அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6429
உள்ளே நுழைந்தபிறகு, பேசுவதற்குப் பெரிதாக விஷயமெதுவும் இல்லாமலிருந்தது.
“என்ன நடந்தது? நாம் எப்படி இந்த ரயிலுக்குள் வந்தோம்?''
“ஒன்றுமில்லை... அதே நேரத்தில் இதற்குமேல் என்னால் காத்திருக்க முடியவில்லை'' தொடர்ந்து உரையாடல் முடிந்துவிட்டது. அவர்களுக்கிடையே தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது. அவள் ஒரு பெல்ட்டைப் பற்றிக் கொண்டிருக்க, அவளிடமிருந்து ஒரு ஈர்க்கக் கூடிய காற்று வீசிக் கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான்.
“உங்களுடைய இடம் ஸ்டேஷனிலிருந்து மிகவும் தூரத்தில் இருக்கிறது. இல்லையா?'' சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவன் கேட்டான்.
“ஆமாம்...'' முன்னால் பார்த்துக்கொண்டே, அவள் கூறினாள்.
“அங்கிருந்து போய்ச் சேர்வதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?''
“கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் ஆகும்.''
“அது ஆபத்தான விஷயம்... இல்லையா?''
“ஆமாம்...'' அவள் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள். “சில இரவுகளுக்கு முன்னால், ஒரு பெண் தாக்கப்பட்டாள்... கடைசியில், ஒரு குடை மட்டுமே எஞ்சியது....''
“நான் உங்களை வீடு வரை கொண்டுவந்து விடட்டுமா?'' அவன் கேட்டான். அவள் பதிலெதுவும் கூறவில்லை. ஆனால், அவள் தன்னுடைய தலையை அமைதியாக ஆட்டுவதையும் கையறு நிலையில் தான் இருப்பதை வெளிப்படுத்துவதையும் அவன் பார்த்தான். மீண்டும் அவர்கள் தங்களின் இதயங்களை தூரத்தில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். மெகுரோ, ஷிபுயா ஸ்டேஷன்களைத் தாண்டி ரயில் ஷின்ஜூக்கு ஸ்டேஷனை அடைந்தது. அவளை, தான் அவளுடைய வீட்டுக்குக் கொண்டு வந்து விடலாமா என்பதைப் பற்றியும் ‘சுவோ'விற்குச் செல்லும் நடைபாதையை நோக்கி நடக்கலாமா- என்பதைப் பற்றியும் டோஷியோ அப்போதும் விவாதித்துக் கொண்டிருந்தான். “நான் உங்களை வீட்டுக்கு கொண்டு வந்து விடவா?'' - அவன் திரும்பவும் கேட்டான். ஆனால், அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
ரயில் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. எனினும், அவர்கள் ஒரு கதவுக்கு அருகில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். ஜன்னலின் வழியாக நுழைந்து வந்து வீசிக்கொண்டிருந்த காற்றை அவன் கவனித்தான். அது அவளுடைய கூந்தலில் மோதி, கீழே இறங்கி அவளுடைய கழுத்தைச் சுற்றி விழுந்து கொண்டிருந்தது. இடது பக்கமாக சிறிது சாய்ந்த நிலையில் நின்றிருந்த அவளுடைய சரீரத்தை அவன் பார்த்தான். அது தன்னுடைய கையறு நிலையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. தோற்கடிக்கப்பட்ட இந்த நாட்டில் அவளால் இனிமேல் வாழமுடியாது என்பதை அவனால் உணரமுடிந்தது. ‘வெகுசீக்கிரமே, அவள் இப்போதைய வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த மாதம் சம்பளத்தில் சிறிது உயர்வு உண்டாக்கப்பட்டது. ஆனால், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு அது பெரிய அளவில் உதவியாக இருக்காது. அவளுடைய நிறுவனத்தின் சூழ்நிலையும் அதுவாகத்தான் இருக்குமென்று நான் நினைக்கிறேன்?' அவன் மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய கண்களுக்கு முன்னால், அவளுடைய உடல் மிகவும் மெலிந்துபோய், வாழ்க்கையின் ஒளியை இழந்து, தூசியைப்போல மறைந்து போவதை அவன் கற்பனை செய்து பார்த்தான்.
அவளிடம் கூறுவதற்கு இனிமேல் அவனிடம் எதுவுமே இல்லை. தன்னுடைய வார்த்தைகள், அவை எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அவளுடைய இதயத்தைப்போய் அடையாது என்ற விஷயத்தை அவன் புரிந்துகொண்டிருந்தான். "அவளுக்குள் மிகப் பெரிய கவலைகள் இருக்கின்றன. அவை அவளை நசுக்கப் போகின்றன. ஆனால், அதை என்னால் தொட்டுப்பார்க்கக்கூட முடியாது. அவளைப் பற்றிய எந்தவொரு விஷயமும் எனக்குத் தெரியாது. என்னுடைய கவலைகள் மட்டுமே எனக்குத் தெரியும். நான் அதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும்... அவ்வளவுதான்...'' அவன் மனதில் நினைத்தான்.
அவள் திரும்பி, தன்னைப் பார்ப்பதை டோஷியோ பார்த்தான். அவனுக்கு முன்னால், அவளுடைய அழகான முகம் அந்த இருண்ட வெளியில் மிதந்து கொண்டிருந்தது. அந்த முகத்தையே அவன் வெறித்துப் பார்த்தான். போர்க்களத்தின் துயரங்கள் அங்கு இருப்பதை அவன் பார்த்தான். அதற்குள் அவன் நுழைந்துசெல்ல விரும்பினான். தன்னைப் போன்ற ஒரு மனிதனிடம் உண்மைத் தன்மையோ நேர்மை குணமோ எஞ்சியிருக்கும்பட்சம், அது அவளுடைய துயரத்தைச் சந்திக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். இரண்டு இதயங்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய கவலைகளைப் பரிமாறிக் கொண்டால்... அவர்கள் இருவரும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான ரகசியங்களை ஒருவர் கையில் ஒருவர் கொடுத்துக் கொண்டால்... ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரோடொருவர் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டால்... அவர்களுடைய வாழ்க்கைகளுக்கு ஒரு புதிய முக்கியத்துவம் வந்துசேரும். ஆனால், அது நடக்காது என்று அவன் நினைத்தான்.
ரயில் அவளுடைய நிறுத்தமான ‘யோட்சுயா'வை நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய கண்கள் அவளுடைய முகத்திலேயே நிலைத்து விட்டிருந்தன. திடீரென்று அவளுடைய அழகான முகத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய புள்ளி இருப்பதை அவன் பார்த்தான். அந்தப் புள்ளி ஆச்சரியப்படும் வகையில் அவனுடைய மனதை நிலைகுலையச் செய்தது. அந்த அளவிற்கு மிகவும் சிறியதாக அந்தப் புள்ளி இருந்ததால் அதை மக்கள் யாரும் கவனிக்கவில்லை. அந்தப் புள்ளி, தூசியின் காரணமாகவோ நிலக்கரியினாலோ புகையாலோ உண்டாகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், முகத்தில் பூசியிருந்த பவுடருக்குப் பின்னால் லேசாகத் தெரிந்த ஒரு மச்சமாக அது இருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும், அது ஒரு சிறிய அதிர்வை அவனுடைய இதயத்தில் உண்டாக்கியது என்பதென்னவோ உண்மை. அது என்ன என்று பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு, அவளுடைய இடது கண்ணுக்கு மேலேயிருந்த அந்தப் புள்ளியையே அவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதையே ஆழமாகப் பார்த்தான். எது அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது என்றால், அது அந்தப் புள்ளி அல்ல. தன்னுடைய இதயத்தின் ஒரு மூலையில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு புள்ளி இருப்பதைப்போல அவன் உணர்ந்தான். அந்தப் புள்ளி எதைக் குறிப்பிடு கிறது என்ற விஷயம் அவனுக்கு ஏற்கெனவே தெரியும். அவன் தன்னுடைய இதயத்தில் இருந்த புள்ளியின்மீது தன் கண்களைப் பதித்தான். தற்போதைக்கு அந்தப் புள்ளி வீங்கி, படிப்படியாக பெரியதாக... பெரியதாக ஆகிக்கொண்டு வருவதை அவன் கவனித்தான். வளர்ந்தவுடன், அது அவனுடைய கண்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அது அவனுடைய கண்களுக்கு அருகில் வந்தது. அது மேலும் அவனுடைய கண்களுக்கு அருகில் வந்தது. ஓ! அவன் தன் இதயத்திற்குள் அழுதான். தொடர்ந்து அந்தப் புள்ளி மிகவும் வேகமாக குராக்கோவின் அழகான முகத்தில் பரவுவதை அவன் பார்த்தான். ஒரு பெரிய சிவந்த, வட்டமான, வெப்பம் நிறைந்த நிலவு அவளுடைய முகத்தில் எழுந்து மேலே உயர்ந்து கொண்டிருந்தது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் கன்னங்களைக் கொண்ட, ஜுரத்தால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் முகங்கள் பார்வையில் பட்டன. தொடர்ந்து, சீராக இல்லாத ராணுவக் குழுவின் நீளமான நிழல் மிகவும் பின்னால் தெரிந்தது.