கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6350
“அம்மா தாயே, நீ உங்க அம்மா, அப்பா கூட பேச ஆரம்பிச்சா அரை மணி நேரத்துக்குப் பேசிக்கிட்டிருப்ப, எனக்குத் தூக்கம் வருது.”
“உங்களுக்குத் தூக்கம் வந்தா தூங்குங்களேன்.”
“நீ இல்லாம எனக்கு எப்படித் தூக்கம் வரும்?” தியாகு குறும்பாகக் கண் அடித்தான். அன்புடன் அவன் மீது சாய்ந்து கொண்ட கல்யாணியை ஆசையுடன் அணைத்துக் கொண்டான் தியாகு. ஜன்னல் வழியே இவர்களை ரசித்துக் கொண்டு இருந்த நிலவு வெட்கப்பட்டு சற்று நகர்ந்து கொண்டது.
26
வீட்டிற்கு வந்த சிவலிங்கம் களைப்பாகக் காணப்பட்டதைப் பார்த்த சுசிலா கவலையுடன் அவரை நெருங்கினாள்.
“என்னங்க, முகம் ஏன் வாடிக்கிடக்கு? உடம்பு சரியில்லையா? என்ன பண்ணுது?”
“களைப்பு ஒண்ணும் இல்லை. மன உளைச்சல்தான் மாலுவுக்கு நடந்த கல்யாணத்தை மைனஸ் பாயிண்ட்டா ஆக்கி, வரதட்சணைக் கேட்டு கெடுபிடி பண்றாங்க சில வரன்களோடப் பெத்தவங்க, பரந்த மனப்பான்மை உள்ளவங்களே இந்த உலகத்தில இல்லையான்னு வெறுத்துப் போச்சு.”
“நீங்க வேண்ணா பாருங்க. மாலுவை துஷ்டை துக்கிரின்னு சொன்ன பாட்டியே அசந்து போற அளவுக்கு அவளுக்கு நல்ல மாப்பிள்ளை அமையப் போகுது. அவ அமோகமா வாழப் போறா. அதுக்கப்புறம் பாட்டியோட அந்த மூட நம்பிக்கை அடியோட ஒழிஞ்சுடும் பாருங்க.”
“என்னமோ நீ சொல்ற மாதிரி நடந்தா சந்தோஷம்தான்.”
“நிச்சயமா நடக்கும்ங்க. இரவும், பகலும் மாறி மாறி வர்ற மாதிரி, அந்தக் கல்யாணத்துல வாழ்க்கையை இழந்த மாலு, மறுமணத்துல இன்னும் நல்ல வாழ்க்கையை அடைவாள்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்குங்க.”
“எதையுமே சாதகமான கோணத்துல நினைச்சுப் பார்க்கற உன்னோட மனப்பான்மை பாராட்டுக்குரியது சுசிலா.”
“தாங்க்ஸ்ங்க. நீங்க உங்க ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க, மாதர் சங்கத்துல இருந்து லீலாவதி வர்றதா சொன்னாங்க வந்துருவாங்க.”
“சரிம்மா.”
வழக்கம் போல தன் அறைக்குச் சென்று கதவைத் தாழ் போட்டு விட்டு கட்டிலில் அயர்ச்சியுடன் சாய்ந்தார் சிவலிங்கம்.
புஷ்பா, தன்னிடம் கொடுத்த கருகமணிகள் போலவே அவளது கண்களும் அவருடைய நினைவில் மின்னியது. ‘இதென்ன! மனதிற்குள் ஒரு தனி ட்ராக்! தனிமையில் என்னை அமைதியாக இருக்க விடாமல் என் புஷ்பாவின் கண்களும், அவளின் நினைவுகளும், அவளைப் பார்த்து மன்னிப்புக் கேட்பதற்காக நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியாகி அவளை சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதே? என் உயிர் போறதுக்குள்ள நான் உயிருக்குயிரா காதலிச்ச என் புஷ்பாவை பார்க்கற பாக்யம் எனக்குக் கிடைக்குமா?... ஆ... கடவுளே இதென்ன திடீர் நெஞ்சு வலிக்குதே...’ நெஞ்சைப் பிடித்தபடியே மெதுவாக எழுந்து தன் அந்தரங்க அலமாரியைத் திறந்தார். அங்கிருந்த சிறிய பாட்டிலில் இருந்த மாத்திரைகளில் ஒன்றை எடுத்து நாக்கின் அடியில் வைத்துக் கொண்டார். புகைப்படத்தில் இருந்த புஷ்பாவுடன் பேச ஆரம்பித்தார்.
“உன்னைப் பார்க்கணும்னு தான் காத்துக்கிட்டிருக்கேன் புஷ்பா. நெஞ்சு வலி வர்றதையும் அதுக்காக மாத்திரை சாப்பிடறதையும் சுசிலாகிட்ட நான் இன்னும் சொல்லலைம்மா. ஏற்கெனவே அவ என்னைப் பத்தி கவலையா இருக்கா. இதையும் சொன்னா ரொம்ப பயந்துடுவா. உன்கிட்ட இப்பிடி மானசீகமா பேசறதுல எனக்கு ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கறது என்னவோ நிஜம்தான். ஆனா, உன்னைப் பார்க்க முடியாத வேதனை என் இதயத்துல ஒரு முள் குத்தற மாதிரி இருக்கு. அது போதாதுன்னு நெஞ்சு வலி வேற. உனக்கு நான் செஞ்ச துரோகத்துக்குத் தினம் தினம் அணு அணுவா துடிச்சிக்கிட்டு இருக்கேன்மா.” பேசி முடித்த சிவலிங்கத்தின் கண்கள் அங்கு இருந்த கருகமணிகளைப் பார்த்து கண்ணீர் துளிகளை உதிர்த்தன.
மாத்திரை கரையக் கரைய நெஞ்சு வலி குறைந்ததும் மறுபடி படுக்கைக்குச் சென்று படுத்தவர் கண்ணயர்ந்தார்.
27
பாஸ்கரிடம் அலுவலக வேலைகளை ஒப்படைத்து விட்டு தியாகு வெளிநாட்டுக்குக் கிளம்பும் நாளும் வந்தது.
சிவலிங்கமும், சுசிலாவும் இரண்டு நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து விட்டனர். கண்ணனுக்கு தாத்தா, பாட்டியுடன் இருப்பதால் ஏகக் கொண்டாட்டம். தியாகுவிற்கு வேண்டிய துணிமணிகளை எடுத்து வைப்பதில் கவனமாக இருந்தாள் கல்யாணி. அனைவரும் சென்னைக்குச் சென்று அங்கிருந்து தியாகுவை வழி அனுப்புவதாக ஏற்பாடு. தியாகு கிளம்பும் முன்பே பாட்டி தன் காசி யாத்திரைத் திட்டத்தை கூறி இருந்தாள்.
“கடைசி காலத்துல எனக்கு இப்படி ஒரு ஆசை வந்துடுச்சுடா தியாகு. நீ வெளிநாட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னை ட்ரெயின் ஏத்தி விட்டுடுடா...”
“பாட்டி இதுவரைக்கும் நீங்க, உங்களுக்காக எதுவுமே கேட்டது இல்லை. முதல் தடவையா கேட்டிருக்கீங்க. எல்லா ஏற்பாடும் நான் பண்ணிடறேன் பாட்டி.” பாட்டி காசி யாத்திரை கிளம்புவதற்கு ஏற்பாடு செய்து. அவளை அனைவரும் ரயில் நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தனர். பாட்டி சந்தோஷமாகப் புறப்பட்டாள். ஆனால், போகும் பொழுது மாலுவை தனியாக அழைத்து, “நீ பாட்டுக்கு தியாகுவை அனுப்பறேன்னு கல்யாணி கூட ஒட்டிக்கிட்டு சென்னைக்குப் போய் விடாதே. உங்க அண்ணன் நல்லபடியா போய்ட்டுத் திரும்பணும். நீ ஏதாவது சாக்கு சொல்லி இங்கேயே இருந்துடு புரிஞ்சுதா?” பாட்டி மிரட்டினாள். தலையை மட்டும் ஆட்டி சம்மதித்தாள் மாலு. பாட்டி கிளம்பிப் போன நான்காவது நாள் தியாகு கிளம்பும் குறிப்பட்ட தேதியும் வந்துவிட்டது.
சென்னை விமான நிலையத்தில், அனைவரிடமும் விடை பெற்றான் தியாகு. சிவலிங்கத்தின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்ட பின், சுசிலாவை வணங்கினான். கண்ணனைத் தூக்கி முத்தமிட்டான். அறிவிப்பு கேட்டதும், தியாகு விமானம் நிற்கும் இடத்திற்குப் போனான். பின்னால் திரும்பிப் பார்த்து கையசைத்து விடை பெற்றான்.
28
‘இளைய நிலவே, இளைய நிலவே... இன்னும் என்ன மெளனமோ?’ இரவு நேரத்தில் மென்சோகமும், ஏக்கமும் கலந்த, இனிமையான பாடலைக் கேட்டபடியே படுத்திருந்தாள் மாலு. பாட்டி சொன்னபடி கல்யாணியை சமாளித்து சென்னைக்குப் போகாமலேயே இருந்துவிட்ட மாலு, ‘அண்ணன் இந்நேரம் கிளம்பி இருப்பாங்க. ஃப்ளைட் புறப்பட்டிருக்கும்’ என்று நினைத்தபடியே படுத்திருந்தாள்.
வழக்கமாய் எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வரும் பாஸ்கர் அன்று பத்து மணி ஆகியும் வரவில்லை. மாலுவிற்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது.
கல்யாணி சென்னைக்குப் போய் விட்டபடியால் பாஸ்கருக்கு உணவு எடுத்து வைப்பதற்காகக் காத்திருந்தாள். அழைப்பு மணி ஒலித்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள். பாஸ்கர் நின்றிருந்தான்.