கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6350
கண்ணனைக் குளிக்க வைத்து, அவனது உடைகளை அயர்ன் செய்து, அவனைப் படிக்க வைத்து, அவனுடன் விளையாடி... சதா சர்வ காலமும் கண்ணனுடனேயே மாலுவின் பொழுது போனது.
அவன் பள்ளிக்கூடம் போன பிறகு, கல்யாணிக்கு உதவியாக இருப்பாள். உள்ளுக்குள் உருகிக் கொண்டிருக்கும் கல்யாணியின் துயரத்தை அறிந்த மாலு, அவளிடம் கலகலப்பாகப் பேசுவாள்.
“அண்ணி, நீங்க சிரிச்ச முகமா இருந்து பார்த்துதான் எனக்குப் பழக்கம். இப்படி சோகமா இருக்காதீங்க அண்ணி. நீங்க இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சதுக்கப்புறம்தான் நான் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சேன். என்னோட பார்பி பொம்மைகளையெல்லாம் பீரோவுக்குள்ள பூட்டி வச்சுட்டேன். இப்ப கண்ணன்தான் எனக்கு பார்பி பொம்மை. நீங்கதான் எனக்கு எல்லாமே.”
மாலு பாசத்துடன் பேசியதைக் கேட்ட கல்யாணி, உணர்ச்சி வசப்பட்டாள்.
21
சிவலிங்கம், மாலுவின் நிலைமை குறித்து வேதனைப்பட்டார்.
‘என் வாழ்க்கையில ஏன் இப்படி ஏமாற்றங்கள்? நான் காதலிச்சப்ப புஷ்பாவை கல்யாணம் பண்ணிக்க முடியாத ஏமாற்றம். யாருக்காக நான் அவளை விட்டுட்டு சுசிலாவைக் கல்யாணம் செய்தேனோ அந்த என் அப்பாவும் சீக்கிரமா என்னை விட்டுட்டுப் போயிட்ட ஏமாற்றம். என் கூட பாசமா இருந்த அண்ணனும், அண்ணியும் வருவாங்கன்னு ஆசையா எதிர்பார்த்து காத்திருந்தப்ப, எதிர்பாராத அவங்களோட மரணச் செய்தி தந்த ஏமாற்றம். குழந்தை பிறக்கும்னு எதிர்பார்த்து, அதிலயும் ஏமாற்றம். இப்ப மாலுவுக்கு நல்லபடியா கல்யாணம் செஞ்சு அவ நல்லா இருப்பாள்னு எதிர்பார்த்த எனக்கு அதிலயும் ஏமாற்றம். இறைவன் சில சமயங்களில் தான் போடும் கோலங்களின் புள்ளிகளைத் தவறாகப் போட்டு விடுகின்றானா? அல்லது நான் செய்த தவறுக்கு தண்டனையா, அவன் சரியாத்தான் புள்ளிகளைப் போடுகின்றானா? ஒரே ஒரு நல்ல விஷயம். என் மகள் கல்யாணிக்கு நல்ல கணவன் கிடைச்சு, அவ சந்தோஷமா இருக்காள். இப்ப அதிலயும் ஏமாற்றம். மாலுவுக்கு நிகழ்ந்த அந்தக் கசப்பான சம்பவத்தினால கல்யாணியும் முன்ன மாதிரி சந்தோஷமா இல்லை...’ மீண்டும் மீண்டும் கரையைத் தொட்டு செல்லும் அலைகளைப் போல சிவலிங்கத்தின் எண்ண அலைகள், அவரது இதயத்தைத் தொட்டு தொட்டுச் சென்றன.
“ஏற்கெனவே எதையோ பறிகொடுத்த மாதிரி அப்பப்ப யோசனைக்குப் போய் மெளனமாயிடுவீங்க. இப்ப உண்மையிலேயே மணமாலையை பறிகொடுத்த மாலுவை நினைச்சு உங்க வேதனையும் அதிகமாயிடுச்சு. மெளனமான யோசனையும் அதிகமாயிடுச்சு. நமக்குக் கல்யாணம் ஆன நாள்ல்ல இருந்து உங்க முகத்துல ஒரு முழுமையான சந்தோஷம்ங்கறதையே நான் இதுவரைக்கும் பார்க்கலை. நான் சாகறதுக்குள்ள உங்களை முழுமையான சந்தோஷம் உள்ளவரா ஒரு நாளாவது பார்க்கணும்னு துடிக்கிறேன். உங்க உதடுகள் சிரிச்சாலும், உள்ளம் மகிழ்ச்சிப்பட்டாலும் உங்க கண்கள்ல இருக்கற ஒரு சோகம் எனக்கு மட்டும்தாங்க தெரியும். அந்த சோகம் மறைஞ்சு, சந்தோஷமான என் கணவரை நான் ஒரு நாளாவது பார்க்கணும்ங்க.”
சுசிலா கூறியதைக் கேட்ட சிவலிங்கம் திடுக்கிட்டுப் போனார். ‘புஷ்பாவின் நினைவில் நீந்தும் என் எண்ணங்களை என்னை அறியாமலே என் கண்கள் பிரதிபலிக்கிறதோ? எந்தப் பாவமும் அறியாத இவளுக்குத்தான் என்னால் எத்தனை கஷ்டம்?’ தரையில் விடப்பட்ட மீன் போல் வேதனையில் துடித்தார் சிவலிங்கம்.
22
சூரியன் எழுந்து, உலகத்தை விழிக்க வைப்பதும், நிலவு தோன்றி உலகை உறங்க வைப்பதுமாகப் பொழுதுகள் வேகமாகக் கழித்தன.
மாலுவின் வயதுப் பெண்கள் கையில் குழந்தையுடன் செல்வதைப் பார்க்கும்பொழுது கல்யாணியின் இதயம் மாலுவை நினைத்து வேதனைப்பட்டது.
தியாகுவின் ஆசைக்கு இணங்கி சந்தோஷமாக இருக்கும் பொழுது, வீட்டில் வாழ இயலாமல் வாடி நிற்கும் மாலுவை எண்ணி, குற்ற உணர்வில் துடிப்பாள்.
முதிர்ந்தும், முதிராத கன்னிப் பருவ நிலையில், முழு நிலா போன்ற அழகான மாலு தேய்ந்து கொண்டே போவதைப் பார்த்து நெஞ்சம் பரிதவித்தாள். ‘என்ன செய்வது என்ன செய்வது’ என்று நினைத்தாள். சிவலிங்கத்தையும், சுசிலாவையும் வரவழைத்தாள்.
“அம்மா, அப்பா, மாலுவுக்கு மறுமணம் செஞ்சு வைக்கலாம்னு நினைக்கிறேன். இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”
“நல்ல யோசனைம்மா. உனக்குத் தோணினது எனக்குத் தோணலியே?” சிவலிங்கம் பளிச் என்று பேசினார்.
“பாட்டி இதுக்கு சம்மதிக்கவே மாட்டாங்கம்மா.” சுசிலா கவலையுடன் கூறினாள்.
“பாட்டியைப் பத்தி கவலைப்படாதீங்கம்மா. அவங்க, அவங்களோடப் பழைய பத்தாம்பசலித்தனத்தை ஒரு பாதுகாப்பு வளையமா நினைக்கிறாங்க. அவங்களை மாதிரிப் பெண்கள் உண்மையான தங்கள் மன உணர்வுகளை மூடி மறைச்சுட்டு, வெளியே அதுக்கு முற்றிலும் மாறானதைப் பேசுவாங்க. அந்தக் காலத்துல அவங்களுக்கு எடுத்துச் சொல்லி, மறுமணம் செஞ்சு வைக்கறதுக்கு யாரும் கிடையாது. அந்தக் காலகட்டத்தில்தான் வாழ்க்கை முறை அந்த மாதிரி. இன்னிக்குக் காலம் எவ்வளவோ மாறி இருக்குல்ல? நாமதான் எடுத்து செய்யணும்.”
“ஆமாம்மா. நாமதான் அவளோட வாழ்க்கை மறுமலர்ச்சி அடைய வழி காட்டணும். மாப்பிள்ளைகிட்ட பேசிட்டியா? என்ன சொல்றார்?”
“அவருக்கு முழு சம்மதம். பாட்டியைத் தான் சமாளிச்சுக்கறதா சொல்லி இருக்கார்.”
“சரிம்மா. ஆனா இப்போதைக்கு பாட்டிக்கு எதுவும் தெரியக்கூடாது. எல்லாம் பேசி முடிச்சப்புறம் சொல்லிக்கலாம்.”
“மாலுகிட்ட பேசினியாம்மா இதைப் பத்தி?”
“அவகிட்ட பேசினதுக்கப்புறம்தான் உங்களையே இங்கே வரவழைச்சேன்.”
“சரிம்மா. இனி ஆக வேண்டியதை நான் பார்த்துக்கறேன்.”
தியாகுவின் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. சிவலிங்கம், தியாகுவிடம் மாலுவின் மறுமணம் பற்றி பேசி தெளிவுபடுத்திக் கொண்டார்.
கண்ணன் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பிறகு அவனைக் கொஞ்சிவிட்டு சுசிலாவும், சிவலிங்கமும் புறப்பட்டனர்.
23
மறுநாள் காலை. தியாகு அலுவலகம் போவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தான்.
“என்னங்க. முக்கியமான ஃபைலும், அஞ்சு லட்ச ரூபா பணமும் குடுத்து, காலையில ஆபீஸுக்கு கிளம்பும்போது மறக்காம எடுத்துக்குடுன்னு சொன்னீங்களே...”
“ஆமா கல்யாணி... அது ரொம்ப முக்கியமான ஃபைல். ஆபீஸ் சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ், என்னோட பாலிஸி, உன்னோட பாலிஸி எல்லாமே அதிலதான் இருக்கு. எடுத்துட்டு வா. எல்லாமே ஒரிஜினல் காப்பி. கம்ப்யூட்டர் ஆர்டர் குடுத்தவங்க குடுத்த அஞ்சு லட்ச ரூபா பணம், எல்லாத்தையும் ஒரு பெட்டியில வச்சுக் குடும்மா.”
“இந்தாங்க” கல்யாணி பெட்டியைக் கொடுத்ததும் தியாகு காரில் ஏறி உட்கார்ந்தான். காரை ஸ்டார்ட் செய்தான். பெட்ரோல் போடச் சொல்லி இன்டிகேட்டர் அறிவித்தது. நேராக பெட்ரோல் பங்க்கிற்குச் சென்றான்.
பெட்டிக்குள் பர்ஸ் இருந்தது. பெட்டியுடன் எடுத்துக் கொண்டு போய் க்ரெடிட் கார்டில் கையெழுத்துப் போட்டான்.