கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6349
“நீங்க பெருந்தன்மையா சொல்றீங்க. எனக்குப் புரியுது. ஆனா, நான் பழைய காலத்து மனுஷி. திடீர்னு என்னை மாத்திக்க முடியாது. சுப காரியங்கள் சுமங்கலிகள் தான் சேர்ந்து நடத்தணும்” சீதம்மாவின் பிடிவாதமான கொள்கை பற்றி இனி பேசிப் பலன் இல்லை என்ற முடிவு செய்த சிவலிங்கம் கிளம்பினார். சுசிலாவும் அவருடன் கிளம்பினாள். தியாகுவிடமும், சீதம்மாவிடமும் விடைபெற்றுக் கிளம்பினர். கார் புறப்பட்டது. ஜன்னல் வழியாக அவர்கள் புறப்பட்டு போவதைக் கன்னத்தில் வழியும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மாலு.
தியாகுவைப் பார்ப்பதற்காக வந்த சிவலிங்கம், மாலுவைப் பற்றி கேட்ட பிறகே அவளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள் சீதம்மா. அதன்பின் கண்களாலேயே சைகை செய்து உள்ளே அனுப்பி வைத்தாள். இதை நினைத்துப் பார்த்த மாலுவுக்கு, வேதனையாக இருந்தது.
‘என்னோட அம்மா, தீ விபத்துல எரிஞ்சு போனதும், அவங்களைக் காப்பாத்த முயற்சி, செஞ்ச என் அப்பாவும் எரிஞ்சுப் போனதுல, என்னோட குத்தம் என்ன? துரதிர்ஷ்டம் பிடித்தவள் என்று முத்திரை குத்தி, பாட்டி என்னைக் கஷ்டப்படுத்தறாங்களே. வீட்டுக்கு வரப்போற அண்ணியும், என்னைக் கெட்ட ராசி பிடிச்சவள்னு நினைச்சுடுவாங்களோ?’ மாலுவிற்கு கண்ணீர் பெருகியது.
11
டெலிபோன் ஒலித்தது. கல்யாணி ரிசீவரை எடுத்தாள்.
“ஹலோ...”
மறுமுனையில், கல்யாணியின் குரல் கேட்டதும், ஓரிரு விநாடிகள் தயக்கம்.
“நா... நான் தியாகு பேசறேன்...”
தியாகு என்று கேட்டதும், எதுவும் பேசாமல், “அப்பா... அப்பா...” என்று சிவலிங்கத்தை அழைத்தாள்.
“என்னம்மா யார் போன்ல? ஏன் இப்பிடி பதற்றமா பேசறே?...” கேட்டுக் கொண்டே எழுந்து வந்த சிவலிங்கம், ரிசீவரை வாங்கினார்.
“ஹலோ...”
“ஹலோ... நான் தியாகு பேசறேன் ஸார்...”
“தியாகுவா? இப்பதான் புரியுது. கல்யாணி ஏன் ஃபோன் போசாம என்னைக் கூப்பிட்டாள்னு. சொல்லுங்க தியாகு...”
“பதிமூணாம் தேதி... பொண்ணு பார்க்க உங்க வீட்டுக்கு வரச் சொல்லி பாட்டி நாள் பாத்திருக்காங்க. அதை உங்ககிட்ட சொல்லிடலாம்னு போன் பண்ணினேன்...” தியாகு வெட்கம் கலந்த குரலில் தடுமாறியபடி சொல்லி முடித்தான்.
“என்ன தியாகு ரொம்ப கூச்சப்படறீங்க? பதிமூணாம் தேதிதானே? வந்துருங்க.”
“சரி ஸார். வச்சுடறேன்.”
தியாகுவிடம் பேசி முடித்த சிவலிங்கம், சுசிலாவின் முதுகுக்குப் பின் முகத்தை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கல்யாணியின் காதைப் பிடித்து இழுத்தார்.
“பதிமூணாம் தேதி பொண்ணு பார்க்க வர்றாங்களாம். அம்மா முதுகுக்குப் பின்னால ஒளிஞ்சிட்ட? பையன் உன்னைப் பார்க்க வர்றப்ப நீயும் அவனை நல்லாப் பார்த்துக்க. உன்னோட சம்மதத்துக்குத்தான் காத்திருக்கோம்...”
“போங்கப்பா...” நாணப் புன்னகையுடன் சுசிலாவிடம் முகம் புதைத்துக் கொண்டாள் கல்யாணி. அவளது தலையை அன்புடன் வருடிக் கொடுத்தாள் சுசிலா. “இந்தக் காலத்துல அவ நம்பளை விட்டு புகுந்த வீட்ல போய் எப்படிச் சமாளிக்கப் போறாளோ என்னமோன்னு நினைச்சாத்தான்...”
“பொண்ணுன்னா பொறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்குப் போய்த்தானே ஆகணும்? கல்யாணியைப் பத்தி உன்னைவிட எனக்குத்தான் நல்லா தெரியும். எந்த சூழ்நிலைக்கும் தன்னைத் தயார் படுத்திக்கற மனப்பக்குவம் அவளுக்கு சின்ன வயசுலயே உண்டு. பெத்த அம்மா, அப்பா இறந்து போனப்புறம் நம்பளை அவ சொந்த தாய், தகப்பனா ஏத்துக்கிட்டு வளர்ந்தாளே அது ஒரு மனப்பக்குவம்தான். நம்ப சொல்லை மீறி நடந்திருக்காளா? கல்யாணி நீ வளர்த்த பொண்ணு. அவ புகுந்த வீட்டுக்குப் போய் அங்க உள்ள எல்லாரையும் அணுசரிச்சு, தானும் நல்ல பேர் எடுத்து, வளர்த்த நமக்கும் நல்ல பேர் எடுத்துக் குடுப்பா.”
“மாப்பிள்ளை தியாகுவும் நல்ல பையன். நிறைய பேர்கிட்ட விசாரிச்சுட்டேன். எல்லாருமே அவனைப் பத்தி நல்ல அபிப்ராயம்தான் சொல்றாங்க. குடும்ப நேயம் உள்ளவனா இருக்கான். தியாகுவுக்கும் கல்யாணியைப் பிடிச்சுருச்சு. போட்டோ பார்த்ததுமே சம்மதம் சொல்லிட்டானாம். சீதம்மாகிட்ட நம்ப கல்யாணி சரின்னு சொல்லணும். அவ்வளவுதான். அவளுக்கு என்னென்ன வேணும்னு கேட்டு அவளை கவனிச்சுக்க. பதிமூணாம் தேதி சாயங்கால டிபனுக்கு பார்வதியம்மாகிட்ட மெனு குடுத்துடு.”
“அதெல்லாம் நீங்க சொல்லணுமாங்க. நான் பிரமாதமா ஏற்பாடு பண்ணிடறேன்” சுசிலா எழுந்து, கல்யாணியின் அறையை நோக்கி நடந்தாள்.
12
பதின்மூன்றாம் தேதிப் பொழுதும் வந்துவிட்டது. காலையில் எழுந்ததில் இருந்து மகிழ்ச்சி, நாணம், பயம் அனைத்தும் கலந்த உணர்வுகளுடன் கல்யாணி சுற்றிச் சுற்றி வந்தாள்.
கார் வரும் ஓசை கேட்டதும், சிவலிங்கம் பரபரப்புடன் வாசலுக்கு விரைந்தார்.
தியாகுவும், நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் காரில் இருந்து இறங்கினார்கள். அந்தப் பெண்மணி, காருக்குள் இருந்து பழங்கள் நிறைந்த தட்டை எடுத்தாள். இருவரையும் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் சிவலிங்கம். சுசிலாவும் வந்து வரவேற்றாள்.
“இவங்க என்னோட ஒண்ணு விட்ட அக்கா மல்லிகா. இங்கேதான் சொக்கிக் குளத்துல இருக்காங்க. இவங்க கணவர் மெடிக்கல் ரெப்ரெசன்டேடிவ்வா இருக்கார். அநேகமா டூர்லதான் இருப்பார்.”
மல்லிகா புன்னகைத்தாள்.
“வணக்கம்ங்க. தியாகுவுக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்னு சீதம்மா பாட்டி சொன்னாங்க. நெருங்கிய சொந்தம்னு எங்க சித்தப்பாவும், சித்தி கெளரியும் இருந்தாங்க. அவங்க இறந்தப்புறம் சீதம்மா பாட்டியும், தியாகுவும் என்னை மறக்காம அடிக்கடி வந்து போறாங்க. நானும் உரிமையோட அங்கே போறதுண்டு. இன்னிக்கு மாப்பிள்ளைப் பையனுக்கு அக்காங்கற சொந்தத்துக்குக் கட்டுப்பட்டு சந்தோஷமா உங்க மகளைப் பொண்ணு பார்க்க வந்திருக்கேன்.”
“ரொம்ப சந்தோஷம்மா. உட்கார்மா.” சுசிலா தன் அருகே மல்லிகாவை உட்கார வைத்தாள்.
“என்ன தியாகு? பொண்ணை வரச் சொல்லட்டுமா? கண்ணைச் சுழற்றி சுழற்றி தேடறீங்க?” கேலியாக சிவலிங்கம் கேட்டதும் தியாகு தலையைக் குனிந்து கொண்டான்.
சுசிலா உள்ளே சென்று, கல்யாணியை அழைத்து வந்தாள்.
“கல்யாணி, இவர்தான் மாப்பிள்ளை தியாகு. நல்லா பார்த்துக்கம்மா. தியாகு நீங்களும் பார்த்துக்கோங்க.”
கல்யாணி, தியாகுவைப் பார்க்க, தியாகு கல்யாணியைப் பார்க்க இருவரது கண்களும் சில விநாடிகள் கலந்தன. கல்யாணி, மஞ்சள் வண்ணப் பட்டுப்புடவையில் தங்கம் போல ஜொலித்தாள். வைத்த கண் இமைக்காமல் பார்த்தான் தியாகு.
தியாகுவின் கவனத்தைக் கலைத்தது சிவலிங்கத்தின் குரல்.
“என்ன தியாகு? பொண்ணைப் பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்கு ஸார்.”
“ரொம்ப சந்தோஷம்.” சொன்னவர், சுசிலாவிடம் திரும்பினார்.
“சுசிலா, நீ கல்யாணிகிட்ட கேட்டுடும்மா.” கல்யாணியை தனியாக அழைத்துச் சென்றாள் சுசிலா.