த முடியும்? யாராவது தன்னுடைய சொந்த உணவைப் பிறருடன் பங்கு போடுகிறாரென்றால், அது ஒரு அன்னையாக மட்டுமே இருக்க முடியும். ‘இருக்கட்டும்.... ஒரு தாயைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை.' அவனுடைய மனதில் தோன்றிக் கொண்டிருந்த உருவம் படிப்படியாக அவனைக் காதலித்த பெண்ணின் உருவமாக மாறியது. இறந்து போய்விட்ட அவளை அவன் நினைத்துப் பார்த்தான். அவனுக்காக அவள் உயிருடன் இருக்கவில்லை என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். அவளுடைய காதல் மட்டுமே அவனுக்குத் தேவையாக இருந்தது. லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய போர், அவளுடைய காதலின் மதிப்பை அவனை உணரச் செய்ததா? அவன் மனிதர்களின் கூட்டத்தைக் கடந்து வந்து, தான் செல்ல வேண்டிய பாதையில் திரும்ப நடந்தான். அவனுடைய உடல் மிகவும் குளிர்ச்சியாக ஆகும் நேரத்தில், அவன் தன்னுடைய இருண்ட அபார்ட்மெண்டுக்கு வந்து சேர்ந்தான்.
வீட்டுக்குச் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி, சில நேரங்களில் டோஷியோ, யோஷிக்கோவுடனும் குராக்கோவுடனும் சேர்ந்து தேநீர் பருகுவான். பிறகு அவன் தன்னுடைய நேரத்தை குராக்கோவுடன் மட்டும் செலவழிக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் அமைந்தன. அவள்மீது தான் கொண்டிருக்கும் உணர்வு- காதல்தான் என்பதாக அவன் எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை. எது எப்படியோ, அவளுடைய அழகின்மீது தான் ஈர்க்கப் பட்டிருக்கிறோம் என்ற உண்மையை அவன் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்னும் சொல்லப் போனால்- அதற்கு ‘ஈர்ப்பு' என்ற வார்த்தைகூட பொருத்தமானதாக இருக்காது. அதற்கு மாறாக, அவளுடைய இருப்பு அவனுடைய கடந்த காலத்தை நினைவில் கொண்டுவந்து கொண்டிருந்தது. அதன்மூலம் தன்னுடைய துயரங்கள் நிறைந்த கடந்தகால வாழ்க்கையை அது பார்க்கச் செய்தது. அவளைப் பார்க்கும்போது, அவன் மனதில் துயரத்தை உணர்ந்தான். அதே நேரத்தில்- தனக்கு அந்த வேதனை தேவைதான் என்று அவன் நினைத்தான். அவள்மீது அவன் கொண்டிருக்கும் உணர்வில் காதல் என்ற ஒன்று கலந்திருக்கிறது என்று யாராவது குறிப்பிட்டுக் கூறினால், டோஷியோ அதை ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்வான். ஆனால், அவளை அந்த அர்த்தத்தில் வைத்துப் பார்க்க அவன் விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் இப்போதும் தன்னுடைய இறந்துபோன கணவன்மீது அன்பு வைத்திருக்கிறாள் என்ற விஷயம் அவனுக்கு நன்கு தெரியும்.
“நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.'' அவன் ஒருநாள் கூறினான்.
“ஆமாம்.... உண்மையாகவே நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தேன்'' என்றாள் அவள். தொடர்ந்து அவள் தெளிவான குரலில் சொன்னாள். “நான் அவரை மிகவும் சந்தோஷமாக வைத்திருந்தேன் என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் மட்டும் பார்த்தால்- அவர் இறந்தபிறகு, நான் கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஏனென்றால், அவருக்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் அவர் என்னுடன் இருந்தபோதுகூட இந்த அளவிற்கு சந்தோஷமாக நான் இருந்தில்லை.''
“உங்களைப் போன்ற ஒரு நபர் இப்போதும் எப்படி இருக்கிறீர்கள் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்றான் அவன்.